சண்டைக் கோழிகளும் சமூக ஒழுங்கும் - sonakar.com

Post Top Ad

Friday 11 October 2019

சண்டைக் கோழிகளும் சமூக ஒழுங்கும்தெற்காசிய நாடுகளில் தேர்தலும் வன்முறையும் ஒன்றரக் கலந்த விடயங்கள். இலங்கை, இந்தியா, பாகிஸ்தான், பங்களதேஷ் போன்ற நாடுகளில் தேர்தல் என்றாலே வன்முறை தவிர்க்க முடியாததாக இருக்கிறது.

கட்சிகளாகப் பிரிந்து எதிராளியைத் தூற்றிக் கொள்வதும் தாக்கிக் கொள்வதும் மிகவும் சகஜமாக இருக்கும் அளவுக்கு அரசியல் எமக்குள் ஊறிப்போயுள்ளது. இதன் தாக்கத்துக்கு இலங்கை முஸ்லிம் சமூகம் எவ்விதத்திலும் விதிவிலக்கானதில்லை.பொதுவாகவே எதிரியின்றி வாழத் தெரியாத சமூகமாகப் பழக்கப்பட்டுள்ள இலங்கை முஸ்லிம் சமூகம் குக்கிராமங்களிலிருந்து நகர்ப்புறங்கள் வரை தாம் விரும்பும் கட்சியின் பால் சார்ந்தும் வேட்பாளர்கள் மீது கொண்டிருக்கும் அன்பின் நிமித்தமும் அளவுக்கதிகமாகவே தேர்தல் காலங்களில் உணர்வோங்க நடந்து கொள்வது வழக்கம்.

கடந்த பொதுத் தேர்தல் காலத்தில் ஏறாவூரில் இடம்பெற்ற கொலை, அளுத்கமை வன்முறையின் பின்னரும் பேருவளையில் இடம்பெற்ற அரசியல் கட்சி மோதல் என பட்டியலிடுவதற்கு பல சம்பவங்களும் அவரவர்க்கென தனித்தனி நியாயங்களும் இருக்கின்றன.

ஆயினும், இவ்வாறான போக்கு ஒட்டு மொத்த சமூகத்தை எவ்வாறு பாதிக்கும் என்பதை உணர்ந்து செயற்படுவதும் அது தொடர்பில் விழிப்புணர்வூட்டுவதும் கூட காலத்தேவையுள்ள சமூகக் கடமையாகிறது.

சில உண்மைகளை நாம் மறுக்க முடியாது. தனி மனிதர்களின் விருப்பு – வெறுப்பு அதில் பிரதானமானது. அத்துடன் தேர்தல் காலத்தில் ஒருவர் யாரை ஆதரிப்பது என்பதும் அவரது விருப்பு, அவர் அது குறித்து சிந்திக்கும் கோணம் மற்றும் தேவையை அடிப்படையாகக் கொண்டது. ஆகவே, எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடப் போகும் 35 வேட்பாளர்களுக்கும் ஏதோ ஒரு வகையில் முஸ்லிம்களுக்குள் ஆதரவுத் தளம் இருக்கத்தான் போகிறது.

சுதந்திர இலங்கையில் இடம்பெற்ற பெரும்பாலான தேர்தல்களில் ஐக்கிய தேசியக் கட்சியை முஸ்லிம் சமூகம் தொடர்ச்சியாக பெருவாரியாக ஆதரித்து வரும் வழக்கம் உள்ளது. எனினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கான ஆதரவுத்தளமும் தொடர்ந்து சமூக மத்தியில் இருந்து வருகிறது என்பது மறுக்க முடியாத உண்மை.

தான் விரும்பும் அரசியலும் கட்சிப் பின்னணியும் கொள்கையும் எதை அடிப்படையாகக் கொண்டதாக இருக்க வேண்டும் என்பது அவரவர் தெரிவு. எனினும், ஒரு மேலோட்டப் பார்வையில் பெரும்பாலும் கட்சிக் கொள்கைகளின் அடிப்படையில் அவற்றை ஆதரிப்பதை விடத் தமது சுய இலாப அல்லது உணர்வோங்கலின் அடிப்படையில் பக்தர்களாக மாறுவோரே அதிகம் காணப்படுகிறார்கள்.

அந்த வகையில் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் சஜித் பிரேமதாசவுக்குப் போன்றே கோட்டாபே ராஜபக்சவுக்கும் அதே போன்று அநுர குமார திசாநாயக்கவுக்கும் கூட முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவு இருக்கிறது.

