தாய்லாந்தின் குகை சிறுவர்களும் அல்-குர்ஆன் கூறும் குகை வாசிகளும் - sonakar.com

Post Top Ad

Wednesday 11 July 2018

தாய்லாந்தின் குகை சிறுவர்களும் அல்-குர்ஆன் கூறும் குகை வாசிகளும்



ஜூன் 23, தாய்லந்தின் மழை காலம் ஆரம்பிக்கிற நேரம் .

வைல்ட் போர் (Wild boar) என்கிற  உதைப்பந்தாட்ட அணியை சேர்ந்த 12 சிறுவர்கள் தமது அணியின் பயிற்றுனர் சகிதம் தாம் லுவாங் குகைக்குள் செல்லுகிறார்கள். உதைபந்தாட்ட பயிற்சி நோக்கமாக அங்கு அவர்கள் செல்லுகிறார்கள் . 5 கிலோமீட்டர் வரை நீளமான அந்த குகைக்குள் நடந்து சென்றவர்கள்,வெகு விரைவில் ஜூலை மாதம் உலகத்தின் மூலை முடுக்கெல்லாம் உள்ள பத்திரிகைகளினதும் தொலைக்காட்சிகளினதும் தலைப்பு செய்தியாக ஆகி விடுவார்கள் என்று எண்ணியிருந்திருக்க மாட்டார்கள்.

காரிருள் நிறைந்த அந்த குகைக்குள் சென்றவர் வெளியே பெய்த கடும் மழை குறித்து அறிந்திருக்கவில்லை .அதனால் வெள்ளம் பெருக்கெடுக்கிறது.  ஏற்றமும் இறக்கமும் மேடும் பள்ளமும் குறுகிய பாதைகளும் கொண்ட அந்த குகையின் பல பகுதிகள் முற்றுமுழுதாக தண்ணீரால் நிரப்பப்படுகிறது .தண்ணீர் தம்மை சுற்றிக்கொள்வதை உணர்ந்த அவர்கள் குகைக்குள் இருந்த மேடு ஒன்றிலே தஞ்சம் புகுகிறார்கள். 


இவ்வாறான சூழ்நிலையில் குகைக்குள் மனிதன் இருப்பதற்கு சாத்தியமே இல்லை என்றும் இருந்தாலும் உள்ளே செல்வது எந்த வகையிலும் சாத்தியம் இல்லை என்றும்

தாயலாந்து அதிகாரிகள் முடிவுக்கு வருகின்ற வேளை , பிரிட்டனை சேர்ந்த இரு சுழி ஓடிகள்  தமது உயிரை துச்சம் என மதித்து குகைக்குள் செல்கிறார்கள்; தேடுதல் நடத்துகிறார்கள் . அங்கேதான் ஆச்சரியம் காத்திருக்கிறது ஆமாம் அனைவரும் மேடு ஒன்றிலே 13 நாட்களாக தஞ்சம் புகுந்து இருப்பதை வெளி உலகத்துக்கு அறிவிக்கிறார்கள் .

கடும் ஆபத்து நிறைந்த அந்த குகைக்குள் இருந்து அனைத்து சிறுவர்களும் பாதுகாப்பாக மீட்கப்படுகிறார்கள் .

இது உலகத்தையே மூக்கின் மேல் விரல் வைத்து பார்க்க வைத்துள்ள சம்பவம் இது .

மொத்தமாக 17 நாட்கள் உணவு இன்றி பாறைகளில் வடிகிற தண்ணீரை அருந்தி அவர்கள் வாழ்ந்தார்கள் என்பது ஓரு ஆச்சரியமான அதிசயம் என்கிறார்கள் தாய்லந்தின் அதிகாரிகள் .

இதுவே உலகத்தை ஆச்சரியப்படுத்தியது என்றால் 309 வருடம் குகைக்குள் தஞ்சம் புகுந்திருந்த இளைஞர் குழு ஒன்றின் சம்பவம் எப்படி ஆச்சரியப்படுத்தும்?


(அஸ்ஹாபுல் கஹ்ஃபு என்ற குகையிலிருந்தோரைப் பற்றி) அந்த குகையிலிருந்தோரும், சாஸனத்தையுடையோரும் நம்முடைய ஆச்சரியமான அத்தாட்சிகளில் நின்றும் உள்ளவர்கள் என எண்ணுகிறீரோ?
(அல்குர்ஆன் : 18:9)

ஆமாம் , இந்த குகை சிறுவர்களின் கதையை கேட்கையில் அல்லாஹு தஆலா தனது அருள்மறையில் அல் காப் (குகைவாசிகள் ) என்கிற ஷூராவில் கூறிய இளைஞர்களின் சம்பவம் ஞாபகத்துக்கு வருகிறது.

அந்த இளைஞர்கள் குகையினுள் தஞ்சம் புகுந்த போது அவர்கள் “எங்கள் இறைவா! நீ உன்னிடமிருந்து எங்களுக்கு ரஹ்மத்தை அருள்வாயாக! இன்னும் நீ எங்களுக்கு எங்கள் காரியத்தை(ப் பலனுள்ள தாக)ச் சீர்திருத்தித் தருவாயாக!” என்று கூறினார்கள். (அல்குர்ஆன் : 18:10)

அநியாயக்கார அரசனின் கொடுமைக்கு பயந்து குகைக்குள் தஞ்சம் அடைந்த இளைஞர்களை 309 வருடங்களாக தூக்கம் சூழ வைத்த அல்லாஹ், சூரிய கதிர்கள் 

முதல் அனைத்து பாதிப்புகளில்  இருந்தும் 309 வருடம் அவர்களை பாதுகாத்தான். அவர்களோடு சென்ற நாய் கூட 309 வருடத்தில் செத்து சிதைந்து எலும்புகள் உக்கிய நிலையில் இருந்தது.தமது உருவங்கள் கூட மாற்றம் அடையாத நிலையில் துயில் எழுந்த அவர்கள்,தாம் தூங்கிய பொழுதுகள்  குறித்து அவர்களுக்கிடையே வாதிக்கிறார்கள். காலையில் தூங்கி மாலையில் எழுந்ததாக சிலர் கூற சிலர் காலையின் அல்லது மாலையின் ஒரு பொழுதிலே தூங்கியதாக கூறுகிறார்கள் .பசி எடுத்த போது தம்மிடம் இருந்த நாணயத்தை எடுத்து ஒருவரை அணுப்பி உணவு வாங்க முற்படுகிறார்கள் . 

அவர்கள் வைத்திருந்த நாணயம் பல நூறு வருடங்களுக்கு முற்பட்டது என்றும் அது இப்போது பயன்படுத்தப்படுவது இல்லை என்றும் கடைக்காரரால் கூறப்படுகிறார்கள்.

ஆகவே நாம் அவர்களை எண்ணப்பட்ட பல ஆண்டுகள் வரை அக்குகையில் (தூங்குமாறு) அவர்களுடைய காதுகளின் மீது (திரையிட்டுத்) தடையேற்படுத்தினோம். (அல்குர்ஆன் : 18:11)

சூரியன் உதயமாகும் போது (அவர்கள் மீது படாமல்) அது அவர்களுடைய குகையின் வலப்புறம் சாய்வதையும், அது அஸ்தமிக்கும் போது அது அவர்களுடைய இடப்புறம் செல்வதையும் நீர் பார்ப்பீர்; அவர்கள் அதில் ஒரு விசாலமான இடத்தில் இருக்கின்றனர் - இது அல்லாஹ்வின் அத்தாட்சிகளில் உள்ளதாகும், எவரை அல்லாஹ் நேர்வழியில் செலுத்துகிறானோ, அவரே நேர் வழிப்பட்டவராவார்; இன்னும், எவனை அவன் வழிகேட்டில் விடுகிறானோ, அவனுக்கு நேர் வழிகாட்டும் உதவியாளர் எவரையும் நீர் காணவே மாட்டீர். (அல்குர்ஆன் : 18:17)

மேலும், அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தபோதிலும், நீர் அவர்களை விழித்துக் கொண்டிருப்பவர்களாகவே எண்ணுவீர்; அவர்களை நாம் வலப்புறமும் இடப்புறமுமாக புரட்டுகிறோம்; தவிர, அவர்களுடைய நாய் தன் இரு முன்னங்கால்களையும் வாசற்படியில் விரித்(துப் படுத்)திருக்கிறது; அவர்களை நீர் உற்றுப்பார்த்தால், அவர்களை விட்டும் வெருண்டு ஓடிப் பின்வாங்குவீர்; அவர்களில் நின்றும் உண்டாகும் பயத்தைக் கொண்டு நிரம்பிவிடுவீர். (அல்குர்ஆன் : 18:18)

கதிகலங்கும் நேரத்திலும் தன்னந்தனியே தவிக்கும் நேரத்திலும் அளவற்ற அருளாளன் நிகரற்ற அன்பாளன் அல்லாஹூ தஆலா மிக நெருக்கமாக இருப்பான் என்பதை மேற்படி சம்பவங்கள் நினைவு கூறுகின்றன. 

குர் ஆனில் வருகின்ற குகை வாசிகளையும் தாய்லந்து குகை சிறுவர்களையும் காப்பாற்றிய அல்லாஹ்வின் மீது நம்பிக்கை இழந்து விடாதீர்கள்.

அவர்கள் (அதில்) தரிப்பட்டிருந்த (காலத்)தை அல்லாஹ்வே நன்கறிந்தவன்; வானங்களிலும் பூமியிலும் மறைவாய் இருப்பவை அவனுக்கே உரியனவாகும்; அவற்றை அவனே நன்றாக பார்ப்பவன்; தெளிவாய்க் கேட்பவன் - அவனையன்றி அவர்களுக்கு உதவி செய்வோர் எவருமில்லை, அவன் தன்னுடைய அதிகாரத்தில் வேறு எவரையும் கூட்டாக்கிக் கொள்வதுமில்லை” என்று (நபியே!) நீர் கூறும். (அல்குர்ஆன் : 18:26)

துன்பங்களில் தவிக்கும் பொழுதுகளில் உலகமே குறட்டை விட்டு துங்கும் பொழுதுகளில் நள்ளிரவில் விழித்திருந்து தனித்திருந்து கவலைகளை நோய்களை நொடிகளை துன்பங்களை போக்க  அல்லாஹ்விடத்தில் கேளுங்கள். 


குகைவாசிககளை காப்பாற்றிய அளவற்ற அருளாளன் உங்களை ஒருபோதும் மறந்து விடுவானா ? 

-ராஜி

No comments:

Post a Comment