சமூகங்களுக்கிடையிலே சந்தேகங்களும்,குரோதங்களும் ஏற்படும் சூழ்நிலையை தவிர்க்கவே பதவிகளை துறந்தோம் என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார். முஸ்லிம் அமைச்சர்கள் தங்களது அமைச்சு பதவிகளை ராஜினாமா செய்ததன் பின்னர், அஸ்கிரிய மல்வத்த பீட மகாநாயக்க தேரர்களின் அழைப்பின் பேரில் அவர்களை செவ்வாய்க்கிழமை (11) சந்தித்த முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் குழுவினர் தமது இராஜினாமா தொடர்பில் விளக்கம் அளிக்கும் போதே ஹக்கீம் இதனை தெவித்தார்.
அமைச்சர்கள்,இராஜாங்க அமைச்சர்கள் மற்றும் பிரதியமைச்சர்கள் உட்பட நாம் 9 பேர் எமது பதவிகளிலிருந்து இராஜினாமா செய்தது பற்றி பரவலாக கருத்துக்கள் சொல்லப்பட்டாலும், எமது மகாநாயக்க தேரர்களும்,சங்கைக்குரிய சங்க சபையும் எமக்கு வழங்கிய ஆலோசனைகளை நாம் ஏற்றுக்கொள்கிறோம்.அது பற்றி எமது கௌரவத்தை அவர்களுக்கு தெரிவித்து கொள்கிறோம்.
சமூகங்களுக்கிடையிலே சந்தேகங்களும்,குரோதங்களும் ஏற்படும் சூழ்நிலையை தவிர்க்கவும், எமது நாட்டிலே சமாதான சூழலை ஏற்படுத்தும் நோக்கிலேயே நாம் இந்த முடிவை எடுக்க வேண்டி ஏற்பட்டது.கடந்த ஒரு திங்கட்கிழமை தலதா மாளிகைக்கு முன்னால் மேற்கொள்ளப்பட்ட உண்ணாவிரதத்தை தொடர்ந்து சில சமூக விரோத சக்திகளால் நாட்டில் பல பாகங்களிலும் மேற்கொள்ளவிருந்த நாசகார நடவடிக்கைகளை தவிர்க்கவும்,ஒரு குறிப்பிட்ட சமூகத்தை இலக்கு வைத்து மேற்கொள்ளப்படவிருந்த குழப்பங்களை தவிர்க்கவும் நாம் தொடர்ந்தும் அரசாங்கத்தை கேட்டுக்கொண்டே இருந்தோம். அந்த வேண்டுகோளை உறுதிப்படுத்தும் நோக்குடனேயே இவ்வாறான முடிவுக்கு வரவேண்டியிருந்தது.
மக்களை கலகங்களுக்கு தூண்டும் விஷமமான பேச்சுக்களும், குரோதங்களும் எம்மை சுற்றி மேற்கொள்ளப்பட்ட நிலையில் அரசாங்கம் என்ற வகையில் அதன் பங்குதாரர்களான நாங்கள் மிகவும் ஆழமாக பாதிக்கப்பட்டோம். அதே தினம் காலையில் எங்களது சிரேஷ்ட அரசியல் வாதியான பௌசி அவர்களின் இல்லத்தில் நாம் இணைந்து ஆலோசனை செய்து முடிவுக்கு வந்தோம். அந்த முடிவு எட்டப்படும்வரை நாம் கனவிலும் நினைக்கவில்லை இவ்வாறான ஒரு தீர்மானத்திற்கு நாங்கள் வரவேண்டி ஏற்படும் என்று.
உண்மையிலேயே இவ்வாறான ஒரு நோக்கத்தோடு நாம் கூடவுமில்லை. இந்த குழப்ப நிலையை தனித்து ஏதாவது ஒரு வகையில் குறித்த முக்கியஸ்தர்களோடு கதைத்து இந்த குழப்பங்களை முடிவுக்கு கொண்டு வரவே நாம் கூடினோம். ஆனால் 12 மணி என்ற காலக்கெடு கொடுக்கப்பட்டதும், அது யாரால் சொல்லப்பட்டது என்றும் தங்களுக்கு தெரியும்.
குழப்பங்கள் ஏற்பட்டால் எமது சமூகத்திற்கு பதில் சொல்ல வேண்டிய தலைவர்கள் என்ற வகையில் அவர்கள் ஆணித்தரமாக கேட்டுக்கொண்ட இராஜினாமாவை செய்யும் நிர்பந்த நிலைக்கு நாம் தள்ளப்பட்டோம்.
