மாலைதீவில் இலங்கை பல்கலைக்கழக பீடங்கள்: ஹக்கீம் - sonakar.com

Post Top Ad

Monday 2 September 2019

மாலைதீவில் இலங்கை பல்கலைக்கழக பீடங்கள்: ஹக்கீம்



இலங்கையில் அமைந்துள்ள  பிரபலமான பல்கலைக்கழகங்களின் சில பீடங்களை மாலத்தீவில் ஸ்தாபிக்கும் படி மாலைதீவு அரசு விசேட வேண்டுகோளை எமக்கு விடுத்துள்ளது. இதற்க்கு தேவையான பகுதிகளை முழுநாட்டிலும் தருவதாக அவர்கள் கூறுகின்றார்கள்.இதுதொடர்பிலான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவிருக்கிறோம்.  என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும்,நகர திட்டமிடல்,நீர் வழங்கல் மற்றும் உயர்கல்வி அமைச்சருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். 

வயம்ப பல்கலைக்கழகத்தின் மருத்துவபீடம் பிரதமர் ரணில் விக்ரமசிங்க தலைமையில் கடந்த சனிக்கிழமை (31) ஆரம்பித்து வைக்கப்பட்டது. இந்த நிகழ்வில்  கலந்து கொண்டு உரையாற்றிய போதே அமைச்சர் இவ்வாறு  தெரிவித்தார்.  இந்நிகழ்வில் சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன, கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம், வடமேல் மாகாண சபையின் முன்னைய நாள் உறுப்பினர் சட்டத்தரணி  ரிஸ்வி ஜவஹர்ஷா, பிரதேச சபை உறுப்பினர்கள், அரச உயர் அதிகாரிகள் என பலரும் கலந்து கொண்டனர். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

அமைச்சர் ராஜித சேனாரத்ன அவர்களின் பேச்சில் எங்களது அரசில் கடந்த நான்கரை வருட காலத்தில் செய்யப்பட்ட அபிவிருத்திகள் தொடர்பிலான விளக்கத்தை எம்மால் கேட்க முடிந்தது. இந்த அபிவிருத்தியிலான மாற்றத்தில் ஒரு அங்கமாக குறிப்பாக உயர் கல்வி அமைச்சின் அபிவிருத்திக்காக நாங்கள் செய்த முதலீடு தொடர்பில் அமைச்சர் ராஜிதவுக்கு முன்னர் பேசிய பல்கலைக்கழகங்கள் மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் கூறினார். பல்கலைக்கழகங்களின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்வதற்காக நாங்கள் செய்துள்ள முதலீடு கடந்த அரசாங்கம் ஒதுக்கிய தொகையிலும் இரண்டு மடங்குகளாகும். கடந்த அரசாங்கம் 100 பில்லியன் ரூபாய்களை பல்கலைக்கழக அபிவிருத்திக்கு ஒதுக்கியது. ஆனால் இந்த அரசாங்கம் 200 பில்லியனுக்கும் அதிகமான தொகைகளை ஒதுக்கி பல்கலைக்கழகங்களின் பௌதீக வளங்களை அபிவிருத்தி செய்துள்ளது. 

அவ்வாறே எனது அமைச்சில் உள்ள இன்னொரு துறையான நீர் வழங்கல் துறையை எடுத்துக்கொண்டால் அந்தத்துறையிலும் முன்னர் எந்த அரசாங்கமும் முதலீடு செய்யாத அளவுக்கு சுமார் 300 பில்லியன்கள் ஒதுக்கி தூய குடிநீரை வழங்கும் திட்டங்களை நாங்கள்செய்து வருகிறோம். இந்த அரசாங்கத்தின் காலத்திற்குள் இந்த தொகையானது சுமார் 400 பில்லியனுக்கு உயரலாம். 

குருநாகல் மாவட்டத்தில் மட்டுமே தூய குடிநீரை பெற்றுக்கொள்ள பெருந்தொகையை நாம் ஒதுக்கியுள்ளோம். நான் இந்த அமைச்சை பாரமெடுக்கும் போது குருநாகல் மாவட்டத்தில் குழாய் வழியாக தூய குடிநீரை இந்த மாவட்டத்தில் வெறும் 10 சதவிகித நிலப்பரப்பே உள்ளடக்கப்பட்டிருந்தது. எங்களது அரசாங்கத்தின் துரிதமான செயற்பாட்டின் மூலம் தற்போது இந்த மாவட்டத்தில் சுமார் 50 சதவிகிதமான நிலப்பரப்புக்கு குழாய் வழியான தூய குடிநீரை பெற்றுக்கொள்ளும் வகையில் எமது வேலைத்திட்டங்களை செய்து வருகிறோம்.

