ஈஸ்டர் குண்டு: உலக முஸ்லிம் - இலங்கை முஸ்லிம்! - sonakar.com

Post Top Ad

Sunday 16 June 2019

ஈஸ்டர் குண்டு: உலக முஸ்லிம் - இலங்கை முஸ்லிம்!


2019 ஏப்ரல் 21ம் நாள் இலங்கை வரலாற்றில் மறக்க முடியாத தினமாக மாறி விட்டது. 30 வருட கொடூர யுத்தத்தின் வடுக்களையும் மீறி ஒரே தினத்தில் ஒன்பது தற்கொலைத் தாக்குதல்கள் நாட்டை உலுக்கியதோடு நின்று விடாமல் ஆயிரமாயிரம் வருடங்கள் தேசத்தின் தூண்களாக வாழ்ந்து வரும் ஒரு சமூகத்தை நாணிக்குறுக வைத்து விட்டது.


கண்மணி நாயகம் நபி (ஸல்) அவர்கள் ஊடாக மனித குலத்துக்கு பூரணப்படுத்திக் கொடுக்கப்பட்ட இஸ்லாம் இத்தீவினை வந்தடைய முன்னர் ஓரிறைக் கொள்கை சமூகமாகவும் பின் முஹம்மதியர்கள் என்ற அடையாளத்துடனும் வாழ்ந்து வந்த சோனக சமூகம் 20ம் நூற்றாண்டில் ஆங்கிலேயரின் இனப் பகுப்பின் பின்னர் இஸ்லாமிய வழி முறையைப் பின்பற்றும் ஏனைய இனக்குழுமங்களையும் உள்ளடக்கி முஸ்லிம் அடையாளத்தை வலிந்து பெற்றுக்கொண்டது.

அடுத்த சில தசாப்தங்களுக்குள் இந்திய எல்லையைத் தாண்டி மத்திய கிழக்கின் தொடர்புகளை விரிவுபடுத்திக் கொண்ட நிலையில் இச்சமூகம் தம்மை சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் அங்கமாக அடையாளப்படுத்திக் கொள்வதில் பெருமை கொள்ள எண்ணிச் செயற்பட்டது.

இலங்கை முஸ்லிம் சமூகம் தம்மை மத்திய கிழக்கு முஸ்லிம் உம்மத்தின் அங்கமாக வெளிப்படையாக அடையாளப்படுத்திக் கொண்டு இத்தீவின் பூர்வீக தொடர்புகளை விலக்கிக் கொள்ள ஆரம்பித்த அதே 1970 காலப்பகுதியில் மத்திய கிழக்கில் ஓங்கிய இஸ்ரேலிய ஆதிக்கத்துக்கு அடங்கிப் போக விளைந்தன அங்குள்ள முஸ்லிம் நாடுகள்.

அன்று முதல் பலஸ்தீனம், ஈராக், எகிப்து, சிரியா என மத்திய கிழக்கின் முஸ்லிம் தேசங்கள் சின்னாபின்னமாக்கப்பட்டுக் கொண்டிருக்க, சொந்த நாட்டில் கவனிக்கப்படாத சமூகமாக வெளிநாட்டு விடயங்களுக்கு தொடர்ச்சியாக எதிர்வினையாற்றிக் கொண்டிருந்த இச்சமூகம் 21ம் நூற்றாண்டில் இன்னும் பல படி முன்னேறி சர்வதேச விவகாரங்களுக்கு இலங்கையில் ஆர்ப்பாட்டங்கள், தூதரக முற்றுகை மற்றும் ஆக்ரோஷமான செயற்பாடுகளில் ஈடுபட ஆரம்பித்தது.

30 வருட யுத்த காலத்தில் முஸ்லிம் சமூகத்தினை பிரத்யேகமாக 'கவனிக்க'வில்லையாகினும் இலங்கையின் உளவு மற்றும் புலனாய்வுத்துறை கண்காணித்தே வந்துள்ளது என்பது அண்மைக்காலமாக உணரப்பட்டு வரும் உண்மைகள்.

ஆயினும், அக்காலப் பகுதியில் தம் சலுகைகளுக்கும் உரிமைகளுக்குமிடையிலான வித்தியாசத்தை உணர்ந்து செயற்படத் தவறிய இச்சமூகம் 2012 வரை உச்ச கட்ட சுதந்திரத்தை பிரத்யேகமாக வழங்கப்பட்ட போனசாக அனுபவித்து வந்ததுடன் வகை-தொகையின்றி தமக்கிடையிலான பிளவுகளை வளர்த்துக் கொண்டது.

