தேசிய ரீதியில் 1400 மீனவ வங்கிக் கிளைகள் - sonakar.com

Post Top Ad

Thursday 7 March 2019

தேசிய ரீதியில் 1400 மீனவ வங்கிக் கிளைகள்நாட்டிலுள்ள சங்கங்களில், மிகவும் பலம் வாய்ந்த சங்கமாக தேசிய மீனவ சங்கத்தினை கட்டியெழுப்பும் வேலைத் திட்டத்தின் கீழ் மீனவர்களுக்கு தொழிலில் கௌரவத்தை வழங்குவதற்காக படகு கவனிப்பாளர்களை பதிவு செய்து அடையாள அட்டை வழங்க துரித நடவடிக்கை எடுத்து வருவதாக கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.

தற்போது நாடு முழுவதும் உள்ள மீனவ சங்கங்களுக்கு தலா ஒரு மீனவ வங்கி கிளை ஒன்று அமைக்கும் வேலைத்திட்டத்தை விரைவில் ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார். இலங்கை கடற்றொழில் வரலாற்றில் பெறுமதி மிக்க யுகத்தை அடைவதன் ஆரம்ப கட்டம் தொடங்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அபிவிருத்தி அமைச்சின் உயரதிகாரிகள் மற்றும் தேசிய நீர் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையின் பணிப்பாளர்களுக்கு தேசிய நீர் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபையில் (NAQDA) 2019.03.05 நடைபெற்ற ஒரு நாள் செயலமர்வின் ஆரம்ப வைபவத்தில் பங்குபற்றிய போதே இராஜாங்க அமைச்சர் இவ்வாறு தெரிவித்தார்.

 அவர் மேலும் உரையாற்றுகையில், "சக்தி மிக்க மீன்பிடி கைத்தொழில் துறையினை உருவாக்குவது முதன்மை தேவையாகும். மீனவர்களைப் பலப்படுத்துவதன் மூலமே மீன்பிடி துறையையும் பலப்படுத்த முடியும். இதற்காக கடற்றொழில் அமைச்சு மற்றும் தொடர்புபட்ட நிறுவனங்கள் ஒரு வேலைத்திட்டத்தின் கீழ் பணி புரிகின்றன. கடற்றொழில் அமைச்சின் கீழ் வரும் கடற்றொழில் கூட்டுத்தாபனம், கடற்றொழில் துறைமுக கூட்டுத்தாபனம், தேசிய நீர் வாழ் உயிரின அபிவிருத்தி அதிகார சபை (NAQDA), NARA, CEYNOR ஆகிய நிறுவனங்கள் மீனவ சமூகம் மற்றும் மீன்பிடிக் கைத்தொழிலின் வளர்ச்சிக்கு அர்ப்பணிப்புடன் செயற்படுகின்றன.

நல்லாட்சி அரசின் முதல் மூன்று வருடங்களும் மீன்பிடி கைத்தொழில் வரலாற்றில் இருண்ட யுகமாகும். மீனவர்களினதும், அதிகாரிகளினதும் கருத்துக்களை சிறிதும் பொருட்படுத்தாமல் நடந்து கொண்டதால் அந்த யுகம் இருண்ட யுகமானது. அந்த யுகத்தை ஒருவாறு முடிவுக்கு கொண்டு வந்தோம். தற்போது மீன்பிடி கைத்தொழிலிற்கு பிரகாசமான காலம் வரலாற்றிலே பிறந்துள்ளது.
மீனவர்களின் கருத்துக்களைப் பெறாமல் அமைத்த மீன்பிடி துறைமுகங்களில் மீனவர்களுக்குச் செல்ல முடியாதளவு மண் நிறைந்துள்ளது. சரியாக விளையாட்டு மைதானம் போன்று இருக்கிறது."


"மீன்பிடித் துறைமுகங்களிலி பிளாஸ்டிக் பாவனை காரணமாக பாரிய பிரச்சினை ஏற்பட்டுள்ளது. இது தேசிய பிரச்சினையாக மாறும் தினம் வெகு தொலைவில் இல்லை. இதனால் நான் முதலில் மீனவ சமூகத்திடம் விழிப்புணர்வை ஏற்படுத்தி அதற்கு எதிரான நடவடிக்கையை ஆரம்பித்தேன். இதன் மூலம் சகல மீன்பிடித் துறைமுகங்களில் இருந்தும் பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் பாவனையின் கழிவினை முகாமை செய்வதற்கான வேலைத் திட்டத்தை தொடங்கியுள்ளேன். தினசரி 4000 முதல் 5000 மீன்பிடி படகுகள் வரை கடலுக்குச் செல்கின்றன. அவர்கள் பாரியளவு பிளாஸ்டிக் மற்றும் பொலித்தீன் வகைகளைக் கடலுக்குக் கொண்டு செல்கிறார்கள். அவை அங்கு பாவிக்கப்பட்ட பின்னர் கடலிலே வீசப்பட்டு மீண்டும் கரையை வந்தடைகின்றன. இதனால் சூழல் மாசடைவதுடன், கடல் வளமும் பாதிப்படைகின்றது. இலங்கையிலுள்ள மீன்களுக்கு வெளிநாட்டில் நல்ல கிராக்கி நிலவுகிறது. ஆனால் கடற்றொழில் அமைச்சை நிர்வாகம் செய்த எவரும் அதனை செய்யவில்லை. நான் மீனவர்களின் ஒத்துழைப்புடன் அதனை செய்யவுள்ளேன்."

"நாட்டின் பலமான சங்கமாக உள்ள தேசிய மீனவ சங்கத்தின் கீழ் 1400 கிளைகள் நாடளாவிய ரீதியில் பரந்து காணப்படுகின்றன. அதில் இலட்சக்கணக்கான மீனவர்கள் அங்கம் வகிக்கின்றனர். அனைத்து மீனவர்களையும் அதில் அங்கம் வகிக்கச் செய்யும் வேலைத்திட்டம் உருவாக்கப்பட வேண்டும். தேசிய மீனவ சங்கம் மீனவ சமுதாயத்தின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் நிறுவனமாக எதிர்காலத்தில் திகழும் என நம்புகிறோம். அத்துடன் 1400 மீனவ சங்க கிளைகளுக்கும் மீனவ வங்கிக் கிளைகள் உருவாக்குவோம். அதில் மீனவ சமூகத்தின் பிள்ளைகளுக்கே தொழில் வழங்கவுள்ளோம். இதன் மூலம் மீனவர்களின் பிள்ளைகளுக்குத் தொழில்வாய்ப்புக்களும் ஏற்படுத்தப்படவுள்ளது" என்றும் இராஜாங்க அமைச்சர் திலிப் வெதஆரச்சி தெரிவித்தார்.

இந் நிகழ்வில் கடற்றொழில் மற்றும் நீரியல் வளத்துறை அமைச்சின் மேலதிக செயலாளர் எம்.பி.என்.எம்.விக்ரமசிங்க, NAQDA இன் தலைவர் நுவன் பிரசன்ன மதவன்ஆரச்சி, அதனது பணிப்பாளர் நாயகம் நிமல் சந்த்ரத்ன, கடற்றொழில் திணைக்களத்தின் உயரதிகாரிகள், தேசிய மீனவ சங்கத்தின் பணிப்பாளர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டிருந்தனர்.

-Rihmy Hakeem

No comments:

Post a Comment