போலி ஆவணம் - ஆள் மாறாட்டம்: 67 வயது நபர் கைது - sonakar.com

Post Top Ad

Monday 30 September 2019

போலி ஆவணம் - ஆள் மாறாட்டம்: 67 வயது நபர் கைதுஆள் மாறாட்டம் மற்றும் போலி ஆவணங்களைத்  தயாரித்தமை உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுக்கள் தொடர்பில், 67 வயதான நபர் ஒருவர் பத்தரமுல்லையில் கைது செய்யப்பட்டுள்ளார்.வலான குற்றத்தடுப்புக் குழுவுக்கு 27 ஆம் திகதி கிடைத்த தகவலுக்கு அமைய, பத்தரமுல்லை, தலங்கம பிரதேசத்தில் வைத்து குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டதாக, பொலிஸார் தெரிவித்துள்ளனர்.    ஆள் மாறாட்டம், போலி ஆவணங்களைத் தயாரித்தமை, அதற்கான உபகரணங்களை வைத்திருந்தமை, பண மோசடி செய்தமை உள்ளிட்ட பல்வேறு மோசடிக் குற்றச்சாட்டுக்களின் பேரில் குறித்த சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

விக்ரமசிங்கபுர, பத்தரமுல்லையைச் சேர்ந்த புளத்சிங்களகே கருணாரத்ன எனும் நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.சந்தேக நபர் மற்றுமொருவருக்குச் சொந்தமான மொழி பெயர்ப்பாளர் பதிவுச் சான்றிதழை வைத்திருந்துள்ளதோடு, அவரின் பெயரிலான இறப்பர் முத்திரை, போலிக் கையொப்பம் அடங்கிய வெற்றுக் காகிதங்கள் 20 உள்ளிட்டவைகளும் அவரிடமிருந்து இதன்போது மீட்கப்பட்டுள்ளன.

சந்தேக நபர், மொழி பெயர்ப்பாளராக தன்னை அடையாளப்படுத்தி, போலி ஆவணங்களை மோசடியாகத் தயாரித்து, மோசடியாக பணம் சம்பாதித்துள்ளமை விசாரணைகளிலிருந்து தெரிய வந்துள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இதன்போது  கணனிகள் 4, அச்சிடும் இயந்திரங்கள் 4 உள்ளிட்ட பொருட்களையும் குறித்த சந்தேக நபரிடமிருந்து பொலிஸார் மீட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் சந்தேக நபர்கள் உள்ளனரா என்பது குறித்த  விசாரணைகள், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர் டி.ஜி.எச். பிரசாந்தவின் மேற்பார்வையின் கீழ் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

சந்தேக நபர் மற்றும் பொருட்கள் மிரிஹான விசேட குற்ற விசாரணைப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதோடு, சந்தேக நபரை,  கங்கொடவில நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்த பொலிஸார் நடவடிக்கை எடுத்திருந்தனர்.

-ஐ. ஏ. காதிர் கான்

No comments:

Post a Comment