ஆளுநர்களை இராஜினாமா செய்ய வைத்தது அநியாயம்: MS தௌபீக் - sonakar.com

Post Top Ad

Tuesday 4 June 2019

ஆளுநர்களை இராஜினாமா செய்ய வைத்தது அநியாயம்: MS தௌபீக்


இரண்டு முஸ்லிம் ஆளுநர்களை இராஜினாமா செய்ய வைத்ததன் மூலம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கு பாரிய அநியாயம் செய்து விட்டது என திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எம்.எஸ்.தௌபீக் தெரிவித்துள்ளார். 

ஊடகங்களுக்கு விடுத்துள்ள அறிக்கையிலேயே இவ்வாறு அவர்   தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:

முஸ்லிம் மக்களை கௌரவப் படுத்தும் பொருட்டு இரண்டு ஆளுநர்களை நியமித்துள்ளதாக வெளியில் காட்டிய ஸ்ரீ லங்கா சுதந்திரக்கட்சி நியமனம் வழங்கப் பட்டு 4 மாதங்களுக்குள் அவர்களை அப்பதவிகளில் இருந்து வெளியேற்றி முஸ்லிம் சமூகத்துக்கு அநியாயம் செய்துள்ளது. 



இலங்கையில் உள்ள நீதி நடபடி முறைகளின் படி  குற்றம் சாட்டப்பட்ட நபர் ஒருவரின் குற்றம் நிரூபிக்கப் பட்டால் தான் அவர் குற்றவாளி எனக் கருதப் படுவார். இங்கு எந்தவித விசாரணையும் முன்னெடுக்கப் படாத நிலையில் வெறும் குற்றச்சாட்டுக்களை மட்டும் வைத்து இரு முஸ்லிம் ஆளுநர்களை பதவி நீக்கம் செய்ததன் மூலம் ஒட்டு மொத்த முஸ்லிம் சமூகத்தையும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி குற்றவாளிகளாக வெளிக்காட்டியுள்ளது என்பதில் சந்தேகமில்லை.

கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லாஹ் தான் வகித்த எம்.பி பதவியை துறந்து வந்தவர். இன்று ஆளுநரும் இல்லை. எம்.பி யும் இல்லை என்ற நிலையில் சுதந்திரக் கட்சி அவரை நடுத்தெருவில் நிறுத்தி விட்டது. 
கிழக்கில் செத்துக்கிடந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கு பிராண வாயு கொடுத்து உயிர்ப்பித்தவர் ஹிஸ்புல்லாஹ் தான். கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் கிழக்கு மாகாணத்தில் ஒரேயொரு முஸ்லிம் உள்ளூராட்சி மன்றமே   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வசமானது. அது காத்தான்குடி நகரசபையாகும்.  இந்த நன்றி கடன் கூட சுதந்திரக் கட்சியிடம் இல்லை என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.

நாடு இன்று கொந்தளிப்பு நிலைக்கு வந்ததற்கு ஞானசார தேரரும் முக்கிய காரணம். நீதிமன்ற அவமதிப்பு குற்றம் நிரூபிக்கப் பட்டு சிறையில் இருந்த அவரை சுதந்திரக் கட்சியின் தலைவரான ஜனாதிபதி தான் பொதுமன்னிப்பின் கீழ் வெளியே விட்டார். எனவே, இந்த வகையில் ஞானசார தேரரினால் சமகாலத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக உருவாக்கப் பட்ட சகல பிரச்சினைகளையும் அவரை வெளியில் விட்ட சுதந்திரக் கட்சியே பொறுப்பேற்க வேண்டும். 

குருநாகல் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் உள்ள முஸ்லிம்கள் மீது கடந்த மாதம் வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்டன.  இதனால் ஏராளமான இழப்புகளை முஸ்லிம் சமூகம் சந்தித்தது. இந்த வன்முறையாளர்களை பிணையில் எடுத்து விடும் முயற்சியில்   ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர மும்முரமாக ஈடுபட்டிருந்தமை குறித்து பரவலாகப் பேசப்பட்டது. 

இவைகளை வைத்துப் பார்க்கும் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரான மறைமுக நிகழ்ச்சி நிரலில் செயற்படுவது தெளிவாகின்றது. எனவே ஸ்ரீ லங்கா  சுதந்திரக் கட்சி முஸ்லிம்களுக்கு எதிரான இந்த செயற்பாடுகளை நிறுத்திக் கொள்ள வேண்டும் எனக் கேட்டுக்கொள்கிறேன்.

இவ்வாறு அந்த அறிக்கையில் குறிப்பிடப் பட்டுள்ளது. 

-A.C.M Mussil

No comments:

Post a Comment