5 கோடி இழப்பு ஏற்பட்ட கிராமத்துக்கு இதுவரை ரூ 80,000 மாத்திரமே உதவி! - sonakar.com

Post Top Ad

Monday 16 April 2018

5 கோடி இழப்பு ஏற்பட்ட கிராமத்துக்கு இதுவரை ரூ 80,000 மாத்திரமே உதவி!கண்டி வன்செயலில் கடும் பாதிப்பிற்குள்ளான என்டருதென்ன கிராமத்தில் 50 ற்கும் மேற்பட்ட வீடுகள் தாக்கப்பட்டு ஐந்து கோடிக்கு மேல் நட்டமேற்பட்டபோதும் அரச உதவியாக வெறும் 80 ஆயிரம் ரூபா மட்டுமே கிடைத்துள்ளதாக கிராம மக்கள் கவலை  தெரிவிக்கின்றனர். ஆனால் தனிப்பட்ட ரிதியில் உதவிய நலன் விரும்பிகளது பங்களிப்பு போற்றத்தக்கதாக இருந்ததாகவும் குறிப்பிட்டனர்.


கடந்த மாதம் இடம் பெற்ற வன் செயல்களில் பாதிப்பிற்குள்ளான கிராமங்களில் என்டருதென் மற்றும் அதனை அண்மித்த உள்ளந்தப்பிட்டிய ஆகிய கிராமங்கள் முக்கிய மானதாகும். ஏனெனில் இவ் வன்செயல் காரணமாக தனிப்பட்ட முறையில் பல கிராமங்கள் நிர்கதிக்குள்ளான போதும் அகதி முகாம் அமைத்து பாதிக்கப் பட்டவர்களை தங்கவைக்கும் அளவு என்டறுதென்னை தவிற வேறு எங்கும் கண்டியில் அசம்பாவிதம் நடக்க வில்லை.

அதாவத கண்டி வன் செயலில் பொருளாதாரப் பாதிப்பு தவிற அகதியாக்கப்பட்ட ஒரே கிராமம் இதுவாகும். இது மிகப் பின் தங்கிய பொருளாதார வளக்குறைபாடுள்ள கிராமமாகும். ஓப்பீட்டளவில் பெரிய கிராமங்களின் சரிவை ஓரளவு தாங்கிக் கொள்ள முடியும். தத்தளிக்கும் குறைவசதி கொண்ட இது போன்ற சிறிய கிராமங்கள் வீழ்ந்தால் அது மீளமுடியாத நிலைக்கு தள்ளப்படலாம். 

எனவே கண்டி, ஹாரிஸ்பத்துவ தொகுதியில் அமைந்துள்ள நுகவலயை அண்மித்த எண்டருதென்ன கிராமத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட சமயம் நாடளாவிய ரீதியில் பலர் வந்து அடிப்படை தேவைகளை அன்று நிறைவு செய்துள்ளதாக கிராமக்கள் குறிப்பிட்டனர். தாம் அச்சத்சத்துடன் ஒரு சில பொழுதைக் களித்த போதும் உடன் தேவையான உணவு, மருந்துப் பொருட்கள், பாதிப்புக்குள்ளான தமது வீடுகளுக்கு கூறைத் தகடுகள், சமயலறை உபகரணங்கள், கதவு யன்னல் போன்ற மரத்தளபாடங்கள்,தண்ணீர் தாங்கிகள், கேஸ்குக்கர் என்பன உடன் கிடைக்க யாhர் யார் எல்லாம் உதவி செய்தார்களோ அவர்களுக்கு இறைவன் மேலும் அருள் புரிய வேண்டும் எனப் பலர் மனமாரப் பிராத்தித்ததுடன் தமது நன்றியையும் தெரிவித்தனர்.

ஆனால் இக்கிராமத்தைப் பொருத்தவரை உளரீதியான ஆலோசனைகளும் வாழ்வாதார உதவிகளும் தேவைப் படுவதாக அங்கு ஆய்வுகளை மேற்கொண்ட என்டருதென்ன அபிவிருத்த அமைப்பு தனது புள்ளி விபரங்களை முன் வைத்துள்ளது. 

அதாவது 314 ஆண்களையும், 384 பெண்களையும் கொண்டதாக மொத்தம் 698 பேர் வாழும் இக்கிராமத்தில் 168 குடும்பங்கள் உள்ளன. இதில் 79 பேர் அறுபது வயதிற்கும் மேற்பட்டோர். 189 பேர் பாடசாலை செல்வோர். குழந்தைகள் 70 பேர். எனவே 338 பேர் மற்றவரில் தங்கி வாழவேண்டியுள்ளனர். வேறு வகையில் கூறுவதாயின் இக் கிராமத்திலுள்ள உழைக்கும் சக்தி கொண்ட தொழிற் படையாக 360 பேர் உள்ள போதும் அவர்களில் பெண்களின் தொகையை கழிக்க வேண்டியுள்ளது. அதே நேரம் அத் தொகையை நம்பி மேலே சொன்ன சகலரும் தங்கி வாழவேண்டியுள்ளது. 


இந்நிலையில் எதிர்பாராத விதமாக தமது அன்றாடப் பிழைப்புக்ளுக்கு சேதம் வந்ததுள்ளபோது வாழ்வாதார உதவிகள் அல்லது தொழில்துறை வழிகாட்டல்கள் மூலமே பழைய நிலையை மீட்டெடுக்க முடியும் என பொது அபிப்பிராயம் காணப்படுகிறது. 

அதே நேரம் வன் செயலால் முற்றாகச் சேதமடைந்த இரண்டு வீடுகளுக்கு தலா 40 000 ரூபா வீதம் என்பதாயிரம் ரூபா அரச இழப் பீடு கிடைத்துள்ளது. கோடியை இழந்தவனுக்கு நாற்பதாயிரம் பெரிதுமல்ல. ஆனால் குடிசையை இழந்தவனுக்கு அது போன்ற தொகை பாரிய வரப்பிரசாதமாக அமையலாம். எனவே இக்கிராம மக்களுக்கு ஏதேனும் தொழிற்துறை வழிகாட்டல்களை மேற்கொள்ளக் கூடிய அமைப்புக்கள் இருக்குமாயின் முன்வருவது நல்லது என என்டருதென்ன அபிவிருத்தி அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது. (தொலை பேசி- 0718581123) 

-ஜே.எம்.ஹபீஸ்


No comments:

Post a Comment