விடிவைத் தேடும்..விரல் படும் 'சாயம்' - sonakar.com

Post Top Ad

Saturday 28 September 2019

விடிவைத் தேடும்..விரல் படும் 'சாயம்'


மனிதன் தன் அறிவு வளர்ச்சியூடாக காலத்துக்குக் காலம் புதுமைகளை செய்து கொள்கிறான். குழுமமாக இருந்து, பிரிந்து பின் கோத்திரங்களாகி, சமூகமாகி, தேச எல்லைகளை உருவாக்கி, சித்தார்ந்தங்கள், சட்ட திட்டங்களை உருவாக்கி, தன்னைத் தானே ஆளவும், ஆளப்படவும் என எல்லாவற்றிக்கும் வழிமுறைகளை உருவாக்கி அதில் முட்டி மோதிக் கொண்டிருக்கிறான்.90களின் நடுப்பகுதியில் ஹமத் பின் கலீபா அல் தானி, தந்தையிடமிருந்து ஆட்சியதிகாரத்தை அபகரித்து, கட்டாரை மீளக் கட்டியெழுப்பிக்கொண்டிருந்த காலம். அப்போது அங்கு இயங்கிய பிரெஞ்சு நிறுவனம் ஒன்றிற்கான மென்பொருள் வடிவமைப்பு (software) ஒப்பந்தத்தில் நானும் அங்கு சென்றிருந்;தேன். குறித்த நிறுவனத்துக்கென உருவாக்கிய மென்பொருளிலேயே அந்நிறுவனம் தனது நிர்வாக இயக்கத்தைத் திட்டமிட்டிருந்தது. தமது ஊழியர்களுக்கான ஊதியம், ஏனைய அனைத்து சேவைகளையும் கம்பியுட்டர் மயப்படுத்த விரும்பியதோடு ஒரு சில குறியீட்டுப் பிரிவுகளையும் உருவாக்கும் படி எனக்கு அறிவுறுத்தப்பட்டிருந்தது.

அதில் ஒன்றுக்கு TCN என ஆங்கிலத்தில் பெயர். Expat, Junior, Senior. என்றும் சில வகையறாக்கள் இருந்தது, என்னைப் பொறுத்தவரை அதனை ஆராய்வது எனது தேவையில்லையென்பதால் நான் ஏற்றுக்கொண்ட ஆறு மாத கால பணியை செய்து முடித்திருந்தேன். ஒரு நாள் நிறுவனத்தின் கணக்காளரான இந்தியரோடு அவரது அலுவலகத்தில் அமர்ந்து உரையாடிக் கொண்டிருக்கையில் ஊழியர் ஒருவருக்கான ஊதியத்தையும், அதற்கான பற்றுச்சீட்டையும் அவர் கொடுத்தார். அப்போது அதில் இருந்த TCN  என்ற எழுத்துக்களைக் கண்டதும் இது பற்றி இவருக்கு ஏதும் தெரியுமா? என அறிய விரும்பி, அது பற்றி வினவினேன்.

சிரித்துக் கொண்டே, நீங்கள் - நான் நம் போன்ற பலர் இங்கே TCN தான் என்றவர், அதன் அர்த்தம் Third Country Nationals (மூன்றாம் உலக நாடுகளின் பிரஜைகள்) என எனக்கு விளக்கினார். நினைத்துப் பார்க்கவே சிரிப்பாக இருந்தது. கட்டாரில் இயங்கிய அந்த நிறுவனத்தை நடாத்தியது வெள்ளைக்காரர்களாக இருந்தாலும் நிறுவனத்தின் இயக்கத்துக்கான மனித வலு முழுவதுமே அவர்களால் மூன்றாம் உலக நாடுகள் என அடையாளப்படுத்தப்பட்ட இந்தியா, இலங்கை, பங்களதேஷ் போன்ற நாட்டுப் பிரஜைகளிடமிருந்தே கிடைத்திருந்தது. Executive ஒப்பந்தத்தில் அங்கு சென்றிருந்தாலும் கூட நானும் TCN தான்.