இன்று ஈஸ்டர் தாக்குதலின் பின், தாம் யார்? எனும் மீளாய்வில் நாம் இலங்கையில் வாழும் முஸ்லிம்களா அல்லது இலங்கை முஸ்லிம்களா என்ற உணர்வுபூர்வமான கேள்விக்கு விடை காண முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

முஸ்லிம் நாடுகள் நிறைந்த மத்திய கிழக்கு அபிவிருத்தியடைந்து வரும் இலங்கை, பங்களதேஷ் மற்றும் இந்தியா போன்ற தெற்காசிய நாடுகளின் வேலையில்லா பிரச்சினைகளுக்கும் தீர்வளித்தது. வீட்டுப் பணிப்பெண்கள், சாரதிகள் என்று ஆரம்பித்த வாய்ப்புகள் இன்று பல்வேறு தொழிநுட்ப தொழில்வாய்ப்புகளையும் வழங்கி வருவதனால் அதற்கான கிராக்கி இன்னும் இருக்கிறது.

இலங்கையிலிருந்து மாத்திரம் மத்திய கிழக்கு நாடுகளில் 1.5 மில்லியன் பேர் தொழில் வாய்ப்பைப் பெற்றுள்ளதாக ஐந்து வருடங்களுக்கு முன்னர் அரசு தரப்பிலிருந்து தகவல் வெளியிடப்பட்டிருந்தது. தவிரவும் இலங்கையின் அபிவிருத்தியில் சவதி, குவைத் மற்றும் ஐக்கிய அரபு அமீரகம், ஓமான் போன்ற நாடுகள் பாரிய பங்களிப்பை செய்துள்ளன. 

ஒரு கட்டத்தில் இலங்கையில் முஸ்லிம் சமூகம் எதிர்நோக்கிய நெருக்கடிகளுக்கு இலங்கையோடு இத்தனை தொடர்புடைய அரபு நாடுகள் எதையாவது செய்யும் என்ற எண்ணம் மேலோங்கிய அதேவேளை இதனை ஒரு பிரச்சார ஆயுதமாகவும் எம்மவர்கள் உபயோகிக்கத் தவறவில்லை.

2011 – 2014 வரையான நெருக்கடி காலப்பகுதியில் இலங்கை நிலவரம் குறித்து அப்போதைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிடம் நேரடியாகவே குரல் எழுப்பிய ஒரே ஒரு நபர் ஐக்கிய அரபு அமீரகத்தின் வெளியுறவுத்துறை அமைச்சர் என்பதை இங்கு சுட்டிக்காட்டியாக வேண்டும். அது தவிர, இஸ்லாமிய நாடுகளுக்கிடையிலான கூட்டுறவுக்கான அமைப்பான ஓ.ஐ.சியின் காலந்தாழ்த்திய மூன்று அறிக்கைகள் இதுவரை வெளியாகியுள்ளன.

பொதுவாகவே வெளிநாட்டுத் தூதரகங்களில் அவர்களது உளவுத்துறை அதிகாரிகள், கண்காணிப்பாளர்கள், பாதுகாப்பு அதிகாரிகள் என பலர் பணியாற்றுவதுண்டு. எனவே, அந்தந்த நாடுகளில் இடம்பெறும் உள்நாட்டு விவகாரங்கள் அனைத்தும் கவனிக்கப்படும் என்பதில் ஐயம் கொள்ளத் தேவையில்லை. 

இலங்கையென்பது நான்கு பக்கமும் கடலால் சூழப்பட்ட இறையான்மையுள்ள நாடு. இந்நாட்டின் உள்விவகாரத்தில் வெளிநாடொன்று எந்த அளவில் தலையிடலாம் அல்லது கருத்துக் கூறலாம் என்பது இரு பக்க உறவின் பலன் மற்றும் அரசியல் நலன் கொண்டது. இதனைத் தான் நாம் ராஜதந்திரம் என்கிறோம்.

இலங்கையின் அபிவிருத்தியில் மத்திய கிழக்கு நாடுகளின் நேரடி தலையீட்டைப் பெற்றுக் கொடுப்பதில் முஸ்லிம்களின் பங்கு இன்றியமையாதது. ஆயினும், முஸ்லிம்களால் மாத்திரமே இத்தலையீடும் பங்களிப்பும் இருக்கிறதென்பது விதண்டாவாதமாகும். அண்மைக்கால ஜனாதிபதிகளான மஹிந்த மற்றும் மைத்ரியின் காலப்பகுதியில் முஸ்லிமகள் யாரும் அங்கம் வகிக்காத முதலீட்டு ஊக்குவிப்பு குழுக்கள் அரபு நாடுகளுக்குச் சென்று மிகக்குறைந்த அல்லது அறவே வட்டியில்லாத கடன்களையும் நிதியுதவிகளையும் பெற்றுக்கொண்டுள்ளன.