இரண்டு ஆளுநர்களும் தமது இராஜினாமாவை சமர்ப்பிக்க ஜனாதிபதியை நாடிச்சென்ற போது நாம் பிரதமரை சந்தித்தோம். இராஜினாமா வரை செல்லவேண்டியதில்லை என அவரது தரப்பிலிருந்து சிரேஷ்ட உறுப்பினர்கள் வலியுறுத்தி சொன்னாலும் நிலைமை மோசமாகிக்கொண்டிருந்த சூழ்நிலையில் அதனை பார்த்துக்கொண்டிருக்க எம்மால் முடியாது என்பதனால் ஆலோசித்து அனைவரும் இராஜினாமா செய்யவும், முஸ்லிம்களின் தரப்பில் யாருக்கேனும் குற்றச்சாட்டுகள் இருப்பின் அவற்றை குறித்த கால எல்லையில் விசாரித்து முடிக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டோம்.
இந்த இராஜினாமா காரணத்தால் அரசியல் ரீதியாக ஏற்படப்போகும் பாதிப்பை பற்றி அங்கே இருந்த சிரேஷ்ட உறுப்பினர்கள் உங்களைப்போலவே எம்மை வலியுறுத்தினாலும் இராஜினாமா செய்வதை தவிர வேறு வழி எமக்கு இருக்கவில்லை.
ஒவ்வொரு இடங்களிலும் நடைபெற்ற விடயங்கள் தொடர்பான தவகல்கள் எங்களை கலங்கச் செய்தமையினாலேயே நாங்கள் அத்தகைய முடிவை எட்ட நேரிட்டது. ஏதோ ஒரு வகையில் இது தொடர்பில் பொறுப்புக் கூறுவதற்கு நாங்களும் கடமைப்பட்டுள்ளோம் என்ற வகையில் நாட்டின் பாதுகாப்புக்கும் அதாவது இந்த நாட்டில் வாழுகின்ற ஒவ்வொரு தனி மனிதனின் பாதுகாப்பிற்கும் அனைவரும் இணைந்து உத்தரவாதத்தை வழங்குகின்ற வகையில் அதனை அடையாளப்படுத்துவதும் எமது நோக்காக அமைந்தது.
ஏனெனில், இதனை தொடர்ச்சியாக கொண்டு செல்வது பல்வேறு விபரீதங்களை ஏற்படுத்தும் சாத்தியக் கூறுகள் தென்பட்டன. கடந்த திகண பிரச்சினையின் போது மகாநாயக்க தேரர்கள் முன்வந்து இனங்களுக்கிடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த மேற்கொண்ட முயற்சியானது மிக நீண்ட தூரத்திற்கு வந்திருக்கும் இந்த நேரத்தில், மீண்டும் மிகப் பெரிய அழிவு ஏற்படுமாயின், அந்த நல்லிணக்க செயற்பாடுகள் கேள்விக்குறியாக ஆகிவிடும்.
நாங்கள் பார்த்தோம் குருநாகல், குளியாப்பிட்டிய பிரதேசத்தில் இடம்பெற்ற வன்முறை செயற்பாடுகளினால் ஏற்பட்ட அழிவுகளை அவதானித்தால் அது வெறுமனே ஒரு இனத்துக்கு மாத்திரமான பாதிப்பாக கருத முடியாதுள்ளது.
இதனால், நாட்டில் சுற்றுலாத்துறையில் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. பொருளாதாரம் வீழ்;ச்சியடைந்துள்ளது. இவ்வாறான பாதிப்புக்கள் ஒரு இனத்திற்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டவையல்ல. எனவே தான் நாங்கள் இந்த நாட்டின் இறைமையையும், பாதுகாப்பையும் கருத்திற்கொண்டு நிரந்தர சமாதானத்தை பேணும் முகமாக அரசில் நாங்கள் வகித்த அமைச்சுப் பதவிகளை சிறிது காலத்திற்கு விட்டுக்கொடுத்து பாரிய அனர்த்தம் நிகழ்வதை தடுப்பதோடு நிரந்தரமான அமைதிக்காக நாங்கள் பிரார்த்தனை புரிகின்றோம்.
சுருக்கமாக கூறின், இது தான் எங்களது நோக்கமாக இருந்தது. இந்த அடிப்படையில் உங்களது ஆலோசனைகளையும் கருத்திற்கொண்டு இந்த இடத்திற்கு வந்து எங்களது நிலைப்பாட்டை தெளிவுப்படுத்தியுள்ளோம் என்றார்.
No comments:
Post a Comment