வன்முறைக்குப் பின்னால் அரசியல் பூதங்கள்! - sonakar.com

Post Top Ad

Sunday, 19 May 2019

வன்முறைக்குப் பின்னால் அரசியல் பூதங்கள்!

  • வன்செயலுக்கு உதவி சிங்கள வாக்குகளைக் கவர்தல்  
  • முஸ்லிம் விவகார அமைச்சர் மீது படைத் தளபதி சீற்றம்
  •  மக்களைப் பாதுகாக்க அரசாங்கம் தவறி விட்டது-மஹிந்த
  • அப்பாவி முஸ்லிம்களை தொந்தரவுபடுத்தாதீர்-தழிழ் தரப்பு
  • நாட்டில் தலைவர்களோ அரசாங்கமோ இல்லை-மாநாயகர்
  • ஈஸ்டர் நிகழ்வில் சம்பந்தப்பட்டவர்களில் 95 வீதம் கைது


இன்று நாட்டில் உயிர்த்தநாள் சம்பவம் பின்னுக்குத் தள்ளப்பட்டு முஸ்லிம்களுக்கு எதிராக நடக்கின்ற வன்முறைகள் தலைப்புச் செய்தியாக இந்த நாட்களில் வந்து கொண்டிருக்கின்றன. அந்த வகையில் ஒருத்தன் ஓடினால் பார்த்தோடு ஊரே ஓடினால் ஒத்தோடு என்ற வார்த்தைக்கு ஏற்ப நாமும் நாட்டில் நடந்து கொண்டிருக்கின்ற வன்முறைகள் தொடர்பான தகவல்களை இந்தவாரம் வாசகர்களுடன் பேலாம் என்று எதிர்பார்க்கின்றோம். தற்போது இந்த நாட்டுக்கு ஒரு தலைவரும் இல்லை அரசாங்கமும் இல்லை என்ற நிலை தோன்றி இருக்கின்றது என்று, அஸ்கிய பீடத்தின் மகாநாயக்க தேரர் நாட்டு நிலமை தொடர்பில் தனது கடுமையான விமர்சனத்தை வெளியிட்டிருக்கின்றார். எனவே ஜனாதிபதி மைத்திரி பிரதமர் ரணில்  செயல்பாடுகளில் அவருக்கு நல்லபிப்பிராயம் இல்லை என்பது தெளிவாகின்றது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த மக்களைப் பாதுகாக்க இந்த அரசாங்கம் தவறிவிட்டது என்று சாடுகின்றார். அனைத்து தமிழ் அரசியல்வாதிகளும் நாட்டில் நடக்கின்ற இந்த இன வன்முறையை ஏற்றுக்கொள்ள முடியாது இதற்கு உடனடியாக ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என ஒருமித்துக் குரல் கொடுத்து வருகின்றனர். முஸ்லிம் அரசியல் தலைவர்கள் பாதிக்கப்பட்ட மக்களை கண்டு துயர் விசாரிக்கின்ற சம்பிரதாய விசிட்டை இப்போது மேற்கொண்டு வருகின்றார்கள்.

இராணுவத் தளபதி லெப்டினன் மஹேஸ் சேனநாயக்க படித்த அறிவுள்ள ஒருவரை முஸ்லிம் விவகாரங்களுக்குப் பொறுப்பான அமைச்சராக நியமியுங்கள். இந்த அமைச்சு வேலைகளை தற்போது நாமே செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்கு நியமிக்கப்படுகின்றவர் ஒரு முஸ்லிமாக இருக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை என்றும் அவர் ஆலோசனை கூறி இருக்கின்றார். 

நாம் அறிந்த வகையில் ஆளும் கட்சியிலுள்ள ஒரு அமைச்சருக்கு எதிராகஇராணுவத் தளபதி முகத்தில் அறைந்தது போல் இப்படிக் கருத்துச் சொல்லி இருப்பது இதுதான் முதல் முறையாக இருக்க வேண்டும் என்று நாங்கள் நம்புகின்றோம். அந்தளவுக்கு அந்த அமைச்சுப் பணிகள் மோசமான நிலையில் இருக்கின்றது என்றுதான் புரிந்து கொள்ள வேண்டும். 

உயிர்த்த நாள் சம்பவம் தொடர்பில் ஒரு நிகழ்வில் முஸ்லிம்கள் மத்தியில் பேசும் போது பிரிகேடியர் அசாத் இஸ்ஸதீன், முஸ்லிம்கள் மீது தற்போது நம்பிக்கை இழக்கப்பட்டுள்ளது. ஒரு முஸ்லிம் என்று சொல்லிக் கொள்வது கூட இன்று வெட்கமாக இருக்கின்றது என அவர் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கின்றார். 

முஸ்லிம் அரசியல் தலைவர்களது பொறுப்பற்ற தன்மையே இந்த நிலைக்குக் காரணம் என்று ஈஸ்டர் தாக்குதல் தொடர்பில் முன்னாள் அமைச்சர் அனுர பிரியதர்ஷன யாப்பா குறிப்பிடுகின்றார். 

ஜேவிபி தலைவர் அனுரகுமார திசாநாயக்க கூட முஸ்லிம் தலைவர்கள் எப்போதுமே சமூகத்திற்காக அரசியல் செய்யவுமில்லை அரசியல் ரீதியாக மக்களை விளிப்பூட்டவுமில்லை. அவர் சமூகத்தின் பெயரில் அரசியல் வியாபாரமே செய்து வருகின்றார்கள் எனக் கடுமையாகக் குற்றம் சாட்டுகின்றார். அவர் முஸ்லிம் அரசியல் தலைமைகள் தொடர்பான கூற்றுடன் கட்டுரையாளனுக்கு நூறுவீத உடன்பாடு இருக்கின்றது. 

இந்த ஈஸ்டர் படுகொலைகளுடன் தொடர்புடைய 95 சதவீதமானவர்களை நாங்கள் கைது செய்து விட்டோம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் உறுதிப்படுத்தி இருக்கின்றன. கொலைகாரர்களின் வலையமைப்பு முற்றாக செயலிழக்கச் செய்யபபட்டு விட்டது.

பயங்கரவாத எதிர்ப்பு நிபுணரான பேராசிரியர் ரொஹன் குணரத்தன பினான்சியல் டைம்ஸூக்குக் கொடுத்த செவ்வியில் இந்த ஈஸ்டர் தாக்குதல்தாரிகளின் செயல்பாடுகளில்  95 வீதம் முடக்கப்பட்டு விட்டது அல்லது ஒடுக்கப்பட்டுவிட்டது என்பதனை தானும் ஏற்றுக் கொள்வதாக சான்றிதழ் கொடுத்திருக்கின்றார். 

எடுத்த எடுப்பிலே இப்படி பாதுகாப்புத் துறையினர் இது விடயத்தில் பெரு வெற்றி பெற்றிருக்கின்றது. நாட்டில் கலவரமொன்றை இதன் மூலம் ஏற்படுத்துவதுதான் இவர்களின் திட்டம் என்று அந்தச் செவ்வியில் அவர் மேலும் சொல்லி இருக்கின்றார். இந்த நாட்டிலுள்ள முஸ்லிம்கள் இந்த அமைப்பை ஒட்டுமெர்தமாக ஏற்றுக் கொள்ளாது நிராகரித்ததும் இதற்கு முக்கிய காரணம். 

இப்போது நாட்டில் நடக்கின்ற முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை பற்றி பார்த்தால் கடந்த ஒரு தசாப்த காலத்திற்கு மேலிருந்தே முஸ்லிம்களுக்கு எதிரான பேரினக் கடும்போக்காளர்கள் அதிர்ப்தியில் இருந்து வந்திருக்கின்றனர். குறிப்பாக விடுதலைப் புலிகள் இராணுவ ரீதியில் தோற்கடிக்ப்பட்ட பின்னர் இந்தக் கடும் போக்காளர்களுக்கு கோதா காலத்தில் நல்ல உற்சாகம் கொடுக்கப்பட்டது. 

தமது தரப்பில் அரசியல், மதத் தலைமைகள் விட்ட தவறுகளும் இந்த நிலமைக்கு  காரணம் என்று முஸ்லிம்கள் தரப்பில் தற்போது உணரப்பட்டுவருவது தெரிகின்றது  மு.கா. தலைவர் ஹக்கீம் கூட அண்மையில் முஸ்லிம்கள் தங்களை சுய விமர்சனம் செய்து கொள்ள வேண்டும் எனக்கேட்டுக் கொண்டிருந்தார். 

அமைச்சர் கபீர் ஹாசீம் கூட அதே கருத்தை மீண்டும் வலியுறுத்தி இருக்கின்றார். ஆனால் பொறுப்பு வாய்த தலைவர்கள் என்ற வகையில் இந்த சுயவிமர்சனம் எப்படி அமைய வேண்டும் என்பதனையும் அவர்கள் முஸ்லிம் மக்களுக்குத் தெளிவுபடுத்த வேண்டும் என்பது எமது கருத்து. வெறுமனவே சுயவிமர்சனம் செய்து கொள்ளுங்கள் என்று கூறிவிட்டு அவர்கள் பொறுப்பில்லாமல் நடந்து கொள்ளக்கூடாது. அதற்கான வழிகாட்டல்களை அவர்கள் சமூகத்திற்கு வழங்க வேண்டும்.

முஸ்லிம் புத்திஜீவிகள் கூட மந்தகெதியில் இது பற்றி தற்போது பேச ஆரம்பித்திருப்பதுபோல் தெரிகின்றது. நாட்டில் உள்ள ஏனைய சமூகங்களைவிட முஸ்லிம்கள் சற்று வசதி வாய்ப்புக்களுடன் வாழ்வது போல் ஒரு இமேஜ் நாட்டில் இருந்து வருகின்றது. இதில் ஓராளவு உண்மை இருந்தாலும் முஸ்லிம்களில் பெரும்பான்மையானோர் மிகவும் கீழ் மட்டத்தில் வாழ்ந்து வருவது,  குறிப்பிட்ட சிறு தொகையினர் காட்டுகின்ற ஆடம்பர வாழ்வு காரணமாக மூடி மறைக்கப்படுகின்றது என்பதுதான் யதார்த்தம். 

பௌத்த இனவாதிகளை உச்சகப்படுத்துவதில் சிங்கள வர்த்தகர் பங்களிப்பு ஓரளவு இருக்கின்றது என்று கூற முடியும். இதற்கு வர்த்தகத் துறையில் காணப்படும் போட்டி மனப்பான்மை முக்கிய காரணம் என்பது எமது கருத்து. எனவே ஐஎஸ்ஐஎஸூக்கு வருமானங்கள் வருவது போல் இந்த கடும் போக்கு சிறிதளவு சிங்கள இளைஞர்களுக்கும் ஏதோவகையில் ஊக்குவிப்புக்கள் இவர்களால் கிடைத்து வருகின்றதோ என்று எண்ணத்தோன்றுகின்றது.

தற்போது நடந்து முடிந்துள்ள முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளில் அரசியல் வாதிகளின் ஊக்குவிப்பும் பாதுகாப்பும் இருந்து வந்திருகின்றது என உளவுத்துறையினருக்குத் தெரிய வந்திருக்கின்றது என்று பகிரங்கமாகத் தற்போது பேசப்பட்டுவருகின்றது. எனவேதான் பொலிஸ் இராணுவம் வேடிக்கை பார்த்திருக்கத் தாக்குதல் நடந்திருக்கின்றது. 

தனது தந்தையை வன்முறையாளர்கள் வெட்டிச் சாய்திருந்த நிலையில் பொலிஸார் அவரை வைத்தியசாலைக்கு எடுத்துச் செல்ல எந்த முயற்ச்சிகளையும் செய்யவில்லை என ஒரு சிறுமியின் ஓலத்தை தற்போது ஊடகங்களில் பார்க்க முடிகின்றது. 

இராணுவ உடையில் நின்ற ஒருவர் வன்முறையில் நேரடியாக ஈடுபாடு கொள்வது போன்ற ஒரு நிகழ்வு படைத் தரப்புக்கு பெரும் அவமானத்தைக் கொடுத்திருக்கின்றது. இது உண்மையாக இருந்தால் குறிப்பிட்ட நபருக்கு எதிராக கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று இராணுவ வட்டாரங்கள் குறிப்பிட்டிருக்கின்றன.

சுதந்திரக் கட்சி செயலாளர் தயாசிரி ஜயசேக்கர கைது செய்யப்பட்டவர்களை விடுவிக்க முயன்றார் என்று குற்றம் சாட்டப்படுகின்றார். வேறு பொலிசுக்கு அவர்களை இடமாற்றக்கோரி தான் களத்துக்குப் போனதும் அதில் அந்தப் பிரதேச உள்ளுர் அரசியல் பிரமுகர்களும் அவரது ஆதரவாளர்களும் இருந்தது தற்போது பெரும் சர்ச்சையைக் கிளப்பி இருக்கின்றது. அந்த இடத்தில் சர்ச்சைக்குரிய நாமல் குமாரவும் இருந்திருக்கின்றார். 

தயாசிரி ஜயசேக்கர ஹெட்டிபொல வன்முறைக்கு பொலிசாரே பொறுப்புக்கூற வேண்டும் அவர்கள் முறைகேடாக நடந்ததுதான் இந்தளவு வன்முறை அங்கு நடந்தது என்று அவர் நியாயம் பேசுகின்றார். 

மேலும் இந்த ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து இதுவரையும் பிரிந்திருந்த இனவாதிகளான நாமல் குமாரவையும் அமித் வீரசிங்ஹவையும் டென் பிரசாத் மீண்டும் ஐக்கியப்படுத்தி இன வன்முறையாளர்களைச் சக்திப்படுத்தி இருக்கின்றார் என்று ஒரு தகவல்கள் தெரிவிக்கின்றது. மேலும் கோதா விசுவாசியான கபில ஹெந்தவிதாரண இந்த வன்முறையில் பின்னணயில் இருந்திருக்க வேண்டும் என்று ஒரு சந்தேகம் இருக்கின்றது.

இந்தத் தாக்குதல்களுக்கு திட்டமிட்ட ரீதியிலே வன்முறையாளர்கள் கொண்டு வந்து இறக்கிவிடப்பட்டிருக்கின்றார்கள். அவர்கள் மினுவங்கொடையில் நடந்த தாக்குதல்களுக்கு பஸ் வண்டிகளிலும, குருநாகலை குளியாப்பிட்டிய பகுதியில் நடந்த தாக்குதல்களுக்கு நுற்றுக் காணக்கான மேட்டார் சைக்கிள்களில் கண்களை மூடிக் கொண்டு வந்திருக்கின்றார்கள்.இன்னும் பல இடங்களில் ஆட்டாக்களிலும் வந்திறங்கி இருக்கின்றனர். எனவே இது திட்டமிட்ட ஏற்பாடு என்பது உறுதியாகின்றது.

அரசியல் செயல்பாட்டாளரும் இனவாதியுமான பாடகர் மடுமாத வன்முறை நடைபெற்ற இடமொன்றில் இருந்தார் என அவரிடத்தில் கேள்விகள் எழுப்பப்பட்டபோது வாகன நெரிசல் காரணமாக தான் அந்த இடத்தில் இறங்க வேண்டி வந்தது. அதற்கு அப்பால் தனக்கு எதுவுமே தெரியாது என்பது அவர் வாதம்.

மினுவங்கொடையில் ஒரு உணவு பதனிடும் நிலையத்தில் மட்டும் ஒரு முஸ்லிம் வர்த்தகருக்கு ஏற்பட்ட இழப்பு 700 மில்லியன் என்று சொல்லப்படுகின்றது. இங்கு தொழில் புரிகின்ற 500 க்கும் மேற்பட்ட அனைவரும் பெரும்பான்மை சிங்கள சமூகத்தினர் என்பது குறிப்பிடத்தக்கது.

வெசக் காலங்களின்போது வன்முறையாளர்கள் அட்டகாசங்களைப் புரிய வாய்ப்புக்கள் இருக்கின்றது என பாதுகாப்பு வட்டாரங்களில் பேசப்படுகின்றது.

கடன் தொல்லையில் இருந்த நாட்டில் பொருளாதரம் ஈஸ்டர் தாக்குதலைத் தொடர்ந்து மிகவும் ஆபாத்தான கட்டத்திற்குப்போய் இருக்கின்றது. தற்போது இந்த வன்முறையாளர்களின் நடவடிக்கைகள் காரணமாக பாதளததிலே வீழ்ந்து விட்டது என்றுதான் சொல்ல வேண்டும்.

இந்த வன்முறையாளர்களின் பின்னால் அரசியல்வாதிகளின் செயல்பாடுகள் இருக்கின்றது என்பது ஏற்கெனவே நடந்த தாக்குதல்களில் போது தெரியவந்த விவகாரம்தான். இப்போது இன வன்முறையாளர்களுக்கு ஒத்துழைப்பு வழங்கினால்தான் சிங்கள மக்களின் வாக்குகளை பெற்றுக் கொள்ள முடியும் என்ற நிலை நாட்டில் ஏற்பட்டிருக்கின்றது. எனவேதான்  இதுவரை காலமும்; மறைவில் நின்று வழங்கிய ஒத்துழைப்புக்களை அரசியல்வாதிகள் இப்போது பகிரங்கமாகச் செய்ய முன்வருகின்றார்கள் என்றுதான் எடுத்துக் கொள்ள வேண்டும்.

கர்தினால் மெல்கேலம் ரஞ்சித் ஆண்டகை மற்றும் சில பௌத்த தேரர்களும் இந்த வன்முறையின் பின்னணியில் அரசியல் செயல்பாட்டாளர்கள் இருக்கின்றார்கள் என்ற தகவல் தமக்குக் கிடைத்திருக்கின்றது என்பதனை உறுதிசெய்கின்றார்கள்.

முழுநாடும் ஐக்கியப்பட்டு ஈஸ்டர் தாக்குதல்தாரிகளை பூண்டோடு களைபிடுங்குகின்ற வேலையைச் செய்ய வேண்டிய இந்த நேரத்தில் இனவாதிகளின் இந்த செயல்பாடுகள் இவர்களும் நாட்டைக் குட்டிசுவராக்கும் குண்டுதார மதவெறியர்களும் கூட்டணி அமைத்து விட்டனரோ என்று கேட்கத் தோன்றுகின்றது. 

எப்படியோ இந்த கூட்டணிகள் போடுகின்ற ஆட்டம் அப்பாவி மக்களின் தலைகளோடுதான் விளையாடப் போகின்றது. எந்த அரசு பதவிக்கு வந்தாலும் எவர் அதிகாரத்துக்கு வந்தாலும் ஈஸ்டர் தாக்குதலும் இனவன்முறைகள் காரணமாக தமக்கு மக்கள் மீது இப்படி சுமையைக் கொட்ட வேண்டி வந்தது என்று எதிர்காலத்தில் பதவிக்கு வருபவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பார்கள் என்பது மட்டும் தெளிவாகத் தெரிகின்றது.

-நஜீப் பின் கபூர்

No comments:

Post a Comment