அமெரிக்காவுக்கும் - ரஷ்யாவுக்குமிடையிலான பனிப்போர் நடந்து கொண்டிருந்த (1947-1991) காலத்திலேயே உலக நாடுகள் இவ்வாறு மூன்றாகப் பிரிக்கப்பட்டன. அக்காலப் பகுதியில் அபிவிருத்தியடைந்து கொண்டிருக்கும் நாடுகளாகக் கருதப்பட்ட ஆசிய, ஆபிரிக்க, லத்தீன் அமெரிக்க நாடுகளே பொதுவாக இவ்வாறு மூன்றாம் உலக நாடுகளாகக் கணிக்கப்பட்டிருந்தன. இன்னும் ஒரு வகையில் சொல்வதானால் அமெரிக்க சார்பு முதலாம் உலக நாடுகள் அல்லது ரஷ்ய சார்பு இரண்டாம் உலக நாடுகளுக்குள் அடங்காத நாடுகளே முதலில் இவ்வாறு மூன்றாம் உலக நாடுகளாக அடையாளப்படுத்தப்பட்டிருந்தன.

எனினும், அது என்னவோ நம்மை மூன்றாம் தர பிரஜைகளாக சித்தரிப்பது போன்ற உள்ளுணர்வு உருவானது. இலங்கைப் பிரஜையாக உலக அரங்கில் நமக்கிருக்கும் கௌரவம் இவ்வளவு தானா? என பல நூறு கேள்விகள் என்னுள் எழுந்தன. மற்றவர்களை விட நாம் எதில் தான் குறைந்து விட்டோம்? அவர்களிடம் பணம் இருந்தாலும், சிந்தனையும் - செயற்திறனும் எங்களது தானே? என்ற ஆதங்கத்தோடே அந்த ஆறு மாதம் கழிந்து நாடு திரும்பியிருந்தேன். அப்போதிலிருந்து நாட்டின் முன்னேற்றம், அதன் அடிப்படை, அரசியல், சிந்தனை அபிவிருத்தி, சமூகவியல் என பல விடயங்களை உற்றுக் கவனிப்பதும் தேவைப்படும் போது கிடைக்கும் வழியூடாக பங்களிப்பதும் வழக்கமாக இருந்து வருகிறது.

கருத்தியல் களத்தில் தொடர் பங்காற்றவும், போராடவும் தேவையான உந்துகோளாகவும் அதுவே இருக்கிறது என்றாலும் மிகையில்லை. இப்பின்னணியிலேயே சம கால சமூக நிலைப்பாட்டை ஆராயும் போது எப்போதுமே தேசத்தில் நாம் - தேசத்துக்காக நாம் என்பதை விலக்கிப் பார்ப்பதில்லை. இன்றைய உலகம் ஒரு (Global Village) கிராமம் என்று சொல்லப்படுகிறது. அந்த அளவுக்கு தகவல்களும் - இணைப்பும் - பிணைப்பும் விரல் நுனியளவில் சுருங்கிக் கொண்டுள்ளது. 

ஆதலால், நவீன உலகில் நாமும் நமது சிந்தனையும் எங்கு நிற்கிறது, நம் செயற்பாடும் திறனும் எந்த வரையறைக்குள் முடங்கியிருக்கிறது என்பதை அறிந்து கொள்வது அத்தனை கடினமில்லை.

சிறிய வயதில் சமூகக் கல்வி பாடத்தில் இலங்கை ஒரு அபிவிருத்தியடைந்து வரும் நாடென்று என் ஆசிரியர் சொல்லித்தந்து சில தசாப்தங்கள் கடந்தும் கூட இன்னும் அந்த எல்லையை விட்டு நாடு வெளிவராமல் இருப்பதற்கு என்னதான் காரணம்? என்ற கேள்விக்கு 2009 வரை உண்மையில் திருப்திகரமான விடையிருக்கவில்லை. தமிழ் சமூகம் தமக்கான அரசியல் விடிவை ஆயுதம் மூலமும் தனி நாடு மூலமும் சாதிக்கலாம் என்று போராடி, ஈற்றில் 2009ல் ஆயுதப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டு வர நிர்ப்பந்திக்கப்பட்டது. அதுவரையான காலப் பகுதியில் இலங்கையின் பொருளாதார அபிவிருத்திக்கு மாத்திரமன்றி சமூக முன்னேற்றத்துக்கும் யுத்தம் ஒரு பெருந்தடையாக இருந்து கொண்டே இருந்தது.

தமிழர்கள் இரண்டாந்தரப் பிரஜைகளே என்ற தனது நிலைப்பாட்டில் மிகவும் தெளிவாக இருந்த ஜே.ஆர். ஜயவர்தன, ஒரு கட்டத்தில் 'தமிழர்களை நான் பட்டினியால் சாகடித்தால் சிங்களவர்கள் சந்தோசப்படுவார்கள்' என்று தெரிவித்திருந்தார். [Daily Telegraph, 11 July 1983]

அடுத்து வந்த ஜனாதிபதியான ரணசிங்க பிரேமதாச, உள்நாட்டு சமூக அபிவிருத்தியை, குறிப்பாக வீடில்லாப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண்பதைத் தன் தலையாய கடமையாக எண்ணி, கம்உதாவ போன்ற வேலைத் திட்டங்கள் ஊடாக கிராமங்களை உருவாக்கி அபிவிருத்தி செய்வதில் முனைப்பாக செயற்பட்டிருந்தார். தான் பிரதமராக இருக்கும் போதே 2000ம் ஆண்டு யாவருக்கும் புகலிடம் என்று கொள்கைப் பிரகடனம் செய்து வந்த அவர், ஐ.நாவில் தனது வீட்டுத் திட்ட முன்மொழிவூடாக 1987ம் வருடத்தை வீடில்லாருக்கு புகலிடம் வழங்கும் சர்வதேச வருடமாக அறிவிக்கவும் வைத்து (International Year of Shelter for the Homeless) பாராட்டுக்களைப் பெற்றிருந்தார்.

1993ல் அவரது அகால மரணத்தையடுத்து, அடுத்து வந்த ஜனாதிபதி தேர்தலில் களமிறங்கிய பிரான்சில் அரசியல் விஞ்ஞானம் படித்து வந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க ஊடாக எதிர்பார்க்கப்பட்ட அபிவிருத்தியும் ஒரு எல்லைக்கு அப்பால் முன்னேற்றம் காணவில்லை. உள்நாட்டு அபிவிருத்தியில் கரை காண்பதே அவருக்குப் பெரும் சவாலாக அமைந்தது. பதவியேற்ற புதிதில் அரசாங்கத்தில் நிலவும் இலஞ்ச, ஊழல் சூழ்நிலையை ஒழிக்கப் பாடு பட்ட போதிலும் அடுத்தடுத்து வந்த உள்நாட்டு அரசியல், பொருளாதார மற்றும் யுத்த சிக்கல்கள் சந்திரிக்காவின் அரசியல் அறிவை மக்களுக்குப் பயனுள்ள வகையில் மாற்றியமைக்க இடம் தரவுமில்லை, அதிலிருந்து வெற்றிகரமாக அவர் சுழியோடவும் இல்லை.

