அவசர அவமானங்கள்! - sonakar.com

Post Top Ad

Friday 2 August 2019

அவசர அவமானங்கள்!


ஈஸ்டர் தாக்குதல் அதிர்வலைகள், கெடுபிடிகளிலிருந்து முஸ்லிம் சமூகம் இன்னும் முழுமையாக விடுபடவில்லை. முஸ்லிம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் இரு மாகாண ஆளுனர்கள் கூட்டாகப் பதவி துறந்த போது உடனடியாக மாற்றீடு காண விரும்பிய ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன, முன்னாள் கொழும்பு மேயர் ஏ.ஜெ.எம். முஸம்மிலை மேல் மாகாண ஆளுனராக நியமித்தார்.

இந்த நியமனம் சமூக மட்டத்தில் பலரின் புருவங்களை உயர்த்த வைத்தது. ஆனாலும், தனி நபர் அரசியல் என்ற அடிப்படையில் அதனை நிராகரிக்க வேண்டிய நிர்ப்பந்தம் தனக்கு இருக்கிறதா? இல்லையா? என்பதை அவரே தீர்மானிக்க வேண்டும். அரசியல் குடும்பமாக உருவெடுத்த அவர் இதுவரை வகித்து வந்த அரச பதவிகள் அனைத்துமே அவரது தனிப்பட்ட முயற்சிக்கான அங்கீகாரங்கள் என்ற வகையில் அதனை அவரவர் உரிமையாகப் பார்பதே தகும்.

இதற்கிடையில், உலக சமாதான மாநாடு அல்லது உலக இஸ்லாமிய மாநாடு, சமாதானத்துக்கும் ஐக்கியத்துக்கும் சகவாழ்வுக்குமான மாநாடு என்ற பல குழப்பமான அறிமுகத்துடன் ஜுலை 30ம் திகதி, கொழும்பில் ஏற்பாடாகியிருந்த மாநாடு உண்மையில் எதற்கான மாநாடு என்பதை மேல் மாகாண ஆளுனரே விளக்கும் வரை தெளிவிருக்கவில்லை.

ஈற்றில், இது தொடர்பில் பல விமர்சனங்கள் வெளியான நிலையில், ஆளுனர் தனது ஊடக இணைப்பாளர் ஊடாக 30ம் திகதி இடம்பெறப்போவது இலங்கையில் சமயம் மற்றும் இனங்களுக்கிடையே அமைதி, சமாதானம், சகவாழ்வு, பொறுமை மற்றும் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கான மாநாடு என ஊடகங்களுக்கான விளக்கம் அனுப்பியிருந்த போது தான் அது ஓரளவு புரிதலைத் தந்தது.

எனினும், அந்த விளக்கத்துக்கு முன்பாகவே ஜனாதிபதி, மகாநாயக்கர்கள், ஜம்மியா உயர்பீடம் மற்றும் மஹிந்த ராஜபக்சவும், பல பௌத்த துறவிகளும் அழைக்கப்பட்டு விட்டார்கள் என்ற அடிப்படையில், யாரால் யாருக்கு சமாதானம் புகட்டப்படப் போகிறது என்ற கேள்வி எழாமலும் இல்லை. பல முன்னணி இணையத்தளங்களும் குழம்பிப் போயிருந்தன, சில செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கும் மாநாடு நடந்தால் தான் தெரியும் என்றே பதில் கூற நேர்ந்தது.

இந்த நிலையிலேயே மாநாட்டுக்கு வருகை தந்த உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் கலாநிதி அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா கண்டிக்கு ஹெலிகப்டரில் அழைத்துச் செல்லப்பட்டிருந்தார். அங்கு, மகாநாயக்கர்களை சந்திக்க வைப்பதே பிரயாணத்தின் முக்கிய நோக்கம் என்பது நிகழ்வுகளிலிருந்து அறிந்து கொண்ட விடயம்.

அவ்வாறிருக்க, பௌத்த உயர் பீடத்தினை சந்திக்க அழைத்துச் செல்லப்படும் அவருக்கு, அவர்கள் யார்? என்ற விளக்கடும் பெரும்பான்மை சமூகத்தின் மார்க்கத் தலைமைகள் என்ற அடிப்படையில் அவர்களுடன் மற்றவர்கள் எவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்ற சம்பிரதாயம் மற்றும் கலாச்சார விடயங்களை முன் கூட்டியே எடுத்துச் சொல்லியிருக்க வேண்டியதும் அழைத்துச் சென்றவர்களின் கடமையாகிறது.

