நிறம் மாறும் கறைகள்..! - sonakar.com

Post Top Ad

Sunday 28 June 2020

நிறம் மாறும் கறைகள்..!


உலக அரங்கில் இலங்கைத் தீவு அறியப்படுவதற்கு பல நியாயமான காரணங்கள் இருக்கின்றன. இயற்கை வளம் நிரம்பிய இத்தீவின் அத்தனை மதிப்பையும் தூக்கி மிதித்து, கடந்த மூன்றரை தசாப்தங்களாக இலங்கையை சர்வதேசம் திரும்பிப் பார்ப்பதென்னவோ வெவ்வேறு காரணங்களுக்காகவே.

அதிலும் அதிகமாக முப்பது வருட காலம் நீடித்த இலங்கையின் உள்நாட்டு யுத்தம், மனிதப் பேரழிவுகள், சித்திரவதை, இனவாதம், அடக்குமறை என தொடர்ச்சியாக எதிர்மறையான விடயங்களே பேசப்பட்டு வருகின்றன. தமிழ் சமூகத்தின் சர்வதேச அளவிலான பிரச்சார உத்திகள் இதில் பங்களிக்கின்றன என்ற உண்மையொரு பக்கம் இருக்க, உள்நாட்டு யுத்தம் காரணமாக புலம்பெயர்ந்து வெளிநாடுகளில் வாழும் இலங்கையர்கள் இன்னொரு காரணமாக இருக்கிறார்கள்.

ஐரோப்பிய நாடுகளில் அரசியல் தஞ்சம் கோரிய பெருமளவானோர் ஒன்றில் தமக்கு இலங்கை இராணுவத்pனால் உயிர் ஆபத்து அல்லது விடுதலைப் புலிகளின் அடக்குமுறையிலிருந்து உயிர் தப்பி வந்ததாகவே காரணம் கூறியுள்ளனர். அது போக, பெருமளவு சித்திரவதைகள் பற்றிய ஆவணப்படுத்தல்கள் இதற்கு மேலும் பலம் சேர்த்துள்ளன. கடந்த மூன்று தசாப்தங்களில் இலங்கையில் 219 சித்திரவதை முகாம்கள் இயங்கியுள்ளதாக ஜுன் 26ம் திகதி உலக அளவில் நினைவு கூறப்படும் சித்திரவதைக்குள்ளானோருக்கு ஆதரவளிக்கும் தினத்தை முன்னிட்டு Journalists for Democracy in Sri Lanka (JDS)  மற்றும் International Truth and Justice Project (ITJP) ஆகிய அமைப்புகள் ஆய்வுத் தகவல் வெளியிட்டுள்ளன.

பிரித்தானியாவில் இயங்கும் Freedom from torture  என்ற அமைப்பு அந்நாட்டு அரசின் அபிமானத்தைப் பெற்ற ஒரு அமைப்பாகும். அந்த அமைப்பும் நானறிந்த வகையில் தொடர்ச்சியாக பல வருடங்கள் இலங்கையில் சித்திரவதை முகாம்கள் இயங்கி வருவதாக சர்வதேச அளவில் குற்றஞ்சாட்டி வருகிறது. ஐ.நா மனித உரிமைகள் பேரவை உட்பட சர்வதேச ரீதியில் இன்றளவிலும் இலங்கை தொடர்பிலான எதிர்மறை விமர்சனங்கள் உருவாவதற்கு இவ்வாறான விடயங்கள் காரணமாக இருக்கின்றன.

இதற்கான பின்னணி எதுவென்பது உலகறிந்த விடயம். 1983 முதல் நாட்டில் இடம்பெற்ற யுத்தத்தின் விளைவுகளின் ஒரு பக்கம் இதுவெனில் எப்போதுமே பேசப்படாத இன்னொரு பக்கமும் உண்டு. அது தான் இந்த யுத்தகாலத்தில் தமது வாழ்க்கை மற்றும் எதிர்காலத்தையும் இழந்த தலைமுறையினரின் சோகம்.

லண்டனில் ஒரு நாள் என் நண்பர் ஒருவர் தனக்குத் தெரிந்த ஒருவருக்காக ஒரு உதவி கேட்டார். அந்த நபரின் சில முக்கிய ஆவணங்கள் நிரப்பிக் கொடுக்க வேண்டும் என்பதே அது. எனக்கு விடுமுறையான நாளொன்றைக் கூறி அவரை அனுப்பி விடுங்கள் என்று கூறினேன். அந்நாள் குறித்த நபரும் என்னை சந்திக்க வந்தார். வந்தவர் திடீரென என்னைக் கண்டதும் பின் வாங்கிச் செல்ல முயன்றார். பரவாயில்லை வாருங்கள் என்று அழைத்து அவரது தேவையை நிறைவேற்றிக் கொடுத்தேன்.

ஆனாலும், தொடர்ச்சியாக தயக்கமாகவே இருந்த அவர், வேலை முடிந்ததும் கவலை அண்ணன், நாங்கள் படிக்கவில்லை என்று கண்ணீர் மல்கினார். பரவாயில்லை விடுங்கள், நீங்களாக விரும்பி படிக்காமல் விடவில்லை, நாட்டின் சூழல் அப்படியிருந்தது என தட்டிக்கொடுத்து அனுப்பினேன். அவரது தயக்கத்துக்குக் காரணம் என்னவென்றால் கொழும்பில் எனது அயல் வீட்டிலேயே 90களின் ஆரம்பத்தில் அவரும் அவரது குடும்பமும் இடம்பெயர்ந்து வந்து தங்கியிருந்தார்கள். அப்போது அவர் பாடசாலை சென்றிருக்க வேண்டிய வயது. என்னைப் பார்த்ததும் சற்று உணர்ச்சி வசப்பட்டிருந்தார்.

உண்மையில், அவர் போன்ற எத்தனையோ இளைஞர்கள், இன்றளவில் ஐரோப்பிய நாடுகளில் வாழும் நடுத்தர வயதுள்ள பலருக்கு இந்தப் பிரச்சினை இருக்கிறது. அதற்கு அவர்களைக் குறை கூறுவது எந்த வகையிலும் நியாயமில்லை. அக்காலப்பகுதியில் நாட்டு நிலைமை எவ்வாறு இருந்தது என்பது எல்லோரும் அறிந்த விடயம். குறிப்பாக தமிழ் இளைஞர்கள் கொழும்பில் நடமாடுவது கூட கடினமாக இருந்த காலகட்டம் அது.
இன்னொரு புறத்தில் சிறுவர் முதல் பெரியவர்கள் வரை கட்டாயமாக ஆயுதமேந்திப் போராடவும் நிர்ப்பந்திக்கப்பட்டார்கள். வட – கிழக்கு மாகாணங்களில் 'ஆள்' பிடிக்கும் செயற்பாட்டை தமிழ் இயக்கங்கள் பரவலாக மேற்கொண்டிருந்தன.

அனைத்து தமிழ் போராளி இயக்கங்களும் இவ்வாறு கட்டாய ஆள் சேர்ப்பில் ஈடுபட்டிருந்தன. இன்னொரு புறத்தில் இலங்கை இராணுவமும் தமது ஆட்பலத்தை அதிகரிக்கும் தேவை நிமித்தம் பரந்த அளவில் கவர்ச்சிகரமான கொடுப்பனவுகளுடன் படையணிகளை விஸ்தரித்து வந்தன. குறைந்த பட்ச கல்வித் தகைமையுடன் இளைஞர்கள் இணைந்து கொண்டார்கள். அதே போல, துறை சார் திறமைசாலிகளாக உருவாகி வந்தவர்களும் இக்காலத்தில் உள்நாட்டு யுத்தத்துக்குள் சிக்கிக் கொண்டார்கள்.

என் சொந்த அனுபவத்தில் முதன் முதலில் அவ்வாறு என்னை உலுக்கிப் போட்ட சம்பவம் சகோதரன் ஹிஷாம் ஒஸ்மானின் மரணம். 80களின் இறுதியில், இலங்கையில் குத்துச் சண்டை விளையாட்டில் சிறந்த அளவில் வளர்ச்சி பெற்று வந்த எனது பாடசாலையான ரோயல் கல்லூரியின் பழைய மாணவன் ஒஸ்மான் எங்களோடு நெருங்கிப் பழகிக்கொண்டிருந்த கால கட்டத்தில் விளையாட்டுத் திறமையின் பின்னணியில் இராணுவத்தில் இணைத்துக் கொள்ளப்பட்டிருந்தார்.

எனினும், துரதிஷ்டவசமாக தனது 21வது வயதில் வெலி-ஓயவில் இடம்பெற்ற தாக்குதலில் முன்னரங்கில் இருந்த ஒஸ்மான் உயிரிழந்தார். அந்த நிகழ்வைக் கேள்வியுற்ற போது ஏற்பட்ட மன உளைச்சலை நினைத்துப் பார்க்கையில் ஏனைய பகுதிகளில் இரு பக்கத்திலும் ஆயிரக்கணக்கில் உயிரிழந்த அப்பாவி உயிர்களையும் நினைத்து மனம் உருகுகிறது.

எது எவ்வாறாயினும், இன்று அந்த யுத்த காலம் பற்றி அரசியல் அரங்கில் அள்ளி வீசப்படும் விளக்கங்கள் பல்வேறு கேள்விகளையும் சகல வளமும் இருக்கும் ஒரு நாட்டில் எதிர்காலமற்றுப் போன தலைமுறையினரின் வாழ்க்கையையும் நினைக்குக் கொண்டு வருகிறது.

ஒரே இரவில் ஆயிரமாயிரம் இராணுவத்தினரைக் கொன்றொழித்ததாக தற்பெருமை பேசிய விநாயகமூர்த்தி முரளிதரன், தென்னிலங்கையில் உருவான எதிர்க்கருத்துக்களை சமாளிக்க இன்னும் பல உண்மைகளைச் சொல்லி மிரட்டிக் கொண்டிருக்கிறார். தெற்கிலிருந்து ஆயுதமும் ஆதரவும் வழங்கப் பட்டே விடுதலைப் புலிகள் எனும் அமைப்பு மீண்டும் அபரீத வளர்ச்சியடைந்தது என்கிறார். இந்தியா என்னவெல்லாம் செய்தது என்று பகிரங்கமாகக் கூறுகிறார். தென்னிலங்கை தலைவர்கள் வைத்துக் கொண்ட உறவு பற்றி விபரிக்கிறார். 

இதற்கு ஒரு படி மேலே செல்லும், யுத்தத்தை நிறைவு செய்த பெருமையைத் தமதாக்கிக் கொண்டுள்ள ஜனாதிபதியின் கட்சிப் பெருந்தகைகள் தமது விளைநிலத்தைப் பாதுகாக்க விநாயகமூர்த்தி முரளிதரனின் கருத்துக்களை அரசியல் ரீதியாக ஆமோதித்து வருகிறார்கள். ஆக இந்நாட்டில், நடந்தது நடப்பதெல்லாம் அரசியல் தேவைகளுக்காகவே இடம்பெறுகிறது என்பது திரும்பத் திரும்ப நிரூபிக்கப்பட்டுக் கொண்டே வருகிறது.

பல்லாயிரக்கணக்கான உயிர்களின் தியாகத்தில் கட்யெழுப்பப் பட்டுக்கொண்டிருக்கும் இத்தீவின் பல அத்தியாயங்கள் இரத்தக்கறைகளாலானவை. முப்பது வருட காலம் நீடித்த்ததன் ஊடாக நாட்டின் அபிவிருத்தி, அக்கால தலைமுறையின் வாழ்வியல் அடைவுகள், எதிர்பார்ப்புகள் எல்லாம் தொலைந்து போயின. அங்கிருந்து வாழ்வு தேடிப் புறப்பட்ட பல ஆயிரக்கணக்கானோர் இருக்கிறார்கள்.

நாட்டின் சூழ்நிலையினால் அரசியல் தஞ்சம் கோரி வெளிநாடுகளுக்குச் சென்றோர் போக, தாம் எதிர்பார்த்த வாழ்வியல் சூழ்நிலையில்லாததால் வேறு தேசம் நோக்கிப் புறப்பட்டோரும் ஆயிரக் கணக்கில் இருக்கின்றனர். யுத்தம் முடிந்து மீண்டும் மஹிந்த ராஜபக்ச ஜனாதிபதியாகத் தெரிவானதும் ஐரோப்பிய நாடுகளில் பணிபுரிந்து கொண்டிருந்த பல மருத்துவர்கள் மீண்டும் நாடு திரும்ப ஆரம்பித்தார்கள்.

எனது நண்பர்கள் சிலரும் இதில் அடங்கும். எனினும், அதில் பலர் மீண்டும் 2015ல் ஆட்சி மாறியதும் தாம் குடியிருந்த நாடுகளுக்கே திரும்பியதையும் அவதானித்தேன். தாம் மீண்டும் நாட்டுக்குச் சென்று தமது சேவையை வழங்குவதாயின் அதற்கு அரசியல் ரீதியாக எவ்வாறான தளம் இருக்க வேண்டும் என்ற நிலைப்பாடு அவர்களுக்கு இருந்ததை பின்னர் அறிந்து கொண்டேன்.

அதே போன்று, 2015 ஆட்சி மாற்றத்தின் பின் உயர் பதவிகளைப் பெறுவதற்காக நாடு திரும்பியோரையும், வெளிநாட்டு தூதர்களாக நியமனம் பெறுவதற்கு முயற்சி செய்து, அதற்குப் பகரமாக சொந்த சமூகத்தாரைக் காட்டிக் கொடுத்தோரையும் கூட கண்டிருக்கிறேன்.

இலத்திரனியல் உலகத்துக்குத் தயாராகியிருக்க வேண்டிய காலத்தில் யுத்தத்தால் பின் தங்கிப் போன தேசிய நிலவரத்தில் எதிர்காலமில்லையென்றுணர்ந்து என்னோடு கணிணிக் கற்கையில் தேர்ச்சி பெற்ற பலர் வெளிநாடுகளை நாட ஆரம்பித்திருந்தனர். ஒரு வகையில் அதில் நியாயமிருந்தது. இலங்கையில் அக்காலத்தில் மென்பொருள் வடிவமைப்புக்கு இருந்த கிராக்கியோ அதற்குரிய தொழிநுட்ப வசதிகளோ ஏனைய நாடுகளோடு ஒப்பிடுகையில் போதுமானதாக இருக்கவில்லை.

பிரெஞ்சு நிறுவனம் ஒன்றுக்காக வெளிநாடொன்றில் மென்பொருள் வடிவமைப்புக்காக சென்றிருந்த போது, அங்கு வழங்கப்பட்டிருந்த வசதி வாய்ப்புகளையும் உபகரணங்களையும் கண்டு பெருமளவில் நான் வியந்திருந்தேன். அவ்வாறான வசதி வாய்ப்புகளுடனான தொழிநுட்பம் இலங்கைக்கு வருவதற்கும் யுத்தம் மாபெரும் தடையாக இருந்தது.

இவ்வாறான சூழ்நிலையில், பல ஆயிரக்கணக்கானோர் தமது எதிர்காலத்தைத் தேடியும் சொந்த தேசம் விட்டு வெளியேற வேண்டிய நிர்ப்பந்தம் உருவாகியிருந்தது. ஆனால், யுத்தம் முடிந்து பத்து வருடங்கள் கழிந்த பின்னர், இன்று அக்காலத்தில் வெளியில் தெரிந்த யுத்தம் மற்றும் அதன் பின்னணியில் நடந்தேறிய அரசியல் குறித்து பேசப்படுகிறது. இதன் போதான இழப்புகளுக்கு பதில் சொல்வார் யாரும் இல்லை. ஆயினும், கற்றுக்கொள்ள நிறையவே பாடங்கள் இருக்கின்றன.

இன்று பேசப்படும் அரசியலுக்குப் பின்னால் நாளை இருக்கக்கூடிய விபரீதங்களையும் உணர்ந்து கொள்ளும் தேவையிருக்கிறது. இன்றைய இலங்கையின் அரசியலில் விதைக்கப்படும் இனவாதத் தீயின் விபரீதங்களை அவதானத்துடன் எதிர்கொண்டு செயற்பட வேண்டிய தேவை உணர்த்தப்படுகிறது.

ஏதோ ஒரு கட்டத்தில் இதன் வேஷமும் கலைந்தாக வேண்டும், அது காலத்தால் கலைந்தேயாகும். ஆயினும் அதுவரையான இழப்புகளைக் கடந்த முப்பது வருடங்களில் தாங்கிக் கொண்டது போன்றன்றி புத்திக் கூர்மையுடன் செயற்பட்டு எதிர்கொள்ள வேண்டியிருக்கிறது. தனி நபர் அரசியல் இலாபத்துக்காக அவதாரமெடுக்கும் அரசியல் வழி மாற்றங்களை தேசத்திற்கான தேசிய அரசியலாக மாற்றுவதற்கான போராட்டம் எல்லோரையும் சார்ந்திருக்கிறது.

ஆயிரமாயிரம் வருடங்களாக உலக அரங்கில் அறியப்பட்ட ஒரு தீவுக்கு இன்று சர்வதேச அளவில் விளம்பரங்கள் அவசியப்படுகிறது. இந்நாட்டின் வளங்களைப் பயன்படுத்தும் திறனற்ற மக்கள் சமூகமாக மாறியுள்ளதால் வெளிநாட்டு நிறுவனங்களுக்கு நிலங்களும் வளங்களும் வாரி வழங்கப்பட்டுக் கொண்டிருக்கிறது.

சமத்துவம் பேச்சளவில் தரித்து நிற்க, சமவுரிமை ஏதோ ஒரு மூலையில் முடங்கிக் கிடக்கிறது. முற்போக்கு பற்றி வாய் கிழியப் பேசியவர்கள் கூட கடந்த நவம்பரில் பேரினவாதத்துக்குள் அடங்கிப் போயிருந்த சூழ்நிலையைக் காணக்கிடைத்தது. இந்நிலையில், தேசியத்துக்குள் நமது பங்கு, தேசியத்துக்கான நமது பங்கு என்பதில் தெளிவு தேவைப்படுகிறது.

இப்போது பேசப்படும் அரசியல் தேசியங்கள் நிரந்தமற்றவையென்பதைத் தற்போது மீட்டப்படும் கடந்த காலம் எடுத்துக் கூறுகிறது. 20ம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் அன்னியரிடமிருந்து தேசத்தைக் காப்பாற்ற எல்லா இனத்தவரும் ஒன்று சேர்ந்து தேசிய குரலாக இயங்கினார்கள். இப்போது துண்டாடப்பட்டுக் கொண்டிருக்கும் தேசியத்தைக் காப்பாற்றுவதற்கும் இந்த நூற்றாண்டின் அனைத்து மக்களுக்கும் கடமைப்பாடு இருக்கிறது.

அதை முன்னெடுக்கும் வெகுஜன சக்தியெது என்பதை அடையாளங் காண்பதில் இருக்கும் போராட்டத்தை தனி மனிதர்களும் ஆய்வுக்குட்படுத்தியாக வேண்டும், தேசத்தின் எதிர்கால சுபீட்சத்துக்காக!

jTScYcS
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment