பேரினவாத அழுத்தம்: தானும் குழம்பி நாட்டையும் குழப்பும் ஜனாதிபதி! - sonakar.com

Post Top Ad

Sunday 2 June 2019

பேரினவாத அழுத்தம்: தானும் குழம்பி நாட்டையும் குழப்பும் ஜனாதிபதி!


பலவீனமான அரசாங்கத்தை முன்னெடுக்கும் அதேவேளை முழுக் கட்டுப்பாட்டில் இல்லாத ஒரு கட்சியின் தலைவராக இருக்கும் மைத்ரிபால சிறிசேன முழு அளவிலான குழப்பத்துக்குள்ளாக்கப்பட்டிருக்கிறார்.

ஈஸ்டர் தாக்குதலின் போர்வையில் மீண்டும் இவ்வருடம் எழுச்சி கண்ட பேரினவாத சக்திகள் அரசியல் பலவீனத்தை வேறு திசைக்கு மாற்றிக் கொண்டுள்ளதால் ஜனாதிபதி தனது கட்டுப்பாட்டையிழந்து தவிக்கும் சூழ்நிலை உருவாகியுள்ளது.


ஸ்திரத்தன்மையற்ற ஒரு தேசத்தைக் கட்டியெழுப்பிய சிறந்த தலைவனாக மாற வேண்டிய மைத்ரி, இப்பின்னணியில் கையாலாகாத ஒரு தலைவனாக உலகின் கண்களுக்குக் காட்டப்பட்டுக் கொண்டிருக்கிறார். இதனை சரி வரப் பயன்படுத்தும் எதிர்க்கட்சிகள், தமது தேவைகளை நிறைவேற்றிக் கொள்ள உருவாக்கியுள்ள போராட்டங்களை எதிர் கொள்ள முடியாது, தனது அரசியல் நிகழ்ச்சி நிரலுக்காகத் தானே நியமித்த ஆளுனர்களை பதவி நீக்கவும் முடியாமல் நீக்கியே ஆக வேண்டும் என்ற சூழ்நிலையில் ஜனாதிபதி தவித்துக் கொண்டிருக்கிறார்.

கடந்த நான்கரை வருடங்கள் மஹிந்த அணி மேற்கொண்டு வரும் முயற்சிகள், முடிவை நெருங்கும் நிலையிலாவது கை கூடும் என்ற நம்பிக்கையில் அச்சுறுத்தலை அதிகரித்துள்ளது. இதனால் வெளிப்படையாக சமூகத்துக்காகக் குரல் கொடுக்கக் கூடிய அரசியல் தலைமைகள் அடக்கி வைக்கப்படும் என்ற செய்தியை உரத்துச் சொல்வதே பேரினவாத சக்திகளின் முக்கிய நோக்காக இருக்கிறது.

2018 ஒக்டோபரில் கட்சி மாறியிருந்தால் இன்று ரிசாத் பதியுதீனுக்கு எதிராக முன் வைக்கப்படும் குற்றச்சாட்டுகள் எழுந்திருக்காது என்பது உலகறிந்த இரகசியம். அமைச்சர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள் போன்று வாய் மூடியிருந்திருந்தால் அசாத் சாலியை நீக்க வேண்டும் என்ற குரல் எழுந்திருக்காது. சுயநலம் - தூரநோக்கற்ற பார்வையாக இருந்தாலும் ஓர் எல்லை வரை சமூக நலன் காப்பில் பங்காற்றியிருக்காவிட்டால் ஹிஸ்புல்லாவுக்கும் இந்தப் பிரச்சினை வந்திருக்கப் போவதில்லை.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை ஆதரிக்கும் ஹிஸ்புல்லாவை இழந்தாலும், மன்னாரில் ரிசாதை இழந்தாலும் தனிச் சிங்கள வாக்குகள் ஊடாக ஆட்சி பீடமேற முடியும் எனக் கருதும் எதிர்த் தரப்புகளுக்கு ஈடு கொடுப்பது மைத்ரிபால சிறிசேனவால் முடியாத காரியம். களத்தில் இறங்கிக் காய் நகர்த்த வேண்டிய ஐக்கிய தேசியக் கட்சி, கால்களைப் பின்னிழுத்து இனவாத சூழலுக்கும் தமக்கும் தொடர்பில்லையென நழுவிக் கொள்ள முயல்வது மேலும் மைத்ரியைத் தனிமைப்படுத்தியுள்ளது. ஒக்டோபர் 26 பிரளயத்தில் ஏற்பட்ட மைத்ரி - ரணில் பிளவு இதனை மாத்திரமன்றி ஈற்றில் ஈஸ்டர் தாக்குதல்களுக்கும் காரணியாக மாறியிருக்கிறது.

தற்போது ஒரு ஜனநாயக நாட்டின் சிறுபான்மை மக்களின் அரசியல் பிரதிநிதித்துவத்தை தீர்மானிக்கும் சக்தியாகவும் தம்மை நிலை நாட்டிக்கொள்ள பௌத்த பேரினவாதம் தலையெடுத்துள்ளது. எத்தனை மங்கள சமரவீரர்கள் இந்நாடு பல்லினங்கள் வாழும் பல் கலாச்சாரங்கள் கொண்ட நாடெனக் கூறினாலும், சிங்கள பௌத்தர்களுக்கான ஒரே நாடு இதுதான் எனும் அடிப்படைவாத கோசத்திற்கு முன் அது எடுபடாது.

சிங்கள மக்களின் பெரும்பான்மையையும், முதன்மையையும் முஸ்லிம் சமூகம் ஒரு போதும் நிராகரித்ததோ எதிர்த்ததோ இல்லை. அதைக் கூட ஏப்ரல் 21 வரையான வரலாறாக மாற்றும் வகையில் எதிர்கால சிந்தனையற்ற நடவடிக்கைகளைச் செய்ய இந்த சமூகத்துக்குள்ளிருந்தே ஆட்கள் தேர்வு செய்யப்பட்டிருந்தார்கள் என்ற அளவில், நாம் தவறுக்கு மேல் தவறிப் போன ஒரு சமூகம் என்பது தெட்டத் தெளிவாகியுள்ளது.

எம்மால் எந்த விடயத்திலும் ஒற்றுமைப்படவோ, ஒன்றிணைந்து செயற்படவோ இயலாத அளவுக்கு கொள்கை இயக்கப் பிளவுகளும், அரசியல் பிளவுகளும் வேரூன்றியிருக்க, இன்றைய சூழலில் சரணாகதி அடைவதைப் பற்றியே சிந்தனை ஓடிக் கொண்டிருக்கிறது. இன்று விட்டுக் கொடுத்து நாளை பிடிக்கலாம் என்ற இலங்கை 2015ல் உருவாகியிருக்க வேண்டும். ஆனால் உருவாகவில்லை. இன மையக் கொள்கையினால் உந்திச் செல்லப்படும் நாட்டின் எதிர்காலம் அந்த ஜனநாயக சூழலை உருவாக்கப் போவதுமில்லை.

ஆதலால், இன்றைய தேர்வுகளும் நாளை நாட்டின் மக்கள் தேர்ந்தெடுக்கப் போகும் தலைவர்களுமே இனி வரும் காலத்தின் சூழலை வடிவமைக்க வல்லவர்களாக மாறப் போகிறார்கள். இத்தளத்தில் நின்று கூட ஒற்றுமையாக முடிவெடுக்கும் சூழ்நிலை இன்றளவும் இல்லையாதலால், பிரதேச, பிராந்திய, ஊர் மற்றும் தெரு சார்ந்த சுயாதீன முடிவுகளை மேற்கொண்டு சகவாழ்வுக்காக முஸ்லிம்கள் போராடிக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த நேரத்தில் மௌனித்துப் போயிருக்கும் அரசியல் தலைமைகள் வாய் திறந்தால் இழக்கப் போவது பதவிகள் மாத்திரமே தன் மானம் அல்ல.

ஆனாலும், அதைச் செய்யத் தயாரில்லாத சட்ட சபை உறுப்பினர்கள் 21 பேரை வைத்துக் கொண்டு ஒரு மசோதாவையேனும் உருப்படியாக நிறைவேற்றி, அரசின் நிகழ்ச்சி நிரலை எதிர்கொள்ளத் தயாரில்லை. எந்த ஜனநாயக சக்திகளோடும் கூட்டில்லாத உணர்வு மயப்படுத்தப்பட்ட அரசியலின் விளைவே இது எனச் சொன்னால் இப்போது நம் உள்ளங்கள் ஏற்றுக்கொள்ப் போவதுமில்லை.

ஆனாலும், இன்னும் சில தினங்களுக்குள் எதிர்பார்க்காததை எதிர்பார்க்க வேண்டிய கட்டாய சூழ்நிலை உருவாகியுள்ளது. ஆகவே, மனதைத் திடப்படுத்தி, இறைவனிடம் கையேந்தி, மாற்றத்திற்கான முயற்சியிலும் ஈடுபட ஒவ்வொரு தனி நபரும் முயல வேண்டும்!

- சோனகர்.கொம்

No comments:

Post a Comment