எங்களுக்கு இவ்வளவு பெரிய தொகையை முதலீடு செய்வதற்கு கௌரவ பிரதமரின் ஒத்துழைப்பும் இந்த கருத்திட்டங்களுக்கு அவர் வழங்கிய அனுமதியுமே பிரதான காரணங்களாகும். அத்தோடு செயல் திட்டங்களை தயாரிப்பதிலும் இந்த செயல் திட்டங்களை நடத்துவற்கு தேவையான நிதியினை கடன் மூலம் பெற்றுக்கொள்ளவும் பிரதமர் எமக்கு ஒத்துழைத்தமை தொடர்பில் நான் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன்.

அவ்வாறே உயர்கல்வி துறையில் இப்போது நாம் மருத்துவ பீடங்களில் உள்வாங்கும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும், மருத்துவ பீடத்தை இங்கே அமைப்பதும்  மட்டுமல்லாமல்  இதன் பின்னர் செய்யவேண்டிய விசேடமான பொறுப்புக்கள் இருக்கின்றன அது எங்களது கல்வியின் தரத்தை உயர்த்தி சர்வதேச மட்டத்தில் அங்கீகரிக்கக் கூடிய உயர்தரத்தை கொண்டு வரவேண்டிய நிலை இருக்கிறது.  

இது தொடர்பில் தேவையான நடவடிக்கைகளை நாம் மேற்கொண்டு வருகிறோம். அதுவும் ஒரு பிரச்சினைக்குரிய விடயமாக இப்போது உருவெடுத்திருந்தாலும் இது தொடர்பில் பல்கலைக்கழக மட்டத்திலுள்ள தொழிற்சங்கங்களுக்கு போதிய விளக்கங்களை வழங்கி தர நிர்ணயத்தை கட்டுப்படுத்த அமைக்கப்படவிருக்கின்ற  ஆணைக்குழு  தொடர்பில் தெளிவுபடுத்தும் யோசனை இருக்கிறது. இது தொடர்பிலான பிரேரணையை பாராளுமன்றத்திற்கு கொண்டு வருமுன்னர் உள்ளக முரண்பாடுகளை களைந்து விரைவில் பேச்சுவார்த்தைகளின் மூலம் இதற்கான  தீர்வினை பெற நாங்கள் முயற்சி செய்து வருகிறோம்.

இதே போல இந்த அரசாங்கத்தினால் நாங்கள் செய்த பல அபிவிருத்தி பணிகள் இருப்பது போல இன்னும் எதிர்காலத்தில் அதிக பணிகள் எம் முன்னால் இருக்கிறது. விசேடமாக இந்த பல்கலைக்கழக துறையில் இந்த நாட்டுக்கு வெளியே வெளிநாடுகளுக்கும் விரிவு படுத்தும் எண்ணம் இருக்கிறது இது தொடர் பூர்வாங்க பேச்சுவார்த்தைக்காக திங்கட்க்கிழமை கௌரவ பிரதமருடன் மாலைதீவுக்கு செல்லவிருக்கின்றேன். இங்குள்ள பிரபலமான பல்கலைக்கழகங்களின் சில பீடங்களை அங்கு ஸ்தம்பிக்கும் படி மாலைதீவு அரசு விசேட வேண்டுகோளை எமக்கு விடுத்துள்ளது. அவர்களின் நாட்டில் தேவையான பகுதிகளை முழுநாட்டிலும் தருவதாக அவர்கள் கூறுகின்றார்கள்.இதுதொடர்பிலான ஒப்பந்தமொன்றில் கைச்சாத்திடவிருக்கிறோம். 
இதன் மூலம் வேறுசில துறைகளுக்கான உயர்கல்வியை வழங்க முடியும். அதிகமானவர்களுக்கு உயர்கல்வி வாய்ப்பு இதன் மூலம் கிட்டும். ஏற்கனவே இது தொடர்பில் இலங்கையிலுள்ள பிரபல்யமான பல்கலைக்கழகங்களான மொரட்டுவ,பேராதெனிய, கொழும்பு ஆகியன  இவ்வாறான பல்கலைக்கழக அமைப்புக்கும் விரிவாக்கத்திற்கும்  தமது சேவையை பகிர்ந்து கொள்வதற்கான ஆதரவை வெளிப்படுத்தியுள்ளன. இது தொடர்பில் பல்கலைக்கழக விதியொழுங்குகளை கவனத்தில் கொள்வதோடு சட்டமா அதிபரின் ஆலோசனையையும் பெறவுள்ளோம்.எனக்கூறினார்.

-RH

No comments:

Post a Comment