மூன்றாகப் பிரியும் கல்முனை; மருதமுனைக்கும் செயலகம்: ஹரீஸ்! - sonakar.com

Post Top Ad

Wednesday 24 July 2019

மூன்றாகப் பிரியும் கல்முனை; மருதமுனைக்கும் செயலகம்: ஹரீஸ்!


கல்முனை செயலகத்தை யாருக்கும் பாதிப்பில்லாத வகையில் கல்முனை பிரதேச செயலகம், கல்முனை வடக்கு பிரதேச செயலகம், மருதமுனை- நற்பட்டிமுனை பிரதேசத்தை இணைத்து மருதமுனை பிரதேச செயலகம் என மூன்று நிர்வாக செயலகங்களாக பிரிக்க கொள்கையளவில் இணக்கம் காணப்பட்டுள்ளதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் பிரதி தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமான எச்.எம்.எம். ஹரீஸ் தெரிவித்தார். 



கல்முனை விவகாரம் குறித்து தொடர்ந்தும் உள்ளுராட்சி, மாகாண சபைகள், உள்நாட்டலுவல்கள் அமைச்சர் வஜிர அபயவர்த்தன அவர்களை சந்தித்து வரும் முஸ்லிம், தமிழ் தரப்பினரின் நிலைப்பாடுகள் தொடர்பில் வினவியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

மேலும் கருத்து தெரிவித்த அவர்,  இன்று உள்நாட்டு அலுவல்கள் அமைச்சர் வஜிர அபேவர்த்தன அவர்களை அமைச்சில் வைத்து ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான பாராளுமன்ற உறுப்பினர்களான எச்.எம்.எம்.ஹரீஸ் ஆகிய நானும் ஏ.எல்.எம். நஸீர், எம்.எஸ். தௌபீக், செய்யத் அலீஸாஹிர் மௌலானா ஆகியோர் சந்தித்து பேசினோம். 

கல்முனை பிரதேச செயலக எல்லைப் பிரச்சினையை நீண்ட நேரம் பேசினோம். இங்கு நற்பட்டிமுனை மருதமுனை மக்களின் தேவைகளை உணர்த்தி மருதமுனைக்கான பிரதேச செயலக உருவாக்கத்தின் அவசியம், மற்றும் அது சார்பிலான சாத்தியபாடுகளை தெளிவாக விளக்கி கூறியவுடன் அந்த கோரிக்கையின் தேவையை அமைச்சரும் ஏற்றுக்கொண்டார். இந்த சந்திப்பில் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் நிரஞ்சனும் கலந்துகொண்டிருந்தார். இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து அமைச்சர் வஜிர பேச உள்ளதாகவும் தெரிவித்தார்.

மேலும் இந்த பிரதேச செயலக பிரச்சினை நிறைவுக்கு வரும் அன்றைய தினத்தில் சாய்ந்தமருது மக்களின் கோரிக்கையாக இருக்கும் நகரசபையை உருவாக்குதல் என தீர்மானிக்கப்பட்டதாக பாராளுமன்ற உறுப்பினர் எச்.எம்.எம். ஹரீஸ் மேலும் விளக்கமளித்தார். 

-நூருள் ஹுதா உமர்

No comments:

Post a Comment