இன்னும் எத்தனை பிரச்சினைகளை விலைக்கு வாங்கும் இச்சமூகம்? - sonakar.com

Post Top Ad

Wednesday, 23 January 2019

இன்னும் எத்தனை பிரச்சினைகளை விலைக்கு வாங்கும் இச்சமூகம்?மாவனல்லை - புத்தளம் விவகாரம் எப்போது இனவாத சக்திகளினால் தூக்கிப்பிடிக்கப்படும் எனும் அச்சம் நீங்காத நிலையில் புராதன கிரலகல சேத்தியவில் ஏறிப் படம் பிடித்து, சமூக வலைத்தளங்களில் ஏற்றிய புதிய சிக்கல் ஒன்றும் உருவாகியுள்ளது.

இந்நாட்டில் முஸ்லிம்கள் தேசிய இனங்களுள் ஒன்றாக வாழ்வதுதான் இன்றைய, எதிர்கால இருப்புக்கும் அப்பாவி மக்களுக்கும் பாதுகாப்பானது. ஆங்கிலேயே ஆட்சியில் பொருளாதாரப் பலம் பொருந்திய சமூகமாக உருவெடுத்த போதும் எதிர்கால சந்ததியினரை கல்வி ரீதியாக முன்னேற்றுவதற்கு எம் முன்னோர்கள் எத்தனையோ தியாகங்களையும் புத்திசாலித்தனமான விடயங்களையும் செய்தார்கள்.

பள்ளிவாசல்களைக் கட்டிக் கொடுத்ததோடு நின்று விடாமல் அவற்றுக்கு நிரந்தர வருமானத்தைத் தரும் வகையில் கடைத் தொகுதிகளையும் சேர்த்துக் கட்டினார்கள். மத்திய கொழும்பில் உயர் பெறுமதி வாய்ந்த நிலங்களைக் கூட முஸ்லிம் சமூகத்தின் எதிர்கால கல்வி வளர்ச்சிக்காக வக்பு செய்தார்கள். முஸ்லிம் தனியார் சட்டம் , சிறப்புச் சலுகைகள் என நாம் வாழ்ந்தாலும் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதிகளில் உள்ளோர் ஏனைய மக்களின் அவர்கள் மத நம்பிக்கைகள் மற்றும் புராதன வழிபாட்டுத்தளங்கள், பூர்வீக முக்கியஸ்தலங்கள் குறித்த போதிய அறிவின்மையுடன் இருப்பதைக் கண்டும் காணாமல் விட முடியாது.

தென் கிழக்குப் பல்கலை மாணவர்கள் சிலர் சில மாதங்களுக்கு முன்னர் எடுத்ததாகக் கூறப்படும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்கள் ஊடாக பெறப்பட்டு அதனை சர்ச்சையாக்கும் முயற்சியில் சிங்கள ஊடகங்கள் முனைப்புடன் இருக்கின்றன.

வெளிநாட்டு சுற்றுலாப்பயணிகளும் அறியாமல் இவ்வாறான தவறுகளை செய்த வரலாறுண்டு. ஆனாலும், இலங்கையில் அதுவும் முஸ்லிம் மாணவர்கள் பௌத்தர்களின் முக்கிய தளங்களை அவமதிக்கும் வகையில் நடந்து கொண்டார்கள் என்ற பிரச்சாரம் இனவாத சக்திகளுக்கு கையில் பொல்லைக் கொடுப்பது போன்றாகிவிடும்.

சமவுரிமையுள்ள குடிகளாக வாழப் போராட வேண்டிய கால கட்டத்தில், ஆக்கிரமிப்பு சிந்தனைகள், அடிப்படைவாதம், தீவிரவாதம் என இன்றைய இளைஞர் சமுதாயம் திசை மாறிப் பயணிக்கிறதோ எனும் அச்சத்தின் மத்தியில் விளையாட்டுத்தனமான இவ்வாறான பிரச்சினைகள் பல. அதற்கு யார் பொறுப்பேற்பது? நாட்டைப்பற்றிய கல்வியறிவும் இன்னும் அதிகமாக அவசியப்படுகின்றது என்பதையே இவ்வாறான சம்பவங்கள் எடுத்துக் காட்டுகின்றன.


பொது பல சேனா போராட்ட காலத்தில் கிழக்கிலங்கையில் இருந்து சென்ற முஸ்லிம் மாணவியொருவரு சீகிரிய சிற்பங்களின் மேல் கீறி விளையாடிய சம்பவம் இடம்பெற்று, சர்ச்சையாக வெடிக்கு முன் அரசியல் தலையீட்டில் தணிக்கப்பட்டிருந்தது.

நம்மைச் சுற்றியுள்ள விடயங்கள் மீது நமக்கில்லையாயினும் அடுத்தவருக்கு இருக்கக்கூடிய பெறுமதியை அறிந்து கொள்வதும், அதன்படி பண்புடன் நடந்து கொள்வதும் கூட நமது கடமையாகும்.

-சோனகர்.கொம்

No comments:

Post a Comment