அதற்கடுத்து, பண்டாரநாயக்க குடும்பத்தால் மழுங்கிப் போன தமது குடும்பத்தின் அரசியல் ஆளுமையை மீள நிறுவ வாய்ப்பமைத்துக் கொண்டு நாட்டின் ஆட்சியதிகாரத்தைக் கைப்பற்றிய மஹிந்த ராஜபக்ச, தனது பதவிக்காலத்தில் பல்வேறு அரசியல் திருப்பு முனைகளை உருவாக்கத் தவறவில்லை. முக்கியமாக மேலை நாடுகள் சார்ந்திருந்த இலங்கையை கிழக்கில் சீனப் பக்கமாத் திருப்பியதோடு 30 வருட காலமாக முதலில் மக்கள் போராட்;டமாக ஆரம்பித்து, பின் அரசியல் கலந்த ஆயுதப் போராட்டமாக மாறியிருந்த விடுதலைப் புலிகளின் நடவடிக்கைகளை முற்றாக முடிவுக்குக் கொண்டு வந்தார். நாட்டின் உட் கட்டுமானங்கள் மாறுவதற்கான அடிப்படையாக இது அமைந்தது.

வீதிகள் நவீனமாயின, புதுப்புது கட்டிடங்கள் எழுந்தன, அன்றாட வாழ்க்கையில் மக்களிடம் மாற்றங்கள் வர ஆரம்பித்தது. இன்னொரு புறத்தில் பண வீக்கமும் கடனும் பெருகியது, அரசியல் அதிகாரம் ஓரிடத்தில் குவிந்து சர்வாதிகாரப் போக்கு தலையடுத்தது, ஊழல் மலிந்தது, ஆட்சியதிகாரத்தில் உள்ளவர்கள் ஜனநாயக விரோதப் போக்கை உணரத் தவறினார்கள், மக்கள் ஏதோ ஒரு வகையில் அடக்குமுறையை உணரத் தொடங்கினார்கள். ஆயினும் இதற்குள் இரண்டாவது தடவையும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகியிருந்தார். போதாததுக்கு ஐந்து வருடங்களுக்கு ஒரு முறை மாத்திரமே மக்களின் நாடிப் பிடிப்பை அறிந்து கொள்ள முனையும் அரசியல்வாதிகள் ஒரே நபர் எத்தனை தடவை வேண்டுமானாலும் ஜனாதிபதி பதவியில் வீற்றிருக்க வழி செய்யும் வகையில் 18ம் திருத்தச் சட்டத்தையும் இக்காலத்தில் உருவாக்க ஆதரவளித்தார்கள்.

இந்த கைங்கரியத்தைச் செய்ததில் முஸ்லிம்களின் அரசியல் காவலர்களாகச் சொல்லிக் கொள்ளும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுக்கும் அகில இலங்கை மக்கள் காங்கிரசுக்கும் குறைவில்லாத பங்குண்டு. ஆயினும், தவறிழைத்து விட்டோம் என்று 2015ல் அவர்கள் சொன்னதும் மக்களும் அதை மன்னித்து விட்டார்கள்.

இந்த சூழ்நிலையிலேயே, இலங்கை தேசத்தின் குடிமக்கள் இன-மொழி பேதமின்றி தமக்கெதிரான அடக்குமுறையை உணரத் தொடங்கினார்கள். மாணவர்கள் தம் எதிர்காலம் முடங்கிப் போயிருப்பதைக் கண்டு கொதித்தெழுந்தார்கள். ஜனநாயக சக்திகள் நாட்டின் அபிவிருத்தி அதிகார வர்க்கத்திடம் அடங்கிப் போயிருப்பதைக் கண்டு கோபம் கொண்டார்கள், முற்போக்குவாதிகள் உலக கிராமத்தில் நம் தேசத்தின் மதிப்பிழந்து போயிருக்கும் நிலை கண்டு உரத்துப் பேசலானார்கள். இந்த சந்தர்ப்பத்தை சரிவரப் பயன்படுத்திக் கொண்ட ரணில் விக்கிரமசிங்க, மேலை நாடுகளின் பேருதவியோடும் - அறிவு மற்றும் ஆற்றலோடும் 2014ல் இனவாதம், அடக்குமுறையால் கொந்தளித்துப் போயிருந்த நாட்டு மக்களின் உணர்வுகளை ஒருங்கிணைத்த போராட்டமாக மாற்றுவதில் வெற்றி கண்டார்.

