முஸ்லிம்களை நசுக்குவதே ராஜபக்சக்களின் சந்தோசம்: மு.ரஹ்மான் (video) - sonakar.com

Post Top Ad

Sunday 5 July 2020

முஸ்லிம்களை நசுக்குவதே ராஜபக்சக்களின் சந்தோசம்: மு.ரஹ்மான் (video)


முஸ்லிம்களை நசுக்கி பேரினவாதிகளை சந்தோசப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடன் ராஜபக்ஸ அரசாங்கம் செயற்படுகின்றது. விரும்பியோ விரும்பாலோ நாம் அதற்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். பாராளுமன்றத்திற்கு இதனை எதிர்க்கொள்ளக்கூடிய திறனுடைய தலைமைகளை அனுப்ப வேண்டும் என கொழும்பு மாவட்ட ஐக்கிய மக்கள் சக்தி வேட்பாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமான முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார். 

நேற்றைய தினம் புதுக்கடையில் இடம்பெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். மேல்மாகாண சபை உறுப்பினர் ஏ.ஜே.எம்.பாயிஸ், கொழும்பு மாநகர சபை உறுப்பினர்களான சமீர் சஹாப்தீன், முஹம்மத் திலாஷான், ரம்ஷி ஹாஜி, மொஹமத் காதர் உள்ளிட்டோரும் கலந்துகொண்டனர். 

இங்கு அவர் மேலும் உரையாற்றுகையில், முஸ்லிம்களை நசுக்கி பேரினவாதிகளை சந்தோசப்படுத்த வேண்டும் என்ற கொள்கையுடன் ராஜபக்ஸ அரசாங்கம் செயற்படுகின்றது. விரும்பியோ விரும்பாலோ நாம் அதற்கு முகம்கொடுக்க வேண்டிய சூழ்நிலையில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கிறோம். பாராளுமன்றத்திற்கு இதனை எதிர்க்கொள்ளக்கூடிய திறனுடைய தலைமைகளை அனுப்ப வேண்டும். எனவே, இதனை நாம் எமது சமூகத்தினதும், வருங்கால பிள்ளைகளுடைய எதிர்க்காலத்தை தீர்மானிக்கும் தேர்தலாக கருதவேண்டியிருக்கிறது. 

இந்த அரசாங்கத்தின் அமைச்சர்கள் பல கடந்த ஏப்ரல் 21 ஆம் திகதி பயங்கரவாத தாக்குதளின் பின்னர் முஸ்லிம்களுக்கு எதிராக பிரசாரம் செய்ததுடன், முஸ்லிம் அரசியல் தலைவர்களை இலக்குவைத்து பல்வேறு வகையிலும் இனவாத செயற்பாடுகளை முன்னெடுத்தனர். ரிஷாட் பதியுதீன், ரவூப் ஹக்கீம், அசாத்சாலி உள்ளிட்டவர்களையும் என்னையும் பயங்கரவாத தாக்குதலுடன் தொடர்புபடுத்தி விமல் வீரவங்ச, உதய கம்பன்பில, மஹிந்தானந்த அளுத்கமகே, விஜயதாஸ ராஜபக்ஷ போன்றவர்கள் பிரச்சாரங்களை முன்னெடுத்தனர். நான் பல அரசியல் விவாதங்களுக்கு சென்று அதற்கு பதிலளித்தேன். இதன்போது, சஹ்ரானுக்கு தான் உதவி செய்ததாகவும், முஸ்லிம் அடிப்படை வாதத்தை ஊக்குவிப்பதாகவும் என்மீது குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். என்னை தீவிரவாதி என்றும் கூறினார்.

என்னுடைய மகன் சிங்கள மொழியில்தான் படித்துக்கொண்டிருக்கிறார். 16 வயதுடைய அவர் பாடசாலைக்கு செல்ல முடியாது இரண்டு வாரங்கள் பின்வாங்கினார். ஏனெனில், அவருடைய சக மாணவர்களும், சில ஆசிரியர்களும் என்னை பற்றி இனவாத கருத்து தெரிவித்து அவரை மன உலைச்சலுக்கு ஆளாக்கியிருக்கின்றனர். இவ்வாறு பல வகையிலும் நாம் பாதிக்கப்பட்டும் சமூகத்தின் முன்னாள் இதை தெரிவிக்கவில்லை. இன்றும் இந்த அரசாங்கம் என்னை எப்படி கைது செய்வது என்பது பற்றி சிந்தித்துக்கொண்டிருக்கின்றனர். 

பாராளுமன்றத்தில் இடம்பெற்ற விவாதத்தின்போது வசீம் தாஜுதீனின் மரணம் குறித்து பேசப்பட்டது. இதுகுறித்து நான் குரலெழுப்பும்போது, ஜோன்சன் பெர்னாண்டோ, சனத் நிஷாந்த, பிரசன்ன ரனவீர போன்ற உறுப்பினர்கள் என் மீது தாக்குதல் நடத்த முற்பட்டனர்.  தாஜுதீன் விவகாரம் பற்றி கதைக்க வேண்டாம் எனவும் அச்சுறுத்தினர். இதன்போது பாராளுமன்றம் பெரும் அல்லோலகல்லோலமானது. 10 நிமிடம் சபாநாயகரினால் ஒத்திவைக்கவும்பட்டது. ஒத்திவைக்கப்பட்ட அந்த நேரத்தில் நாமல் ராஜபக்ஷ எனக்கு அருகில் வந்து எனது தோழில் கையைபோட்டு “ஐயோ, நாம் கொண்டாலும் சாட்சிகளை வைத்துவிட்டு கொல்ல மாட்டோம்” என கூறினார். “ஏன் நீங்கள் தொப்பியை போட்டுக்கொள்கிறீர்கள்” என நான் கேட்டேன். இப்படியெல்லாம் பல்வேறு அச்சுறுத்தல்களுக்கு முகம்கொடுத்துக்கொண்டிருக்கிறோம். 

அச்சுறுத்தல்கள் எந்தபக்கத்திலிருந்தாலும் முஸ்லிம் சமூகத்திற்கு பிரச்சினைகள் வந்தபோதெல்லாம் துணிவுடன் குரல் கொடுத்த வரலாறு எமக்கு இருக்கிறது. நாம் ஒருபோதும் சமூகத்தை விட்டுக்கொடுத்ததில்லை. 

முன்னாள் ஜனாதிபதி ஆர். பிரேமதாஸ மத்திய கொழும்புக்கு ஆற்றிய சேவைகள் அவரின் மரணத்திற்கு பின்னர் ஸ்தம்பித்துவிட்டது. எனவே எமது பிரதமர் வேட்பாளர் சஜித் பிரேமதாஸ ஊடாக நிறுத்தப்பட்ட இடத்திலிருந்து கொழும்பு அபிவிருத்தியை மீள கொண்டு செல்லவே எமது பயணத்தை ஆரம்பித்திருக்கிறோம். எமது பிள்ளைகளுக்கு அமைதியான நாட்டை ஒப்படைப்பதற்காக நீங்கள் சிந்தித்து வாக்களிக்க வேண்டும் என்றும் தெரிவித்தார். 

-MR

No comments:

Post a Comment