ஈஸ்டர் தாக்குதல் நடந்து மூன்று மாதங்களாகிறது, அது தொடர்பில் நாடாளுமன்ற தெரிவுக்குழு விசாரித்துக் கொண்டிருக்கிறதே தவிர இதுவரை பாதிக்கப்பட்டவர்களின் உள்ளங்கள் அமைதியடையும் வகையில் அதற்கான நீதி கிடைக்கவில்லை. ஆதலால், ஜனாதிபதி வேட்பாளர் எனக் கூறிக் கொண்டு யாரும் என்னை சந்திக்க வர வேண்டாம் என செய்தியாளர் சந்திப்பை நடாத்தி உரக்கச் சொல்லும் தைரியம் கார்டினல் மல்கம் ரஞ்சித்துக்கு உண்டு. 

ஏழு வருடங்களாக மிகத் தீவிரமான இனவன்முறைக்குள்ளாக்கப்பட்டு அடக்கு முறைக்குள்ளாகியுள்ள சமூகத்தின் சார்பில் இவ்வாறு சொல்லக் கூடிய நிலையில் முஸ்லிம் சமூகத்தின் எந்தத் தலைமையும் இல்லை. கார்டினலின் பேச்சை ஒட்டு மொத்த கிறிஸ்தவ சமூகமும் ஆமோதித்து அமைதியாக இருக்கிறது. ஆயினும், முஸ்லிம் சமூகத்திலிருந்து மார்க்கத் தலைமைகள் அவ்வாறு எதையாவது கூறி விட்டால் அதனை எதிர்த்து, விமர்சித்து எம் பிளவுகளை பறைசாற்றி நன்மையடையவும் இன்னொரு கூட்டம் காத்திருக்கிறது என்பதால் அவ்வாறு யாராலும் எதுவும் பேசவும் முடியாது, அபிப்பிராய பேதத்தில் மூழ்கிப் பிளவுண்டு கிடக்கும் சமூகத்தின் உணர்வுகளை ஒன்று திரட்டவும் முடியாது.

அரசியல் தலைமைகளாலும் அவ்வாறு திடமான முடிவொன்றை எடுக்கவோ பதவிகளுக்கு அப்பால் சமூகம் சார்ந்த அரசியல் வெற்றிகளை அடையவோ முடியாது என்பதும் ஈஸ்டரின் பின் தெட்டத் தெளிவாகியுள்ளது.

தற்காலிகமாகவேனும் முஸ்லிம் அமைச்சர்கள் அனைவரும் ஒன்றாக இணைந்து சூழ்நிலைக்கேற்ற வகையில் மேற்கொண்ட கூட்டு இராஜினாமா வரவேற்கப்பட்டது. ஆயினும், இந்த கூட்டு இராஜினாமா நாடகத்தின் முடிவு அலங்கோலமாகவே இருக்கும் என எதிர்பார்க்கப்பட்டதற்கமைவாக சமூகப் பிரச்சினைகள் எல்லாம் தீரும் வரை பதவியேற்க மாட்டோம் என சூளுரைத்தவர்கள் மீண்டும் தம் பதவிகளைப் பெற்றுக்கொண்டார்கள்.

இறுதி நேரம் வரை, தன் தலைவன் அவ்வாறு செல்ல மாட்டான் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் மற்றும் அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தீவிர தொண்டர்கள் நம்பிக்கொண்டிருந்தார்கள் என்பதும் கவனிக்கப்படாத துன்பியல் வரலாறு.

இதனை மீறியே இடம்பெற்ற பதவியேற்பு அடிப்படையில் முஸ்லிம் அரசியலின் பலவீனம் என்பதை சொல்லியாக வேண்டும். கல்முனை வடக்கு உப பிரதேச செயலகத்தைச் சூழ்ந்து எழுந்த சிக்கலை தமிழ் தேசியக் கூட்டமைப்பு லாவகமாகக் கையாண்டு வெற்றி பெற்றிருக்காவிட்டால், கருணா அம்மான், வியாழேந்திரனின் இனவாதக் கூச்சலுக்குள்ளாகி அம்மண்ணில் வெறுப்பூட்டலும் அவமானமும் இன்னும் அதிகரித்திருக்கும். ஆதலால், அங்கும் கிடைத்த அவசர அவமானத்தைக் கடந்தும் மறந்தும் போவதைத் தவிர இச்சமூகத்துக்கு வேறு விமோட்சனம் இல்லை.