இதில் பங்கேற்பதன் நலன் மற்றும் இலாபத்தை கணித்த பின்னரே அந்தந்த நாடுகள் தமது உதவியின் அளவுகளைத் தீர்மானிக்கின்றன. இந்நிலையில், இதனை நமது வலிமையாக இலங்கை முஸ்லிம்கள் எண்ணிக்கொள்வது உணர்வுபூர்வமான ஒரு விடயமாகும். நமக்கு சற்றே தொலைவில் உள்ள ரோஹிங்யாவில் ஏறத்தாழ இலங்கையில் நமது சனத்தொகைக்கு ஒப்பாகவிருந்த முஸ்லிம் சமூகம் நிர்க்கதியாக்கப்பட்டு, நாட்டிலிருந்து விரட்டப்பட்டு, கொலை செய்யப்பட்டு, எரியூட்டப்பட்டு இன்னோரன்ன துன்பங்களை அனுபவிக்கும் போதெல்லாம் இந்த அரபு நாடுகளால் இதுவரை என்ன செய்ய முடிந்திருக்கிறது? என்று பார்த்தால் அதிக பட்சமாக தமது நாடுகளை வந்தடைந்தவர்களுக்கு அங்கு தங்கியிருப்பதற்கான விசாவை நீட்டித்துக் கொடுப்பதில் வேண்டுமானால் தளர்வைக் காட்டியிருக்கலாம். அதுவும் தொழில் நிறுவனங்களில் அதற்கான தேவையிருந்தால் மாத்திரமே.

இவ்வாறு கண் முன்னே நமக்குப் பல உதாரணங்கள் இருக்க சர்வதேச முஸ்லிம் சமூகத்தின் ஒரு அங்கமாக அதேவேளை இலங்கையின் முஸ்லிம்களாக வாழ்வதில் நமக்குள் திண்டாட்டம் தொடர்கிறது. ஈஸ்டர் தாக்குதல் அந்தக் கேள்வியை இன்னும் வலிமையாக்கி, நாம் உலக முஸ்லிம் உம்மத்தைச் சோந்தவர்களா அல்லது இலங்கையின் முஸ்லிம்களா என்ற கேள்வியை உருவாக்கியுள்ளது.

இதனைக் கொளுத்திப் போட்ட பெருமையை முன்னாள் கிழக்கு ஆளுனர் ஹிஸ்புல்லாஹ் பெற்றுக்கொள்கிறார். அவரது கூற்றின்படி, உலகில் நாமே பெரும்பான்மையானவர்கள் ஆதலால் இலங்கையில் சிறுபான்மையாக இருப்பதைக் கொண்டு அச்சம் கொள்ளத் தேவையில்லை எனக் கூறியுள்ளார். ஆனால், அதன் தொடர்ச்சியென்ன? ஆம், அடித்துத் துவம்சம் செய்யலாம் என்பதா? அப்படித்தான் அடிமட்டத் தொண்டன் நினைப்பான். ஆனால் ஹிஸ்புல்லாஹ்வோ நான் அப்படிச் சொல்லவில்லையே என நழுவி விடுவார்.

அவ்வாறே உலகப் பெரும்பான்மையாக இருந்தாலும் முஸ்லிம் உலகம் தமக்குள்ளான பிணக்குகளைத் தீர்த்துக் கொண்டு விட்டதா? அல்லது தீர்க்கத்தான் முடியுமா? என்ற கேள்வியிலிருந்து ஏனைய நாடுகளி;ன் உள்விவகாரங்கள் மீதான தலையீடு கணிக்கப்பட வேண்டும். ஆக மொத்தத்தில் இலங்கை முஸ்லிம்கள் எல்லோரும் ஒன்று சேர்ந்து மன்றாடி, மத்திய கிழக்கு சந்தையில் நெருக்குதலை உருவாக்கி, இலங்கைப் பொருளாதாரத்துக்கு சிக்கலை உருவாக்கினால் கூட, பொன்விளையும்; இப்பூமிக்கு மாற்றுவழிகள் இருக்கிறது.

இந்த வாரத்தில் சோனகர்.கொம் வழியாக நான் மேற்கொண்டிருந்த இரு வேறு தளங்களில் உள்ள இருவரின் நேர்காணல்களை உதாரணமாக முன் வைத்தால், முன்னாள் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியின் கருத்துப்படி இலங்கையின் 40 வீத கொள்வனவு சக்தி அல்லது நுகர்வோர் முஸ்லிம்களேயாகும். ஆதலால், முஸ்லிம்கள் உள்நாட்டிலேயே பொருளாதார நெருக்கடியை உருவாக்கினால், அதே போன்று ஹலால் சான்றிதழ் வழங்குதலை தற்காலிகமாக நிறுத்தினால் கூட பாதிக்கப்படப் போவது பெரும்பான்மையினரின் வர்த்தகமும் பொருளாதாரமுமே என தெரிவித்திருந்தார். 

இரு தினங்கள் கழித்து எனது நேரலையில் கலந்து கொண்ட ஜனாதிபதி சட்டத்தரணி அலி சப்ரி, இலங்கை முஸ்லிம்கள் தம்மை வெகுவாக அன்னியப்படுத்திக்கொண்டுள்ளதாகவும் நாம் இலங்கை முஸ்லிம்கள் என்பதை மறந்து நடந்து கொள்வதாகவும் தெரிவித்திருந்தார்.

உணர்வுகளின் வடிவங்கள் இவ்வாறு பல வகைப்படுகிறது. ஆயினும், ஆயிரமாயிரம் வருடங்களாக தேசப்பற்றுள்ள புத்திரர்களாக வாழ்ந்த வரலாறு கொண்ட மூதாதையர் வழி வந்த நாம் இன்று திடீரென நம் மீது அடக்குமுறை பிரயோகிக்கப்படுகிறது என்ற அங்கலாய்ப்பை முன் வைக்கிறோம். இதன் எந்தவொரு கட்டத்திலும் நாமாக நமக்கு உருவாக்கிக் கொண்ட கேடுகளைப் பற்றி சுய விமர்சனம் செய்து கொள்ளத் தவறுகிறோம்.

இன்றளவும் கூட, நாம் இலங்கை முஸ்லிம்கள் என்ற ஒற்றை நிலைப்பாட்டுக்குள் ஒன்றாக அணி திரண்டு காட்ட முடியாதவர்களாக, பல நூறு குழுக்களாகப் பிரிந்து, நாங்கள் மட்டுந்தான் தேசப்பற்றுள்ள முஸ்லிம்கள் என்று கூறி, அடுத்தவரை குறை கூறியும் காட்டிக் கொடுத்தும் வருகிறோம்.

ஈஸ்டர் தாக்குதலின் பின்னணியில் விசாரணை நடாத்தி வரும் நாடாளுமன்ற தெரிவுக்குழுவில் உள்ளவர்கள் கேட்கும் கேள்விகளினூடாக இதுவரை அவர்கள் அறியாத பல விடயங்களை நாம் இப்போதுதான் கற்பித்துக் கொண்டிருக்கிறோம் என்பதும் புலனாகிறிது. ஆனால், அவற்றை ஆழமாகக் கற்று, கடந்த பல வருடங்களாக முஸ்லிம்களுக்கு எதிரான வெறுப்புணர்வைத் தூண்டி அதனூடாக தீவிரவாதத்தைப் போசித்தவர்கள் இப்போது தன்நிறைவு கண்டு ஜப்பான் பக்கமாக ஒதுங்கிக் கொள்ளும் காட்சியையும் காணக்கூடியதாக இருக்கிறது.

அப்படியானால், நாம் உண்மையில் நமக்கு நாமே மேலும் மேலும் கேடு விளைவிக்கிறோமா? எனும் கேள்வியெழுப்பப்படுதல் கட்டாயமாகிறது. எவ்வகையான கேடுகளை உருவாக்குகிறோம் அதன் தூரப்பார்வை மற்றும் எதிர்கால விளைவுகள் என்னவென்பதையும் சிந்திக்கக் கடமைப்படுகிறோம். அதுவெல்லாம் சரி, இதை யார் சிந்திப்பது? என்ற கேள்விக்கு முதலில் விடை காண வேண்டுமென்பதால் மீண்டும் குழம்பிக் கொள்கிறோம்.

இக்கேள்விகள் அரசியல் மட்டத்தில் கேட்கப்பட்டு அங்கேயே விடை காணப்பட்டால் போதுமானது என நம்பும் அப்பாவிப் பிரிவும் இச்சமூகத்தில் உள்ளது. இல்லை, இதற்கு சிவில் சமூக மட்டத்தில் தான் விடை காணப்பட வேண்டும் என வட்ஸ்அப்பில் பேசிப் பேசியே காலங்கடத்தும் புத்திசாலிப் பிரிவும் இச்சமூகத்தில் உள்ளது. அட, இது நமக்குத் தேவையில்லாத வேலை, நமது கொள்கை இயக்கத்தை கை விட முடியாது என துடித்துக் கொண்டிருக்கும் பிரிவும் இச்சமூகத்திற்குள் உள்ளது. அவ்வாறாயின் யார் தான் இதற்கு விடை காண்பது?

விரல் நீட்டுவதற்குத்தான் எல்லோரும் இடம் தேடிக்கொண்டிருக்கிறார்களே தவிர, தனி மனித மாற்றத்திற்கு நமது சமூகம் இன்னும் தயாராக இல்லை. அது போலவே இலங்கை முஸ்லிம் சமூகத்தின் தலைமைத்துவத்தை வலிந்து உரிமையாக்கிக் கொண்டுள்ள மார்க்கத் தலைமைகள் அவை சார் அமைப்புகள் கூட இன்னும் தமக்கிடையிலான வேற்றுமைகளைக் களையத் தயாரில்லை. 

ஒவ்வொருவரும் சேர்ந்து உருவாக்கிய சிக்கல்களே இன்று இடியப்பப் பின்னலாக உருவெடுத்துள்ளது. சமூகப் பிரச்சினையின் ஒரு பகுதியைப் பற்றிப் பேசினாலும் ஆடை விவகாரத்தில் திணிப்பை மேற்கொள்ளும் அமைப்பாக இருப்பதனால் மௌனித்திருக்கவும், மற்ற பகுதிகளில் இணங்கினாலும் அர்துகான் கிலாபத்தைக் கொண்டுவருவார் என்ற நியாயங் கற்பித்தலை, ஈரான் இஸ்லாமிய ஆட்சியை நிறுவும் என்ற நம்பிக்கையை கைவிட முடியாதவர்களாக மௌனித்திருக்கவும், சவுதியே கை விட்டாலும் வஹாபிச பின்னணியை தீவிரவாதமாக மாற்றிக்கொண்ட போக்கைக் கைவிட முடியாதவர்களாக முரண் பிடிக்கவும், சம்பிரதாயம் - மூதாதையர் நம்பிக்கை எனக் காரணங்காட்டி நவீனப்பட முடியாமல் தவிப்போராக இன்னொரு புறமும் இச்சமூகம் தவித்துக் கொண்டிருக்கிறது.

இதற்கிடையில், முஸ்லிம்கள் என்ற அடையாளத்தின் சர்வதேச பரம்பலா உள்நாட்டு அங்கீகாரமா அவசியம் என்பதன் தெளிவை மறந்த நிலையிலும் கூட இச்சமூகம் திணறிக் கொண்டிருக்கிறது. ஆதலால், இன்று இது பேசுபொருளாக மாறியிருக்கிறது. இலங்கை முஸ்லிம்கள் இத்தீவின் பூர்வீகக் குடிகளாக இருக்க வேண்டும் என்ற குரலும் சர்வதேச உம்மத்தின் பகுதியெனும் சிந்தனைப் போக்கில் உள்நாட்டு அடையாளத்தை மறுக்கும் நிலையும் இன்று சமூகத்திற்குள்ளான சித்தார்ந்த மோதலாக உருவெடுத்துள்ளது.

பேச்சுக்காக சொல்லப்படும் தேசப்பற்றிற்கு ஈஸ்டர் தினத்தில் வேட்டு வைத்தது சர்வதேச பயங்கரவாத சித்தார்ந்தம். அதனை அரங்கேற்றியது உள்நாட்டு முஸ்லிம்கள் என்ற அடிப்படையில் இலங்கை முஸ்லிம் சமூகம் அல்லோலகல்லோலப்பட்டு, பல இடங்களில் அச்சம் - நம்பிக்கையின்மையுடன் பலவீனப்பட்டு இருக்கிறது.

சம்பவம் யாரால்? எதற்காக? நடாத்தப்பட்டது என்ற கேள்வி போக, ஒரு காலத்தில் இராணுவமே வெளியேறு என்று குரல் எழுப்பிய வடக்கின் தமிழ் சமூகம், இரணுவம் இருந்தே ஆக வேண்டும் என இன்று தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டுள்ளமையும் அமைச்சர் பதவிகளைத் துறந்து அரசியல் செய்யும் அத்தியாயத்தை நோக்கி முஸ்லிம் அரசியல் தள்ளப்பட்டிருக்கின்றமையையும் புறந்தள்ளி வரலாறு கணிக்கப்பட மாட்டாது என்பதையும் ஆணித்தரமாக பதிந்து கொள்கிறேன்.

2ld3lJX

Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment