இந்த அரசாங்கம் அதிகம் கடமைப் பட்டிருப்பது ரணில் விக்ரமசிங்கவிற்கே - sonakar.com

Post Top Ad

Thursday, 13 February 2020

இந்த அரசாங்கம் அதிகம் கடமைப் பட்டிருப்பது ரணில் விக்ரமசிங்கவிற்கே2005 –  2010  மஹிந்த ராஜபக்ஷ  அரசு இலங்கையில் உள்நாட்டு யத்தத்தை முடிவிற்கு கொண்டுவர முன்னெடுத்த அரசியல் தீர்மானம், இராணுவ நடவடிக்கைகள், இராஜதந்திர மூலோபாய நகர்வுகள் அவற்றிற்கு சாதகமாக இருந்த தேசிய பிராந்திய பூகோள அரசியல் கள நிலவரங்கள் என்பன  வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவையாய் அமைந்திருந்ததனால் தேசிய அரசியலில் தமக்கென தனித்துவமான ஒரு இடத்தை மஹிந்த அரசு மாத்திரமன்றி அவரது குடும்பமும் பெற்றுக் கொண்டமை மறுக்க முடியாத உண்மையாகும்!இறுதிக்க கட்ட போரின் போதும் யுத்தம் முடிவுற்ற பின்னரும் மஹிந்த அரசின் மீது விடுக்கபட்ட சர்வதேச சமூக அழுத்தங்கள், உள்நாட்டு பொருளாதார நெருக்கடிகள், அதிகரித்துவந்த ராஜபக்ஷ குடுமம்ப ஆதிக்கம், இந்து சமுத்திர பிராந்தியத்தில் மேலாதிக்க சக்திகளின் போட்டா போட்டி, அதன் பின்புலத்தில் இலங்கை வாழ் முஸ்லிம் சிறுபான்மையினருக்கு எதிராக முடுக்கிவிடப்பட்ட சவால்கள் போன்ற சாதகமான களநிலவரங்களை பயன்படுத்திக் கொள்வதில் பிரதான எதிர்க் கட்சி என்ற வகையில் ஐக்கிய தேசியக் கட்சி முனைப்பாக இருந்தது.

அத்தகைய பின்புலத்தில் தான் 2015 ஜனாதிபதித் தேர்தலுக்கான நகர்வுகள் மேற்கொள்ளப்பட்டன, தன்னை புறந்தள்ளிய மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தின் ஆட்சியை மாற்ற தருணம் பார்த்திருந்த சந்திரிக்கா அம்மையாருடன் இணைந்து பொது எதிரணி ஒன்றை அமைப்பதில் அன்றைய எதிர்க் கட்சித் தலைவர் வெற்றிகண்டார், தொடர்ந்தேர்ச்சியாக சுமார் 20 தேர்தல்களில் தோல்வியையே தழுவிய தனது கட்சியை அதிகாரக் கதிரைக்கு கொண்டுவர ரணில் விக்ரமசிங்கவிற்கு வேறு மார்க்கம் இருக்கவில்லை.

2015 ஜனவரி பொதுத் தேர்தல் களம் சூடு பிடிக்கிறது மஹிந்த அரசிலிருந்தும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டணயில் இருந்தும் சுதந்திரக் கட்சியில் இருந்தும் மைத்திரிபால சிறிசேன உற்பட சில முக்கிய உறுப்பினர்கள் பொது எதிரணியினால் காவு கொள்ளப் படுகின்றனர், மைத்திரி பொது வேட்பாளராக களமிறக்கப் பட்டு நல்லாட்சிக்கான ஜனாதிபதியாக் வெற்றியும் பெறுகிறார், அன்று ஜனாதிபதி பதவி ஏற்றவுடனேயே பாராளுமன்றத்தில் வெறும் 49 உறுப்பினர்களைக் கொண்டிருந்த ரணில் விக்கிரமசிங்க பிரதமராகவும் நியமிக்கப் படுகிறார்.


சிறுபான்மை அரசு பதவிக்கு வந்து இருமாதங்களிலேயே மத்திய வங்கி பிணைமுறி மோசடிகள் இடம்பெறுகின்றன, பாராளுமன்ற கோப் கமிட்டி அறிக்கை வெளிவர முன் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு ஆகஸ்டு மாதத்தில் பொதுத் தேர்தலும் இடம் பெறுகிறது.

