மெல்லத் தலை நிமிரும் சமூகம்: இனி என்ன...? - sonakar.com

Post Top Ad

Friday 17 May 2019

மெல்லத் தலை நிமிரும் சமூகம்: இனி என்ன...?போதும் போதும் என்ற அளவுக்கு ஒவ்வொரு முஸ்லிமின் மனதும் காயப்பட்டு விட்டது. பல தலைமுறைகள் இந்த வடுக்களைத் தாங்கிக் கொண்டிருக்கிறது, சுமந்து செல்லப்போகிறது. இந்த நேரத்தில் இந்த சமூகம் இனி என்ன செய்யப் போகிறது? என்பது விடை தேடப்படும் கேள்வி.எதிர்வினையாற்ற (reactive) மாத்திரமே தெரிந்த நாம் ஏப்ரல் 20ம் திகதி வரையிலும் சுதந்திரமாகத் தம் கடும்போக்குவாதத்தை விதைக்க அனுமதித்த ஒரு குழுவினரை ஏப்ரல் 21ம் திகதியிலிருந்து 'அவர்கள் முஸ்லிம்கள் இல்லை' என பத்வா வழங்கி, ஜனாஸாக்களையும் ஏற்று அடக்க மாட்டோம் என அறிவித்து விட்டோம்.

அதையும் தாண்டி, மே 14ம் திகதி ஹோட்டல் தற்கொலைதாரிகளுள் ஒருவரது வீட்டில் 'மார்க்க' கடமை நிறைவேற்றச் சென்ற மௌலவியொருவரும் கைது செய்யப்பட்டுள்ளார். ஆக, செய்திகளும் - சிந்தனைகளும் தொடர்ந்தும் வேறுபடுகிறது. 

மே 12 – 13ம் திகதிகளில் சிலாபம், குளியாபிட்டிய, நாத்தாண்டிய, மினுவங்கொட என முஸ்லிம்களுக்கு எதிரான திட்டமிட்ட வன்முறைகள் அரங்கேற்றப்பட்டு அப்பாவி உயிரொன்று காவு கொள்ளப்பட்டு பெருமளவு சொத்துக்கள், பொருளாதார பின்னடைவுகளையும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இந்த நவீன நூற்றாண்டில் சிலாபத்தில் பிரச்சினை ஆரம்பமாவதற்கு ஒரு முஸ்லிம் நபரின் Broken English காரணமாக இருந்தது என்றால் எதிர்காலம் வியந்து சிரிக்கப் போகிறது. துரதிஷ்டவசமாக அதுதான் உண்மை.

அதிகம் சிரிக்காதே ஒரு நாள் அழ நேரிடும் எனவொரு தத்துவத்தைச் சொல்ல விளைந்த ஒரு முஸ்லிம் நபர் அதை ஆங்கிலத்தில் தவறாக எழுத, அதை சிங்களத்தில் மிகத்தவறாக மொழிபெயர்த்தவர்கள், நீங்கள் இன்று மட்டும் தான் சிரிப்பிPர்கள், நாளை முதல் அழுவீர்கள் என்று தமது சமூகத்தாருக்குச் சொல்லி, ஏலவே அரசியல்வாதிகளால் தேதி குறிப்பிடப்பட்டிருந்த 13ம் திகதி இதைக் காரணமாக வைத்து முஸ்லிம்களைத் தாக்க ஆரம்பித்தார்கள்.

முதல் நாள், சிலாபத்தில் இடம்பெற்ற தாக்குதலின் போது மூன்று பள்ளிவாசல்கள் பேரினவாதிகளினால் சேதப்படுத்தப்பட்டிருந்தது. மைக்குளம், குருந்துவத்தை மற்றும் வட்டகல்லி பகுதியில் அமைந்திருந்த பள்ளிவாசல்களே அவை. இன்னும் விரிவாகப்; பேசுவதானால் இப்பள்ளிவாசல்;கள் தப்லீக் மற்றும் சூபி, ஜமாத்தே இஸ்லாமி, தௌஹீத் கொள்கை சார்ந்த நிர்வாகங்களால் இயக்கப்பட்ட பள்ளிவாசல்கள்.

ஆயினும், பேரினவாதம் அந்த பாகுபாடுகள் எதுவுமின்றி தமது இலக்குகளை பொதுவாக நிர்ணயித்து, தாக்கிவிட்டுப் பொறுப்பை குளியாப்பிட்டிப் பக்கம் ஒப்படைத்தது. அங்கும் அட்டூழியங்கள் நிறைவடைந்த பின்னர் மீண்டும் மினுவங்கொட மீண்ட பேரினவாதம் அப்படியே நாத்தாண்டிய வரை சென்று, இன்னுயிரொன்றையும் பறித்துத் தற்போது அடங்கியுள்ளது. இப்போது இனி என்ன? என்ற கேள்வி எஞ்சியிருக்கிறது.

இனி என்ன? என்ற கேள்வியை எதிர்வரும் ஆபத்துக்களைப் பற்றிய அச்சத்தை அடிப்படையாக வைத்து மாத்திரமன்றி எமது சமூகத்தின் அடுத்தடுத்த நடவடிக்கைகளுக்காகவும் முன் வைக்க வேண்டியது காலத்தின் கட்டாயம்.

நாம் நெஞ்சில் சுமக்கும் துன்பங்களுக்கு இன்றோடு – நாளையோடு விடிவு கிடைக்கப் போவதில்லை என்பதும் நீண்டகால அரசியல் திட்டத்துக்கு நாம் பலியாகிக் கொண்டிருக்கிறோம் என்பதும் உணரப்பட வேண்டியதும் ஏற்றுக்கொள்ளப்பட வேண்டியதுமாகும்.

அந்த வகையில் காலத்தின் தேவை கருதி முஸ்லிம் சமூகம் மூன்று விடயங்களுக்குத் தயாராக வேண்டியுள்ளது. அவையாவன: proactive, reactive and self-criticism  ஆகும். அதாவது, உயிர்ப்புடன் சமூகக் கட்டுமானத்தை வைத்திருத்தல், தேவைக்கேற்ற எதிர் வினையாற்றல் மற்றும் சுய விமர்சனம் செய்து கொள்ளல். இதில் சுயவிமர்சனம் பொதுவாகவே மிகவும் பாரமான ஒரு விடயமாகும். ஏனெனில் இயல்பாகவே, தாம் செய்யும் தவறுகளை ஏற்றுக்கொள்ளும் பக்குவம் மனிதர்களுக்கு இல்லை.

ஆதலால், தவறுகளை ஏற்றுக்கொண்டு அதனைத் திருத்திக் கொள்வது என்பது மிகவும் கடினமாக ஒரு செயலாகும். ஆனாலும் வரலாறு, ஆகக்குறைந்தது கடந்த 7 வருடங்களாக நமக்கு உணர்த்தியுள்ள பொதுவான பாடத்தின் அடிப்படையில் நமது பேச்சு, செயற்பாடு மற்றும் சிந்தனை ஒட்டு மொத்த சமூகத்தை மையப்படுத்தியதாக இருக்க வேண்டிய தேவையிருக்கிறது.

இது பற்றிப் பேச விளைபவர்களுக்கு இரண்டு தளங்கள் இருக்கின்றன. ஒன்று, வேறு சக்திகளோடு இணைந்திருந்து முஸ்லிம் சமூகத்தைக் குறை கூறுதல், இன்னொன்று உள்ளிருந்தே நம்மை நாம்; சுய பரிசீலினை செய்ய வலியுறுத்துதல். நான் இரண்டாவதைத் தெரிவாகக் கொண்டிருக்கிறேன், ஆதலால் திரும்பத் திரும்ப இது பற்றி சமூகத்தோடு பேச விரும்புகிறேன். 

அண்மைய தாக்குதல்களில் பாதிக்கப்பட்டோரில் பலர் அப்பாவிகள். இன்னும் விரிவாகச் சொல்வதனால் அவர்களுக்கு அரபு அல்லது உருதுப் பெயர் ஒன்று இருக்கப் போகிறது, குடும்பத்தில் நிலவும் இஸ்லாமிய சூழ்நிலையைப் பரம்பரை வழியில் பின்பற்றியிருப்பார், ஐந்து வேளை தொழுகைக்கு சென்றிருப்பார், நோன்பிருப்பார், சக்காத் கொடுப்பார் மற்றும் ஹஜ்ஜைக் கூட நிறைவேற்றியிருப்பார்.

தானும் தனது ஹாலத்தும் (பாடும்) என இருந்த இவருக்கு இவ்வன்முறைகள் பேரிடியாகவும் அதிர்ச்சியாகவும் இருந்திருக்கும். எதுவும் செய்யாத நான் ஏன் இலக்கானேன்? என்ற கேள்வியை யாரிடமும் கேட்க முடியாத வெறுமையில் இறைவனிடம் கையேந்துவதைத் தவிர வேறு வழியில்லை. அதேவேளை, நாட்டின் இன்னோர் பாகத்தில் அது போலவே இருந்த, ஆனாலும் கடும்போக்காக இஸ்லாத்தைப் பினபற்றி சர்ச்சைகள், வாக்குவாதங்களில் ஈடுபட்டுத் தான் மட்டுமே உயர்ந்த முஸ்லிம் என கருதிக்கொண்டிருந்த ஒருவன் இவ்வாறு வன்முறைகளைத் தூண்டப் பங்களித்திருப்பான். அவனும் இன்னும் தான் செய்து வரும் செயல்களின் விளைவுகளை அறியவில்லை.

யார் உணர்த்துவது? என்ற கேள்விக்கு இனியும் இடமில்லை. ஒவ்வொரு முஸ்லிமும் தாம் தனி மனிதனாகச் செய்யும் செயற்பாடுகள் ஒட்டு மொத்த சமூகத்தைப் பாதிக்கிறது என்பதை உணர்ந்தவனாக வேண்டிய கால கட்டம்.
தறிகெட்டுப் போன நிலையில் கடந்த 15 வருடங்களாக நமக்குள் வீதிகளிலும், சந்திகளிலும் மோதிக் கொண்ட நாம், அடுத்தவன் நம்மை அவதானிக்கிறான் என்ற வெட்கங்கெட்டுத் திரிந்தோம். ஆனால் அவன் அவதானித்திருக்கிறான். அதனால் தான் பள்ளிவாசல்களைப் பொதுவாகத் தாக்கினாலும், முக்கிய நபர்களின் வீட்டையும், வர்த்தக நிலையத்தையும் தேடித் தாக்கியிருக்கிறான்.

நாம் அல்லாஹ்வைத் தொழுது, சாதாரணமான குடிகளாக வாழும் மனிதர்கள் தானே? இன்னும் என்ன நாம் செய்ய வேண்டும்? என்ற அப்பாவித்தனமான கேள்வியைக் கேட்பவர்களே நமக்குள் இன்றும் அதிகமிருக்கிறார்கள் என்ற அடிப்படையில் அவர்களை அவ்வாறு சிந்திக்காமல் விடச் செய்ய மார்க்க – அரசியல் தலைமைகள் தம் தார்மீகப் பொறுப்புணர்ந்து தகுந்த நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்.

அடிப்படையில், மார்க்கத் தலைமைகள் ஒரு கணம் தம்மைத் தாமே மீளாய்வு செய்து, நாலு புறமும் கடலால் சூழப்பட்ட ஒரு தீவில், சின்னஞ்சிறு சமூகக் கூட்டமாக, ஏனைய சமூகங்களோடு ஒன்றி வாழ வேண்டியவர்களாக இனி எப்படி இச்சமூகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் என்று ஒரு இணக்கப்பாட்டுக்கு வர வேண்டும்.

அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவின் ஆட்சியைப் பிடிப்பதற்காக ஆண்டாண்டு காலம் தவம் கிடந்தது போதும். நமக்கும் அந்த மார்க்கத்துக்கும் தொடர்பில்லையென விலகியிருந்து பேஸ்புக்கில் பத்வா கொடுத்துத் திரிவதும் போதும். முதலில் உலமா சமூகம் சீர் செய்யப்பட வேண்டும். தப்லீக் ஆளுமை, ஜமாத்தே இஸ்லாமி ஆளுமை, தரீக்கா ஆளுமை, தௌஹீத் ஆளுமைகளைத் தாண்டி முதலில் கற்றுத் தேர்ந்த இஸ்லாமிய அறிஞர்களாக உங்களுக்குள் நீங்கள் ஒற்றுமைப்படவும் உலமாக்களின் கண்ணியத்தை மீள நிறுவவும் வேண்டும்.

இதனடிப்படையில் வெறும் சுயவிமர்சனம் மாத்திரமன்றி; முதலில் உலமாக்கள் எனும் அங்கீகாரத்தின் கண்ணியத்தைக் காப்பாற்றும் வகையில் யாரெல்லாம் உலமாவாகவும், பிரச்சாரகர்களாகவும், போதகர்களாகவும் இருக்க வேண்டும் என்பதை நெறிப்படுத்த வேண்டும். எங்கள் சமூகத்தின் 90 வீத பிரச்சினை இங்கிருந்துதான் ஆரம்பிக்கிறது. இதன் ஒட்டு மொத்த பொறுப்பையும் ஏற்றுக் கொள்ள வேண்டிய கடமை அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்கே இருக்கிறது.

உங்களுக்குள் தீர்க்கப்படாத, உங்கள் நிறுவனத்துக்குள் ஒழுங்கமைக்கப்படாத இந்த சூழ்நிலையே நாட்டில், சமூக மத்தியில் பாரிய பிளவுகளை ஏற்படுத்தியுள்ளது என்றால் மிகையில்லை. 90 வருட பழமை வாய்ந்த ஜம்மிய்யாவுக்கு போதிய அரசியல் அங்கீகாரம் இருக்கிறது. அதைத் தாண்டிச் செயற்படும் சுயாதீன போதகர்களைக் கட்டுப்படுத்துவதை அரசு பார்த்துக் கொள்ளட்டும். ஆனால், உலமாக்களின் வரைவிலக்கணத்தையும், தகுதியையும் நெறிப்படுத்தி அதற்கு சட்ட அங்கீகாரத்தைப் பெறுவது உங்கள் கடமை. 

இவ்வாறு உலமாக்களின் கண்ணியம் மீளக் கட்டியெழுப்பப்படுவது இச்சமூகத்தின் அடித்தளத்தை மீளக் கட்டியெழுப்பும் பணியை இலகுவாக்கி விடும்.

அதற்கடுத்ததாக அரசியல்வாதிகள். கடநத 10 வருடங்களாக இலங்கை அரசியலில் முஸ்லிம் பிரதிநிதிகள் அனுபவித்து வரும் பதவிகளும், அவர்கள் பெற்ற பட்டங்களும் சமூகத்தை இணைத்திருக்கிறதா – பிரித்திருக்கிறதா? சமூகக் கட்டுமானத்தைப் பலப்படுத்தியிருக்கிறதா – பலவீனப்படுத்தியிருக்கிறதா? என தமக்குத் தாமே கேள்வியெழுப்ப வேண்டியது ஒவ்வொரு அரசியல்வாதிக்கும் கடமையாகிறது.

பிரதானமாக பேரினவாத வன்முறைகளின் போது செய்வதறியாது, தாக்குதல்கள் முடிந்ததும் முண்டியடித்துக்கொண்டு ஆறுதல் சொல்லக் கிளம்பும் முஸ்லிம் கட்சிகளின் தலைவர்கள் ரவுப் ஹக்கீமும் - ரிசாத் பதியுதீனும் இதற்குப் பொறுப்பாளிகள். ஹிஸ்புல்லாஹ், அசாத் சாலி மற்றும் கபீர் ஹாஷிம், முஜிபுர் ரஹ்மான் போன்ற கட்சி இரத்தத்தில் உயிர் வாழும் இன்ன பிற தலைவர்களும் விதிவிலக்கானவர்களும் அல்ல.

உங்கள் கட்சிப் பிரிவினைகள், அதை விட மேலாக நீங்கள் பதவிகளால் அடிமைப்படுத்தி வைத்திருக்கும் இளைஞர் சமூகம் எவ்வாறு வழி கெட்டுப் போயிருக்கிறது? என்பதை ஏற்றுக்கொண்டு அதனை சீர் செய்யவும் எதிர்கால பாதையை சீர் படுத்தவும் நீங்கள் முன் வர வேண்டும். எப்போது என் தலைவன் அடி வாங்கியவனைப் பார்க்கப் போவான் என்று காத்திருக்கும் தொண்டன், அந்த போட்டோ வந்ததும் தான் மீண்டும் இரத்தம் பாய்ந்து இயங்க ஆரம்பிக்கிறான். இப்பேற்பட்ட அடிமைச் சமூகத்தை உருவாக்கி, எந்த அரசு வந்தாலும் அந்த அரசின் பங்காளிகளாக இருந்து, கையில் கிடைக்கும் நிறுவனங்களுக்கெல்லாம் கட்சிப் பணியாளர்களை பணிப்பாளர்களாக ஆக்கி இன்னும் இன்னும் அரசியல் அடிமைத்தனத்தை வளர்ப்பதை நிறுத்தியே ஆக வேண்டும். 

ஆளாளுக்கிடையில் பீறிப் பாயும் உங்கள் வீராப்புகளும், ஆவேசங்களும் பேரினவாதிகளைக் கண்டதும் பெட்டிப் பாம்பாய் அடங்கிப் போகும் வரலாற்றை 2014 அளுத்கமயிலிருந்து 2019 வன்முறைகள் வரை கண்டாயிற்று. நாடாளுமன்றம் திறந்தவுடன் நாலு வார்த்தை பேசி உங்கள் சமூகக் கடமை முடிவடைந்து விட்டதாகக் கருதாதீர்கள். அடிமைச் சமூகத்தை உருவாக்கத் துணிந்த நீங்கள், அந்த விலங்கையுடைத்து கௌரவமான பிரஜைகளாக எம் சமூகம் தலை நிமிர்ந்து வாழ்வதற்கு அரசியல் ஊடாகப் பங்களிக்கவும் தொலைந்து போன எமது பாரம்பரியங்களையும் சமூக ஒற்றுமையையும் பாடப் புத்தகங்கள் ஊடாகத் தொடர்ந்து புகட்டுவதற்கும், அடுத்தடுத்த தலைமுறையினருக்கு வழி காட்டவும் நீங்கள் உதவியே ஆக வேண்டும்.

ஆம்! அவர்களும் - இவர்களும் பார்த்துக் கொள்வார்கள் என்று ஒதுங்கிச் செல்ல முனையும் அப்பாவிக் குடிமகனே, நீயும் உன்னை மிக ஆழமாக மறு பரீசிலனை செய்து கொள். இலங்கை ஒரு வளம் நிறைந்த அழகிய தீவு. இத்தீவின் வளங்களைக் கொள்ளையிட மேற்கே அமெரிக்கா வரையிலும், கிழக்கே சீனா வரையிலும் பருந்துகள் வாய்ப்புகளுக்காகக் காத்துக் கிடக்கின்றன. கட்டிடங்கள் உடைந்தால் தான் அதை மீளக் கட்ட மூலப் பொருட்களை விற்க முடியும் அல்லது அதற்குக் கடனாவது கொடுக்க முடியும்.

உனது தீவில் உள்ள சட்டதிட்டங்களை மதித்து, சிறுபான்மையாக வாழ்வது எப்படியென இஸ்லாம் மிக அழகாகச் சொல்லியிருக்கிறது. உலகில் வேறு நாடுகளில் காண முடியாத அளவு, நம் முன்னோரினால் பெறப்பட்ட சலுகைகள் நம்மை கௌரவத்தால் உயர்த்தி வைத்திருக்கிறது. இப்பேற்பட்ட பூமிக்கு சற்றும் தொடர்பிலாத சர்வதேச விவகாரங்களுக்காக நீயும் - உன்னைச் சார்ந்தோரும் எத்தனை ஈர்க்கப்படுகிறீர்கள்? அதனால் தூர காலத்தில் இச்சமூகம் பெறப்போகும் நன்மை – தீமைகள் என்னவென்பதை ஒவ்வொரு குடி மகனும் ஆற அமர இருந்து சிந்திக்க வேண்டும்.

நம் மத்தியில் எல்லா வகையானோரும் உண்டு. நாம் பேசும் மார்க்கம் நம் உதட்டளவோடு நின்று கொள்வதனால் அது ஆழ் மனதில் மாற்றங்களைக் கொண்டு வரத் தயங்குகிறது. நாம் அரபு மொழியை வாசிக்கப் பழகும் அளவுக்கு அல்-குர்ஆன் மானுடம் பற்றிப் பேசும் ஆழத்தை உணர மறுக்கிறோம்.

ஆதலால், நாம் மட்டுமே உயர்ந்தவர்கள் என எண்ணிக் கொண்டும் உலகின் வேறெங்கும் மனித சமூகமும் இயற்கை நடைமுறைகளும் இயல்பு விவகாரங்களும் இல்லவே இல்லையென மறுக்கிறோம். ஆயினும், சற்றே கண்விழித்துப் பார்த்தால் நாம் தனிமைப்பட்டிருப்பதைப் புரியலாம்.
சர்வதேச அளவில் பிரித்தாளப்படும் எம் அடையாளத்தின் மான்பிணைக் காப்பதும், வாழ வைப்பதும் அதன் பாலுள்ள கடமையை உணர்வதும் நமக்கே கடமையாகிறது. 

இன்று, இஸ்லாத்தின் பால் திரும்புபவர்களிடம் கூட, அல்-குர்ஆன், ஹதீசைப் படியுங்கள் முஸ்லிம்களைப் பார்க்கார்தீர்கள் என முரண் நகையோடு விளக்கங்கள் தரப்படுகிறது. முஸ்லிமாக வாழத் திரும்பியவன் வாழும் முஸ்லிமைப் பார்க்காமல் வேறு யாரைப் பார்ப்பது? காரணம், அவன் பார்த்துக் கற்றுக்கொள்ளும், உணர்ந்து கொள்ளும், அறிந்து கொள்ளும் அளவுக்கு நாம் தகுந்த உதாரணங்களாக இல்லை.

வெட்கப்பட்டாலும் சிந்திக்க வேண்டியதும், மாற்றங்களை உருவாக்கிக் கொள்வதும் நாமாகவே இருப்பதில் எந்தத் தவறும் இல்லை. இன்னொரு சந்தர்ப்பம் வேண்டாம், இன்றே நம் நிலை ஆராய்ந்து மாற்றங் காண்போம்!


2ld3lJX

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

1 comment:

Unknown said...

A very good analysis. Now from here where we should go.what we should do what can we do?

Post a Comment