முகங்கள் - முகவர்கள் - முடிவுகள்! - sonakar.com

Post Top Ad

Friday 1 November 2019

முகங்கள் - முகவர்கள் - முடிவுகள்!


இரண்டு வாரங்களில் அடுத்த ஜனாதிபதியைத் தேர்வு செய்வதற்கான வாக்களிப்புக்கு மக்கள் தயாராகிக் கொண்டிருக்கிறார்கள். நாளாந்தம் கருத்துக் கணிப்புகள் மற்றும் கட்சித் தாவல்கள் பற்றிய தகவல்களும் வெளியாகிக் கொண்டிருக்கின்ற நிலையில், ஒவ்வொரு வாக்காளரும் அடுத்தவர் முடிவெடுத்து விட்டாரா? என்ற கேள்வியோடு தமது முடிவைத் தேடிக் கொண்டிருக்கிறார்கள்.



35 வேட்பாளர்களில் சஜித் மற்றும் கோட்டாபே ராஜபக்ச ஆகியோர் முன்னிலை வேட்பாளர்கள். அவர்கள் சார்ந்த கட்சி ஆதரவாளர்களைப் பொறுத்தவரை அது ஏற்கனவே முடிவெடுக்கப்பட்ட ஒன்று. மஹிந்த ராஜபக்ச ஆட்சியின் அதிருப்தியாளர்கள் மற்றும் கோட்டாபே ராஜபக்சவை விரும்பாதவர்களும் இதில் உள்ளடங்கும்.

ஏனைய 33 பேருக்கும் கூட 2000 முதல் 6 லட்சம் வரையான வாக்குப் பலம் எதிர்பாhர்க்கப்படுகிறது. இந்த இரண்டாம் நிலையின் முன்னணி வேட்பாளர் தேசிய மக்கள் சக்தியின் அநுர குமார திசாநாயக்க, அதற்கடுத்த பொதுத் தேர்வு முன்னாள் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க. இதையும் தாண்டி தனக்கும் இரண்டு லட்சம் வாக்கு கிடைக்கும் என்று பிரச்சாரம் செய்து வருபவர் ஹிஸ்புல்லாஹ்.

எனினும், பிரதான வேட்பாளர்களைச் சுற்றியே இன்றைய அரசியல் போட்டி தலையெடுத்துள்ளது. எதிர்வரும் வாரம் அடுத்தடுத்த கட்டங்களை அடைந்து இப்போட்டி உக்கிரமடைவதோடு தேர்தலும் சூடு பிடிக்கும். அந்த நேரத்திலேயே எவ்வித தீர்மானமுமின்றிக் காத்திருக்கும் மிதக்கும் வாக்காளர்கள் (Floating Voters) ஒரு தீர்மானத்துக்கு வருவார்கள். ஏனெனில் அவர்கள் எவ்வித கட்சியும் சாராதவர்கள்.

இலங்கை அரசியலில் ஜனரஞ்சகம் (Populism) முக்கிய வகிபாகம் கொண்டுள்ளது. அந்த வகையில் இந்தத் தேர்தலில் நேரடியான அரசியல் அனுபவமும் ஜனரஞ்சக அரசியல்வாதியாகவும் சஜித் பிரேமதாச திகழ்கிறார். அவருக்கு அடுத்தபடியாக அந்த தகுதியைப் பெறுபவர் அநுர குமார திசாநாயக்க. இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன என்ற கட்சியும் கட்டுமானமும் அக்கட்சி உருவாக்கியுள்ள பௌத்த மேலாதிக்க (Supremacy) போதையின் பயனாகவும் கோட்டாபே ராஜபக்சவும் அடிமட்ட சிங்கள மக்கள் மத்தியில் சிறந்த நிர்வாக ஆளுமை கொண்ட நபராகக் காணப்படுகிறார். அத்துடன் மஹிந்த ராஜபக்சவின் பிரபலம் கோட்டாபே ராஜபக்சவுக்கான வாக்குகளாக மாறும் என்பது பெரமுனவின் கணிப்பு.