சஜித் பிரேமதாசவைப் பொறுத்தவரை அவர் மீது நேரடியாகக் கோபம் வைத்திருப்பதற்கான நியாயங்கள் முஸ்லிம்கள் மத்தியில் இல்லை. ஆனாலும் 2012 முதல் நாட்டில் இடம்பெற்று வரும் முஸ்லிம் விரோத செயற்பாடுகளின் பின்னணியில் கோட்டாபே ராஜபக்ச குற்றங்காணப்பட்டு அவர் மீதான கோபமும், வெறுப்பும் வெளிக்காட்டப்படுகிறது. இதன் ஒரு பகுதி அநுர குமார திசாநாயக்க மீதான நியாயவாத வாக்குகளாகவும் மாறப் போகிறது என்பதை அடித்துக் கூறலாம்.

எனினும், பலவீனமாகிப் போயுள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் முஸ்லிம் ஆதரவுத்தளம் கோட்டாபே ராஜபக்சவின் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவுடன் தொடர்வதையும் அவதானிக்கலாம். அது போக, சில சந்தர்ப்பவாத கூட்டுகளுமாக இணைந்து கோட்டாபே ராஜபக்சவுக்கும் முஸ்லிம்கள் மத்தியில் ஆதரவிருக்கிறது என்பது அவ்வப்போது வெளிக்காட்டப்பட்டு வருகிறது. அரசியல் என்ற அடிப்படையில் அதிலும் தவறிருப்பதாகத் தெரியவில்லை.

சிங்கள தேசியவாத சக்தியாக உருப்பெறும் அடிப்படையில் ஆரம்பிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அடிப்படை முதலீடு அதுவாகவே இருப்பினும் கூட ஏனைய சமூகத்தினரையும் புறக்கணிக்க முடியாது என்பதால் முஸ்லிம் பெரமுன மற்றும் தமிழ் பெரமுனவும் அமைக்கப்பட்டுள்ளது.

அவற்றிற்கு அந்தந்த சமூகம் சார்ந்தவர்களே முன்னணி செயற்பாட்டாளர்களாக இருக்கும் நிலையில் இவர்கள் சமூகத்தில் அவதானிக்கப்படுபவர்களாகவும் விமர்சனத்துக்குளாகிறவர்களாகவும் மாறிக்கொள்கிறார்கள். முன்னர் சொன்னது போன்று தொடர்ச்சியாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி செயற்பாட்டாளர்களாக இருந்து பெரமுனவில் தொடர்பவர்களும் இதில் அடங்கும். அவர்கள் மஹிந்த ராஜபக்ச மீதான அன்பு அல்லது பிடிப்பில் இவ்வாறு தொடர்கிறார்கள் என்றும் கூறலாம்.

எது எப்படியாக இருப்பினும், இவ்வாறு ஒவ்வொரு கட்சிக்கும்;, வேட்பாளருக்கும் எமது சமூக மட்டத்திலேயே ஆதரவு இருக்கிறது என்பது ஏற்றுக்கொள்ளப்பட வேண்டிய உண்மையாகிறது. இந்நிலையில், இதை அடிப்படையாக வைத்து சமூகத்துக்குள் பிளவுகள் - சண்டை சச்சரவுகளை உருவாக்கிக் கொள்வது அவசியமா? அல்லது அது தரும் நன்மை தான் என்ன? என்பது சிந்திக்கப்பட வேண்டும்.

2011 முதல் முஸ்லிம்களுக்கு எதிராக நாட்டில் உருவான வன்முறை மற்றும் கடும்போக்கு, 2014ல் தாக்குதலாக வெடித்த போது அன்றைய அரசு அதைக் கை கட்டிப் பார்த்திருந்தது, ஊக்குவித்தது என்ற பொதுக் குற்றச்சாட்டு 2005 மற்றும் 2010 தேர்தல்களில் மஹிந்த ராஜபக்சவை ஆதரித்த பலரை மாற்றுத் தேர்வு நோக்கித் தள்ளியது. சிங்கள இன மேலான்மை உணர்வூட்டல் மூலம் வெற்றியைப் பெற்றுக் கொள்ளலாம் என்ற சிந்தனைப் போக்கில் இருந்த மஹிந்த ராஜபக்சவும் இது குறித்து அப்போது அலட்டிக் கொள்ளவில்லை.

