எதிரிகளின் சதி: பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு குடும்பத்தினர் கடிதம் - sonakar.com

Post Top Ad

Sunday 1 September 2019

எதிரிகளின் சதி: பிரதிப் பொலிஸ் மா அதிபருக்கு குடும்பத்தினர் கடிதம்


இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் முன்னாள் தலைவர் உஸ்தாத் ரஷீத் ஹஜ்ஜுல் அக்பர் நள்ளிரவில் விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்டு தடுப்புக் காவலில் வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் அவரது குடும்ப உறுப்பினர்கள் அதிருப்தியை வெளியிட்டுள்ளனர். தீவிரப் போக்குக்கு எதிராக பல வருடங்களாக எழுதியும் பேசியும் வந்துள்ள அவரை தடுப்புக் காவலில் வைத்துள்ளமை குறித்தும் அவர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். ஆகஸ்ட் 25ஆம் திகதி நள்ளிரவு 12.30 மணியளவில் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவு (CCD) அதிகாரிகளால்  விசாரணைக்கென அழைத்துச் செல்லப்பட்ட உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இதுவரை விடுவிக்கப்படவில்லை. 



தனது உடன் பிறந்த சகோதரனின் இரு மகன்களும் தீவிரக் கருத்துக்களை வெளியிட்டு பொருத்தமற்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டதன் காரணமாக 2015ஆம் ஆண்டு இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் இணை அமைப்பான ஸ்ரீலங்கா இஸ்லாமிய மாணவர் இயக்கத்திலிருந்து அவர்கள் விலக்கப்படுவதற்கு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களே ஆலோசனை கூறியிருந்தார். அவ்வாறே, 2018ஆம் ஆண்டு உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக இருக்கும்போதே அவரது குறித்த சகோதரரும் ஜமாஅத்தே இஸ்லாமியிலிருந்து அங்கத்துவ நீக்கம் செய்யப்பட்டார். உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களின் குடும்பத்தினரால் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் ஜகத் அபேசிரிவர்த்தனவுக்கு அனுப்பிவைக்கப்பட்ட 27.08.2019 திகதியிடப்பட்ட கடிதத்தில் மேற்சொன்ன விடயங்கள் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளன.  

26.12.2018ஆம் திகதியன்று கடுகண்ணாவ பகுதியில் புத்தர் சிலையை சேதப்படுத்திய குற்றச்சாட்டின் பேரில் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களது சகோதரரின் இரு மகன்களும் பின்னர் கைது செய்யப்பட்டனர். புத்தர் சிலைகள் சேதப்படுத்தப்படுவதற்கு சில வருடங்களுக்கு முன்னரே தனது உறவினர்களை அவர்களது தீவிரக் கருத்துக்கள் காரணமாகவும் பொருத்தமற்ற நடவடிக்கைகள் காரணமாகவும் அவர்களது அமைப்பிலிருந்து வெளியேற்றுவதற்கு காரணமாக அமைந்த, நடுநிலைமிக்க ஒருவரான அவரின் திடீர் கைது குறித்து அவரது சட்டத்தரணிகள் தமது விசனத்தை வெளிப்படுத்தியுள்ளனர். ஏனைய மதத்தவர்களின் வழிபாட்டு தெய்வங்கள் கொச்சைப்படுத்தப்படுவதை அல்குர்ஆன் வன்மையாகக் கண்டிக்கிறது. புத்தர் சிலைக்கு சேதம் விளைவித்த நிகழ்வு இஸ்லாமியப் போதனைகளுக்கு முற்றிலும் மாற்றமான செயல் எனவும் நாகரிகமிக்க சமூகம் ஒன்றில் வாழ்கின்ற எந்தவொறு மனிதராலும் ஏற்றுக் கொள்ள முடியாத விடயம் எனவும் கொழும்பு குற்றத் தடுப்பு பிரிவுக்கு சட்டத்தரணிகள் வழங்கியுள்ள அறிக்ககையில் வலியுறுத்தப்பட்டுள்ளது. 

மேலும் கொழும்பு குற்றத் தடுப்புப் பிரிவினர் உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை விசாரணைக்காக ஆஜாராகுமாறு கோரி இருந்தால் அவராகவே அங்கு ஆஜராகி இருந்திருப்பார் என்றும் அவர்கள் தெரிவித்தனர்.  

சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அபேயசிறிவர்தனே அவர்களுக்கான கடிதத்தில் அவரின் சட்டத்தரணிகள் மேலும் தெரிவித்துள்ளதாவது, "உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் இந்நாட்டு மக்களுக்கும் சமூகத்துக்கும் தன்னாலான சேவையை அயராது வழங்கிய கீர்த்திமிக்க சமூகத் தலைவர் என்பதையும் நாடு முழுவதும் 85 கிளைகளோடு வியாபித்து இயங்கும் இலங்கை ஜமாஅத்தே இஸ்லாமியின் தலைவராக பலமுறை தெரிவுசெய்யப்பட்டு 1994ஆம் ஆண்டு முதல் 2018ஆம் ஆண்டு வரை அவ்வியக்கத்தை கடின உழைப்போடும் நேரிய சிந்தனையோடும் வழிநடத்திய, வெகுஜன ஆதரவைப் பெற்ற ஒரு தலைவர் என்பதையும்  உங்களுக்கு அறியப்படுத்த விரும்புகின்றோம்"

"கடந்த 08 மாதங்களாக நடைபெற்று வருகின்ற புலன்விசாரணைகளுக்கூடாக வெளியேற்றப்பட்ட குறித்த தந்தையும் அவரது இரு புதல்வர்களும் தமக்கு ஏற்பட்ட கோபாவேசத்தின் காரணமாக உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களையும் இயக்கத்தையும் தொடர்ந்தேர்ச்சியாக விமர்சித்து வந்திருப்பதை அறிய முடியுமாக இருந்திருக்கக் கூடும்.

இப்பின்னணியில், உஸ்தாத் ஹஜ்ஜுல் அக்பர் அவர்களை தொந்தரவு செய்யும் முகமாக அவருக்கு எதிரான நிகழ்ச்சிநிரல்களைக் கொண்ட தரப்பினர் சில தவறான தகவல்களை வழங்கியிருப்பதற்கு உறுதியான சாத்தியப்பாடுகள் இருக்கின்றன.”

-Jemsith Azeez

No comments:

Post a Comment