ஹிரு தொலைக்காட்சியும் ரிசாத் பதியுதீனும் - sonakar.com

Post Top Ad

Tuesday 29 December 2015

ஹிரு தொலைக்காட்சியும் ரிசாத் பதியுதீனும்


போதும் போதும் என்கிற அளவுக்கு வடபுல முஸ்லிம் சமூகத்தின் மீள்குடியேற்ற உரிமையையும் அவர்கள் பூர்வீகத்தையும் நிரூபித்தாயிற்று. எனவே, இனியும் நேற்றிரவு போன்ற விவாதங்களில் அமைச்சர் ரிசாத் பதியுதீன் கலந்து கொள்வதை தவிர்த்துக் கொள்ள வேண்டும்.

ஊடக வரையறையை மீறி இனவாதத்துக்கும் அரச எதிர்ப்பு நிலைப்பாட்டுக்கும் துணை போகும் குறித்த ஊடகத்தைப் பொறுத்தவரை அதிக மக்கள் பார்வையிடக்கூடிய நிகழ்ச்சிகளை நடாத்துவது விளம்பரதாரர்களைத் திருப்திப் படுத்தும் செயலாகும்.

தன் மீது சுமத்தப்பட்டிருக்கும் குற்றச் சாட்டைப் பொய்யென நிரூபிக்கும் கடமைப்பாடுள்ள ஒரு சமூகப் பிரஜையாக கடந்த தடவை பலய நிகழ்ச்சியில் பங்கேற்ற போதே ரிசாத் பதியுதீன் சொன்னவை, நிரூபித்தவை போக புதிதாக வில்பத்து மற்றும் அண்டிய பகுதிகளிலான மீள்குடியேற்றங்கள் தொடர்பில் நிரூபிப்பதற்கு எதுவும் இருந்ததாகவோ அல்லது பகிரப்பட்டதாகவோ அல்லாத நிலையில் ரிசாத் மீதான மேலும் ஒரு குற்றச்சாட்டான, போதைப் பொருள் வர்த்தகம் தொடர்பிலேயே தேரரை நிரூபிக்க நிர்ப்பந்தித்திருக்க வேண்டும்.

ஆனாலும் அவ்வாறு எதுவும் நடைபெறவில்லையென்பதும், மீண்டும் ரிசாத் பதியுதீனை அழைத்து வந்து குற்றச்சாட்டுகளை பதிவு செய்வதொன்றே நோக்கம் என்பதும் வெளியிலிருந்து பார்த்தவர்கள் புரிந்துகொள்ளக் கூடிய ஒன்றாக இருந்தது. ஆயினும், தன் உணர்வுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கும் துணிச்சலான நபர் என்ற வகையில் தனக்கெதிராக முன்வைக்கப்படும் அனைத்துக் குற்றச் சாட்டுகளுக்கும் முகங் கொடுக்க வேண்டும் , பதில் தர வேண்டும் எனும் ரிசாதின் முயற்சியை தடுப்பதை விட இனி வரும் காலங்களில் தவிர்ப்பது சிறந்தது என்பதே இங்கு கூற விரும்பும் கருத்தாகும்.

இலங்கை ஜனநாயக சோசலிஷ குடியரசுக்கு அரசாங்கம், நீதித்துறை, காவல்துறை, பிரதேச, மாவட்ட நிர்வாக அலகுகள் என்று பெரியளவிலான கட்டமைப்பு இருக்க, இது அனைத்தையும் மீறிச் சென்று ஒரு தொலைக்காட்சியில் இரண்டாம் தடவையும் நியாயம் பேசச் சென்றது மெச்சத்தக்க ராஜதந்திரம் இல்லையாயினும், பேசிப் பேசிப் புளித்துப் போன விவகாரம் போக புதிதாக முன் வைக்கப்பட்ட குற்றச் சாட்டு தொடர்பாக அங்கு நியாயங்கள் பிறந்திருந்தால் அமைச்சரின் நேரத்திற்கும் பலன் கிடைத்திருக்கும்.

அவ்வாறில்லாத நிலையில் நீதி விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டிய விவகாரங்களை வெளியில் வைத்து உரையாடுவதன் மூலம் அவற்றிற்கான நியாயங்கள் நிறுவப்படப் போவதில்லையெனும் அடிப்படையில் தேரரையோ நிகழ்ச்சி நடாத்துபவரையோ திருப்திப்படுத்த அமைச்சர் முயல்வதில் அவருக்கும் மக்களுக்கும் எதுவித பிரயோசனமும் இல்லை.


ரவுப் ஹக்கீம் போன்று மறைந்திருக்கும் தலைமைக்குப் பகரமாக துணிச்சலான தலைவர் தேவை எனும் மக்களது அபிலாசை உணர்வு மேலோங்கிய விருப்பமாக இருப்பினும் காலப் போக்கில் எமது  சமூகத்தினராலேயே கேள்விக்குட்படுத்தப்படும், விமர்சிக்கப்படும் என்பது மாத்திரமன்றி, ரிசாத் பதியுதீனுக்கு எதிரான குற்றச்சாட்டுகளில் பலவற்றுக்குத் துணை போவதும், சாட்சியளிப்பதும், தூண்டுவதிலும் கூட எம்மவரின் பங்கிருந்திருக்கிறது, இன்னும் இருக்கிறது எனும் அடிப்படையில் இனி வரும் காலத்தில் இவ்வாறான விவாதங்கள் தவிர்க்கப்பட வேண்டும்.

நேற்றைய விவாதம் அத்தோடு முடிந்த கதையில்லையென்பதை நிரூபிக்க நிகழ்ச்சி முடிவில் அதனை நடாத்தியவர் இது இன்னும் இன்னும் தேசிய மட்டப் பிரச்சினையாக உருவெடுக்கும் என பல தடவைகள் சொல்லிக் கொண்டேயிருந்ததும் இன்று விடிந்ததும், ரிசாத் குர் ஆன் மீது சத்தியம் செய்யத் தவறிவிட்டார் எனும் 'புதிய' தலைப்பை செய்தியாக்கியதன் மூலமும் ரிசாத் பதியுதீன் எனும் தனி நபரது வளர்ச்சியைத் தடுக்கும் இத் தொலைக்காட்சியின் திட்டமிட்ட நிகழ்ச்சி நிரலுக்கு அமைச்சரும் பலியாகிவிட்டார் என்பதும் நிதானமாக சிந்தித்தால் புரிந்து கொள்ளக் கூடிய விடயமாக இருக்கும்.

அல்-குர்ஆனில் சத்தியம் செய்வது மார்க்கத்தில் புறம்பானது எனும் விளக்கம் போக, அது உணர்வு ரீதியாகவும் மத நம்பிக்கையின் உச்ச கட்டமாகவும் தொடர்ந்தும் சமூகத்தில் நோக்கப்படுகின்ற நிலையில் அமைச்சர் இந்த விவாதத்தில் நிரூபிக்கச் சென்ற நியாயங்களை மேவி புதிய பிரச்சினைக்கு அடித்தளமிட்டிருக்கிறது. அவர் மீதான நம்பிக்கையை இனி வரும் காலங்களில், தேர்தல் மேடைகளில் கூட உணர்வு ரீதியாக கேள்விக்குட்படுத்த வழி வகுத்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.

இதனை நிரூபிக்கவும் சீர் செய்யவும் அமைச்சர் மீளவும் ஒரு ஊடகவியலாளர் சந்திப்பை நடாத்த வேண்டும் என்றோ அல்லது இன்னுமொரு தொலைக் காட்சி விவாதத்தில் பங்கு கொள்ள வேண்டும் என்றோ நினைத்தால் அது திரும்பத் திரும்ப எந்தச் சுற்று வளைவில் பயணிக்கும் என்பதையறிய மறுப்பின் ராஜதந்திரத்தில் தோற்றுப் போன வெறும் உணர்ச்சிக்கு அடிமைப்பட்ட அரசியல்வாதியென்பதால் இன்னும் 50 வருடங்கள் சென்றாலும் சொந்த மக்களின் மீள் குடியேற்றத்தை நிறைவேற்றும் தகுதியை இழந்தவர் எனும் குற்றச்சாட்டும் முன் வைக்கப்படும்.

எனவே, வேகமான வெளிப்படையான மாத்திரமன்று விவேகமான தலைவரும் அவசியம் என்பதை நினைவில் நிறுத்தி இனி வரும் காலங்களில் அமைச்சர் தனக்கெதிரான விடயங்களைக் கையாள்வது சமூகத்துக்கும், குறிப்பாக வடபுலத்திலே கால் நூற்றாண்டுக்கு அதிகமாக சொந்த மண்ணையிழந்து தவித்திருக்கும் மக்களுக்கும் நன்மை பயக்கும்!

-ET

No comments:

Post a Comment