இந்நிலையில், வாக்காளர் எவ்விதமான மன நிலையில் தமது வேட்பாளர்களைத் தெரிவு செய்யப் போகிறார்கள்? அதனூடாக நாட்டின் எதிர்காலத்துக்கு அது எவ்விதமான நன்மையைத் தரப் போகிறது என்பதும் முக்கியத்துவம் வாய்ந்த கேள்விகள். ஒப்பீட்டின் தேவை கருதி, முன்னர் பார்த்தது போன்று கட்சி சார்பு வாக்காளர்கள் மற்றும் மிதக்கும் வாக்காளர்கள் என்ற இரு வகைகளுக்குள் ஒட்டு மொத்த வாக்கு வங்கியையும் உள்ளடக்கிக் கொள்ளலாம்.

கட்சி சார்பு வாக்கு வங்கியென்பது முழுக்கவும் குறிப்பிட்ட அரசியல் கட்சி சார்ந்தது என்பதனால் அதன் எண்ணிக்கையில் பாரிய மாற்றங்கள் எதுவும் வரப் போவதில்லை. இதேவேளை, தமது கட்சி சார்பு வாக்குகள் ஊடாக ஜனாதிபதி தேர்தலை வெல்லும் நிலையில் சஜித் பிரேமதாசவும் இல்லை, கோட்டாபே ராஜபக்சவும் இல்லை. 2015 ஜனாதிபதி தேர்தலில் 62 லட்சம் வாக்குகள் ஊடாக மைத்ரிபால சிறிசேன பெற்றுக் கொண்ட 51 வீத பங்கினை, மக்கள் விடுதலை முன்னணியின் ஆதரவு இல்லாத நிலையில் இம்முறை ஐக்கிய தேசியக் கட்சியின் புதிய ஜனநாயக முன்னணி பெற்றுக் கொள்வதற்கான வாய்ப்பு இல்லை. மக்கள் விடுதலை முன்னணியின் கட்சி சார்பு வாக்கு வங்கி ஐந்து முதல் ஆறு லட்சமாக இருக்க, மிதக்கும் வாக்காளர்களில் ஒரு பங்கும் இணையும் பட்சத்தில் முன்னிலை வேட்பாளர்கள் இருவரும் தனிப்பெரும்பான்மையைப் பெறுவது தடைப்படும் என்பது எதிர்பார்க்கக் கூடியது.

ஆக, மிதக்கும் வாக்காளர்களின் சிந்தனையோட்டமும் எதிர்பார்ப்பும் அவர்களைக் கவர்வதற்கான செயற்திட்டமும் அனைத்து வேட்பாளர்களுக்கும் அவசியப்படுகிறது. இதை நாம் இரண்டாம் நிலையிலிருந்தே ஆரம்பித்தால், ஏலவே குறிப்பிட்டது போன்று அநுர குமார திசாநாயக்கவின் தலைமைத்துவம் தந்துள்ள உத்வேகம் மற்றும் நம்பிக்கையூடாக மிதக்கும் வாக்காளர்களின் ஒரு பகுதி தேசிய மக்கள் சக்தியின் பக்கம் சாய்வது உறுதியாகவே உள்ளது. குத்து மதிப்பாக 10 வீதத்தினை இதன் நிமித்தம் கழித்துக் கொண்டாலும் மிகுதி இருக்கும் 90 வீதத்திலிருந்து சஜித்தின் மற்றும் கோட்டாபேவின் பங்கு நிர்ணயிக்கப்பட்ட ஒன்றில்லை. 

