கடந்த ஜனாதிபதித் தேர்தலில் முஸ்லிம்கள் மட்டுமல்ல, ஒட்டுமொத்த சிறுபான்மையும் ஒன்றுபட்டு கடந்த ஆட்சியை அகற்றியது. இத்தேர்தலைப் பொறுத்தவரை அவ்வாறான ஓர் உணர்வு முஸ்லிம்களிடம் இல்லை. தற்போது மூன்று வகையான கருத்துக்கள் நிலவுகின்றன. அவை:
(1) பிரிந்து பல வேட்பாளர்கட்கு வாக்களித்தல்
(2) ஒருமித்து வாக்களித்தல்
(3) தனித்துப் போட்டியிடல்
பிரிந்து வாக்களித்தல்
கடந்த தேர்தலில் மஹிந்த ஆட்சியை அகற்றுவதற்காக முழுமையாக ஒன்றுபட்டோம். இந்த ஆட்சியில் அதற்கான பலனை அனுபவித்தோமா? என்ன காரணங்களுக்காக கடந்த ஆட்சியை அகற்றினோமோ அவை அனைத்தையும் இவ்வாட்சியிலும் அனுபவித்தோமே!
அதேநேரம், வரலாற்று ரீதியாக முஸ்லிம்கள் ஐ தே கட்சிக்கே ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்து வந்திருக்கின்றோம். 2005, 2010 ஆகிய இரு தேர்தலிலும் மஹிந்தவைப் புறக்கணித்தோம். நாம் கடந்த ஆட்சியில் கொடுமைகளை அனுபவித்ததற்கு அதுவும் ஒரு காரணம். எனவே, இத்தேர்தலில் நாம் ஒரு பக்கம் நிற்காமல், சகல முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்காமல் சகல தரப்பிற்கும் பிரிந்து வாக்களிப்போம்.
அவ்வாறு வாக்களிக்கும்போது யார் ஜனாதிபதியாக வந்தாலும் நம்மை அனுசரித்துப் போவார்கள். இது ஒரு சாராரின் கருத்து.
இக்கருத்தை முதலில் பார்ப்போம். மஹிந்தவுக்கு கடந்த 2005, 2010 தேர்தல்களில் முஸ்லிம்கள் வாக்களிக்கவில்லை என்பது உண்மைக்கு மாறானது. 2005இல் வழமையான சு கட்சி முஸ்லிம்கள் மற்றும் அ இ மு கா சார்பான முஸ்லிம்கள் மஹிந்தவுக்கு வாக்களித்தார்கள். 2010 தேர்தலில் யுத்தவெற்றிக்கு நன்றிக்கடனாக அதைவிடவும் கூடுதலாகவே வாக்களித்தார்கள்.
ஐ தே கட்சிக்கு அதிகமாகவும் மஹிந்தவுக்கு குறைவாகவும் வாக்களித்ததும்தான் மஹிந்த ஆட்சியில் நம் துன்பத்திற்கு காரணம்; என்றால் நாம் இத்தேர்தலில் பிரிந்து வாக்களிக்கும்போதும் அதே நிலைமைதான் வரும். ஏனெனில் வாக்குகள் சமமாக அளிக்கப்படாது. ஒரு பக்கம் கூடலாம், ஒரு பக்கம் குறையலாம்.
மறுபுறம் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததற்காக நன்றியுணர்வுடன் ஆட்சியாளர்கள் இருப்பார்கள்; நம்மைப் பாதுகாப்பார்கள்; என்பது எல்லா ஜனாதிபதிகளுக்கும் அல்லது எல்லா நேரத்திற்கும் பொருந்தாது.
அவ்வாறாயின் அன்று தொடக்கம் இன்றுவரை ஜனாதிபதித் தேர்தலில் மட்டுமல்ல, பொதுத்தேர்தலிலும் பெரும்பான்மையான முஸ்லிம்கள் வாக்களிப்பது ஐ தே கட்சிக்கே! முஸ்லிம்களின் வாக்களிப்பு விகிதத்தின் அடிப்படையில் குறிப்பிடுவதானால் முஸ்லிம்களின் உண்மையான கட்சி ஐ தே கட்சியே! முஸ்லிம் கட்சிகளல்ல.