இவ்வாறு, அலை மோதிக்கொண்டிருக்கும் சமூக உணர்வுகளை மேலும் காயப்படுத்தும் சம்பவமாகவே உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளரின் கண்டி விஜயம் அமைந்திருந்தது. முதலில் மல்வத்து பீடம் சென்ற அவர், மல்வத்து மகாநாயக்கர் திப்பட்டுவேவே ஸ்ரீ சுமங்கல தேரரை சந்திக்கிறார். அங்கு அவரை அழைத்துச் சென்ற முஸ்லிம் அரசியல்வாதி, கடந்த காலங்களிலும் மகாநாயக்கரை குனிந்து கும்பிட்ட பழக்கம் உள்ளவரென்பதால் அவருக்கு இம்முறையும் அவ்வாறே அதைச் செய்து கொள்வதில் தயக்கமிருக்கவில்லை.

ஆனால், எவ்வித தயார்படுத்தலும் இல்லாமல் அழைத்துச் செல்லப்பட்டிருந்த கலாநிதி அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா, தான் ஒரு மதத் தலைவரை சந்திக்கும் வகையில், கும்பிடும் கலாச்சாரமும், சிரம் தாழ்த்தும் பழக்கமும் இல்லாதவர் என்பதால் கை குலுக்கச் சென்றார். ஒருவேளை, மகாநாயக்கர் எழுந்து நின்றிருந்தால் முசாபஹா செய்யவும் முயன்றிருப்பார். ஆனாலும், அப்பழக்க வழக்கங்கள் இல்லாத பாரம்பரியத்தை பேணுபவர் என்பதால் திப்பட்டுவேவே ஸ்ரீ சுமங்கல தேரர் தன் இருக்கையிலேயே அமர்ந்திருந்து, கை குலுக்கவும் மறுத்து, அங்கே போய் அமருங்கள் என்று சொன்னதைப் பார்த்த போது, இதைத் தெளிவு படுத்தி அழைத்துச் சென்றிருக்க வேண்டியவர்களின் அலட்சியத்தினை நினைத்து வெட்கமாகவே இருந்தது.

உலக முஸ்லிம் லீக் பொதுச் செயலாளர் என்பது பொறுப்பான மாத்திரமன்றி கௌரவமான பதவியும் கூட. அத்துடன் எதையும் திறம்படச் செய்யாது வாங்கிக் கட்டிக்கொள்ளும் வழக்கத்தை மல்வத்து பீடம் வரை சென்று அரங்கேற்ற வேண்டுமா? என்ற ஆதங்கம் அதிகரித்தது. 

இதன் போது, சந்தர்ப்பத்தைப் பயன்படுத்திக் கொண்ட மகாநாயக்கர், முஸ்லிம் சமூகம் இந்த தீவில் இன்னுமொரு பெரும்பான்மைச் சமூகத்துடன் சேர்ந்து வாழ்கிறது , ஆதலால் தம் நிலையுணர்ந்து வாழ வேண்டும் என்பதை கலாநிதி அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா இலங்கையின் முஸ்லிம் சமூகத்துக்கு எடுத்துச் சொல்ல வேண்டும் என வலியுறுத்தியமை வெளிநாடுகளுக்கும் தாம் சேதி சொல்லத் தயாராக இருக்கும் பௌத்த உயர் பீடத்தின் மன நிலையை எடுத்துக் காட்டியது. 

2012ல் ஏதோ உணர்வுபூர்வமாக ஆரம்பித்த ஞானசார, இன்றளவில் மிகவும் பக்குவமாக முஸ்லிம் சமூகத்திற்குள் நிலவும் விவகாரங்களை எடுத்துச் சொல்லி வரும் நிலையில் பௌத்த மகாநாயக்கர்களும் தம் பேச்சு வடிவத்தை மாற்றிக் கொண்டுள்ளார்கள் என்பதிலிருந்து ஆளியும் - சோழியும் எங்கிருந்து இயக்கப்படுகிறது என்பதை உணர்ந்து கொள்ளலாம்.
அதற்கடுத்ததாக, அஸ்கிரி சென்ற கலாநிதி அஷ்-ஷைக் முஹமத் பின் அப்துல்கரீம் அல்-ஈசா, யாரும் சொல்லிக் கொடுக்காமலே தான் என்ன செய்ய வேண்டும் என்பதை கற்றுணர்ந்தவராக, அதேவேளை கும்பிடும் பழக்கமும் இல்லாதவராகத் தம் கைகளை உயர்த்தி சைகை செய்தமை ஒரு விருந்தாளியைக் கொண்டு சென்று விளையாட்டுப் பிள்ளையாக்கியதை எடுத்துணர்த்தியது.