இரு வாரங்களுக்கு முன் நடந்த கோட்டாபே ராஜபக்சவின் செய்தியாளர் சந்திப்பும் அதில் வெளிப்பட்ட அவரது பலவீனமும் மிதக்கும் வாக்காளர்களின் ஒரு பிரிவினருக்கு நிச்சயம் பாதிப்பை ஏற்படுத்தியிருக்கிறது. சமூக வலைத்தளங்களில் வெளிப்படும் கருத்துக்கள் மற்றும் செயற்பாடுகள் ஊடாக இதனை அனுமானிக்கக் கூடியதாக உள்ளது.
இந்த வகைக்குட்பட்ட முஸ்லிம் சமூக வாக்குகளும், அண்மையில் ஜனாதிபதி சட்டத்தரணி அலிசப்ரி ஊடாக வெளியான சில வார்த்தைகளின் அடிப்படையில் மாற்று வேட்பாளர் பக்கம் திரும்பியிருக்கிறது. தேர்தலில் வாக்களிப்பதற்காகவே இலங்கை சென்றுள்ள சில சிரேஷ்ட பிரஜைகள் கூட அலி சப்ரியின் கூற்றினை அத்து மீறலாகவும் மிரட்டலாகவும் பார்க்கிறார்கள், என்னிடமே நேரடியாக தமது அபிப்பிராயத்தையும் பகிர்ந்து கொண்டார்கள். இதேவேளை, ஒக்டோபர் 28ம் திகதி சோனகர்.கொம் ஊடாக என்னுடன் இடம்பெற்ற வீடியோ நேர்காணலின் போது தனது கூற்றுக்கான மாற்று விளக்கத்தினை அலி சப்ரி முன் வைத்திருந்தார். எனினும், அது சமூக மட்டத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்டதாக இல்லை.

சஜித் பிரேமதாசவை பொறுத்தவரை இதுவரை தமது பிரச்சாரத்தை நன்கு திட்டமிட்டு செய்து வருவதோடு தன்னை அனைத்து மட்ட மக்களுடனும் இணைத்துக் கொள்வதற்கான முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறார். அவருக்குப் பலம் சேர்க்கக் களமிறங்கியுள்ள முஸ்லிம் கட்சிகளுக்கு குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் இரு வேறு சவால்கள் உண்டு. முதலாவது ஹிஸ்புல்லாஹ் முன் வைத்து வரும் தரகர் அரசியல் கருத்துக்களை முறியடிப்பது, மற்றையது அக்கரைப் பற்று – ஒலுவில் - பொத்துவில் மற்றும் கல்முனை பகுதிகளில் ஆங்காங்கு வளர்ச்சி கண்டுள்ள கோட்டாபே ஆதரவ நிலைப்பாடுகள் நிரந்தர வாக்கு வங்கியைப் பாதிக்காமல் பார்த்துக் கொள்வது.

தென்னிலங்கை மற்றும் மேல் மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம்கள் தெளிவான நிலைப்பாட்டுடனேயே இருப்பதாகக் கருத முடிகிறது. இதேவேளை மத்திய மாகாணத்தில், குறிப்பாக கண்டியில் சமூக முக்கியஸ்த்தர்கள் இரு அணிகளாகப் பிரிந்து நிற்கிறார்கள். எனினும், கோட்டாபே ராஜபக்ச சார்;பு வாதங்கள் மக்களிடம் எத்தனை தூரம் எடுபடும் என்பது தொடர்ந்தும் சந்தேகத்துக்குரிய விடயமாகவே காணப்படுகிறது. அளுத்கம வன்முறையின் பின்னர் சில வாரங்களுக்குள்ளேயே பேருவளையில் கோட்டாபே ராஜபக்சவுக்கு கூட்டம் ஒன்றை நடாத்தி அங்குள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் தமது விசுவாசத்தைக் காண்பித்திருந்தார்கள். எனினும், வன்முறைகளின் எதிரொலி அடுத்த தேர்தல் ஊடாக வெளிப்பட்டது.

2009 முள்ளிவாய்க்கால் அனுபவத்தை மறக்காத வட மாகாண மக்கள் இன்னும் தமது நிலைப்பாட்டை மாற்றிக் கொள்ளவில்லை. இவற்றின் பின்னணியில் திகன முதல் குளியாபிட்டி வரையான அனுபவங்களையும் அப்பகுதிகளின் மக்கள் மறந்திருக்க நியாயமில்லை. கொழும்பிலிருந்து செல்லும் பெரமுன பிரச்சாரகர்கள், வன்முறைகளின் போது காவல்துறை என்ன செய்து கொண்டிருக்கிறது என கேள்வி கேட்டாலும், தமது பிரதேசங்களில் வன்முறைகளைத் தூண்டியவர்கள் யார்? என்பதை மக்கள் அறிவார்கள் என்பதால் இதனை உறுதியாகக் கூற முடியும்.

எனினும், இவை யாவும் தொடர்ந்தும் உணர்வு மேலோங்கிய நிலையிலேயே காணப்படுகிறதேயன்றி மக்களின் தீர்மானம் ஒரு எல்லையைத் தாண்டி, தேசத்தையும் அதன் எதிர்காலத்தையும் முன் நிறுத்தியதாக மாறுவதற்கான சூழ்நிலை குறைவாகவே உள்ளது. 2011 முதல் தொடர்ச்சியாக பாதிக்கப்பட்டு வரும் முஸ்லிம் சமூகத்திடம் அனைத்தையும் மறந்து விட்டு தேர்தலுக்கான பிரத்யேக முடிவெடுக்கக் கோருவது எடுபடாது என்பதையறிந்த நிலையில் சில இடங்களில் கோட்டாபே வந்தால் தான் நிம்மதியாக வாழ முடியும் என்ற மறைமுகமான மிரட்டல்களும் முன் வைக்கப்பட்டு வருவது தேசத்தின் எதிர்காலத்துக்கும் ஆரோக்கியமானது இல்லை.

மக்கள், வேட்பாளர்களின் எதிர்கால திட்டங்களை அடிப்படையாக வைத்து, அதனைச் செயற்படுத்தக்கூடிய அவரது திறமையைக் கணிப்பிட்டு, கள யதார்த்தத்துக்கேற்ப முடிவெடுக்கக் கூடிய சூழ்நிலையை விட நிர்ப்பந்தமே தொடர்ந்தும் அனைத்து முனைகளிலிருந்தும் வாக்காளர்கள் மத்தியில் நிலவுகிறது. நமது எடுகோள்களான கட்சி சார்பு வாக்காளர்களுக்கும் வேறு கட்சிக் காரரைத் தேர்ந்தெடுக்க முடியாத நிர்ப்பந்தம் இருக்கிறது எனும் வகையில் தேசாபிமானம் ஏதோ ஒரு எல்லையைத் தாண்ட முடியாமல் தவித்துக் கொண்டிருக்கிறது.

மேல் மாகாண ஆளுனர் ஏ.ஜெ.எம். முசம்மில் கடந்த புதன்கிழமை 30ம் திகதி எனது அரசியல் நேரலையில் கலந்து கொண்டிருந்தார். முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறைகளின் போது இந்த அரசு கை கட்டிப் பார்த்திருந்தது என அவர் தெரிவித்திருந்த நிலையில் கடந்த அரசும் சூத்திரதாரிகளைக் கைது செய்ய முடியாமல் போனமைக்கு அப்போது அந்தப் பக்கம் இருந்த சம்பிக்க ரணவக்க காரணம் என தெரிவித்திருந்தார். ஆக மொத்ததத்தில் சம்பிக்க அங்கிருந்ததனால் அப்போதும் முடியவில்லை, இங்கிருப்பதனால் இப்போதும் முடியவில்லை, மீண்டும் நாளை அதிகாரமுள்ள பக்கம் தாவினால் எப்போதுமே இன வன்முறைகளின் சூத்திரதாரிகளைக் கைது செய்வதோ தண்டிப்பதோ சாத்தியமில்லை எனும் அடிப்படையில், முஸ்லிம் சமூகம் எதிர்பார்க்கும் சமநீதி எட்டாக் கனியாகவே இருக்கிறதே? என்று வினவினேன். அனுபவமிக்க அரசியல்வாதியான அவர், இந்த விடயத்தில் உங்கள் கூற்றோடு நான் ஒத்துப் போக விளைகிறேன் என்று பதிலளித்தார்.