அதேவேளை, 2015 தேர்தலில் மைத்ரிபால சிறிசேனவை ஆதரித்த எல்லோரும் இப்போதும் அந்த நிலைப்பாட்டிலேயே இருப்பார்கள் என்பதற்கோ, ஐக்கிய தேசியக் கட்சியை முழு மனதுடன் ஆதரிப்பார்கள் என்பதற்கோ எந்த உத்தரவாதமும் இல்லை. அது போலவே, முஸ்லிம்களுக்கு எதிரான கடும்போக்குவாதத்தை ஊக்குவித்ததாக இன்னும் நம்பப்படும் கோட்டாபே ராஜபக்சவோ அவரது பிரதான பிரச்சாரகர்களோ அவரது மன நிலையில் மாற்றம் அல்லது வேறு தெளிவு இருக்கிறது என்பதை எடுத்தியம்பக்கூடிய சூழ்நிலையிலும் இல்லை.

2015 – 2019 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளையும் மஹிந்த ஆதரவு பேரினவாத சக்திகளே தூண்டியதாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன உட்பட பல அரசியல் தலைமைகள் அவ்வப்போது கூறி வருகிறார்கள். அத்துடன் தொடர்ந்தும் முஸ்லிம் அரசியல் சக்திகள் இந்த உணர்வோட்டத்தைத் தாண்டி செயற்படவும் தயங்கி வருவதால் அந்த எண்ணவோட்டம் இன்னும் மாற்றமில்லாத முடிவாக இருக்கிறது.

இந்நிலையில், பெரமுன பக்கம் சார்ந்தியங்குபவர்கள் தம் சமூகத்தை தமக்கெதிரான சக்திகளாக பார்க்கவும் கூடாது. அதே போன்று மற்றவர் உரிமையை மதிக்கும் பண்பின் அடிப்படையில் பெரமுன சார்ந்தோரை சமூகத்துக்கு எதிரானவர்களாக பார்ப்பதும் அதனடிப்படையில் பகைமையை வளர்த்துக் கொள்வதும் கூட ஒற்றைச் சமூகக் கூறு எனும் அடிப்படையில் நன்மை தராத சிந்தனையோட்டமே.

இலங்கையின் அரசியல் நாட்டு மக்களைத் தொடர்ந்தும் தங்கி வாழும் நிர்ப்பந்தத்துக்குள்ளேயே வைத்திருப்பதுடன் எந்தக் காரியத்தை செய்யப் போனாலும் அங்கு அரசியல் ஆதரவும் ஆளுமையும் அவசியம் என்கிற சூழ்நிலையை உருவாக்கி வைத்துள்ளது. அத்துடன், அரசியல் பதவிகளே உயர்ந்த பதவிகளாகவும், அதிகாரம் மற்றும் ஆளுமையைத் தருவனவையாகவும் இருப்பதனால் அதன் மீதான இயற்கையான நாட்டம் அது சார்ந்தோருக்கு இருக்கிறது.

தற்சமயம் கோட்டாபே ராஜபக்சவுக்காக தீவிரமாகக் குரல் கொடுத்து வரும் முஸ்லிம் சமூகத்தைச் சேர்ந்த சட்டத்தரணி ஒருவருக்கு பெரமுன அரசு அமைந்ததும் கட்டாயமாக தேசியப் பட்டியல் நாடாளுமன்ற பதவி தரப்பட வேண்டும் என்று மேல் மாகாண ஆளுனர் எம்.ஜே. முசம்மில் கடந்த 08ம் திகதி பொதுஜன பெரமுனவின் முஸ்லிம் பிரிவு நடாத்திய நிகழ்வில் வைத்து தெரிவித்திருந்தமை இதற்குச் சிறந்த எடுத்துக் காட்டு.

பதவியும் அதிகாரமுமே ஒருவருடைய சமூக அந்தஸ்த்தைத் தீர்மானிக்கிறது என்ற சூழ்நிலையில் அதற்கான வழி பெரமுனவாக இருந்தாலும் ஐக்கிய தேசியக் கட்சியாக இருந்தாலும், ஜே.வி.பியாக இருந்தாலம் அதன் மீது நாட்டமுள்ளவர்கள் அங்கு சென்று சேர்ந்து கொள்வதும் அதற்காக உழைப்பதும் அதற்கேற்ப தாம் சார்ந்த சமூகத்தைப் பாவிப்பதும் கூட எதிர்பார்க்க வேண்டிய விடயம்.

2012 சனத்தொகை மதிப்பீட்டின் அடிப்படையில் இரண்டு மில்லியனை அண்மித்த சனத்தொகையைக் கொண்டிருக்கும் இலங்கை முஸ்லிம் சமூகத்தில் 20 தொடக்கம் 60 வயதுக்குட்பட்ட கணிசமான ஆண்களும் 20 தொடக்கம் 40 வயது வரையான ஒரு தொகை பெண்களும் கூட தொழில் வாய்ப்புக்காக வெளிநாடு சென்றுள்ளார்கள். ஈஸ்டர் தாக்குதலின் பின் நாட்டை விட்டு வெளியேறுவதற்குக் காட்டப்பட்டு வரும் அதீத ஆர்வத்தின் தாக்கம் என்ன என்பது இதுவரை அளவிடப்படாத விடயம்.

இப்பின்னணியில் நாட்டில் தற்போது வாழும் முஸ்லிம்களின் எண்ணிக்கை முழுமையாக அளவிடப்படாதது. குத்து மதிப்பாக மேற் சொன்ன காரணங்களுக்காக 20 வீதத்தை குறைத்துக் கொண்டாலும் எஞ்சியிருப்பவர்களுள் வாக்களிக்கத் தகுதியானோர் என்றொரு தொகையுண்டு. அதுவும் இவ்வுரையில் அலசப்பட்ட பிராந்திய – பிரதேச மற்றும் தனி நபர் – குடும்ப விருப்பு வெறுப்பு மற்றும் பாரம்பரியம் சார்ந்திருப்பதனால் எத்தனை பேர் எந்தக் கட்சிக்கு வாக்களிக்கப் போகிறார்கள் என்ற கேள்வியும் உண்டு.

இவையனைத்துக்கும் மேலாகவும் கடந்த பொதுத்தேர்தலில் தனது சொந்தத் தொகுதியில் மக்கள் ஆதரவைப் பெற்று நாடாளுமன்றம் செல்ல முடியாது தோல்வி கண்ட முன்னாள் கிழக்கு மாகாண ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுகிறார். சுமார் 35,000 வாக்காளர்களைக் கொண்ட பிராந்தியத்தில் அதில் பாதியையே தொடக் கூடிய அவரால், அதுவும் சிங்கள மக்கள் மத்தியில் தவறான பெயரையும் சம்பாதித்து வைத்துள்ள நிலையில் தேசிய அளவில் 20,000 வாக்குகளையேனும் பெற முடியுமா என்பது சந்தேகமே. இதை அவரும் நன்கறிவார். ஆனாலும் அவர் தேர்தலில் போட்டியிடுகிறார், அவர் வேட்பு மனுத்தாக்கல் செய்ததும் அவரைச் சுற்றி பத்துப் பேர் நின்று எதிர்கால ஜனாதிபதிக்கு 'ஜயவே-வா' என்று சிங்களத்திலும் கோசமிடுகிறார்கள் இதை நிதானித்துப் பார்க்கும் போது பலருக்கு வேடிக்கையாகவே இருக்கும். ஆனாலும், தான் என்ன செய்கிறேன் - எதற்காகச் செய்கிறேன் என்பதை அவர் நன்கறிவார். அதன் அரசியல் இலாப – நஷ்டக் கணக்கு தெரிந்ததனால் தான் சமூக மத்தியில் 'கோமாளி'யாகக் காட்சியளித்தாலும் இக் காரியத்துக்கு அவர் துணிந்திருக்கிறார் என்பதே உண்மை.

ஈற்றில், இதனால் அவர் அடையக் கூடிய நன்மைகள் ஊடாக இழந்த மதிப்பை மீளப் பெற்றுக்கொள்ளலாம் என்பது அவர் கணிப்பு, அது போலவே பதவிகளில் உள்ளவர்களிடம் சமூகமும் பல மடங்கு மடிந்து நிற்கும் எனும் அடிப்படையில் இந்தக் கணக்கு சமப்படுத்தப்பட்டு விடும். ஆக, இதில் யாரை நொந்து கொண்டு யாரால் எதைச் சாதிக்க முடியும்? நவம்பர் 16 தேர்தல் முடிந்தால், இம்முறை வேட்பாளர்கள் சற்று அதிகம் என்பதால் தேர்தல் முடிவு வெளியாக ஓரிரு தினங்களானாலும் ஒரு வாரத்திற்குள் எல்லாம் அடங்கி விடும். அதன் பின் நாமும் தேர்தல் காலத்தில் நாம் மோதிக் கொண்ட அண்டை வீட்டுக்காரனும் அளவளாவுவதோ நட்பு பாராட்டுவதோ இல்லையா? என்று சிந்திக்க வேண்டும்.

