முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: கல்வி செயலாளர் - sonakar.com

Post Top Ad

Thursday, 29 March 2018

முஸ்லிம்களின் கல்விப் பிரச்சினைகளுக்கு விரைவில் தீர்வு: கல்வி செயலாளர்


மௌலவி ஆசிரிய நியமனம் கல்விக் கல்லூரிகளில் முஸ்லிம் மாணவர்களின் அனுமதி தர்காநகர் கல்விக் கல்லூரியின் கவனிப்பாறற்ற நிலை தொடர்பாக அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் தூதுக்குழு ஒன்று கல்வி அமைச்சின் செயலாளர் காமினி ஹெடி ஆராச்சியைச் சந்தித்து விளக்கியுள்ளது. 

கல்வி அமைச்சில் திங்களனன்று இடம்பெற்ற இந்த கலந்துரையாடல் நீண்டகாலமாக மௌலவி ஆசிரியர் நியமனம் வழங்கப்படாதிருப்பது, சிங்கள மொழி மூலமான மௌலவி ஆசிரியர்களை நியமிப்பது, தர்கா நகர் கல்விக் கல்லூரிக்கு பெண் அதிபர் ஒருவரை நியமிப்பது, தர்காநகர் கல்விக் கல்லூரியின் முஸ்லிம் மாணவிகளின் அனுமதி படிப்படியாகக் குறைந்து வருவது முஸ்லிம் பாடசாலைகளில் விஞ்ஞான கல்வியைப் போதிப்பதற்கான வசதிகளை அதிகரிப்பது தொடர்பாக முஸ்லிம் கல்வி மகாநாடு செயலாளரின் கவனத்திற்கு கொண்டு வந்தது. 

தர்காநகர் கல்விக் கல்லூரியை கையளிக்கும் போது சேர்க்கும் மாணவிகள் 90 வீத முஸ்லிம் மாணவிகளாக இருக்கவேண்டுமென உலக வங்கி வழங்கிய நிபந்தனை படிப்படியாக முஸ்லிம் மாணவிகள் அனுமதிப்பது குறைந்திருப்பது குறித்து தூதுக்குழு சுட்டிக்காட்டியுள்ளது. 

முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் ஆசிரியர் பற்றாக்குறைக் கருத்தில் கொண்டு ஆசிரியர் சேவைக்கு கூடுதலானவர்களைச் சேர்த்துக் கொள்ள நடவடிக்கை எடுக்குமாறும் தூதுக்குழுவினர் கேட்டுக் கொண்டனர். தமிழ் முஸ்லிம் பாடசாலைகளில் நிலவும் வெற்றிடங்களை அறிவிப்பதில் வலயக் கல்விப் பணிப்பாளர்கள் அக்கறை காட்டாததனால் இப் பாடசாலைகளின் வெற்றிடங்களை நிரப்புவதற்கு தடையாக இருப்பதாகவும் சுட்டிக்காட்டப்பட்டன. 

கோரிக்கைகளுக்கு பதிலளித்த அமைச்சின் செயலாளர் பின்வரும் நடவடிக்கைகளை முன்னெடுப்பதாக உறுதி தெரிவித்துள்ளார். 

மௌலவி ஆசிரியர் வெற்றிடங்களை நிரப்புவதற்கு விரைவில் விண்ணப்பம் கோரப்படும். அதன்போது சிங்கள மொழி மூலமும் மௌலவி ஆசிரியர்களை நியமிப்பதற்காக விண்ணப்பம் கோரப்படும். 

தர்காநகர் கல்விக் கல்லூரிக்கு பெண் பீடாதிபதி ஒருவரை நியமிப்பதற்கு விரைவில் விண்ணப்பம் கோரப்படும். போதிய விரிவுரையாளர்களும் நியமிக்கப்படுவர். 

தமிழ், முஸ்லிம் பாடசாலைகளின் வெற்றிடங்கள் தொடர்பான விபரங்களை அமைச்சுக்கு பெற்றுக் கொள்வதற்கு புறம்பான சுற்றுநிரூபம் ஒன்றை அனுப்பி வைக்குமாறு செயலாளர் அதிகாரிகளுக்கு பணிப்புரை வழங்கினார். 

விஞ்ஞான ஆய்வுகூடம் மற்றும் வசதிகள் இல்லாத பாடசாலைகளுக்கு அவற்றை நிர்மாணிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறும் செயலாளர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். அமைச்சில் போதுமான நிதி இருப்பதனால் அது குறித்து நடவடிக்கை எடுக்க முடியும் என்றார்.

தர்காநகர் கல்வி கல்லூரியின் வசதிகளை அதிகரிப்பது, ஆணையாளர் நியமிப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் கல்லூரியின் தற்போதைய நிலை மிக மோசமாக இருப்பதாகவும் தான் எவ்வித அறிவித்தலுமின்றி இருமுறை விஜயம் செய்ததாகவும் செயலாளர் தெரிவித்தார்.  

தூதுக்குழுவினர் கல்விக் கல்லூரி ஆணையாளர் பண்டாரவைப் புறம்பாகச் சந்தித்து கல்விக் கல்லூரி தொடர்பான பிரச்சினைகள் பற்றி எடுத்து விளக்கினார். 

அகில இலங்கை முஸ்லிம் கல்வி மகாநாட்டின் தலைவர் பேராசிரியர் ஏ.ஜி.ஹ_ஸைன் இஸ்மாயிலின் ஏற்பாட்டில் இடம்பெற்ற இந்தக் கலந்துரையாடலில் மகாநாட்டின் தவிசாளர் பேராசிரியர் எம்.எஸ்.எம்.அனஸ், உப தலைவர் என்.எம்.அமீன், செயலாளர் சட்டத்தரணி ரசித் எம்.இம்தியாஸ், உதவிச் செயலாளர் எம்.எம்.எம்.றிழ்வான் ஆகியோர் கலந்துகொண்டனர். அமைச்சின் சார்பில் கல்விக் கல்லூரிகள் பிரிவின் பிரதிப் பணிப்பாளர் திருமதி சந்தமாலி, முஸ்லிம் கல்விப் பிரிவின் பணிப்பாளர் எம்.தாஜூதீன் ஆகியோரும் கலந்துகொண்டனர்.

-NM Ameen

No comments:

Post a Comment