அதேநேரம் அந்த ஐ தே க இன் ஆட்சியில்தான் கின்தோட்டை கலவரம் இடம்பெற்றதும், திகன கலவரம் இடம்பெற்றதும் குளியாப்பிட்டி, மினுவான்கொட.... போன்ற இடங்கள் துவம்சம் செய்யப்பட்டதுமாகும். அந்த நன்றிக்கடன் எங்கே போனது?
மறுபுறம் ஆட்சி நமது முட்டில் தங்கியிருக்கும்போது நமது பாராளுமன்றப் பலத்தினூடாக அரசைக் கட்டுப்படுத்த முடியும். அதன்மூலம் நமக்கு ஏற்படும் அனர்த்தத்தைத் தடுக்க முடியும். ஆனாலும் நாம் பாதிக்கப்படுகின்றோம்; என்றால் அதற்குக் காரணம் நமது தலைமைகள் என்பவர்களது பலயீனம். அது வேறாகப் பேசப்பட வேண்டும். பேசினாலும் ஆகப்போவது ஒன்றுமில்லை.
மட்டுமல்ல, நன்றி என்ற சொல்லுக்கு அர்த்தம் தெரியாத ஒரு துறைதான் அரசியல். மைத்திரி கனவு கண்டிருப்பாரா ஜனாதிபதியாவதற்கு? அவர் நன்றியுடையவராக இருந்திருந்தால் அவரது பதவிக்காலம் முழுவதும் ரணிலுக்கும் ஐ தே கட்சிக்கும் ஆட்சிசெய்ய முழுமையாக ஒத்துழைப்பு வழங்கியிருக்க வேண்டும். ஆனால் என்ன நடந்தது! எனவே, அரசியலில் “ நன்றி” என்ற சொல் அர்த்தம் அற்றது; சில நேரங்களில் விதவிலக்கு இருந்தபோதிலும் கூட.
எப்போது பிரிந்து வாக்களிக்கலாம்
நமது சனத்தொகை ஒரு வீதம் அல்லது இரு வீதம். நமது வாக்களிப்பு ஒருவரின். வெற்றி, தோல்வியில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தாது; என்றால் பிரிந்து வாக்களிப்பதால் சமூக நன்மை எதுவுமில்லாதபோதும் ( தனிப்பட்ட சுயநலன்களைக் குறிப்பிடவில்லை) பாதிப்பு எதுவுமில்லை. அல்லது களத்தில் இருக்கும் வேட்பாளர்கள் எல்லாம் நல்லவர்கள், இனவாதமற்றவர்கள், யார் வெற்றிபெற்றாலும் எங்களுக்கு அநியாயம் செய்யமாட்டார்கள்; என்றால் பிரிந்து வாக்களிப்பதில் தவறேதும் இல்லை.
ஒருமித்து வாக்களித்தல்
போட்டியாளர்களுள் ஒருவர் நல்லவர்; ஏனையவர்கள் பாதகமானவர்கள் எனில் நாம் நூறு வீதம் ஒன்றுபட்டு அந்த நல்லவரின் வெற்றியை உறுதிப்படுத்த முயற்சிக்க வேண்டும்.
எல்லோருமே பாதகமானவர்கள்; ஒருவரைவிட ஒருவர் பாதகம் கூடியவர் என்றால்; பாதகம் கூடியவரை எப்படியாவது தோற்கடிக்க எதிர்த்திசையில் நாம் ஒன்றுபட்டாக வேண்டும். நாம் சிறுபான்மையினர், நமக்கு நடக்கும் அநியாயங்களுக்கெதிராக போராடுவதற்கு நமக்கிருக்கின்ற ஒரேயொரு ஆயுதம் நமது வாக்கு மட்டும்தான். அதனை நாம் மிகவும் கவனமாக பாவிக்கவேண்டும்.
நமக்கு மறைந்த தலைவரைப்போன்று அர்த்தமுள்ள ஒரு தலைமைத்துவம், முழுக்க முழுக்க சமூக நலன்கருதி தீர்மானம் எடுக்கக்கூடிய தலைமைத்துவம் இருந்திருந்தால் நாம் அலட்டிக்கொள்ள வேண்டிய தேவையில்லை. அத்தலைமைத்துவம் விரல் நீட்டும் திசையில் நாம் வாக்களித்துவிட்டு செல்லலாம். மிகுதியை அத்தலைமைத்துவம் பார்த்துக்கொள்ளும்.
நம்மிடம் அவ்வாறான ஒரு தலைமைத்துவமும் இல்லை; ஒரு புதிய தலைமைத்துவத்தை உருவாக்கவும் நாம் தயாரில்லை. இந்நிலையில் நம் வாக்குகுகளையாவது நாம் கவனமாக பாவிக்கக் கூடாதா? இவ்வாறான சூழ்நிலையில் ஒரு கூடையில் சகல முட்டைகளையும் போடக்கூடாது; என்பது பொருந்துமா? சிந்தியுங்கள்.
தனித்துப் போட்டியிடல்
கொள்கை ரீதியாக முஸ்லிம்கள் தனித்துப் போட்டியிடவே கூடாது; என்பதல்ல. அவ்வாறு தனித்துப் போட்டியிடவேண்டுமென்றால் முதலில் அதற்கான நோக்கங்கள், இலக்குகள் அடையாளம் காணப்படவேண்டும்.
உதாரணமாக, இதன்மூலம் சர்வதேசத்திற்கு ஏதாவது செய்திசொல்லப் போகிறாமா? அவ்வாறாயின் அவை யாவை? இப்போட்டியிடுதல் மூலம் அவை எவ்வாறு சொல்லப்படும்? அதனால் நாம் அடையக்கூடிய அனுகூலங்கள் எவை?
தேசத்திற்கு ஏதாவது செய்தி சொல்லப்போகிறாமா? அவை எவை?
மேலே கூறப்பட்ட நோக்கங்களுக்காக மட்டும் போட்டியிடப்போகின்றாமா? அல்லது இதன்மூலம் முஸ்லிம் வாக்குகளை ஒன்று திரட்டி அச்செய்திகளைச் சொல்வதோடு நமது இரண்டாவது வாக்கை ஒட்டுமொத்தமாக ஒரு பிரதான வேட்பாளருக்கு நிபந்தனையின் அடிப்படையில் வழங்குவதன் மூலம் காத்திரமான அடைவுகளை எதிர்பார்க்கிறோமா?
அவ்வாறாயின் அந்நிபந்தனைகளை அடையாளம் கண்டிருக்கின்றோமா? அவை எவை?
இவ்வாறான ஒரு பெரிய இலக்கை நோக்கிய பயணத்தை ஒரு சில தனிநபர்கள், தனிக்கட்சிகள் செய்துவிடமுடியுமா? அவ்வளவு தூரம் செல்வாக்குள்ள தனிநபர்கள், கட்சிகள் இருக்கின்றனரா?
இன்றைய சூழ்நிலையில் இவ்வாறான ஒரு இலக்கை நோக்கி; இருக்கின்ற முஸ்லிம் அரசியல் கட்சிகள், ஜம்மிய்யிதுல் உலமா உட்பட முக்கிய சிவில் அமைப்புகளை ஒன்றுபடுத்த முடியுமா?
இவ்வாறான விடயங்களைக் கவனத்தில் எடுத்து ஒரு பொது இலக்கை நோக்கிய பயணத்தை ஒற்றுமையாக செய்யமுடியுமாக இருந்தால் அவ்வாறு தனித்துப் போட்டியிடுவதைப்பற்றி சிந்திப்பதில் தவறில்லை.
இவை எதுவுமில்லாமல் கடந்த காலங்களில் முழுக்க முழுக்க தன்னைமட்டும் மையப்படுத்தி அரசியல் செய்தவர்கள், பொதுபல சேனா போன்ற இனவாதிகள் முஸ்லிம் சமூகத்திற்கெதிராக காட்டுத்தார்பார் நடாத்தியபோது அதனைக்கண்டுகொள்ளாமல் அதிகாரத் தலைமைத்துவங்களுக்குப் பின்னால் அலைந்து திரிந்தவர்கள், அந்த எதேச்சதிகார ஆட்சியை துரத்தவேண்டுமென்று சமூகத்திலுள்ள ஏழையும் பணக்காரனும் படித்தவனும் பாமரனும் இளைஞனும் வயோதிபனும் ஒன்றுபட்டபோது அது சமூகத்தின் பிரச்சினை; எனது பிரச்சினை அல்ல; எனக்கு எனது நலனே முக்கியம் என்று அரசியல் செய்தவர்கள்.
இன்று அரசியலில் தன் எஜமானர்களால் கைவிடப்பட்ட நிலையில் எப்படியாவது எஜமானர்கள் மீண்டும் தன்னைத் திரும்பிப் பார்க்கவேண்டும்; தன் அரசியல் பாதுகாக்கப்பட வேண்டும்; என்பதற்காக சமூகத்திற்காக தனித்துப்போட்டியிடப் போகிறேன்; பேரம்பேசப்போகிறேன்; என்று தனது அரசியலுக்காக சமூகத்தின் ஒரு பகுதி வாக்குகளைப் பிரிக்க முற்படுவது சமூகத்திற்கு செய்கின்ற எவ்வளவு பெரிய துரோகம்! அநியாயம்!!
எனவே, தனித்துப் போட்டியிடுவதென்பது கொள்கையளவில் ஒரு தவறான விடயமல்ல. அவ்வாறாயின் அனைவரும் ஒற்றுமைப்பட்டு மேற்கூறிய விடயங்களை அடையாளம் கண்டு ஒரு அரசியல்- சிவில் கூட்டுத் தலைமைத்துவத்தின்கீழ் ஒரு நேர்மையாக, சமூகத்தின் நலனை தன்னலனைவிட முன்னுரிமைப்படுத்தக்கூடிய ஒருவரை களமிறக்கி ஒரு வரலாற்றை இந்நாட்டில் பதிவு செய்யுங்கள்.
சிலர், நாம் அவ்வாறு தனித்துப்போட்டியிட்டால் பெரும்பான்மை சமூகத்திடமிருந்து இன்னும் தூரமாகிவிடுவோம்; என்றவொரு கருத்தை முன்வைக்கிறார்கள். நாம் இணக்கமாக போவதென்பது வேறு; ஒரேயடியாக அடங்கி அடிமைகளாக மாறுவதென்பது வேறு.
எங்களது அடிப்படை வாக்குரிமையைப் பாவிக்கின்ற விடயத்தில்கூட எங்களால் சுதந்திரமாக செயற்பட முடியாதென்றால் நாமென்ன கொத்தடிமைகளா? அதேநேரம் பெரும்பான்மையுடன் இணங்கிப்போவதற்கு இரண்டாம், மூன்றாம் வாக்குகள் இருக்கின்றன.
அல்லது, ஆகக்குறைந்தது முஸ்லிம் அரசியல் கட்சிகள் ஒற்றுமைப்பட்டு முக்கிய சிவில் அமைப்புகளையும் இணைத்து நமது நிபந்தனைகளை அடையாளம்கண்டு அதனை முன் வைத்து பொருத்தமான ஒரு வேட்பாளருக்கு மொத்த வாக்குகளையும் ஒரு முகப்படுத்தி தனித்துப் போட்டியிடாமல் நேரடியாக வழங்குவதன்மூலம் சமூகத்திற்காக ஏதாவது அடைவுகளைச் சாதிக்கப்பாருங்கள்.
நமது நிலை, ஒரு கட்சி புல்லுக்கு இழுக்கிறது; இன்னுமொரு கட்சி தண்ணிக்கு இழுக்கிறது. சமூகமும் பல கூறுகளாகப்பிரிந்து ஒவ்வொரு திசையில் நிற்கிறது.
தேர்தல் வந்ததும் ஒவ்வொரு கட்சியும் அவர்களது தனிநலன்களுக்காக ஒவ்வொரு வேட்பாளரை ஆதரித்துக்கொண்டு சமூகத்திற்காகத்தான் இந்த முடிவை எடுத்ததாக மேடைகளில் முழங்குவார்கள். இந்திய சினிமாவில் வரும் அரசியல் காட்சிகளை இங்கு நேரடியாக அரங்கேற்றுவார்கள். நாமும் ஏமாந்து அவர்கள் பின்னால் போவோம். இதுதான் நமது தலைவிதி.
புரிந்துகொள்ளுங்கள்:
அடுத்து வரப்போகும் அரசில்; ஒரு சமூகம் மாத்திரம் ஆட்சி செய்கின்ற; சிறுபான்மைக்கு ஆட்சியில் பங்கில்லாத, விரும்பினால் ஆட்சியின் திண்ணை ஓரத்தில் குந்தியிருக்கவேண்டிய ( இன்று இந்தியாவில் இருப்பதுபோல்) புதிய தேர்தல்முறை கொண்டுவரப்படலாம்.
ஒரு நாடு, ஒரு சட்டம் என்ற அடிப்படையில் நமது பல மார்க்க, கலாச்சார உரிமைகள் பறிக்கப்படலாம்; இது சிங்கள நாடு, சிங்களவர்க்கே சொந்தம் என்ற அவர்களது கோசம் செயற்படுத்தப்படலாம்; “முஸ்லிம்களைக் கையாளுகின்ற பொறுப்பை மதகுருக்களிடம் தாருங்கள்” என்ற சில தீவிரவாத மதகுருக்களின் கோரிக்கை மறைமுகமாகவாவது நிறைவேற்றப்படலாம்.
“காஷ்மீர் நாம் பின்பற்ற சிறந்த உதாரணம்”; என்று சம்பிக்க கூறியிருக்கிறார். இதன் அர்த்தம் புரிந்ததா? இந்தியாவில் ஏனைய மாநிலங்களை விடவும் கிட்டத்தட்ட தனிநாடு போன்று சுய அதிகாரங்களைக்கொண்ட ஒரு மாநிலம் காஷ்மீர்.
தேர்தல் முடிந்த கையோடு அரசு எடுத்த அதிரடி நடவடிக்கை இன்று மற்ற மாநிலங்களை விடகூட அல்ல, சமமாகக்கூட அல்ல; மற்ற மாநிலங்களைவிட மிகவும் குறைந்த அதிகாரம்கொண்ட ( யூனியன் பிரதேசம்) மாநிலமாக காஷ்மீர் மாற்றப்பட்டிருக்கிறது. இரவோடிரவாக அவர்களின் உரிமைகள் பறிக்கப்பட்டிருக்கின்றன. உரிமை கேட்கின்ற மக்கள் துவம்சம் செய்யப்படுகின்றார்கள்.
முஸ்லிம்களை அடுத்த தேர்தலின்பின் ஒரு கைபார்க்க காஷ்மீர் சிறந்த உதாரணமாம்; என்று இலங்கையில் கூறுகிறார்கள். ஆனால் நமது கட்சிகளுக்கு இவை பற்றிக்கவலையில்லை. கட்சிகளுக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு இவை பற்றிக் கவலையில்லை. சமூகமும் அடிபடும்வரை இவை பற்றிச் சிந்திக்காது; இது நமது நிலை.
எனவே, விழிப்படையுங்கள். இத்தேர்தலை எதிர்கொள்வது தொடர்பாக அனைவரையும் ஒன்றுபடுத்தி ஒருமித்த தீர்மானம் எடுக்க ஜம்மிய்யதுல் உலமா முன்னெடுப்புகளைச் செய்யுங்கள்.
-வை எல் எஸ் ஹமீட்
No comments:
Post a Comment