சமூக மானம் காக்கப் புறப்பட்டவர்களுக்கு சபாஷ் - இனி பின் வாங்கி விடாதீர்கள்! - sonakar.com

Post Top Ad

Monday, 3 June 2019

சமூக மானம் காக்கப் புறப்பட்டவர்களுக்கு சபாஷ் - இனி பின் வாங்கி விடாதீர்கள்!ஈஸ்டர் தாக்குதல் உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் வாழும் ஒவ்வொரு இலங்கை முஸ்லிமின் மனதையும் பாதித்தது. எமது பெயரில் இப்படியொன்று நடந்து விட்டதே என்று கூனிக்குறுகியதோடு நின்று விடாமல் களையெடுப்பதில் முன் நின்று பாதுகாப்பு படையினருக்குத் தேவையான ஒத்துழைப்பை வழங்கினோம்.அதற்கும் ஒரு படி மேலாகச் சென்ற பாதுகாப்பு கெடுபிடிகள், எம் உரிமைகள், சுய கௌரவத்தின் மீதும் கை வைத்தது. இன்றும் ஆயிரக்கணக்கானோர் கைதாகி, நூற்றுக்கணக்கானோர் சிறையில் வாடவும் அசிங்கப்படவும் செய்கின்றனர். சமூகம் என்ற அடிப்படையில் ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறான தியாகங்கள் பெறப்பட்டுக் கொண்டே இருக்கிறது.

அன்னியர் ஆட்சிக்காலத்திலும் பல நூறு வருடங்களுக்கு முன்னர் இலங்கை முஸ்லிம் சமூகம் இவ்வாறே இன்னலுக்குள்ளான வரலாறு இத்தீவிலேயே உண்டு. நவீன காலத்தில் இதன் உக்கிர வடிவம் இனவாதத்தின் உச்ச கட்டத்தைத் தொட்டிருக்கும் நிலையில், சமூகப் பொறுப்பைத் தாங்கி எமது அரசியல் பிரதிநிதிகள் ஒற்றுமையை வெளிக்காட்டியிருப்பதும், தோளோடு தோள் நிற்பதுவும் மட்டற்ற மகிழ்ச்சியை மாத்திரமன்றி காலத்தின் தேவையையும் உணர்த்தி நிற்கிறது.

இலங்கையில் தற்போது நடந்து கொண்டிருக்கும் அரசியல் சதுரங்கத்தில் நாம் பலிக்கடாவாக்கப்பட்டு விட்டோம் என்பதை ஒவ்வொரு முஸ்லிமும் உணர்ந்து விட்டான். ஆனாலும், இதை வென்று வெளியேறுவதற்கான வழி தெரியாமல் உங்களை அண்ணாந்து பார்த்துக்கொண்டிருந்த நிலையில், அரசியலுக்காகவேண்டியேனும் இன்று வெளிக்காட்டப்பட்ட ஒற்றுமை பாராட்டப்பட வேண்டியது. தம் பதவிகளைத் துறக்க விளைந்த அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் சமூகத்தின் சார்பில் நன்றிகள்.

ஆனால், இத்துடன் நின்று விடாதீர்கள், முன் வைத்த காலைப் பின் வைக்காதீர்கள். 2012ம் ஆண்டு முதல் எண்ணற்ற இன்னல்களுக்கு முகங்கொடுத்து வரும் நாம் இன்று குற்றவாளிக் கூண்டுக்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். பலவீனமான மனிதர்களைத் தேர்ந்தெடுத்து அவர்கள் ஊடாக பயங்கரவாதத்தை அரங்கேற்றி அப்பாவி உயிர்களைக் கொல்வதற்கான சதித்திட்டத்தை உள்நாட்டு அரசியல்  அல்லது வெளிநாட்டு அரசியல் தீட்டியிருக்கிறது என்பதிலும் காலம் தெளிவைத் தந்திருக்கிறது. எனினும், இன்னும் நம் சமூகத்துக்குள் வெறுப்பும், விரக்தியும், அச்சமும் அடக்கி ஒடுக்கப்படும் எண்ணமும் வளராமல் இருக்க வேண்டுமானால் மக்கள் பிரதிநிதிகளாக சட்ட சபையில் வீற்றிருக்கும் தலைவர்கள் அதற்கான தார்மீகப் பொறுப்பை ஏற்க வேண்டும்.

கட்சி அரசியலிலும், கொள்கை இயக்கப் பிளவுகளிலும் சிக்குண்டு தவித்துக் கொண்டிருக்கும் முஸ்லிம் சமூகம் சுதாரித்துக் கொள்வதற்கு இது ஒரு பொன்னான வாய்ப்பு. இன்று எம் அரசியல் பிரதிநிதிகள் எடுத்த முடிவும் முன்னெடுப்பும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அது நாளை ரணில் விக்கிரமசிங்கவையோ, மைத்ரியையோ அல்லது மஹிந்தவையோ திருப்திப்படுத்தக் கூடிய நிகழ்ச்சி நிரலாக மாறுமோ இல்லையோ என்ற அச்சமும் இல்லாமலில்லை. ஆனாலும், அரசியல் வளைவு சுழிவுகளுக்கு அப்பால், சமூகத்துக்குத் தேவையான வழிகாட்டல்கள் அவசியம் என்பதால் இப்போது நீங்கள் கையிலெடுத்த இந்த உரிமைப் போராட்டத்தினை இன்னும் உறுதியாக முன்னெடுத்துச் செல்லுங்கள்.

அரசியல் ஒரு வியாபாரம் என்பதில் எல்லோருக்கும் தெளிவிருக்கிறது. ஆனாலும், சமூகத்துக்குத் தேவையான வழிகாட்டலையும் அரசியல் தலைமைத்துவத்தையும் வழங்கி முன்னெடுக்கும் போது இது பற்றி மக்களும் அலட்டிக் கொள்ளப் போவதில்லை. முஸ்லிமாக இருப்பதால் நம் சோதிக்கப்படுவோமானால் முஸ்லிம்களாக நாம் அரசியல் மட்டத்திலும் சுய கொளரவத்துடன் எழுந்து நிற்க வேண்டியது அவசியமாகிறது. அதனை இன்று வெளிக்காட்டிய விதம் பாராட்டக் கூடியது மாத்திரமல்ல, போற்றக் கூடியது.

இத்தால், புத்துணர்வு பெற்றுள்ள மக்களின் நம்பிக்கையும் உங்களிடம் ஒப்படைக்கப்படுகிறது, பின் வாங்கி விடாதீர்கள்!

-இர்பான் இக்பால்
பிரதம ஆசிரியர், சோனகர். கொம்

1 comment:

Anonymous said...

இது தொடக்கம் தான் இர்பான். இப்ப தான் சிங்களவன் முஸ்லிம்களின் ஒவ்வொரு பல்லாக புடுங்க வெளிக்கிட்டிருக்கிறான். முஸ்லிம்களுக்கு இலங்கை திறந்தவெளி சிறையாக மாறும். இரண்டாம் தர மக்களாக நடத்தப்படுவீர்கள். முஸ்லிம் புத்திஜீவிகள் மற்றும் செல்வந்தர்கள் நாட்டைவிட்டு தானாக வெளியேறுவார்கள்.

Post a Comment