இங்கு எழுதப்பட்டிருப்பது வெறுமனே ஒரு சம்பவம் தொடர்பான விமர்சனமன்று. இன்று எம் சமூகம் சென்று கொண்டிருக்கும் நிலை பற்றிய ஆதங்கம். ஒற்றுமை – ஒருங்கிணைப்பு – கண்ணியம் மற்றும் நிபுணத்துவம் ஏதுமற்ற நிலைக்குத் தள்ளப்பட்டு சிதைந்து சின்னாபின்னமாகிக் கொண்டிருக்கிறது என்கிற ஏக்கம்.

1951ம் ஆண்டிலிருந்து அமுலில் இருக்கும் தற்போதைய முஸ்லி;ம் விவாக மற்றும் விவாகரத்துச் சட்டம் திருத்தப்பட வேண்டும், அங்கு மாற்றங்கள் வரவேண்டும் என்பது சமூகத்திலிருந்து நீண்ட நாட்களாக ஒலித்துக் கொண்டிருக்கும் குரலாக இருக்கிறது. இதற்கான அடிப்படை, இச்சட்டத்தின் ஊடாக சமூகத்தில் இடம்பெறும் அநீதிகளே என்றால் எவ்வகையிலும் தவறில்லை.

புத்தளம், அநுராதபுரம், உக்குவளை உட்பட முஸ்லிம்கள் செறிந்து வாழும் கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளிலிருந்தும் அநீதியிழைக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவர்களின் கதைகளை நேரடியாகவும் நம்பிக்கையானவர்கள் ஊடாகவும் கடந்த பல வருடங்களாகக் கேள்விப் பட்டிருக்கிறேன். பெரும்பாலான இடங்களில் பாதிக்கப்பட்ட ஆதங்கம் என்ற வரையறை தாண்டி, துஷ்பிரயோகம் பற்றிய முறைப்பாடுகள் முன் வைக்கப்பட்டன. பெண்களை மரியாதைக் குறைச்சலாக நடாத்துதல் முதல் பணம் படைத்தவர்களுக்கு பக்க சார்பாக தீர்ப்பு வழங்குதல் மற்றும் இலஞ்சமாகப் பணம் பெற்றுக் கொண்டே தீர்ப்பு வழங்குதலும் இதில் உள்ளடக்கும்.

இவை சமூகப் பிரச்சினைகள். இதற்கு சமூகம் என்ன தீர்வை வழங்கியிருக்கிறது என்ற கேள்வியிலிருந்தே இது அணுகப்பட வேண்டும். பாதிக்கப்பட்டவர்கள் தம் குறைகளைக் கூறுவதற்கு முடியாமல் தனிமையில் தவித்துக் கொண்டிருக்கும் சூழ்நிலையை உருவாக்கியதும், சமூகத்தின் ஒரு கூறு சந்தேகப்படும் அடிப்படையில், அதனைக் கொண்டு உதவி எனும் பெயரில் அரசசார்பற்ற நிறுவனங்கள் முஸ்லிம்கள் விவகாரத்தில் தலையிடுகிறது என்றே எடுத்துக் கொண்டாலும் கூட இந்த சூழ்நிலையை உருவாக்கியவர்கள் நாம் என்பதை ஏற்றுக் கொள்ள வேண்டும்.

சமூகச் சிக்கல்களை மூடி மறைத்து, அடக்கியொடுக்கப்படுபவர்களுக்கு மேலும் அநீதியிழைத்துக் கொண்டிருப்பதைத் தான் இஸ்லாம் வலியுறுத்துகிறதா? போன்ற நீண்ட நாள் கேள்விகளுக்கு பதில் கூறாத, மாற்றுத் தீர்வுகளை முன் வைக்காத சமூக, மார்க்க மற்றும் பள்ளி நிர்வாகங்கள் இன்று தாம் சார்ந்த கொள்கைப் பற்றின் காரணமாக அடிப்படைப் பிரச்சினைகளை மூடி மறைத்து, முஸ்லிம் விவாக-விவாகரதது சட்டத்திருத்தம் மார்க்கத்துக்கும் ஷாபி மத்ஹபுக்கும் எதிரானது என்ற பிரச்சாரத்தை மேற்கொள்கிறது.

அத்தோடு நிறுத்தி விடாமல் பாதிக்கப்பட்டதனால் குரல் கொடுக்கும் அபலைப் பெண்களை விபச்சாரிகள் என பட்டம் தீட்டியும் அழகு பார்க்கிறது. வெட்கமாக இல்லையா? என்று ஒரு கணம் நாம் சிந்திக்க வேண்டும். நம் சமூகப் பெண்களை, நமது கொள்கைப் பிடிப்புக்குள் வரவில்லையென்ற காரணத்திற்காக எதையெல்லாம் சொல்வோம் என்ற வரையறை வேண்டும். இந்த அடக்குமுறைகளினால் மனமுடைந்து மார்க்கக் கலாச்சாரம் என பின்பற்றப்படும் சில சம்பிரதாயங்களைக் கைவிட்டு வாழ ஆரம்பித்திருக்கும் பெண்களும் இருக்கிறார்கள். அவ்வாறானவர்கள் இன்று காட்சியளிக்கையில் முக்காடு போடவில்லை, ஹிஜாப் அணியவில்லையென்று குறை கூறும் அதே தளத்தில் அவர்களை அவ்வாறான நிலைக்குத் தள்ளியதன் காரணிகளையும் ஆராய வேண்டும்.

தொடர் அலட்சியத்தின் விளைவில் இன்று பாதிக்கப்பட்ட பெண்கள் இனவாத ஊடகங்களின் உதவியை நாடிச் செல்கின்றனர். இது ஒரே நாடு – ஒரே சட்டம் என்ற வாதத்தை வலுவாக்க மாத்திரமன்றி முஸ்லிம் தனியார் சட்டம் அநீதியான முறையில் புனையப்பட்டிருக்கிறது என்கின்ற வாதத்துக்கும் வலுச் சேர்க்கிறது. நம்மைச் சுற்றி என்னதான் நடந்து கொண்டிருக்கிறது என்ற தெளிவில்லாத நிலையில் தமது நிலைப்பாடே இலங்கையில் உள்ள அனைத்து முஸ்லிம்களின் நிலைப்பாடு எனவும் அந்தந்த கொள்கை இயக்கத்தை வழி நடாத்தும் மார்க்கத் தலைமைகள் தெரிவித்துக் கொண்டிருக்கின்றன.

இச்சூழ்நிலையில், கடந்த ஜுலை 28ம் திகதி தெவட்டகஹவில் இலங்கை சூபி தரீக்காக்களின் உயர் பீடம் நடாத்தியிருந்த மாநாட்டில் மேற்கொள்ளப்பட்ட பிரகடனங்கள், மார்க்கத் தலைமைத்துவம் சிதைந்து கொண்டிருப்பதை பறைசாற்றியுள்ளது. தம்மை சூபி மார்க்க அறிஞர்களாகக் காணும் மார்க்க அறிஞர்கள் தனித்தியங்குவதும், தம்மைப் பாரம்பரிய முஸ்லிம்கள் என அடையாளப்படுத்திக் கொள்வோர் தனிச் சமூகமாக வாழப் புறப்பட்டிருப்பதும்; கடந்த 40 வருட கொள்கை இயக்க வெறியால் இலங்கை முஸ்லிம்கள் கண்டிருக்கும் இன்னுமொரு பின்னடைவு.

இலங்கையில் ஷாபி மத்ஹப் மாத்திரம் தான் பின்பற்றப்படுகிறது என்று ஒரு சாரார் கூற, ஷாபி மற்றும் ஹனபி மத்ஹபுகள் இரண்டும் சேர்த்தே பின்பற்றப்பட வேண்டும் என இன்னோர் சாரார் சொல்ல, மத்ஹபுகள் எதையுமே பின்பற்றத் தேவையில்லையென்று சொல்லும் பிரிவும், அதேவேளை ஷியாயிசமே தீர்வென சொல்லும் பிரிவும் என சமூகம் சிதைந்து கொண்டிருக்கிறது.

தமது வீட்டு வாசலை பிரச்சினை தட்டும் வரை சமூக விடயங்களை அறியாமல் இருக்கும் மக்களும், தம்மைச் சுற்றியே எல்லோரும் இருக்கிறார்கள் என்று எண்ணிக்கொண்டிருக்கும் அறிஞர்களும் அடியால் பெருகும் துளையை இன்னும் முழுமையாக உணராத நிலையிலேயே நாளொரு மேனியாக முஹமதுகள் அஹமதுகள் தமது பெயரை முருகனாகவும், மைக்கேலாகவும், முனசிங்கவாகவும் மாற்றிக் கொள்வதாக பத்திரிகை விளம்பரங்கள் வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

வேதனை! 


wjR0LbU

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment