கல்முனை மஹ்மூத் கல்லூரி மாணவி ஷைரீன் கௌரவிப்பு - sonakar.com

Post Top Ad

Thursday 31 January 2019

கல்முனை மஹ்மூத் கல்லூரி மாணவி ஷைரீன் கௌரவிப்பு


தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படுகின்ற விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியின் இறுதி சுற்றுக்குத் தெரிவாகியுள்ள கல்முனை மஹ்மூத் மகளிர் கல்லூரி மாணவி பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானாவை பாராட்டி கௌரவிக்கும் நிகழ்வு நேற்று வியாழக்கிழமை கல்லூரி மண்டபத்தில் நடைபெற்றது.

அதிபர் யூ.எல்.அமீன் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் அம்மாணவி கல்லூரி சமூகத்தினால் விருது வழங்கி கௌரவிக்கப்பட்டார். இந்நிகழ்வில் பிரதி அதிபர்காளான திருமதி எஸ்.எஸ்.எஸ்.எம்.மஸூத் லெப்பை, ஆர்.எம்.அஸ்மி காரியப்பர், ஏ.எச்.நதீரா, எம்.எஸ்.மநூனா, என்.டி.நதீகா, விஞ்ஞான பாட இணைப்பாளர் எம்.ஐ.ஜுவைரியா, செயற்றிட்ட பொறுப்பாசிரியர் எம்.ஏ.எம்.றியாஸ் உட்பட ஆசிரியர்கள் பலரும் மாணவிகளும் பங்கேற்றிருந்தனர்.

இதன்போது தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படுகின்ற விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியின் இறுதிச் சுற்றுக்குத் தெரிவாகியுள்ள மாணவி பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானா தனது அளப்பரிய ஆற்றல், திறமைகளினால் தொடர்ச்சியாக இவ்வாறான பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி, சாதனை படைத்து, தமது கல்லூரிக்கும் இந்த மாவட்டத்திற்கும் முஸ்லிம் மாணவிகள் சமூகத்திற்கும் பெருமையைத் தேடித்தந்துள்ளார் என்று அதிபர் மற்றும் பிரதி அதிபர்கள் தமதுரையில் வியந்து பாராட்டுத் தெரிவித்தனர்.


தேசிய விஞ்ஞான மன்றத்தினால் அகில இலங்கை ரீதியாக பாடசாலைகளுக்கிடையில் நடாத்தப்படுகின்ற விஞ்ஞான ஆராய்ச்சி போட்டியில் நாடு முழுவதும் இருந்து நூற்றுக்கு மேற்பட்ட செயற்றிட்டங்கள் சமர்பிக்கப்பட்டிருந்தன. இப்போட்டியின் முதற்சுற்றில் 108 செயற்றிட்டங்களும் இரண்டாவது சுற்றில் 78 செயற்றிட்டங்களும் மூன்றாவது சுற்றில் 54 செயற்றிட்டங்களும் தெரிவு செய்யப்பட்டு, நான்காவது இறுதி சுற்றில் தேசிய மட்டத்தில் 20 செயற்றிட்டங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளன.

இவற்றுள் ஒன்றாகவே 'கல்முனை மற்றும் சாய்ந்தமருது பிரதேசங்களில் நிலக்கீழ் வெப்பநிலையில் கட்டடங்களினால் ஏற்படும் நகர்புற வெப்பத்தீவின் தாக்கம்' எனும் தலைப்பில் பாத்திமா ஷைரீன் இனாம் மௌலானாவினால் ஆய்வுக்குட்படுத்தப்பட்ட செயற்றிட்டம் தெரிவு செய்யப்பட்டுள்ளது. இப்போட்டிக்கு நடுவர்களாக கொழும்பு பல்கலைக்கழக மற்றும் களனி பல்கலைக்கழக பேராசிரியர்கள் கடமையாற்றியிருந்தனர். 

செயற்றிட்ட பொறுப்பாசிரியர் எம்.ஏ.எம்.றியாஸ் அவர்களின் வழிகாட்டலிலும் தென்கிழக்கு பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் டொக்டர் ஏ.எம்.என்.எம்.அதிகாரம் அவர்களின் மேற்பார்வையிலும் இச்செயற்றிட்ட ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. கல்முனை மஹ்மூத் கல்லூரியின் பிரதி அதிபர் ஏ.எச்.நதீரா, விஞ்ஞான பாட இனைப்பாளர் எம்.ஐ.ஜீவைரீயா ஆகிய இருவரும் இம்மாணவியின் ஆய்வு செயற்பாட்டுக்கு உறுதுணையாக இருந்துள்ளனர். இவர்களுக்கு தமது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்வதாக கல்லூரி அதிபர் யூ.எல்.அமீன் குறிப்பிட்டார். 

இம்முறை ஜீ.சி.ஈ.சாதாரண தரப் பரீட்சை எழுதியுள்ள இம்மாணவி தரம்-5 புலமைப் பரிசில் பரீட்சையில் சித்தியடைந்திருப்பதுடன் பல்வேறு போட்டிகளில் பங்குபற்றி தேசிய மற்றும் மாகாண மட்டங்களில் முதலிடம் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது. இவர் கல்முனை கடற்கரைபள்ளி வீதியை சேர்ந்த இனாம் ஷக்காப் மௌலானா மற்றும் மௌலவி அப்துல் கனி மஜ்மலா தம்பதியரின் புதல்வி என்பதும் குறிப்பிடத்தக்கது.

-அஸ்லம் எஸ்.மௌலானா, எம்.ஐ.சம்சுதீன்

No comments:

Post a Comment