கொட்டஹேன: முஸ்லிம் பாடசாலை அதிபர் விடுதி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு! - sonakar.com

Post Top Ad

Friday 8 February 2019

கொட்டஹேன: முஸ்லிம் பாடசாலை அதிபர் விடுதி சுவீகரிப்பு முயற்சி முறியடிப்பு!


கொட்டஹேன முஸ்லிம் மகா வித்தியாலயம் என பரவலாக அறியப்படும் கொழும்பு 13, கலாநிதி பதியுதீன் மஹ்மூத் கல்லூரியின் அதிபர் விடுதியை கொழும்பு மத்திய வலய கல்விப் பணிப்பாளரின் தேவைகளுக்காக சுவீகரிக்க மேற்கொள்ளப்பட்ட முயற்சி, ஆளுனர் அசாத் சாலியின் தலையீட்டால் முறியடிக்கப்பட்டுள்ளது.மாவட்ட கல்விப் பணிப்பாளர் எச்.ஏ சில்வா எழுத்து மூலம் கல்லூரி அதிபருக்கு இது குறித்து அறிவித்திருந்த நிலையில் பிரதேசத்தில் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும், அதேவேளை அபிவிருத்தியில் பின் தங்கியிருக்கும் நிலையில் இருக்கும் வசதிகளையும் பறிகொடுக்க இயலாது என முன்னாள் பிரதி அதிபரும், பிரதி சுங்கக் கட்டுப்பாட்டாளருமான யு.எல். மன்சூர் தலைமையில் களமிறங்கிய பழைய மாணவர் ஒன்றியம் மேல் மாகாண ஆளுனர் அசாத் சாலியை சந்தித்து இது தொடர்பில் எடுத்துரைத்திருந்தது.

இந்நிலையில், இது தொடர்பில் சம்பந்தப்பட்டவர்களுடன் உடனடியாக உரையாடிய ஆளுனர், உத்தேச சுவீகரிப்பு யோசனையை கை விடுமாறு மேற்கொண்ட வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட கல்விப் பணிப்பாளர் திட்டத்தை கைவிட்டுள்ளதாக அறிய முடிகிறது.


கொட்டாஞ்சேனை, கிறீன் லேனில் 50 வருடங்களுக்கு மேலாக இயங்கி வரும் குறித்த பாடசாலை பிரதேசத்தின் வருவாய் குறைந்த குடும்பங்களுக்கான கல்விச் சேவையை செவ்வெனே வழங்கி வருகின்ற போதிலும் பாடசாலையில் மாணவர்களுக்கான வசதிகள் பின் தங்கிய நிலையிலேயே காணப்படுகின்றது.

இக்கல்லூரியின் அபிவிருத்திக்கு உதவக் கூடியவர்கள் அங்கு நேரில் சென்று அதிபர் ஊடாக பயனுள்ள நடவடிக்கைகளை மேற்கொள்வதன் மூலம் பிரதேச முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்கு உதவலாம்.

அண்மையில் ஆளுனரின் பாரியார் முயற்சியால் கல்லூரியின் கழிவறை வசதிகளை மேம்படுத்தும் நடவடிக்கையும் பாடசாலை மாணவர்களுக்கான சீருடைகள் வழங்கும் நிகழ்வுகளும் இடம்பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.

-AM

No comments:

Post a Comment