சமூகத்தில் தீவிரமடையும் பணப்பித்து! - sonakar.com

Post Top Ad

Friday, 1 March 2019

சமூகத்தில் தீவிரமடையும் பணப்பித்து!


இன்றைய உலகம், பணத்தை மாத்திரம் அடிப்படையாகக் கொண்டு இயங்கிக்கொண்டிருப்பதை மறுக்க முடியாது, எந்த மனிதனை நோக்கினாலும், எந்தத் துறை எடுத்தாலும் எல்லாவற்றிலுமே பணமே பேராதிக்கம் செலுத்துகிறது. புனித பணிகளான வைத்திய பணி முதல் ஆசிரியர் பணி வரை பணமே முதன்மை பெறுகிறது. அதனால்தான், தனியார் வைத்திய சேவையும், பிரத்தியேக கற்கை நிலைய ஆசிரிய சேவையும் பண மைய சேவைகளாக மாறி வருவதை அவதானிக்க முடிவதுடன் இவை பணத்தின் மீது கொண்ட பேராசாயின் தீவிரத்தை வெளிப்படுத்தி நிற்பதையும் காண முடிகிறது.

பணத்தையும், உணவையும் மையமாகக் கொண்ட முதலாளித்துவ, கம்யூனிய கொள்கைகளின் தாக்கத்தினால் மனிதர்களின் உள்ளங்களில் பணத்தின் மீதான அவா அதிகரித்துள்ளது. இதற்கு முஸ்லிம்களும் விதிவிலக்கல்ல. அதனால்தான்,  இற்றைக்கு 1400 வருடங்களுககு முன்னர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு சொல்லிவிட்டார்கள். 'ஒரு காலம் வரும் அந்தக்;காலத்தில் மனிதன் தான் பொருள் ஈட்டுவது ஹலாலா? ஹறாமா? என்பதைப் பற்றி இலட்சியம் கொள்ளமாட்டான்' (ஆதாரம்: புஹாரி) சமுதாயத்தின் சமகால நிலைமையை மேற்படி நபி மொழி நிரூபித்துக் கொண்டிருப்பதை தற்கால நிகழ்வுகள் புடம் போடுகின்றன.மனித வாழ்க்கைக்கு ஒரு கருவியாகவே பணம் உள்ளது. பணத்திற்கு பொருள் என்றும் கூறப்படுகிறது. பணம் என்ற ஒன்று இல்லாத காலத்திலும் மனிதன் வாழ்வில் நிறைவு கண்டான். பண்டமாற்று முறை இருந்த காலத்திலும்  மனித வாழ்வு நெருக்கடியின்றி சீராகவே இருந்திருக்கிறது.  நாகரியத்தின் பல படிகளைத் தாண்டி விண்வெளியில் பயிர்செய்கை மேற்கொள்ளும் இக்காலத்தில் பணத் தேடலுக்காக மனிதன் பித்துப் பிடித்து அலைகிறான் என்பதே ஆச்சரியமாகவுள்ளது. மனிதர்கள் தங்களுக்குள் ஒரு பரிமாற்ற வசதிக்காக ஏற்படுத்திய பணம் தற்காலத்தில் மனித வர்க்கத்தையே ஆட்டிவிக்கும் சக்தியாக தீவிரமடைந்திப்பதை உணர முடிகிறது.

பணமும் வாழ்க்கையும்

பணம் வாழ்க்கைக்கு இன்றியமையாததொன்று. இறை மார்க்கமான இஸ்லாம் வாழ்க்கைத் தேவைக்காக பணம் சம்பாதிப்பதை ஆதரிக்கவே செய்கிறது. ஆனால், இஸ்லாம் காட்டிய வழிமுறைக்கு மாறாக பணம் தேடுவதை ஆதரிக்கவில்லை. நேர்மையான முறையில் உழைத்து பணம் சம்பாதிப்பதை கடமை என்று அறிவித்த மார்க்கமும் இஸ்லாம்தான்.

அவ்வாறு நேரான வழியல் பணம் தேடுவதை கடமை எனக் கூறும் இஸ்லாத்தைப் பின்பற்றும் முஸ்லிம்களின் பலர் பணத்தை முறை தவறிய வழியில் தேடுவதால் எதை அடையப் போகிறார்கள். இந்நிலையில் இப்பணத்தை; பெறுவதற்காக ஒவ்வொரு மனிதனும் படும்பாட்டைச் சொல்லித் தெரிய வேண்டியதில்லை. ஒரு சிலரின் கையில் பணக்கிடங்கே இருந்தாலும் அவர்களால் சந்தோஷ இருக்க முடிகிறதா?  தனி மற்றும் குடும்ப வாழ்க்கையைச் செம்மைப்படுத்திக் கொள்ள முடிகிறதா? அமைதியாக உறங்கி, பயமும் பதட்டமும் இல்லாமல், நிம்மதியாக எழுந்திருக்கும் பணம்படைத்தவர்கள் இன்று எத்தனை பேர் உள்ளனர். பணம்...பணம்...பணம் என்று நெஞ்சத்தில் நிம்மதி இழந்து உடலில் உற்சாகம் குறைந்து, உடல், உள வலியோடு வாழும் பணக்காரர்களே நம் மத்தியில் அதிகம் என்று கூறுவதையும் மறுப்பதற்கில்லை.

காலத்துக்குக் காலம் ஒவ்வொரு சமுதாயத்திலும் வௌ;வேறு விதமான பிரச்சினைகள் தோன்றுவதுண்டு. அந்தவகையில,; முஸ்லிம்களும்; விததமான பிரச்சினைகளையும், தாக்கங்களையும் வௌ;வேறு காலங்களில் எதிர்கொண்டிருக்கிறார்கள். சில பிரச்சினைகள் சமூகத்தின் மீது திட்டமிட்டு உருவாக்கபட்டவையாகக் காணப்படுவதுடன் வேறு சில பிரச்சினைகள் சமூகத்திலுள்ள சிலரின் செயற்பாடுகளினால் உருவானவையாகவும் காணப்படுவதை வரலாற்றில் நோக்க முடிகிறது.

இன ரீதியான, பொதுவான பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துக் கொண்டிருக்கும் இக்கால கட்டத்தில் இஸ்லாமிய சமூகம் இஸ்லாம் காட்டிய வழியிலிருந்து விலகி தங்களது வாழ்க்கையை நகர்த்திக்கொள்வதற்கு பணத்தைத் தேடிக்கொள்ளும் முறை தறிய வழிகள்; இன்று அவஸ்தைகளுக்கும், அவமானத்திற்கும் உள்ளாக்கி வருவதோடு, அதற்காக வெட்கப்படுவதா அல்லது வேதனைப்படுவதா என்று புரியாமல் பலர் தங்களுக்குள் வெந்துபோயிருக்கிறார்கள். இதன் பின்னணியில் முஸ்லிம் சமூகத்தின் பலருக்கிடையில் பணத்தின் பேராசை அல்லது பணப்பித்து தீவிரமடைந்திருப்பதை உணர முடிகிறது.

மாவனல்லை சிலை உடைப்பு விவகாரம்;; முதல் கொள்ளுப்பிட்டியில் 350 கோடி ரூபா பெறுமதிமிக்க ஹெரோயின் போதைப்பொருள்  கைப்பட்டது வரை கைதானவர்கள் முஸ்லிம் பெயர் தாங்கியவர்கள் என்பதனால் முஸ்லிம் விரோத சமூக வலைத்தள கடும்போக்குப் பேர்வழிகள் சமூகத்தைக் கீறிக்கிழித்துக் கொண்டிருக்கிறார்கள். இதற்கு சமூகத்தின் மத்திலுள்ள கொள்கைவாதிகளும், பணப்பித்தர்களும் காரணமென்று மக்கள் கூறுவதிலும் தவறிருக்காது.

இனவாதக் கண்ணோட்டத்தில் கடும்போக்காளர்கள்  அவ்வாறு எழுதுகின்றபோதிலும், அவ்வாறு எழுதுவதற்கு வாய்க்கால் வெட்டுவது இஸ்லாமிய சமூகத்தின் முஸ்லிம் பெயர் தாங்கிய புல்லுருவிகள் என்பதை மறுக்க முடியாது.; இவர்கள் வழி தவறி  அதலபாதாளத்தில் விழுவது மாத்திரமின்றி, குர்ஆனின் போதனையினாலும், நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கைப் பண்புகளாலும் வளர்ந்த இஸ்லாத்திற்கும் குர்ஆன் வழியிலும், நபி அவர்களின் வழிகாட்டல்களிலும் வாழ்க்கைய அமைந்து வாழ்கின்றவர்களுக்கும், வாழ முயற்சிக்கின்றவர்களுக்கும் அவமானத்தை ஏற்படுத்திக்கொண்டிருக்கிறார்கள். இத்தகையவர்களின்  செயற்பாடுகள் பிற சமூகத்தின் மத்தியில் வாழுகின்ற இஸ்லாமியர்களை வெட்கிக்தலைகுனிய வைப்பதை, வைப்பதாகப் பேசப்படுவதைக் கேட்க முடிகிறது.

குறிப்பாக இஸ்லாத்தை முறையாகப் பின்பற்றுவதிலும், சொத்து, பொருள், பணம் தேடல் தொடர்பிலும் இஸ்லாம் காட்டிய வழியை இத்தகையவர்கள் மறந்து விட்டார்கள்.  இந்நிலையில், எந்த வழியிலேனும் பணம், பொருள், சொத்தைத் தேடுவதற்காக சிலர் பித்துப் பிடித்து அலைவதைச் சுட்டிக்காட்டாமல் இருக்க முடியாது. வாழ்க்கைப் பயணத்தை ஓட்டுவதற்கு பணம் இன்றியமையாதது ஆனால்,; அதற்காக பித்துப் பிடித்து அலைவது குடும்பத்திற்குள்ளும், சமூகத்திற்குள்ளும் ஏன் நாட்டுக்கே ஆபத்துக்கள் பலவற்றை ஏற்படுத்துவதை காண்கின்றோம். இதனை போதைப் பொருள் விவகாரத்தினால் தினமும் இடம்பெறும் கைதுகள் வெளிப்படுத்துகின்றன.

பணத்தை எஜமானக மாற்றியவர்களின் வாழ்க்கை நொந்து கெட்டுக் கிடக்கிறது. பணத்தை மையாமாக வைத்து வாழத் தொடங்கிவிட்ட சமுதாயத்தில் சுயநலம் ஓங்கி நிற்கிறது. எப்படியும் பணம் சம்பாதிக்கலாம் என்ற நினைப்பும் செயற்பாடுகளும் வளர்ந்துவிட்டது. இதனால், ஒழுக்கம், பண்பாடு, இறை அச்சம் என்பன அகன்றுவிடுவதை காண முடிகிறது. 

இதன் விளைவாக, போட்டி, பொறாமை, கொள்ளை, மோசடி, நயவஞ்சகம், விபச்சாரம், போதைப் பொருள் பாவனை, பெண்கள், சிறுவர் துஷ்பிரயோகம், வீட்டு வன்முறை, இலஞ்சம், குறுக்கு வழியில் பணம் சம்பாதிக்கும் ஆசை, ஒரே இரவில் கோடிஷ்வரானாக மாற வேண்டும் என்ற துடிப்பு, வேலை நிறுத்தங்கள், வேலை வாய்ப்பின்மை, கறுப்புப் பணம், விலைவாசி ஏற்றம் இவை அத்தனைக்கும் காரணம் இன்றைய சமுதாயம் பணத்தையே மையப்படுத்தி வாழத் தொடங்கியதன் விளைவுகளென சமுதாய நடப்புக்கள் தொடர்பான ஆய்வாளர்கள் சுட்டிக்காட்டுகின்றனர். அத்துடன், பணத்தின் மீது கொண்ட ஆசை, பலரை பணப் பித்து நோய்க்கு ஆளாக்கியுள்ளதாகவும் உளவியலாhளர்கள் குறிப்பிடுகின்றனர்.

பணப்பித்து நோய்

சமீப காலத்தில் இவ்வுலகில் வாழும் பலர் பணப்பித்து நோயினால் பீடிக்கப்பட்டிருப்பதாக உளவியலாளர்கள் குறிப்பிடுகின்றனர். 'மனி சிக்னல் சின்ட்ரோம்'(பணப்பித்துக் கோளாறு) என்ற புது வார்த்தையை பிரித்தானிய மனநல ஆய்வாளர் டாக்டர் ராஜர் ஹென்டர்சன் அறிமுகப்படுத்தியிருக்கிறார். பணக்கவலையால் அவதிப்படுவோருக்கு உடல் ரீதியிலும், உள ரீதியிலும் காணப்படும் அறிகுறிகளைக் குறிப்பதற்கு இவ்வாய்வாளர் இவ்வார்த்தையினைப் பயன்படுத்தியுள்ளார். 

மூச்சுத் திணறல், தலைவலி, குமட்டல், தோலில் தடிப்புக்கள், பசியின்மை, காரணமற்ற கோபம், பயம், எதிர்மறையான சிந்தனை போன்றவை இந்த அறிகுறிகளில் அடங்கும். பணக்கவலையே மனக் கவலைக்கு முக்கிய காரணம் என்கிறார் மனநல ஆய்வாளர் ஹென்டர்சன்.

பணக் கவலையால் வரும் பிரச்சினைகளுக்கு பலர் பலியாகி வருகின்றனர். கண்மூடித்தனமாக செலவழிக்கும் பழக்கமும், இலாபம் ஈட்டுகிற வெறியும், அதீத பொருளாசையும் உலகளாவிய ரீதியில் தொற்று நோயாக மாறி வருவதனால், அமைதின்மையும், வன்முறையும் ; இளைஞர்கள் மத்தியில் அதிகரித்து வருவதாகவும் கூறப்படுகிறது.

அத்துடன், பணம் சிலரை ஆட்டி வைக்கிறது. சிலரை அடிமைப்படுத்தி விடுகிறது. இதனால் மனக்கவலைகளும், மனக் கோளாறுகளும் ஏற்பட வாய்ப்;பிருப்பதாகவும் ஆனால், பணத்தைக் கவனமாகத் திட்டமிட்டு செலவளிப்பவர்கள் வாழ்க்கையை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக உணருகிறார்கள்.   தங்களைக் குறித்து பெருமிதம் கொள்கிறார்கள் இவர்கள் பணத்திற்கு எஜமானார்கள், அடிமைகள் அல்ல. பணத்தை நிதானமாக செலவு செய்பவர்களுக்கு மனக்கவலையும் குறைவு. அதனால் உண்டாகும்  உடல் நல பாதிப்பும் குறைவு என்று ஆய்வாளர்கள் குறிப்பிடுகிறார்கள்.

பணமும் முஸ்லிம் சமூகமும்

நமது  அங்கலாய்ப்புக்கள், அலைக்கழிப்புக்கள் அத்தனையும் பணம் என்ற ஒன்றுக்காகத்தான் என்பது பிற சமுதாய நபர்கள் புரிகின்ற குற்றங்களுக்கு ஒப்பான குற்றங்களை முஸ்லிம்களும் செய்து சிறைவாசம் அனுபவிக்கி;றவர்களின் எண்ணிக்கைக் கொண்டு புரிந்து கொள்ள முடிகிறது. அதிலும் சமிபகாலமாக இலங்கையின் பேரிடராக மாறியிருக்கும் போதைப் பொருளுடன் தொடர்புபட்ட விடயங்களுக்காகக் கைது செய்யப்பட்டுள்ளவர்களின் எண்ணிக்கைக் கொண்டு உணர முடிகிறது.

தேசிய அபாயகர ஒளடதங்கங்கள் கட்டுப்பாட்டு சபையின் 2018ஆம் ஆண்டுக்கான புள்ளிவிபரங்களின் பிரகாரம் போதைப் பொருளுடன் தொடர்புபட்ட கைதுகளின் எண்ணிக்கையை நோக்ககின்றபோது கைது செய்யப்பட்டவர்களின்  இன ரீதியான கணிப்பின் பிரகாரம் 2017ஆம் ஆண்டில் முதல் இடத்தில் பெரும்பான்மை சமூகத்தைச் சேர்ந்த சிங்களவர்களும் இரண்டாம் இடத்தில் சிறுபான்மை சமூகமான முஸ்லிம்களும உள்ளனர். அவ்வாண்டில் போதைப் பொருளுடன் தொடர்புபட்டவர்கள் என்ற அடிப்படையில் 3,733 முஸ்லிம் நபர்;கள் கைது செய்யப்பட்டுள்ளனர். கைது செய்யப்பட்டவர்களின் மொத்த விகிததத்தில் 10.5 வீதமானவர்கள் முஸ்லிம் நபர்களாவர்.

அத்துடன,; போதைப் பொருள் தொடர்பாக கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையிலும் இஸ்லாமியர்கள் இரண்டாம் இடத்தை வகிக்கின்றனர் அதே வருடம் 1,582 முஸ்லிம் நபர்கள் போதைப் பொருளுடன் தொடர்புபட்ட நிலையில் கைது செய்யப்பட்டு சிறைவைக்கப்பட்டுள்ளனர். போதைப்பொருள் தொடர்பில் கைது செய்யப்பட்;டு சிறைச்சாலையில் உள்ளவர்களின் மொத்த எண்ணிக்கையில் 15 வீதத்தினர் இஸ்லாமியர்கள் என்பதும் இலங்கையின் மொத்த சனத் தொகையில் 9.7 வீதமாக உள்ள முஸ்லிம்களில்  10.5 வீதமானவர்கள் போதைப் பொருளுடன் தொடர்புபட்ட குற்றச் செயல்களுக்காக கைதுசெய்யப்பட்டும் 15 வீதமானவர்கள்  சிறை வைக்கப்பட்டுமுளள்மைக் கொண்டு முஸ்லிம் சமூகத்தின் தற்கால நிலை எந்தப் புள்ளியில் காணப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளக் கூடியதாகவுள்ளதுடன் பணத்தின் மீதான பேராசையின் விளைவுகளில் இந்நிலைமைகளும் அடங்கும் என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இதேவேளை, போதைப் பொருளை நாட்டுக்குள் கொண்டு வந்து வர்த்தக நடவடிக்கையில் ஈடுபடும் 740 சந்தேக நபர்களில் அதிகமானவர்கள் முஸ்லிம் நபர்கள் என்றும் அதில் பள்ளிவாசல்களை நிர்வகிக்கின்றவர்களும் இருப்பதாக சமூகவலைத்தளங்களில் வைரலாக பரப்படும் செய்தியானது மிகத் தலைக்குணிவை முஸ்லிம் சமூகத்திற்கு ஏற்படுத்தியிருக்கிறது. 

முஸ்லிம் பிரதேசங்களில் போதைப்பொருள் ஒழிப்பு நடவடிக்கைகளுக்காக செயலணிகள் உருவாக்கப்பட்டு பிரச்சாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றமை பாராட்டக் கூடிய விடயமென்றாலும், இச்செயலணில் இணைந்து பணியாற்றுகின்றவர்களில்; சிலர் தொடர்பிலும் சந்தேகங்கள் அப்பிரதேசங்களில் தெரிவிக்கப்படுகின்றன. ஒரு சில பிரதேசங்களில் பள்ளிவாசல்களை மையப்படுத்தி செயலணிக்கான உறுப்பினர்கள் தெரிவு செய்யப்பட்டிருப்பதாகவும் இவ்வுறுப்பினர்கள் அவர்களின் பணச் செழுமையைக் கொண்டே தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் சேரும் பண வழி தொடர்பில் அப்பிரதேசங்களில் வினா தொடுக்கப்படுவதாகவும் அறிய முடிகிறது.. இந்நிலைமையானது கோழி கள்ளன் கூட உலாவும் செய்தியைச் சொல்வதை சொல்லாமலிருக்க முடியாது. பயிரை மேயும் வேலிகள் என்ற நிலைக்கு இச்செயலணிகள் தள்ளப்பட்டுவிடக் கூடாது.

இருப்பினும், பொதுத்தளத்தில் எழுத முடியாத அளவிற்கு பணம், பொருளஈ சொத்து; ஈட்டலில் இஸ்லாமிய சமூகத்தைச் சார்ந்தவர்கள் பலர் ஈடுபட்டு கைது செய்யப்படுவதும் விடுவிக்கப்படுவதும் என்ற விடயங்கள் முஸ்லிம் சமுதாயத்தைய கேவலப்படுத்தி வரும் இக்காலத்தில் இத்தகையவர்களை வழிநடத்தக் கூடிய வழிகாட்டிகளும் பணத்தேடலுக்காக இத்தகைய கேவலமான தொழில்களில் ஈடுபடுவது மன்னிக் முடியாத குற்றமாகவுள்ளது. பணத்தின் மீதான பித்து தற்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்திலுள்ள பலரை சோதனைக்கும், வேதைனக்குமுள்ளாக்கிக் கொண்டிருக்கிறது. புனித ஹஜ் மற்றும் உம்றாக் கடமைகளைக் கூட வர்த்தகமாக்கியுள்ளவர்கள் அவற்றில் மோசடி செய்வதையும் அவ்விடயங்கள் நீதி மன்றம் வரை செல்வதைக் கொண்டு இச்சமூகத்திலுள்ளவர்களில் எத்தனை பேர் பணப்பித்துப்பிடித்து அலைகின்றனர் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.

பணம், பொருள், சொத்து என பித்துப்பிடித்து அலைந்து சமூகத்தை சந்தி சிரிக்கச் செய்து கொண்டிருக்கும் இச்சமுதாயத்தின் தற்கால நிலையை அன்றே  நபி (ஸல்)அவர்கள் கூறிவைத்துவிட்டார். 'ஒவ்வொரு உம்மத்தினருக்கும் ஒரு சோதனை உண்டு எனது உம்மத்தினருக்கு செல்வமே சோதனையாகும.'; (ஆதாரம்: திர்மதி) என்ற நபி (ஸல்) அவர்களின் பொன்மொழியை உறுதிப்படுத்துகிறது. இச்சூழலில் எதிர்மறையான வழியில் பணம், பொருள், சொத்து, செல்வம் என்பற்றை தேடுபவர்களிடையே  நேர்வழியில் அவற்றைச் சம்பாதிப்பதற்கான மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு அறிகை ரீதியான விழிப்புணர்கள்  தொடர்ச்சியாக முன்னெடுக்கப்பது அவசியமாகும். இவ்வாறு அறிகை ரீதியான விழிப்புணர்கள் தொடர்ச்சியாக முன்னெடுக்கப்படுமாயின் பணப்பித்து நோயிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதுடன் சமுதாயத்திற்கு ஏற்படும் தலைக்குணிவையும் தவிர்க்க முடியும் இதற்கு ஒவ்வொரு பள்ளிவாசல்களினதும் ஜும்ஆப் பேருரைகள் முறையாகப் பயன்படுத்தப்பட வேண்டும்.

ஜும்ஆ பேரூரைகளும் மாற்றமும்
ஜும்ஆ பேருரை  உலமாக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஒரு அமானிதமாகும். இந்த அமானிதத்தை நிறைவேற்றப் பயன்படும் மிம்பர் மேடைகளின் கௌரவம் பாதுகாக்கப்பட வேண்டும். அத்துடன், நேர்வழிப்படுத்துவதற்காகத்தான் இந்த மிம்பர் பேரூரைகள் பயன்படுத்தப்பட வேண்டும். மாறாக தங்களது இயக்கக் கொள்கைகளைப் பரப்புவதற்காகவும், ஏனைய இயக்கங்களின் நடவடிக்கைகளைக் கொச்சைப்படுத்துவதற்காகவும், பிறரைத் தூசிப்பதற்காகவும், சர்ச்சைக்குரிய விடங்களை அரங்கேற்றி சமூகத்தில்; புதிய புதிய குழப்பங்களை தோற்றுவிப்பதற்காகவும் அமைந்துவிடாது தவிர்க்கப்பட வேண்டுமென்பதே  மக்களின் விருப்பமாகும். 

வல்ல இறைவனதும், நபி (ஸல்) அவர்களினதும் செய்திகளை எடுத்துச் சொல்லி மக்களை நேர்வழியின்பால் விழிப்புணர்வூட்டி வாழ வைக்க வாரத்தில் ஒரு நாள் அரை மணித்தியாலமோ அல்லது அதைவிடக் கூடிய நேரமோ பேருரைக்காக ஒதுக்கப்படுகிறது.  இந்த மிம்பர் ஊடக மேடை நேரம் சமுகமளிக்கும் மக்களை நித்திரையில் ஆழ்த்துவதற்கும,; சிந்தனைச் சிதறல்களில் மனங்களை உலாவிடுவதற்கும், குழப்ப நிலையை அடைவதற்கும் வழிவகுப்பதை எந்தவகையில் ஏற்றுக்கொள்ள முடியும்.

மிம்பர் ஊடக மேடை, இறை அச்சத்தை ஏற்படுத்தவும், ஒற்றுமைக்கு அழைப்பு விடுக்கவும், சமூகத்தில் புரையோடிப்போயிருக்கும் பாவச் செயல்களிலிருந்து தவிர்ந்து வாழ்வதற்கான சமூக மாற்றத்தை உருவாக்கவும் வித்திட வேண்டும்.  

நல்ல மனப்பாங்குகளை உருவாக்க வேண்டிய ஜும்ஆ பேரூரைகள் தமது கொள்கை சாராதவர்களை எதிரிகளாக நோக்;கத் தூண்டுமிடுவதாகவும் ஒரு சில உலமாக்களால் மாற்றப்பட்டுக்கொண்டிருக்கிறது என்பது கவலையோடு சுட்டிக்காட்டப்பட வேண்டியதாகும். இச்செயற்பாடுகள் ஜும்ஆவிற்கு சமுகமளிப்போரின் நேரத்தை வீணடிப்பது மாத்திரமின்றி, எவ்வித விழிப்புணர்வுகளையும், பயன்களையும் பெற்றுக்கொள்ளாது திரும்பிச் செல்லும் நிலையை உருவாக்குவதை ஜும்ஆ பேருரை நிகழ்த்தும் குறித்த உலமாக்கள் புரிந்து செயற்பட வேண்டும் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கதாகும்.

உள்ளங்களை ஒற்றுமைப்படுத்துவதற்கு நபி (ஸல்) அவர்களுக்கு உதவியது மிம்பர் மேடையின் ஜும்ஆப் பேரூரைதான்; எனக் கூறப்படுகிறது. எதிர்மறை மனப்பாங்கு கொண்டோரை, நேர்மய மனப்பாங்கு கொண்டோராக மாற்றியதும் இம்மேடைதான். இறைதூதர் அவர்கள் மிம்பர் மேடையைப் பயன்படுத்திய முறைதான் அவர்களுக்குத் துணைநின்றதாகவும் தெரிவிக்கப்படுகிறது.. மிம்பர் மேடை எனும் சிறப்புமிக்க ஊடகம், அதிலின்று நிகழ்;ந்தப்படும் சிறப்புரைகளின் மூலம் அலங்கரிக்கப்படுகிறது. இம்மேடை கொள்கைகளைப் பரப்புவதற்கு, பிற கொள்கைவாதிகளை போட்டுத்தள்ளுவதற்கு, புதிய புதிய குழப்பங்கனை தோற்றுவிப்பதற்கு வழங்கப்பட்டதல்ல. 

மாறாக, சமூகத்தின் மத்தியில் பல்வேறு பெயர்களில் கரைபுரலும் வட்டி, விபச்சாரம், வர்த்த மோசடி, போதைப் பொருள், மதுபானை, நம்பிக்கைத்துரோகம், பொய், களவு, பொறாமை, பெறுமை, வீண்விரையம், பாதைகளினதும்; அண்டை வீட்டாரினதும் உரிமை மீறல்கள், அமானிதம் பேணாமை என மலிந்து கிடக்கின்ற பாவச் செயல்களிலிருந்து தவிர்;ந்து நடக்க அவர்களின் மனப்பாங்குகளில் மாற்றத்தை ஏற்படுத்தி இறை அச்சத்தோடு நபி (ஸல்) அவர்கள் காட்டிய வழியில் வாழ்வியல் விடயங்களை எடுத்துச் செல்வதற்கான பேரூரைகளாக ஒவ்வொரு வாரத்தினதும் ஜும்ஆவுடைய பேரூரைகள் அமையும்போதூன் சமூகத்தின் மத்தியிலுள்ள தற்கால பணப்பித்து நோய் உட்பட சமுதாயத்தை அதலபாதாலத்தில் தள்ளக்கூடிய விடயங்களிலிருந்து தடுப்பதற்கு வழிபிறக்கும் என்பதே சமுதாய நலன் விரும்பிகளினதும், சமூக ஆர்வலர்களினதும் அவாவாகும். 

-ஏம்.எம்.ஏ. ஸமட்


No comments:

Post a Comment