பொங்கியெழும் 'அநுர' உணர்வும் சூழ்நிலைக் கொந்தளிப்பும்! - sonakar.com

Post Top Ad

Saturday 24 August 2019

பொங்கியெழும் 'அநுர' உணர்வும் சூழ்நிலைக் கொந்தளிப்பும்!


சம நீதி, பொதுவுடமை, அரசிலாவாதம், உழைக்கும் மக்களின் உரிமைப் போராட்டம் என்று வரும் போது கம்யுனிசம் தெரிந்தோ தெரியாமலோ சாதாரண மக்களிடம் தாக்கம் செலுத்தும் ஒரு விடயம். இதன்பால் சார்ந்து அரசியலில் ஈடுபடுபவர்கள் இடதுசாரிகள் (Left-wing) என அறியப்படுகிறார்கள்.



சமூக சமத்துவத்தை ஆதரிக்கின்ற அல்லது ஏற்றுக்கொள்கின்ற நிலைப்பாடே இது. அந்த அடிப்படையில், சமத்துவத்தையும், ஏற்றத்தாழ்வில்லா சமூகத்தையும் கட்டியெழுப்புவதையும் வாழ்வியல் அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டிய முஸ்லிம் சமூகம் இயல்பாகவே இக்கொள்கையைப் பயிற்சி செய்யும் யதார்த்தத்தைக் கொண்டிருக்க வேண்டும். துரதிஷ்டவசமாக இவை வெள்ளிக்கிழமை குத்பாக்களிலும் ரமழானுடைய காலத்திலும் உலமாக்களால் பேசப்படுவதோடும் நன்மையை வேண்டி அதனைக் கேட்டுக் கொண்டிருப்பதோடும் முடிந்து விடுகிறது.

பயானில் இருந்து எழுந்து வந்ததும் பெரும்பாலும் சமூகம் அதை மறந்து விடும். ஆனாலும், அவ்வப்போது நீதியெங்கே? நீதியான அரசெங்கே? பொலிஸ் எங்கே? பாதுகாப்பு அமைச்சர் எங்கே? என்று தான் விரல் நீட்டுபவர்கள் தம் கடமையைச் செய்து விட்டார்களா? என்று மாத்திரம் கேள்வி கேட்கும். இப்படிக் கேட்டு அலை மோதிக் கொண்டிருக்கும் போது சிங்கள-பௌத்த மக்கள் மத்தியில் பாரிய கவனத்தை ஈர்க்காத விடயங்களில் சிங்கள அரசியல்வாதிகளிடமிருந்தும் சில குரல்கள் கேட்கும், உடனே தனக்காகப் பேசிய அந்த அரசியல்;வாதியைப் புகழ்ந்து தள்ளி அவனுக்காக பேஸ்புக்கில் நான்கு ஷெயார், மஃரிபுக்குப் பிறகு இரண்டு பேரோடு பெருமைப் பேச்சு என்று தன் கடமையை நிறைவேற்றி சராசரி சமூகப் போராளி அடங்கி விடுகிறான்.

தவிரவும், காடையர்கள் அப்பாவி மக்களைத் தாக்க வரும் போது தைரியமாக முன் நின்று தானே அடியை வாங்கிக் கொள்ளக் கூடிய பாலித்த தெவரப்பெரும போன்றவர்களும் அவ்வப்போது சமநீதி பேசினாலும் சந்தர்ப்பம் சரியில்லையென்றால் மாறி நின்று கேள்வி கேட்கும் ரஞ்சன் ராமநாயக்க போன்றோரும் கூட இருக்கிறார்கள். இதில் எம் சமூகம் எதைக் கவனிக்கிறது? எதைக் கவனிக்காமல் விடுகிறது என்பதெல்லாம் அவரவர் விருப்பு, கட்சிப் பற்று, அரசியல் எதிர்பார்ப்பு போன்றவை கொண்டு அளவிடப்படுகிறது.

ஒரு எல்லைக்குட்பட்ட ரீதியில் பொதுவாகவே சமூக சமத்துவம், ஊழல் மற்றும் அநீதிகளுக்கு எதிராகக் குரல் கொடுப்பதில் கடந்த இரு தசாப்த காலத்தில் இலங்கை அரசியலில் ஜே.வி.பி என அறியப்படும் மக்கள் விடுதலை முன்னணி சிறப்பாகச் செயற்பட்டு வருகிறது. ஆயினும், முன் சொன்னது போன்று தீவிரமாக சிங்கள-பௌத்த மக்களின் எதிர்ப்பை சம்பாதிக்கக் கூடிய விடயங்களில் அக்கட்சியும் மௌனம் சாதித்துக் கொள்ளும் வழக்கத்தைக் கொண்டுள்ளதை அண்மைய மே மாத வன்முறைகளின் போதும் கண்டோம்.

ஆயினும், தேசிய அரசியல் விவகாரங்கள், ஊழல் முறைகேடுகளைச் சுட்டிக்காட்டுவதில் அதனை ரசிக்கத் தக்க வகையில் மக்களுக்கு எடுத்துச் சொல்வதிலும், புரிய வைப்பதிலும் இக்கட்சி மகத்தான பணியைச் செய்து வருகிறது என்றால் மிகையில்லை. குறிப்பாக அதன் தற்போதைய முன்னணி பேச்சாளர்கள், செயற்பாட்டாளர்கள் அப்பணியை செவ்வெனே செய்து வருகிறார்கள். அத்துடன் இடை நிலை உறுப்பினர்கள் கூட தம் கண் முன்னால் நடக்கும் அநீதிகளை பகிரங்கப்படுத்தி பொது மக்கள் பணம் - பொருளைக் காப்பாற்றி வருகிறார்கள்.  சரியாக ஒரு வருடத்துக்கு முன்பாக, மாதத்துக்கு இரண்டு தடவையே கூடும் மேல் மாகாண சபை தலா 640,000 ரூபா செலவில் 125 இருக்கைகளை வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்ய முனைந்த ஊழலை தட்டிக் கேட்டு மக்கள் பணம் வீண் விரயமாக்கப்படுவதைத் தடுத்ததும் துடிப்புள்ள ஜே.வி.பி உறுப்பினர் ஒருவரே. இத்தனைக்கும் மேல் மாகாண சபையிலே இருப்பது 104 உறுப்பினர்கள், விழிப்புடன் செயற்பட்டு அந்த சந்தர்ப்பத்தில் 8 கோடி ரூபா காப்பற்றப்பட்டது.

இவையெல்லாம் ரசிக்க மாத்திரமன்றி, பாராட்டவும் வேண்டிய விடயங்கள். அது மாத்திரமன்றி தேசிய பிரச்சினைகளின் போது தக்க சமயத்தில் ஜே.வி.பி தரப்பில். குறிப்பாக நாடாளுமன்றில் அக்கட்சியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க எழுப்பும் குரல் பலராலும் அவதானிக்கப்பட்டும் - பாராட்டப்பட்டும் வந்துள்ளது. அவரது கேள்விகள் புத்தி சாதுர்யமாகவும் தோலுரிப்பதாகவும் கூட அமைந்து வந்துள்ளது என்பது மறுக்க முடியாத உண்மை.

இப்பின்னணியில், தேர்தல் காலத்தில் ஜே.வி.பி பிரச்சாரங்களில் வெகுவாக இரசிக்கப்படுவதுண்டு. ஆனாலும் கைதட்டல்கள் வாக்குகளாக மாறி தேர்தலில் பேசத் தவறுவதனால் நாடாளுமன்ற தேர்தல் வரலாற்றில் 2004ம் ஆண்டு அக்கட்சி கண்டிருந்த எழுச்சி பின் வந்த காலத்தில் வீழ்ச்சியடைந்தது.

அவ்வாண்டின் பொதுத் தேர்தலில் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் (UPFA) அங்கமாகப் போட்டியிட்டு ஜே.வி.பி பெற்றிருந்த 39 நாடாளுமன்ற ஆசனங்களே இதுவரை அக்கட்சி கண்ட மாபெரும் அரசியல் வெற்றியென சுட்டிக்காட்டுவது தகும். அதற்கு முந்தைய தேர்தல்களைக் கூர்ந்து அவதானித்தால் 1994ம் ஆண்டு பிரதான அரசியலில் இணைந்து கொண்ட ஜே.வி.பி 1 ஆசனத்தையே பெற்றிருந்தது. எனினும், 2000ம் ஆண்டு 10 ஆகவும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலகியதோடு ஏற்பட்ட சூழ்நிலையால் 2001ம் ஆண்டு நடந்த அடுத்த தேர்தலில் 16 ஆசனங்களையும் பெற்று ஜே.வி.பி வளர்ச்சி பெற்றிருந்தது.

இத்தொடர்ச்சியில் 2004ம் ஆண்டு பொதுத் தேர்தலில் UPFA கூட்டணியின் அங்கமாகப் பெற்றுக் கொண்ட 39 ஆசனங்கள் ஜே.வி.பி மீது பெரும் எதிர்பார்ப்பையும் மூன்றாவது சக்தியின் உருவாக்கத்தைப் பறைசாற்றுவதாகவும் அமைந்திருந்தது. ஆனாலும், அதற்கடுத்து வந்த 2010 பொதுத் தேர்தலில் 2001ம் ஆண்டோடு ஒப்பிடுகையில் நான்கு இலட்சம் வாக்குகளை இழந்து 4 ஆசனங்களையே இக்கட்சி வென்றது. அதற்கடுத்து 2014ல் தற்போதைய தலைவர் அநுர குமார திசாநாயக்க பொறுப்பேற்ற பின் கடந்த 2015 பொதுத் தேர்தலில் ஒரு லட்சம் வாக்குகள் (543,944) அதிகமாகப் பெற்று 6 ஆசனங்களைப் பெற்றுக்கொண்டுள்ளது ஜே.வி.பி. இது மொத்த வாக்குகளின் 4.87 வீதமாகும். அத்துடன் 2001ல் பெற்றுக்கொண்ட வாக்குகள் 815,353 ஆகும். 

இந்நிலையில், அநுர குமார திசாநயக்கவின் வரவும் அவரே ஜனாதிபதி வேட்பாளரான உற்சாகமும், பெரமுன வேட்பாளரான கோட்டாபே ராஜபக்ச மீதான அச்சமும் அல்லது வெறுப்பும் நடைமுறை அரசு மீதான சலிப்பும் இணைந்து தற்போது ஏற்படுத்தியிருக்கும் உணர்வலையை சரிவரப் புரிந்து கொள்வதும் அவசியப்படுகிறது. அதனடிப்படையில் இன்றைய கால கட்டத்தில் சமூக வலைத்தளங்கள் மற்றும் அரசியல் பேச்சுத் தளத்தில் ஏற்பட்டிருக்கும் புதிய எதிர்பார்ப்பானது முஸ்லிம் சமூகம் கடந்த இரு ஜனாதிபதி தேர்தல்களிலும் நம்பி ஏமாந்ததன் பிரதிபலிப்பு என்று சொன்னால் கூட பொருந்தும்.

கடந்த ஐந்து வருட காலத்தில், பொதுவாக இலங்கையின் முக்கிய அரசியல் தலைவர்கள் அனைவரையுமே முஸ்லிம்குரல் வானொலி மற்றும் சோனகர்.கொம்முக்காக நான் நேர்காணல் செய்திருக்கிறேன். அநுர குமார திசாநாயக்கவும் அதில் ஒருவர். வெளிப்படையாகவே பேசுவதென்றால் 2014ம் வருடம் மே மாதம் 31ம் திகதி அவரை நேர்காணல் செய்த போது, எனது கேள்விகள் எல்லாவற்றையும் முஸ்லிம் கோணத்திலிருந்தும் - முஸ்லிம் எதிர்பார்ப்பிலிருந்தும் முன் வைப்பதற்கு மனம் தயங்கியது.

கடந்த வருடம், நெதர்லாந்து வெளியுறவுத்துறை அமைச்சு மற்றும் சூரிக் பல்கலை அனுசரணையில் Cepa நிறுவனம் கொழும்பில் நடாத்திய ஆய்வு மாநாடொன்றில் நான் கலந்து கொள்ள வந்திருந்தேன். அதன் போது இலங்கை முஸ்லிம் சமூகத்தை அடிப்படையாகக் கொண்டதே எனது ஆய்வாகவும் அது சார்ந்த உரையாகவும் இருந்தது. இதன் போது என்னதான் நான் மார்க்க ரீதியில் அடையாளப்படுத்தப்படும் ஒரு இனக் கூறைப் பற்றிப் பேசினாலும் அந்தப் பேச்சு நாளடைவில் மத ரீதியிலேயே பார்க்கப்படும் என்பது எதிர்பார்க்கப்பட்டிருந்தது. அத்துடன் கல்வியியலாளர்கள் மட்டத்தில் நான் ஒரு மதவாதியாகவும் பார்க்கப்படக்கூடும். அதையும் மீறி நான் அந்த ஆய்வை சமர்ப்பித்ததன் அடிப்படை நோக்கம் என்னவெனில், சர்வதேச அளவில் புத்திஜீவிகள், சிந்தனையாளர்கள் கலந்து கொள்ளும் ஆய்வு மாநாடுகளில் நம்மைப் பற்றிய ஆவணப்படுத்தல் அவசியம் என்பதனாலாகும். 

இம்மாநாட்டில் என்னோடு கலந்து கொண்டிருந்த சூரிக் பல்கலை பேராசிரியர் கலாநிதி பியா ஹொலன்பக் மாநாட்டின் இறுதியில் என்னை அணுகி, இதற்கு முன்னர் பேராசிரியர் ஹஸ்புல்லாஹ் இதைப் பற்றி எம்மோடு பேசியிருக்கிறார், ஆனாலும் ஆவணப்படுத்தியதில்லை, உங்கள் முயற்சியைக் கை விட்டு விடாதீர்கள் என்று கூறினார். இத்தேவை கருதியே எனக்குக் கிடைத்த அந்த வாய்ப்பை சமூகம் சார்ந்த விடயமாகவே முன் வைத்திருந்த எனக்கு அது மகிழ்ச்சியாகவே இருந்தது. எனினும், மாநாட்டின் இறுதியறிக்கையில், எதிர்பார்த்தது போன்று, நான் மத ரீதியிலான அடிப்படையை உள் வாங்க வலியுறுத்தியதாக எழுதியிருந்தார்கள். நான் அவர்களை திருத்த முயற்சிக்கவில்லை ஏனெனில் நாம் பேச ஆரம்பித்திருக்கும் விடயம் பேசப் பேசவே புரிந்து கொள்ளப்படும், பழகும், அறிந்து கொள்ளப்படும்.

சாதாரணமாகவே கூகுளில் சென்று 'தமிழ் டயஸ்போரா' என்று நீங்கள் தேடினால் ஆயிரக்கணக்கான ஆவணங்கள், பல்கலைக்கழக ஆய்வுகள், சர்வதேச அறிக்கைகள் பட்டியலிடப்படும். அதே சந்தர்ப்பத்தில் எம்மைப் பற்றி எழுதவும் - தேடவும் கூட ஆளில்லாத நிலையே காணப்படுகிறது. அதைப் பொருட்படுத்தாது முடிந்தவர்கள் முன்னெடுக்க வேண்டும் என்பதே வேண்டுகோளும் அதுவே என் முயற்சிகளின் அடிப்படையும்.

இவ்வாறு, சர்வதேச மட்டத்தில் மதவாதியாகப் பார்க்கப்பட்டாலும் கூட பரவாயில்லையென தயங்காது ஆய்வுகளை சமர்ப்பித்தாலும் கூட 2014ல் ஜே.வி.பி தலைவர் அநுர குமாரவுடனான நேர்காணலில் என்னால் அவ்வாறு எல்லாக் கேள்விகளையும் முஸ்லிம் சமூகத்தின் தளத்திலிருந்து மாத்திரம் கேட்க முடியவில்லை, மனது உண்மையாகவே தயங்கியது. காரணம், அவர்கள் பேசும் அரசியல் மொழி இன-மத பேதங்களுக்கு அப்பாற்பட்டது. இந்த கொள்கைத் தளத்தைப் புரிந்து கொள்ளாத நிலையிலேயே மற்றைய வெறுப்பையும் சலிப்பையும் ஜே.வி.பிக்கான ஆதரவுத்தளமாக தற்சமயம் காண்பித்துக் கொண்டிருக்கிறது முஸ்லிம் சமூகம். ஆனாலும், இது எது வரை? என்ற கேள்வியும் உண்டு. 

முஸ்லிம் கட்சிகள் தெளிவாகவும் அமைதியாகவும் காத்திருக்கின்றன. 2015 ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் முதலில் மக்களே முடிவெடுத்தார்கள். அதனைப் பின்பற்றி நிர்ப்பந்தத்தின் பேரில் ஆதரவளித்துக் கொண்டது போன்று இம்முறையும்; ஏதேனும் நடந்து விடுமா? என்ற சிறு சந்தேகமும் மக்கள் மத்தியில் இருக்கத்தான் செய்கிறது. அதற்கான சாத்தியக்கூறு பற்றி உண்மையான கள ஆய்வொன்றைச் செய்வதற்கு முதலில் ஐக்கிய தேசியக் கட்சி அதன் வேட்பாளரை அறிவித்தாக வேண்டும். 

ஐக்கிய தேசியக் கட்சியும் கூட்டணிக்கட்சிகளும் ஒன்றிணைந்து சஜித் பிரேமதாசவை வேட்பாளராக்கினால் இந்த உணர்வோங்கலும், துடிப்பும் எந்த நிலையை அடையும்? அதன் பின் அநுர குமார திசாநாயக்கவுக்கான ஆதரவுக் களம் எவ்வகையான மாற்றத்தைக் காணும் என்பது இன்னும் சில வாரங்களில் அறிந்து கொள்ளக் கூடிய ஒன்று. ஆனாலும், இதன் இடை நடுவில் அநுர குமார திசாநாயக்கவை 'தேசிய மக்கள் சக்தி' எனும் பொது அமைப்பின் கீழ் ஆதரிக்க அணி திரண்ட அமைப்புகளின் பட்டியலும் என் கவனத்தை ஈர்த்தது.

ஜே.வி.பியின் சில உத்தியோகபூர்வ சமூக வலைத்தள குழுமங்களில் இல்லாத அளவு அனல் பறக்கும் ஆர்வமும் - உணர்வுக் கொந்தளிப்பும் வேட்பாளர் அறிவிப்பின் பின் திடீர் என ஆர்ப்பரித்துக் கொண்டிருக்கும் வட்ஸ்அப், வைபர் மற்றும ;பேஸ்புக் குழுமங்களை அவதானித்ததும் இதில் ஒரு காரணம். இவ்வாறு முஸ்லிம் சமூகத்தவர்களினால் ஆரம்பிக்கப்பட்ட பல குழுமங்களின் இயக்குனர்களாக இருப்பவர்களிடம் ஒரு ஒற்றுமை காணப்படுகிறது. அதாவது அவர்களில் பெரும்பாலானோர் குறிப்பிட்ட ஒரு கொள்கை இயக்கத்தைச் சார்ந்தவர்களாக இருக்கிறார்கள்.

இலங்கை முஸ்லிம்கள் வாழும் இடங்கள் எல்லாம் தலைமைத்துவப் போட்டியை உருவாக்கி, சமூகத் தலைமையைக் கையகப்படுத்திக் கொள்ள போட்டியிடும் ஒரு இஸ்லாமிய கொள்கை இயக்கம் என்பதால் இப்பார்வையை சற்று ஆழமாகப் பார்க்க வேண்டியிருந்தது. உண்மையில் இவர்கள் ஆதரிப்பது ஜே.வி.பியையா அல்லது இது கோட்டாபேயின் வெற்றிக்கான மறைமுக உழைப்பா? என்ற வலுவான சந்தேகம் எனக்கு உருவாக நியாயமான நேரடி அனுபவக் காரணம் இருக்கிறது. 

இதேவேளை, அடுத்த ஜனாதிபதியாக யார் வர வேண்டும் என்ற விவகாரத்தில்; மக்களின் நாடித்துடிப்பை அறிந்து கொள்ள இன்னும் அவகாசமிருக்கிறது என்பதால் சூழ்நிலை எதிர்வினையற்ற நிலையில் முஸ்லிம் அரசியல் பிரதிநிதிகள் காத்திருக்கிறார்கள். ஆனாலும், இந்த உணர்வோட்டத்தை இப்போதிருந்தே மூலதனமாக்கும் முயற்சியும் இடம்பெற்றுக் கொண்டிருக்கிறது. எது எவ்வாறாயினும், முன் சொன்னதற்கேற்ப ஐக்கிய தேசியக் கட்சியின் வேட்பாளர் அறிவிப்பு கள நிலையை மாற்றுவது திண்ணம். 

மைய-வலக் (Centre-right) கொள்கை கொண்ட கட்சியாக இருப்பினும் கூட ஐக்கிய தேசியக் கட்சிக்குள் வரலாறு நெடுகிலும் இரு வகையான சிந்தனையோட்டம் அல்லது அவ்வப் போது பழமைவாதத்துக்கும் - புதுமைவாதத்துக்குமிடையிலான கருத்து முரண்பாடுகள் உருவாகியுள்ளதும் மரபு. நல்லவர், வல்லவர், படித்தவர், சிறந்த தொழிலதிபர் போன்ற எதிர்பார்ப்புகளுடனும் கம்பஹாவில் விருப்பு வாக்குகளை அள்ளித் தன்னை நிலை நிறுத்தியவருமான கரு ஜயசூரிய கூட 2007ல் தலைமைத்துவ மாற்றம் கோரிக் கட்சி தாவியிருந்தார். சஜித் பிரேமதாசவோ உள்ளிருந்தே தன்னையும் தனக்கான ஆதரவுத் தளத்தையம் தயார் படுத்தி, இன்றைய அளவில் ரணி;ல், மலிக், அகில ஹர்ஷ, ரவி போன்றவர்கள் விரும்பும் பாதையும் சஜித், ஹரின், சுஜீவ, ரஞ்சித் மற்றும் பின் வரிசை இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரும்பும் பாதையும் என இரு பிரிவுகளைப் புடம் போட்டுக் காட்டியிருக்கிறார்.

எனினும், கூட்டணி என்று வரும் போது ஐக்கிய தேசிய முன்னணி அல்லது தேசிய ஜனநாயக முன்னணியின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கையின் ஒரு பகுதியான 55 நாடாளுமன்ற உறுப்பினர்களே இன்றைய அளவில் சஜித் பிரேமதாசவை ஆதரிக்கின்றனர். ஆகக்குறைந்தது 64 பேர் இன்னும் இணங்கவில்லையென்ற நிலையில் மைத்ரிபால சிறிசேனவின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எவ்வகையில் தேர்தல் களத்தை சூடாக்கும் என்பதும் பொறுமையாக அவதானிக்கப்பட வேண்டிய விடயம்.

முழுமையான நிலவரம் தெளிவாகும் வரை, சலிப்பு-வெறுப்பு மாற்றத்தின் தாகமாக இன்று பொங்கியெழுந்துள்ள உணர்வலையை தவறான சக்திகள் இழுத்துச் சென்று விடாமலும் வாக்கு வங்கி சிதறிவிடாமல் பாதுகாப்பதும் கூட காலத்தின் கட்டாயத் தேவையாக இருக்கிறது. 

கத்திரிக்காய் முற்றினால் கடைவீதிக்கு வந்தாக வேண்டும் என்பார்கள், அதற்குள் என்ன அவசரம்? நின்று – நிதானித்து முடிவெடுக்கலாம். குறிப்பாக சிங்கள மக்களிடம் எடுத்துச் சொல்லி, அவர்கள் வாக்குப் பலத்தையும் இணைத்து, ஜனநாயகத்தைக் காப்பாற்றும் போராட்டம் காத்திருக்கிறது என்பதை நினைவில் வைத்துக் கொள்வோம்.

wjR0LbU
-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com





No comments:

Post a Comment