இலங்கை முஸ்லிம் சமூகத்துக்கு பல பிரச்சினைகள் இருப்பதாகவும் அவற்றுக்குத் தீர்வு காணப் போவதாகவும் கூறி நாம் ஆயிரம் பக்கங்கள் கொண்ட புத்தகங்களை அச்சிடலாம், தபால் மூலம் வீடு வீடாகக் கூட அனுப்பலாம், ஆனால் அவை தீர்க்கப்பட வேண்டிய தளங்களில் மாத்திரமே அதற்கான தீர்வு காணப்பட முடியும் என்பதே கள யதார்த்தம். கடந்த வாரம் எனது தொடர்ச்சியான அரசியல் நேர்காணலில் கலந்து கொண்ட இன்னும் ஒரு கொழும்பு அரசியல்வாதி, யாழ்ப்பாணத்தில் விமான நிலையம் திறக்கிறார்கள், மட்டக்களப்பில் திறக்கவில்லை, அப்படித் திறந்தால் கிழக்கு மாகாண முஸ்லிம்கள் அங்கிருந்தே ஜித்தாவுக்கு நேரடியாக சென்று வரலாம், அதனைத் தடுக்கவே இவ்வாறு செய்கிறார்கள் என்றும் சொன்னார். இரு வருடங்களுக்கு முன் நானறிந்த மூத்த எழுத்தாளர் ஒருவர் ஐந்தாம் தர புலமைப் பரிசில் பரீட்சை முஸ்லிம் சிறார்கள் மத்ரசாக்களுக்குச் சென்று அல்-குர்ஆனை ஓதக் கற்றுக் கொள்வதைத் தடுப்பதற்காகத்தான் அரசாங்கம் திட்டமிட்டு நடாத்தி வருகிறது என்றும் சொன்னார்.

ஆனால், உண்மையில் இலங்கை முஸ்லிம்களுக்கு இன்று இருக்கும் பிரச்சினை இவை தானா? அரசியல்வாதிகளின் பீரங்கிப் பேச்சுக்களுக்கு அப்பால் தேசத்தின் கௌரவமான பிரஜைகளாக சமநீதியுடன் நடாத்தப்பட்டாலே போதுமானது என்பதே மக்களின் குறைந்த பட்ச எதிர்பார்ப்பாக இருக்கிறது. முஸ்லிம்கள் மத்தியில் மாத்திரமன்றி பொதுவாகவே அனைத்;து சமூகங்களிலும் ஏதோ ஒரு சாராருக்கு இந்த எதிர்பார்ப்பு இருக்கிறது. அரசியல் தொடர்புகளின் ஊடாக சமூக மட்டத்தில் உருவாக்கப்படும் ஏற்றத்தாழ்வுகளைக் கடந்து அனைத்து பிரஜைகளுக்கும் அரசியலமைப்பில் பதிவு செய்யப்பட்டிருக்கும் அடிப்படைச் சுதந்திரங்கள் மற்றும் உரிமைகள் வழங்கப்பட்டாலே எல்லோரும் நிம்மதிப் பெருமூச்சு விடுவார்கள்.

ஆயினும், அதைத் தடுப்பதற்கு ஒரு கூட்டமும், அதை வைத்து எதிர்ப்பிரச்சாரம் செய்ய இன்னொரு கூட்டமும் இந்த இரு கூட்டங்களையும் சமப்படுத்துவதாகக் கூறிக் கொண்டு இரு பக்கமும் சாய்ந்து சமூகத்தை விலை பேசிக் கொண்டிருக்கும் இன்னொரு கூட்டமுமாக சமூகக் கட்டமைப்பு சிதைக்கப்பட்டிருக்கிறது. விதம் விதமான கண்டுபிடிப்புகளும் விளக்கங்களுமாக மக்களை ஏமாற்ற நடக்கும் போட்டியில் சிக்கிக் கொள்ளாமல் இருக்கும் தேவை ஒவ்வொரு வாக்காளனுக்கும் கட்டாயப்படுகிறது. எல்லா வேடதாரிகளும் திரை போட்டுக் கொள்ளும் காலம் என்பதால் எப்போது வேசம் கலையும் என்பதையும் சிந்தித்தே தம் முடிவுகளை மக்கள் எடுக்க வேண்டும்.

முஸ்லிம்களை நோகடிக்கும் விதத்தில் பேசினார் எனும் அடிப்படையில் கட்சிப் பதவிகளிலிருந்து தற்காலிகமாக இராஜினாமா செய்ய வைக்கப்பட்ட மது மாதவ அரவிந்தவிடம், பிரபல சிங்கள பாடகர் இராஜ் அண்மையில் அது குறித்து வினவிய போது, தான் பேசியதன் அர்த்தத்தையும் தேவையையும் மக்கள் காலம் கடந்தாவது உணர்ந்து கொள்வார்கள் என்று தெரிவித்தாரே தவிர, அதனை தவறு என இன்னும் ஏற்றுக்கொள்ளவில்லை. எனவே, வாக்காளர்கள் தம் தெரிவை மிகக் கவனமாகவும் அரசியல் தரகர்களைப் புறந்தள்ளிவிட்டு சுயாதீனமான ஆய்வு மற்றும் சிந்தனையுடனும் மேற்கொள்ள வேண்டும்.

தமது வீடும், குடும்பமும், நாடும் எவ்வாறு அமைய வேண்டும் என்ற எதிர்பார்ப்பு ஒவ்வொரு தனி நபருக்கும் உண்டு. அந்த எதிர்பார்ப்பில் இன்று மக்கள் அவதானிக்க வேண்டியது வேட்பாளர்களின் செயற்பாட்டு வீரியம், பின்னணி மற்றும் திட்டங்கள் போன்றனவாகும். அதேவேளை, குறித்த வேட்பாளரைச் சுற்றியிருக்கப் போகும் சூழலும் மக்கள் அபிலாசைகளைப் பாதிக்கும் என்பதால் அது குறித்தும் கவனம் செலுத்தியே விருப்புத் தேர்வைத் தீர்மானிக்க வேண்டும்.

பொதுவாகவே பெரமுன ஆதரவு பிரச்சாரத்தில் ஈடுபடும் அனைத்து அரசியல்வாதிகளிடமும் நான் கேட்ட கேள்வி, அங்குள்ள சூழலில் நாளை உங்கள் பேச்சு எடுபடுமா? என்பதாகும். அதற்கு யாரிடமும் இன்னும் தெளிவான பதில் இல்லை. ஆயினும், இம்முறை தேர்தல் நாட்டின் எதிர்காலத்தை நிர்ணயிக்கப் போகும் முக்கிய தேர்தல் என்பதால் அடுத்து வரும் இரண்டு வாரங்களில் இது குறித்து வாக்காளர்கள் தீவிரமாக ஆராய்ந்து, தமக்கும் சமூகத்துக்கும் நாட்டுக்கும் சிறந்த முடிவொன்றை எடுக்கக் கடமைப்பட்டுள்ளீர்கள். 

இன்னொரு புறத்தில் நாடாளுமன்றில் எவ்வித பலமும் இல்லாத போதிலும் அநுர குமார திசாநாயக்கவினாலும் தேசத்தின் அடிப்படைக் கொள்கையை மாற்ற முடியும் எனவும் முஸ்லிம் சமூகத்தில் நம்பிக்கையும் சலசலப்பும் காணப்படுகிறது. என்னைப் பொறுத்தவரை அவ்வாறு ஒன்றை தனி மனிதரால் செய்யக் கூடிய அரசியலமைப்பு இலங்கையில் இல்லை. அது மாத்திரமன்றி, அவரே ஜனாதிபதியானாலும் பொதுத் தேர்தலில் ஜே.வி.பி நாடாளுமன்ற பெரும்பான்மையைப் பெறுவது தற்காலத்தில் யதார்த்தத்துக்குப் புறம்பானதாகவே (Surreal) இருக்கும். 

மாற்றமாக, எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தலில் ஜே.வி.பிக்கு அங்கீகாரத்தை வழங்கி அதற்கடுத்த ஜனாதிபதி தேர்தலுக்குத் தயாராகலாம், சிந்தக்கலாம். ஏனெனில் தற்போதைய கள நிலவரப்படி வாக்குகளை சிதறடிப்பதற்கான அரசியல் ச10ழ்ச்சிக்கு யாரெல்லாம் பழியாகியிருக்கிறார்கள்? துணை போகிறார்கள்? என்பது அறுதியிட்டுக் கூற முடியாத ஒன்று. அதனை ஆராய்ந்து நேரத்தை விரயமாக்குவதை விட, புத்தி சாதுர்யமாக சிந்தித்து ஒடுக்கப்பட்டுள்ள சமூக கௌரவத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் போராட்டத்தை முன்னெடுப்பது காலத்தின் கட்டாயம்!

jTScYcS

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com


1 comment:

Ralli said...

Though we know AKD cannot be elected, we could create a 3rd political power against this Oligarchy. It will be a good move for the long run and will give a warning signal to whoever come to power at this time.

Post a Comment