அந்த போராட்டத்துக்கு ஆதரவளித்தவர்கள் எல்லோரும் விரும்பிச் செய்தார்கள் என்றில்லை, ஆனாலும் மாற்றத்தின் அவசியம் உணர்ந்து மாற்றுவழியை நாடினார்கள் என்பது மறுக்க முடியாத உண்மை. அப்பின்னணியில் 2015 ஜனவரி 8ல் ஆட்சி மாறியது, பல அதிரடி அரசியல் நகர்வுகள் - உணர்வூட்டல்கள் கொந்தளிப்புகளுக்கு மத்தியில் அதே வருடம் பொதுத் தேர்தலையும் நடாத்தி துவண்டு போயிருந்த ஐக்கிய தேசியக் கட்சி தலை நிமிர்ந்து கொண்டது. மாற்றம் வேண்டிய உந்துதலாலும் உணர்வாலும் கட்டுண்டிருந்த முற்போக்கு சக்திகள் அதற்கடுத்த வருடத்திலிருந்து தாம் ஏமாந்து போய் விட்டதை உணர ஆரம்பித்திருந்தது.

ஆயினும், அவ்வப்போது நிகழ்ந்து வந்த முக்கிய சமூக நிகழ்வுகள், இன வன்முறைகள், அரசியல் குழறுபடிகள் என நிகழ்வுகளின் குழப்பம் தொடர்வதால் பாரிய வெகுஜன உணர்வலை இன்னும் தோன்றவில்லையெனலாம். எனினும், மக்கள் நிகழ்வுகளின் உணர்வுகளால் எவ்வாறு தூண்டப்படுகிறார்கள்? அது இல்லையென்றால் இதுவென்ற வலது - இடது தெரிவுகளுக்குள் மாத்திரமே பயணிக்கிறார்கள் என்பதற்கு 2015க்குப் பின் நடந்த உள்ளுராட்சித் தேர்தல்கள் சாட்சியாகிறது.

இப்பின்னணியில், இன்னொரு ஜனாதிபதி தேர்தலும் வருகிறது. அங்காவது வாக்களிக்கும் தினத்தில் விரலில் பூசப்படும் சாயம் விடிவை நோக்கியதாக இருக்குமா? என்ற ஆதங்கம் இப்போதே உருவாகி விட்டது. நவம்பர் 16ம் திகதி மீண்டும் இந்நாட்டின் போக்கும் எதிர்காலமும் தீர்மானிக்கப்படப்போகும் இன்னுமொரு சந்தர்ப்பமாக அமையப் போகிறது. மக்களிடம் பல வகையான கேள்விகள் இருக்கின்றன.  மஹிந்த ராஜபக்ச கொண்டு வந்த 18ம் திருத்தச் சட்டம் பற்றி மிகவும் தாமதமாகவே மக்கள் உணர்ந்து கொண்டார்கள், ஆனாலும் மைத்ரி – ரணில் கொண்டு வந்த 19ம் திருத்தச் சட்டம் பற்றி ஏகத்துக்கும் குழப்பமும் புரிந்துணர்வுக் குறைபாடும் உள்ளது.

2018 ஒக்டோபரில் தனது நிறைவேற்று அதிகாரத்தைத் தவறாகப் புரிந்து வைத்திருந்த மைத்ரிபால சிறிசேன செய்த அரசியல் களேபரம் உச்ச நீதிமன்றின் தலையீட்டால் தோல்வியடைந்தது. அங்கிருந்து தெளிவு பெற்ற மைத்ரியின் கணிப்பின் படி இனி வரப் போகும் ஜனாதிபதி ஒரு 'பொம்மை'யாகவே இருப்பார். ஆனாலும், 19ம் சட்டத்திருத்தத்தின் சிற்பிகளோ அவ்வாறில்லை, 19ல் உருவான வரையறைகள் நிறைவேற்று அதிகாரத்தை முற்றாக நீக்கவில்லையென்கிறார்கள். இதற்கிடையில் தமக்கு எவ்வாறான ஒரு ஜனாதிபதி இந்நாட்டுக்கு அவசியம்? என்பது பற்றி சிறுபான்மை கட்சிகளுக்கும் ஒரு பார்வையுள்ளது.

முக்கியமாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு, ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் மற்றும் மலையக கட்சிகளைப் பொறுத்தவரை நிறைவேற்று அதிகார ஜனாதிபதி முறைமையே சிறுபான்மை சமூகத்துக்கு பாதுகாப்பானது என்ற கருத்தையே அவை கொண்டுள்ளன. அது உண்மையில் சிறுபான்மை சமூகத்தின் பாதுகாப்பு மீதான அக்கறையா? அல்லது சமூகத்தின் மேலான அரசியல் சவாரி மீதான அக்கறையா? என்பது தனியாக அலசப்பட வேண்டிய ஒன்று. எவ்வாறாயினும், இலங்கை எதிர்நோக்கப் போகும் அடுத்த அரசியல் குழப்பமும் (Dilemma) மீண்டும் இது சார்ந்தே இருக்கப் போகிறது.

கடந்த தடவை இரு கட்சிகளின் கூட்டணி ஒட்டு மொத்த மக்கள் எதிர்பார்ப்பின் முறிவுக்குக் காரணமாக இருந்தது என்று பொறுத்துப் போனாலும் ஐந்தாவது வருடம் முடிந்து ஆறாவது வருடத்தில் இதே பிரச்சினை தொடரும் என்பது உறுதி. அவ்வேளையில் இரு வேறு கட்சிகளிடம் நாட்டின் இரு பிரதான பதவிகள் இருப்பது எதிர்காலத்துக்குப் பேராபத்தாக அமையும். நிறைவேற்று அதிகார பிரதமர் முறைமையைக் கொண்டு வந்தே தீருவது என்ற முடிவோடு இருக்கும் ரணில் விக்கிரமசிங்கவால் நடைமுறைப் பதவிக்காலத்தில் அதனை சாதிக்க முடியாது போனால் அதன் பின் இதன் சாத்தியம் கேள்விக்குறியாகி விடும்.

அதே போன்று அந்த நிறைவேற்று அதிகாரம் கொண்ட பிரதமர் பதவியை மஹிந்த ராஜபக்ச அடைந்து கொண்டால், 2015ல் விட்ட இடத்திலிருந்து தான் எல்லாம் தொடருமா? என்ற சந்தேகமும் மக்கள் மத்தியில் இல்லாமல் இல்லை.

இதில் எதைப்பற்றி ஆழமாகப் பேசச் சென்றாலும் ஏலவே கட்சி மற்றும் கொள்கை இயக்கங்களால் பிரிந்து போயிருக்கும் இச்சமூகத்தின் பார்வையில் அது ஏதோ ஒரு பக்கம் சார்ந்ததாகவே இருக்கும். கருத்தொருமைப்பாடு என்பது திணிக்கப்பட முடியாதது, தானாக வர வேண்டியது. ஆக, எதிர்காலம் என்ற விடயம் ஒவ்வொருவரிடமும் எந்த வகையிலான அளவுகோள் கொண்டு கணிக்கப்படுகிறது என்பதைப் பொருத்தே விரல் படும் சாயத்தின் அர்த்தம் பதிவாகப் போகிறது.

எதிர்காலத்தின் பங்காளிகளாக சிந்தித்து வாக்களிப்பது ஒவ்வொருவரினதும் கடமையாகிறது!

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment