அரசியல் 'போர்வையில்' மீண்டும் தலையெடுக்கும் இனவாதிகள்! - sonakar.com

Post Top Ad

Monday 26 March 2018

அரசியல் 'போர்வையில்' மீண்டும் தலையெடுக்கும் இனவாதிகள்!


மஹிந்த அரசு இலங்கையில் சிறுபான்மை மக்களால் எந்தக் காரணத்துக்காக வெறுக்கப்பட்டதோ, அதே காரணத்துக்கான அனைத்து தகுதிகளையும் கூட்டாட்சி அரசும் பெற்றுக்கொண்டுள்ளது.

தெரிந்து கொண்டே பெற்றுக்கொண்ட இத் தகுதியை யாரும் வலிந்து திணிக்கவில்லையென்பதில் மக்கள், குறிப்பாக இலங்கை முஸ்லிம் சமூகம் தெளிவடைந்துள்ளது. எனினும், ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவையே குரல் கொடுக்கக் கூடிய மக்கள் அதற்கிடையில் அரசியல் தலைமைகள் அடுத்து என்ன செய்யப் போகிறார்கள் எனத் தங்கியிருக்கிறது.

அம்பாறையில் மாவுத்துண்டை கருத்தடை மாத்திரையாகப் பிரச்சாரம் செய்து பாரிய அழிவை உருவாக்க முடியாமல் போயினும், திகனயில் ஆரம்பித்து மத்திய மாகாணத்தில் திருப்திகரமாக நிறைவேற்றிக் கொண்ட இனவாதிகள் தற்போது புது முகம் தேடிப் புறப்பட்டிருக்கிறார்கள்.



பாத்திரங்களும், பேச்சுக்களும், இலக்கும் பழையதாகவே இருக்கின்ற போதிலும் புதிய போர்வை அவர்களுக்கு அவசியப்படுவது மேலதிக பாதுகாப்புக்காக என்றால் மிகையில்லை.

திகன சம்பவத்தில் நீதிக்கு முன் நிறுத்தப்பட்டிருக்க வேண்டிய அரசியல் சக்திகள் சில மணி நேரத்திலேயே தப்பிக் கொண்டதனால் அரசியல் ஒரு கேடயம் என்பதில் இனவாதிகள் இன்னும் தெளிவு பெற்றிருக்கிறார்கள். பலவீனமான அரசாங்கத்தில் நாடாளுமன்றில் வைத்தே ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட நா.உ முஜிபுர் ரஹ்மான் பலமான எதிர்க்கட்சியினரால் சுற்றி வளைக்கப்பட்டார்.

2017 இனவாத பிரளயத்தை உருவாக்கிய பயங்கரவாதி ஞானசாரவைத் தேடி அப்போது நான்கு விசேட பொலிஸ் படையணி களமிறங்கியும் கூட அவரைப் பிடிக்க முடியாத அளவுக்கு பாதுகாப்பளித்ததும், பின் ராஜமரியாதையுடன் நீதிமன்றுக்கு அழைத்து வந்து, பிணையைப் பெற்றுக்கொடுத்து வழியனுப்பி வைத்ததும், இன்று அவரை சுத்தமான துறவியாக மாற்ற முயன்று கொண்டிருப்பதும் எல்லாம் அரசியல்.

இந்த அரசியலில் பதவிகளைப் பெற்றுக்கொண்ட அளவுக்கு மக்கள் நலனைக் கருத்திற் கொள்ள முடியாத சோரம் போன நிலைக்கு முஸ்லிம் சமூகம் 'இணக்கப்பாட்டு' அரசியல் என பெயர் சூட்டி மகிழ்ந்து வருகிறது.

பதவிகளுக்கான இணக்கப்பாட்டுக்கு பாதகம் வரும் போது மாத்திரம் ஆட்சிக் கவிழ்ப்பு, எதிர்க்கட்சி அரசியல் பற்றிப் பேசத் தெரிந்த முஸ்லிம் அரசியல்வாதிகள் மக்கள் பிரச்சினைகளின் போது அவ்வாரு ஒரு அறிவிப்பை செய்வதில்லை, காரணமும் தனியாக விளக்கப்பட வேண்டியதில்லை.

ஆனாலும், தேர்தல் வரும் போது இதையெல்லாம் மறந்து விடும் மக்கள் தம் ஏனைய காரணிகளுக்காக மீண்டும் அதே அரசியலிடம் சரணாகதி அடைவதனால் ஐந்து வருடங்களுக்கு ஒரு தடவை குட்டுப்பட்டுக் குனிந்து கொண்டிருக்கத் தள்ளப்பட்டிருக்கிறது. எது எவ்வாறாயினும், இனி வரும் காலங்களிலும் வன்முறையே இன வாதிகளுக்கான முதலீடாக இருக்கப் போகிறது.

எதைச் சொன்னாலும் நம்பி விடும் அளவுக்கு அனைத்து சமூகங்கள் மத்தியிலும் சந்தேகம் இழையோடிக் கொண்டிருப்பதால் ஒரு முஸ்லிம் இப்படியெல்லாம் செய்கிறார் என யார் சொன்னாலும் சிங்கள மக்கள் நம்பி விடுகிறார்கள். மறுதலிக்கும் அளவுக்கு கௌரவமிக்க சமூகமாக நாங்களும் நடந்து கொள்கிறோமில்லையோ என்கிற கேள்வி ஒரு பக்கமும் மேலோங்கி நிற்கும் பௌத்த பேரினவாத சிந்தனைக்கு முன் எதுவும் செல்லாது என்கிற நியாயம் இன்னொரு பக்கமும் சமப்படுத்திக்கொள்கிறது.

ஆக, அரசே அரசியல் சாசனத்தைப் பாதுகாக்கவும், நாட்டு மக்களின் உரிமைகளையும் மேலோங்கியிருக்கும் இனவாதத்தைக் கட்டுப்படுத்தவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

எப்போது நடக்கும் எனும் கேள்விக்கு இன்னும் ஒரு தலைமுறை  விடை காணுமா என்பது கேள்வியாகவே இருக்க, இனி வரும் காலம் தொடர்பிலாவது முஸ்லிம் சமூகம் அவதானத்துடன் வாழ நிர்ப்பந்திக்கப்பட்டுள்ளது. வர்த்தக நிலையங்கள், பள்ளிவாசல்களே பிரதான இலக்கு எனும் போது, அது தொடர்பில் விழிப்புடன் இருக்கும் தேவையிருக்கிறது.

பொருளாதார ரீதியிலான இழப்புகளை ஈடு செய்ய முடியாமல் இந்த சமூகம் பின் தங்கியிருப்பதே இனவாதிகளின் இலக்கெனின் அதற்கேற்ப காப்புறுதி மற்றும் வர்த்தக செயற்பாடுகளின் பாதுகாப்பு குறித்த அவதானமும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளும் தேவைப்படுகிறது.

சமூகம் ஒட்டு மொத்தமாக சிந்திக்க வேண்டிய காலம், மார்க்க அறிஞர்கள் உட்பட!

-சோனகர்.கொம்

No comments:

Post a Comment