முஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்! - sonakar.com

Post Top Ad

Sunday 29 April 2018

முஸ்லிம் மாணவன் கைது; ஜனாதிபதியின் 'கீறல்' விழுந்த ரெகோர்ட்!


திகன சம்பவம், ரணில் - மைத்ரி கூட்டாட்சியிலும் முஸ்லிம்களுக்கெதிரான இனவிரோதம் குறித்து பேசப்படும் இடங்களில் எல்லாம் தன்னை விடுவித்துக் கொள்ள முஸ்லிம் மாணவன் ஒருவன் முகப்புத்தகத்தில் சிங்களப் பெயரில் இனவாத பதிவுகளை மேற்கொண்டதாக போகும் இடங்களில் எல்லாம் தம் மீதான குற்றச்சாட்டுகளை திசை திருப்புகிறார் மைத்ரிபால சிறிசேன.


அண்மையில் லண்டன் வந்திருந்த போதும், இதையே சொல்லி 5-6 நிமிடம் பேச விளைந்தார் மைத்ரி. இத்தனைக் கெட்டிக்காரத்தனமாக குறித்த மாணவனைக் கைது செய்த பொலிசார் பல வருடங்களாக திகனயில் பகிரங்கமாக அலுவலகம் நடாத்தி இன வாதம் நடாத்தியவர்களை கைது செய்ய முடியாமல் போனது ஏன் என்று அங்கு நான் கேட்ட போது அதற்கு அவரிடம் பதிலிருக்கவில்லை.

புலனாய்வுத்துறை எல்லாம் முடிந்த பின் தான் புலனாய்வு அறிக்கை தருகிறது என்றும் தனது சங்கடத்தைச் சொல்லி அனுதாபம் தேட முனைந்த மைத்ரி, இப்போதெல்லாம் எங்கு சென்றாலும் இந்த மாணவன் கைதும் அவனது முகப்புத்தக பதிவுகள் பற்றியும் கீறல் விழுந்த ரெகோர்ட் போன்று பேசிக் கொண்டிருக்கிறார்.

15 வயது சிங்கள மாணவன் ஒருவனும் வெடிகுண்டுகள் செய்வது எப்படியென பதிவிட்டதாகவும் அவனையும் கைது செய்ததாகவும் சமப்படுத்தலுக்காகவும் பேசும் ஜனாதிபதி, தமது அரசு இனவாதத்தைக் கட்டுப்படுத்த முடியாத சூழ்நிலைக் கைதியாக இருப்பதை ஏற்றுக்கொள்ள மறுக்கிறார். நிறைவேற்று அதிகார ஜனாதிபதியாக இருந்து கொண்டு, மஹிந்தவின் ஆட்கள் தான் திகன சம்பவத்துக்குப் பொறுப்பெனவும் தொடர் கதையாக போகும் இடங்களில் எல்லாம் பேசிக்கொண்டிருக்கிறார்.

இன்னும் எத்தனை நாட்களுக்கு இவ்வாறே தமது இயலாமையை மறைக்கப் போகிறது கூட்டாட்சி என்கிற கேள்விக்கு ஓரிரு வருடங்களில் விடை தெரியப்போகிறது.

இன்று மைத்ரியின் பேச்சை நம்ப வேண்டுமாக இருந்தால் அன்று மஹிந்தவின் மேல் முஸ்லிம் சமூகம் கோபம் கொண்டதும் தவறாகிவிடும். மஹிந்த ராஜபக்சவும் நம்பி வாக்களிக்கப்பட்ட ஒரு நிறைவேற்று அதிகாரமிருந்த ஜனாதிபதி. ஆனாலும், அவர் ஞானசாரவை, பொது பல சேனாவை, இராவணா பலயவை, சிஹல ராவயவை, கட்டுப்படுத்தத் தவறியதோடு அளுத்கம அழிவையும் கைகட்டிப் பார்த்திருந்தார்.

பின்னர், வெளிநாட்டு சதியெனவும் கதை புனைந்து தப்ப முனைந்தார், மக்கள் பாடம் புகட்டினர்.


பேய்களும் பிசாசுகளும் ஒரே பரப்பில் சுற்றிக் கொண்டிருக்கின்றனவே தவிர வெளிவர மறுப்பதையே இது எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறது. முகப்புத்தகத்தில் இனவாத பதிவிட்டவனைக் கைது செய்ய சட்டமிருப்பதாகக் கூறும் அரசு வெளியில் அவ்வாறு பேசும் நபர் ஒருவரைக் கைது செய்ய சட்டமில்லையெனவும் சொல்கிறது.

லண்டன் சந்திப்பில் தூங்கியெழுந்த நிமல் சிறிபால டிசில்வா சத்தமாக இவ்வாறு தெரிவித்தார். இனவாதம் பேசுதலைக் குற்றமாக்க வேண்டிய சட்டத் திருத்தம் கொண்டுவரப்படும் என 2015ல் எமக்கு லண்டனில் வைத்து நம்பிக்கையளித்துச் சென்ற அதே மைத்ரி முன்னிலையிலேயே 2018ல் இதுவும் நடந்தது.

திறந்திருக்கும் வெளியில், தொங்கிக் கொண்டிருக்கும் வெளவால்கள் குறித்து இன்னும் அவதானம் தேவை!

YjpP3ew

இர்பான் இக்பால்
பிரதம ஆசிரியர், சோனகர்.கொம்

No comments:

Post a Comment