ஊழல் மோசடி குடும்ப ஆதிக்க அரசைக் குற்றம் சாட்டி பதவிக்கு வந்த அரசு பாரிய ஊழல் மோசடி குற்றச் சாட்டுக்களுக்கு முகம் கொடுக்க நேரிடுகிறது. குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்த சுலோகம் ஏந்தி ஆட்சிக்கு வந்த அரசு குற்றவாளிகள் என தாம் பிரச்சாரம் செய்த பிரதானிகளை பாதுகாக்கிறது, அமைச்சரவையில் ஜனாதிபதி பிரதமர் முறுகல் நிலை அதிகரிக்கிறது.

குறிப்பாக பிரதமர் ரணில் தனது கட்டுப் பாட்டில் அமைத்த நிதி மோசடிப் பிரிவு ஆட்சியின் பிரதான பங்காளியான ஜனாதிபதி மைத்திரி தலைமை வகிக்கும் சுதந்திரக் கட்சி உறுப்பினர்களையும் அவருடன் ஒத்துழைத்து 19 அரசியல் சீர்திருத்தச் சட்டத்தை கொண்டுவருவதற்கு உதவிய ஆக்கிய மக்கள் சுதந்திர முன்னணி உறுப்பினர்களையும் இலக்கு வைப்பதாக குற்றம் சாட்டப் பட்டது.

2020 ஜனாதிபதித் தேர்தலில் தான் களமிறங்கும் எண்ணத்தில் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சியை மற்றும் அவரோடு ஒத்துழைத்த ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியை உடைத்து பிளவு படுத்தி சின்னாபின்னப் படுத்த ரணில் சூழ்சிகள் செய்வதாக குற்றம் சாட்டப்பட்டது, அமெரிக்காவில் இருந்த பசில் ராஜபக்ஷ நாடு திரும்பி தாமரை மொட்டு சின்னத்தில் பொதுஜன பெரமுன கட்சியை ஆரம்பித்து வளர்த்து எடுக்கும் வரை குற்றவாளிகளை பாதுகாத்து அனுசரணை வழங்கியது ரணில் விக்ரமசிங்க என்பதானால் ஜனாதிபதி தலைமையிலான சுதந்திரக் கட்சி மிகுந்த அதிருப்தியில் இருந்தது.

ரணிலின் ஜானாதிபதி கனவும் சூழ்சிகள் நிறைந்த அரசியல் நகர்வுகளுமே நல்லாட்சி அரசு பலவீனப் படுவதற்கான பிரதான காரணமென  குற்றம் சுமத்தப் பட்டது, சுதந்திரக் கட்சியை பலவீனப் படுத்துவதில் பிரதமர் ரணில் குறியாக இருந்ததாதலேயே ஜனாதிபதி மைத்திரியின் அணியினர் தொகுதி தொகுதியாக மஹிந்த தலைமையிலான எதிர்க் கட்சிக் கூட்டணியை நோக்கி நகர்ந்தனர், இறுதியில் வேறு மார்க்கமின்றி ஜனாதிபதி மைத்திரியும் ஜனாதிபதித் தேர்தலில் நடுநிலை வகிப்பதாக தள்ளி நின்று கோதாபய ராஜபக்ஷ வின் வெற்றியிற்கு வழிவிட்டு விலகி நின்றார்.


2018 பெப்ரவரி மாதம் இடம் பெற்ற உள்ளூராட்சித் தேர்தல்களில் நாடாளாவிய ரீதியில் எதிர்க் கட்சிக் கூட்டணியினர் தாமரை மொட்டுச் சின்னத்தில் அமோக வெற்றியை அடைந்திருந்த நிலையிலும் தனது தலைமையில் கட்சிக் காரர்கள் மாத்திரமன்றி கூட்டணியினரும் அதிருப்தியடைந்திருந்த நிலையிலும் உட்கட்சி ஜனநாயகத்தை வழமை போல் சீர்குலையச் செய்து அடுத்த தலைமைக்கு வழிவிடாமல் ஐக்கிய தேசியக் கட்சியை பலவீனப் படுத்திய பெருமையும் பிரதமர் ரணிலையே சாரும்.

2019 ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப் பட்ட பின்னரும் இறுதிவரை சஜித் பிரேமதாசவிற்கு விட்டுக் கொடுக்காமல் மல்லுக் கட்டியது மாத்திரமன்றி பூரணமான கட்சி அனுசரணையை வழங்காமலும் வேட்புமனு தாக்கல் செய்யப்பட்ட பின்னரும் முழு மனதான ஒத்துழைப்பை வழங்க மறுத்தமையும் இறுதிநேரத்தில் எம் சி சி உடன்படிக்கையை கைச்சாத்திடுவதாக அமைச்சரவை முடிவை எடுத்தமையும் கோதாபய ராஜபக்ஷ அவர்களின் மேலும் உறுதி செய்தமை உண்மையாகும்.

சஜித் தோல்வியடைவதை தான் அறிந்திருந்ததாகவும் கணிப்பீடுகள் தெரிவித்ததாகவும் ரணில் விக்ரமசிங்கஹா கூறுவதை நாம் ஏற்றுக் கொள்வோம், அப்படியாயின் ஏன் ஜனாதிபதி வெற்றி பெற்றவுடன் பாராளுமன்ற பெரும்பான்மை தம் பக்கம் இருக்கும் நிலையில் முந்திக் கொண்டு சென்று ஆட்சியை அவரிடம் பாரம் கொடுத்திருக்க வேண்டும்? பொதுத் தேர்தல் அறிவிக்கப் படும் வரை ஆட்சியை தக்க வைப்பதற்கான எத்தகைய கலந்துரையாடடல்களையும் நல்லாட்சி கூட்டணிக் கட்சிகளுடனோ பிரதான வேட்பாளர் சஜித் பிரேமதாசவுடனோ அவர் மேற்கொள்ளவில்லை.

2015 ஆம் ஆண்டு மைத்திரி ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டவுடனேயே 50 ற்கும் குறைவான உறுப்பினர்களுடன் இருந்த ரணிலை பிரதமரக்கியமை உண்மைதான், அப்பொழுது ஜனாதிபதியிடம் எல்லையற்ற நிறைவேற்று அதிகாரங்கள் இருந்தன, ஆனால் 19 அரசியலமைப்பு திருத்தச் சட்டத்தின் படி 2019 இல் தெரிவான ஜனாதிபதியிற்கு அதிகாரங்கள் இல்லை, ஆனால் தனது கட்சிக் காரர்கள் ஆளும் கூட்டணி உறுப்பினர்களின் நலன்களை புறக்கணித்து அவசரவசரமாக ஏன் ஆட்சியை நிபந்தனைகள் இன்றி அல்லது தனிப்பட்ட சில புரிந்துனர்வுகளுடன் ஒப்படைத்தார் என்ற கேள்விகள் இன்று எழுந்துள்ளன. 

அதேபோன்று பாராளுமன்றில் பெரும்பனமை இல்லாத நிலையில் அதன் அமர்வுகளை ஜனாதிபதி கோட்டா ஜனவரி மூன்றாம் திகதிவரை ஒத்திவைத்தமை அவரது சிம்மாசன உரை நிகழ்த்தப்படும் வரை சஜித் பிரேமதாசவிற்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியை ஒப்படைக்காது தாமதித்தமை போன்ற நகர்வுகளுக்குப் பின்னால் ஐக்கிய தேசியக் கட்சித் தலைவர் ரணில் விக்ரமசிங்கவின் அரசியல் காய்நகர்த்தல்கள் இருந்திருக்க வேண்டும் என்ற சந்தேகம் நிலவுகிறது!

ஜனாதிபதித் தேர்தல் நிறைவடைந்து பொதுத் தேர்தலும் நெருங்குகின்ற இந்தக் கால கட்டத்தில் பொது எதிரணியின் கூட்டமைப்பை உருவாக்குவதில் எழுந்துள்ள நெருக்கடிகளை ரணில் விகிரமசிங்க தீவிரப்படுத்துவதாகவே தெரிகிறது, பொது எதிரணியின் தலைமைப்பதவி மற்றும் எதிர்க் கட்சித் தலைவர் பதவி ஆகியவற்றை சஜித் பிரேமதாசவிற்கு வழங்கியமை மூலம் ஒருவாறு கட்சிக்குள் நிலவிய நெருக்கடி தீர்க்கப் பட்டாலும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவராக தொடர்ந்தும் இருக்கும் ரணில் விக்ரமசிங்க தனது பிடியை தளர்த்துவதாக இல்லை.

எதிர்க்கட்சித் தலைவர் பதவி பாராளுமன்றம் கலைக்கப்பட்டவுடன் காலவதியாகிவிடும், பொது எதிரணியின் தலைமைப் பதவி தேர்தல் தோல்வியுடன் வலிதற்றதாகிவிடும் எனவே தானே பலமான எதிரணியின் தலைவராக தொடரலாம் அதன் மூலம் நாட்டிலும் சர்வதேச அரங்கிலும் தனக்கிருக்கின்ற சலுகைகளை வரப்பிரசாதங்களை அனுபவிக்கலாம் என அவர் கனவு காண்பதாக கூறப்படுகிறது, எனவே ஜனாதிபதித் தேர்தலில்  சஜித் பிரேமதாசவை தொல்விகானச் செய்தது போல் பொதுத் தேர்தலிலும் அவரது அணியை தோல்வியாடிச் செய்யவே ரணில் முனையலாம் என பலமான சந்தேகங்கள குற்றச் சாட்டுக்கள் சஜித் தரப்பினரால் முன்வைக்கப் படுகிறது.

2015 இல் பொது எதிரணியை அமைத்து முடிசூடா மன்னராக இருந்த மகிந்தவின் ஆட்சியைக் கவிழ்த்து மைதிரிய ஜனாதிபதியாக்கிய ரணில் மைத்திரி மஹிந்த கூட்டு உருவாகும் என்ற அச்சத்தில் தானும் டீல் அரசியல் செய்ய முற்பட்டதாகவும் மஹிந்த மற்றும் கோட்டாவுடன் உடன்பாடுகளுக்கு வந்ததாகவும் மைதிரி  இரண்டாவதுமுறை ஜனாதிபதி தேர்தலில் களமிரங்குவதனை தடுத்து கோட்டாவிற்கு வழிவகுத்து கொடுத்ததாகவும் சந்தேகங்கள் நிலவுகின்றன.

அதேபோல் நல்லாட்சி அரசினூடாக  ஐக்கிய தேசியக் கட்சியை அதிகாரத்திற்கு கொண்டுவந்த ரணில் தனது அரசில் அதிகாரங்களைப் பெற்று தனக்கே சவாலாக மாறிய கட்சிக் காரர்களை குறிப்பாக சஜித் பிரேமதாச அணியை பழிவாங்க ஆரம்பித்திருப்பதாகவும் ஜனாதிபதித் தேர்தலில் போன்று பாராளுமன்றத் தேர்தலிலும் டீல் அரசியல் செய்கிறார் எனவும் குற்றச் சாட்டுக்கள் முன்வைக்கப் படுகின்றன.

எனவே நல்லாட்சி அரசிற்குள் ஏற்பட்ட நெருக்கடி எவ்வாறு மஹிந்த ராஜபக்ஸ கோதாபய ராஜபக்ஷ ஆகியோரை மீண்டும் பலப்படுத்தி அதிகாரத்திற்கு கொண்டு வந்ததோ அதேபோன்று தற்போது ஐக்கிய தேசியக் கட்சியிற்குள் நிலவும் நெருக்கடிகள் அடுத்த பாராளுமன்றத் தேர்தலில் அவர்களை சௌகரியமாக வெற்றிபெறச் செய்து இன்னுமின்னும் பலப்படுத்துவதாகவே அமையப்போகிறது.

மார்ச் மாதம் ஆரம்பப்பகுதியில் அரசியலமைப்பின்படி களைய வேண்டிய பாராளுமன்றத்தை அவசரமாக கலைப்பது குறித்து ரணில் தரப்பு ஆளும் தரப்புடன் மந்திராலோசனை செய்வதாகவும் தாம் அதற்கு இடமளிக்கப் போவதில்லை எனவும் சஜித் தரப்பு குற்றம் சாட்டிக் கொண்டிருக்கிறது.

எனவே கோட்டா மஹிந்த அரசாங்கம் அதிகம் கடமைப் பட்டிருப்பது ரணில் விக்ரமசிங்கவிற்கே, என்று கூறலாம்!

-Masihudeen Inamullah

No comments:

Post a Comment