முஸ்லிம்களின் ஆடை விவகாரத்தில் அட்டூழியம்: PSC விசாரணையில் அசாத் சாலி காட்டம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 11 June 2019

முஸ்லிம்களின் ஆடை விவகாரத்தில் அட்டூழியம்: PSC விசாரணையில் அசாத் சாலி காட்டம்!பொது நிர்வாக சேவையின் சர்ச்சைக்குரிய சுற்று நிருபத்தினால் முஸ்லிம் அரச உத்தியோகத்தார்கள் எதிர்நோக்கும் ஆடைச் சிக்கல் விவகாரத்தை இன்று நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் ஆஜரான நிலையில் பேசிய முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலி, பிரதமரின் அலுவலகம் அந்த சுற்று நிருபத்தைப் பின்பற்றப் போவதில்லையென தெரிவித்தும், அமைச்சு மட்டத்தில் அது மாற்றப்படும் என எதிர்பார்க்கப்பட்டும், ஜனாதிபதி இதற்குத் தான் உடன்பாடில்லையென தெரிவித்தும் கூட அமைச்சின் செயலாளரின் கடும்போக்குவாதத்தினால் சமூகத்துக்கு அட்டூழியமிழைக்கப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளார்.குறித்த சுற்று நிருபத்தை மாற்றுவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதமர் பகிரங்கமாக தெரிவித்தும் கூட, மாற்று சுற்று நிருபம் வெளியாகாத நிலையில் தொடர்ந்தும் குழப்பம் தொடர்வதோடு பல இடங்களில் முஸ்லிம் அரச ஊழியர்கள் நெருக்கடிகளை சந்தித்த சம்பவங்களும் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையிலேயே இன்றைய தினம் நாடாளுமன்ற தெரிவுக்குழு முன் இவ்விடயத்தைப் பேசிய முன்னாள் ஆளுனர், நாட்டின் தலைவர்களையே மதிக்காது இவ்வாறு அமைச்சின் செயலாளர்கள் நடந்து கொள்ளும் சூழ்நிலை உருவாகியுள்ளமை சமூகங்களுக்கு எதிரான அடக்குமுறையென விசாரணையின் போது சுட்டிக்காட்டியிருந்ததாக  சோனகர்.கொம் செய்தியாளர் தெரிவித்தார்.

இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சின் செயலாளர் ரட்னசிறியை சோனகர்.கொம் தொடர்பு கொண்ட போது, பழைய சுற்று நிருபம் திருத்தப்படுமா? இல்லையா? என்பது பிரதமருடனான பேச்சுவார்த்தையின் பின்னர் முடிவெடுக்கப்படும் என தெரிவித்ததுடன், அவ்வாறான பேச்சுவார்த்தை இதுவரை நடைபெறவில்லையெனவும் அறியமுடிந்தது. இதேவேளை,  பிரதமர் அலுவலகம் அதனை பின்பற்றப் போவதில்லையென தெரிவித்துள்ள  நிலையில் பழைய சுற்று நிருபம் செல்லுபடியாகுமா? இல்லையா? என்ற கேள்விக்கும் தெளிவான பதிலைத் தர மறுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

குறித்த நபருடனான நேர்காணலை செவிமடுக்க கீழ்க்காணும் பிளேயரை அழுத்துங்கள்.

No comments:

Post a Comment