சில வேளைகளில் எம் சமூகத்தின் அரசியல் பற்று எல்லை கடந்தும் செல்கிறது. வரலாற்றில் சற்றே பின் நோக்கிச் சென்றால் இத்தீவில் பௌத்தர்கள் தவிர ஏனைய இனங்களைச் சேர்ந்த மக்களும் இருக்கிறார்கள் என்பதை நிறுவி அதற்கேற்ப இனத்துவ அரசியலையும் விதைத்தார்கள் பிரித்தானியர். அக்காலத்தில் நமது சமூகம் பெற்றுக் கொண்ட நன்மைகள் ஏராளம். தலதா மாளிகை போன்றே முஸ்லிம்களின் பள்ளிவாசல் அமைந்திருக்கும் பகுதிகளுக்கும் மதிப்பிருக்க வேண்டும் என்ற வாதத்தை ஏற்றுக்கொண்ட பிரித்தானிய ஆட்சியாளர்கள் பள்ளிவாசல்கள் இருக்கும் பகுதியில், முன்னால் பள்ளிவாசல் இருக்கிறது 'அமைதி' என்று அறிவிப்பு செய்யும் அளவுக்கு சமூகத்தின் மதிப்பை உயர்த்தினார்கள்.

நீதிமன்றங்கள் இருக்கும் இடங்கள் போன்றே இவ்வாறான அறிவிப்புகள் நாட்டின் பல பள்ளிவாசல்கள் உள்ள இடங்களில் உள்ளது. 1915 கண்டி வன்முறையின் முன்னர் ஏற்பட்ட பிணக்கிலும் இதற்குப் பங்குண்டு. பள்ளிவாசல் உள்ள பகுதியில் பெரஹர செல்வதாயின் அமைதியாக செல்ல வேண்டும் என்ற நிபந்தனையுடனேயே பிரித்தானியர் பெரஹரவைக் கூட அனுமதித்தார்கள். ஆனால் எம்மவரோ சட்டத்தை மதித்த அவர்களை நையாண்டி செய்து கூச்சலிட்டு வன்முறையில் முடித்துக் கொண்டார்கள்.

செவ்வாய்க்கிழமை (8) இரவு ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கண்டி மீராமக்காம் பள்ளிவாசல் சென்றிருந்தார். அதன் போது ஒரு கட்டத்தில் உணர்வுப்பெருக்கில் போட்டோ எடுப்பதற்கும் கட்சிப் பற்றை வெளிக்காட்டுவதற்கும் உள்ளே வைத்தே 'ஜயவே வா' கோஷமிட்ட முசல்மான்களைப் பார்த்து, இது பள்ளிவாசல், அமைதியாக இருங்கள் என்று சஜித் பிரேமதாச ஞாபகப்படுத்த வேண்டியிருந்தது. அதே போன்று பெரமுனவின் வேட்பாளராக அறிவிக்கப்பட்டதும் அதே பள்ளிவாசலுக்கு கோட்டாபே சென்ற போது, அவரைப் பார்ப்பதற்கும் தம்மைக் காட்சிப்படுத்துவதற்கும் முந்திக் கொண்ட ஆதரவாளர்கள் கோட்டாவுடன் வந்த பௌத்த துறவியை அனாதரவாகக் கை விட, அவர் மூலையில் நின்று தவித்த சம்பவமும் கூட நடந்தது.

இவை வெளிப்படையாகச் சொல்லக் கூடிய சில உதாரணங்கள். இது போல நாட்டின் பல இடங்களிலும் கட்சிப் பற்றும் பிரிவினைகளும் இச்சமூகத்தின் ஒழுங்கை மாற்றியமைத்துக் கொண்டிருக்கும் நிகழ்வுகள் நாளாந்தம் நடைபெற்றுக்கொண்டிருக்கிறது. ஒவ்வொன்றாக அலசி ஏதோ ஒரு சாராரைக் குற்றங்காண்பது நமது நோக்கமில்லை, மாறாக சமூக ஒழுங்கின் அவசியத்தை நினைவூட்டுவதே அவசியம்.

இப்போது நிலைமை இந்த அளவில் இருக்க, சண்டைக் கோழிகளும் களமிறங்கக் காத்திருக்கின்றன. வெள்ளைத் தொப்பிகளும் கையில் அரிவாளும் சட்டையில் இரத்தமுமாக கறைபடிந்த வரலாறு உருவாகாமால் தடுப்போம் - சிந்திப்போம்! 


jTScYcS

Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment