சோதனைகள் நீங்கி இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்: ACJU - sonakar.com

Post Top Ad

Monday 6 April 2020

சோதனைகள் நீங்கி இயல்பு நிலை திரும்ப பிரார்த்திப்போம்: ACJU


கொவிட்- 19 வைரஸ் தாக்கத்தினால் உலகம் முழுவதும் ஏற்பட்டுள்ள சோதனைகளை நாம் அறிவோம். குறித்த வைரஸினால் இலட்சக்கணக்கானோர் பீடிக்கப்பட்டும் ஆயிரக்கணக்கானோர் மரணித்தும் வருகின்றனர். முழு உலகமும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. சாதாரண வாழ்க்கை நிலை கூட மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. மக்கள் கவலையோடும் பீதியோடும் மன உளைச்சளோடும் மிகவும் பரிதாபகரமான நிலையில் நாட்களைக் கழித்து வருகின்றனர்.  இந்நிலை குறிப்பாக நமது நாட்டிலிருந்தும் பொதுவாக முழு உலகிலிருந்தும் நீங்க எல்லாம் வல்ல அல்லாஹுத் தஆலாவிடம் மன்றாடிப் பிரார்த்திப்பது ஒவ்வொரு முஸ்லிமுடைய தார்மிகக் கடமையாகும். இந்நோய் பரவாரம்பித்ததிலிருந்து தௌபா, இஸ்திஃபாரில் ஈடுபட்டு, சுன்னத்தான நோன்புகள் நோற்று, ஸதகா செய்து, துஆவிலும் ஈடுபடுமாறு ஏலவே பல முறை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா மக்களிடம் வேண்டிக் கொண்டதை நீங்கள் அறிவீர்கள்.


துஆவின் மூலம் தேவைகள் நிறைவேறுகின்றன் நன்மைகள் கிடைக்கின்றன. அது அல்லாஹ்வை நெருங்கவும் காரணமாகின்றது. அடியார்கள் தன்னிடம் பிரார்த்திப்பதை அல்லாஹ் விரும்புகின்றான்.

“நீங்கள் என்னையே அழை(த்துப் பிரார்த்தி)யுங்கள் உங்களுடைய பிரார்த்தனைக்கு பதிலளிப்பேன்.”  (40: 60)

பலரும் பல்வேறு பொருளாதார நெருக்கடிகளுக்கும் இன்னல்களுக்கும் முகம் கொடுத்து வருகின்ற ஓர் இக்கட்டான நிலையில், ஒவ்வொருவரும் தன்னாலான உதவி ஒத்தாசைகளைச் செய்வதும் அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்பதும் இறை பொருத்தத்தைப் பெற்றுத் தரும். நபி (ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம்) அவர்கள் அதிகம் சுன்னத்தான நோன்புகளை நோற்ற ஷஃபான் மாதத்தில் நாம் இருக்கின்றோம். எனவே, இவ்விடயத்திலும் கவனம் செலுத்துவதோடு குறிப்பாக பிறை 13,14,15 (ஏப்ரல் 07,08,09) ஆகிய அய்யாமுல் பீழ் தினங்களில் முடியுமானோர் நோன்பு நோற்றுப் பிராத்திக்குமாறும் ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.

ஆண்கள், பெண்கள், வாலிபர்கள், வயோதிபர்கள் அனைவரும் தத்தமது வீடுகளில் இருந்தவாறு நல்லமல்களில் ஈடுபட்டு அல்லாஹ்விடம் மன்றாடிப் பிரார்த்திக்கும் வழமையை உருவாக்கிக் கொள்வதோடு; காலை, மாலை துஆக்களையும் தவறாது ஓதி வருமாறு ஜம்இய்யா வழிகாட்டுகின்றது.

நாட்டில் சோதனைகள் நீங்கி அபிவிருத்தியும் சுபிட்சமும் ஏற்பட அனைத்து மதஸ்தலங்களும் பிரார்த்தனைகளில் ஈடுபடுமாறு அதிமேதகு ஜனாதிபதி அவர்களும் வேண்டுகோள் விடுத்துள்ளார்கள். எனவே, ஒவ்வொரு மஸ்ஜிதிலும் மேலே குறிப்பிட்ட அய்யாமுல் பீழ் மூன்று நாட்களிலும் மஃரிபுடைய அதானுக்குப் பிறகு ஒலிபெருக்கியில் துஆ செய்யுமாறும் அனைத்து முஸ்லிம்களும் தத்தமது வீடுகளிலிருந்த வண்ணம் ஆமீன் கூறி பிரார்த்தனைக்கு பதிலளிக்குமாறும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா அனைவரையும் அன்புடன் கேட்டுக் கொள்கின்றது. இதற்காக பின்வரும் மாதிரி துஆக்களைப் பயன்படுத்தலாம். இந்த துஆக்களை ஓதி தனிப்பட்ட முறையிலும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுமாறும் வேண்டிக் கொள்கிறோம்;.  

எல்லாம் வல்ல அல்லாஹ் அனைத்து கெடுதிகளிலிருந்தும் நம்மையும் நாட்டு மக்கள் அனைவரையும் பாதுகாத்தருள்வானாக! நிலைமைகளைச் சீராக்குவானாக! 

அஷ்-ஷைக் அப்துல் முக்ஸித்
செயலாளர்- பிரசாரக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment