மீராவோடை வைத்தியசாலைக்கு இரவு நேர பாதுகாப்பு ஊழியர் நியமனம் - sonakar.com

Post Top Ad

Sunday 29 July 2018

மீராவோடை வைத்தியசாலைக்கு இரவு நேர பாதுகாப்பு ஊழியர் நியமனம்


மட்டக்களப்பு மாவட்டத்தின், கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவின் நிருவாக எல்லைக்குட்பட்ட மீராவோடை பிரதேச வைத்தியசாலைக்கு இரவு நேர பாதுகாப்பு ஊழியர் ஒருவர் நியமிக்கப்பட்டுள்ளார். மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளரை வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் பலமுறை சந்தித்து இவ்வைத்தியசாலையில் நிலவும் ஆளணி மற்றும் வளப்பற்றாக்குறை தொடர்பாக சுட்டிக்காட்டி வந்தனர். இதன் பயனாக இவ்வைத்தியசாலையின் வைத்திய பொறுப்பதிகாரி முஸ்தபாவின் தலைமையிலுள்ள அபிவிருத்திக் குழுவினரின் தொடர் முயற்சியின் பயனாக இந்நியமனம் கிடைக்கப்பெற்றுள்ளது. இரவு நேர பாதுகாப்பு ஊழியர் இல்லாமல் பல்வேறுபட்ட அசௌகரியங்களுக்கு இவ்வைத்தியசாலை நிருவாகம் முகம் கொடுத்து வந்த நிலையில் இக்குறைபாடு இப்பொழுது நிவர்த்தி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இவ்வைத்தியசாலையில் இரண்டு தாதியர்கள் கடமையாற்றி வந்தநிலையில் அபிவிருத்திக் குழுவினரின் தொடர் முயற்சியினால் மார்ச் மாதம் தாதி ஒருவரும் நியமிக்கப்பட்டு இன்றுவரை கடமையாற்றி வருகின்றார். மேலும், இவ்வைத்தியசாலையின் வளப்பற்றாக்குறையினை கருத்திற்கொண்டு மூன்று மாடிக் கட்டிடம் ஒன்றினை பெற்றுக்கொள்வதற்காக வைத்தியசாலை அபிவிருத்திக் குழுவினர் மேற்கொண்ட தொடர் முயற்சியின் பயனாக சகல ஏற்பாடுகளும் மேற்கொள்ளப்பட்டு பூர்த்தி செய்யப்பட்டுள்ள நிலையில் மிக விரைவில் இவ்வைத்தியசாலைக்குகென சகல வசதிகளையும் கொண்ட கட்டிடமும் அமையப்பெறவுள்ளது. இவ்வாறான செயற்பாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும் இத்தருனத்தில் இவற்றை குழப்பும் நடவடிக்கையில் குறிப்பிட்ட சிலர் இவற்றுக்கெதிராக களமிறங்கி தடுப்பதற்குரிய வழிவகைகளில் முன்னின்று செயற்பட்டு வருவதனை அவதானிக்க முடிகின்றது. ஏதேனும் ஓர் நிறுவனத்திற்கென்று நிருவாக கட்டமைப்பு இருக்கும் நிலையில் சம்மந்தப்பட்ட நிருவாகத்தினருடன், கலந்தாலோசித்து எவ்வாறான செயற்பாடுகள் இன்றுவரை முன்னெடுக்கப்பட்டுள்ளன என்பவற்றை கேட்டறிந்துகொண்டு ஆராயாமல் அவற்றை உதாசீனம் செய்து தனிப்பட்ட சுயநலத்திற்காக இன்று மீண்டும் அதே நடைமுறையில் தங்களது செயற்பாடுகளை ஒருசிலர் முன்னெடுத்துள்ளனர். இந்நாட்டினுடைய சுகாதார இராஜாங்க அமைச்சர் ஒருவர் இவ்வைத்தியசாலையின் குறைநிறைகளை ஆராய்வதற்கு நேரில் வருவதற்கு முயற்சித்தபோது அதனை தடுத்து நிறுத்திவர்களே இன்று தங்களது செயற்பாடுகளை மீண்டும் கையில் எடுத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கதாகும். -எம்.ரீ. ஹைதர் அலி

No comments:

Post a Comment