பட்ஜட்: துமிந்தவின் சிறப்பான பதில்; இம்ரான் புகழாரம் - sonakar.com

Post Top Ad

Tuesday, 12 March 2019

பட்ஜட்: துமிந்தவின் சிறப்பான பதில்; இம்ரான் புகழாரம்52 நாள் சூழ்ச்சியில் மூக்குடைபட்ட தரப்பின் அர்த்தமற்ற வாதத்துக்கு துமிந்த திஸாநாயக்க சிறந்த பதில் வழங்கியுள்ளார்  என ஐக்கிய தேசிய கட்சி பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் தெரிவித்தார். திங்கள்கிழமை  மாலை இடம்பெற்ற வரவு செலவு திட்ட விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே இவ்வாறு தெரவித்தார் அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர்,

எதிர்க்கட்சி என்றால் அரசாங்கத்தின் அனைத்து திட்டங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற மனோநிலை காணப்படுவது எமது நாட்டு அரசியலின் துரதிஷ்ட நிலை என்றே சொல்லலாம். வரவு செலவு திட்டத்தின் சாதக பாதகங்களை வைத்து ஆதரிப்பது அல்லது எதிர்ப்பது என்ற நிலை மாறி வரவு செலவு திட்டத்தின் முன்மொழிவுகள் எவ்வளவு சிறப்பாக இருந்தாலும் அதனை தோல்வி காணச்செய்து அரசாங்கத்தை கவிழ்த்து ஆட்சி பீடம்ஏற ஒரு தரப்பு  கனவு காண்கிறது.


இந்த நிலையில் “அரசாங்கத்தின் அனைத்து விடயங்களையும் எதிர்க்க வேண்டும் என்ற எதிர்க்கட்சி கலாசாரத்தை மாற்றியமைக்க வேண்டும்” என்ற சக பாராளுமன்ற உறுப்பினர் நண்பர் துமிந்த திஸாநாயக்கவின் நிலைப்பாட்டை நான் பாராட்டுகின்றேன்.

“நிதி அமைச்சர் மங்கள சமரவீரவால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள இந்த வரவு செலவுத்திட்டம் திருப்தி அளிக்கும் வகையில் அமைந்துள்ளது” என்ற அவரது கூற்று, “ இந்த வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு பெரிய சுமை” என்ற 52 நாள் சூழ்ச்சியில் மூக்குடைபட்ட தரப்பின் அர்த்தமற்ற வாதத்துக்கு தக்க பதிலாக அமைந்துள்ளது.

ஆம் கழிப்பறை வசதிகளற்ற மொனராகலை 35 ஆயிரம் குடும்பங்களுக்கும் ஹம்பாந்தோட்டையின் 1 இலட்சம் அல்லது பதினையாயிரம் குடும்பங்களுக்கும் இன்னும் நாடு முழுவதும் இந்த அடிப்படை வசதியின்றி வாழும் அனைத்து குடும்பங்களுக்கும் அவற்றை சொந்தமாக அமைக்கும் சுமையை இந்த வரவு செலவு திட்டம் சுமத்தியிருக்கிறது.

முன்னாள் ஜனாதிபதியின் தரப்பு வீதிகளில் புலம்பித் திரியும் அளவுக்கு நாம் நாட்டை அபிவிருத்தி செய்வோம் என்று எமது பிரதமர் கௌரவ ரணில் விக்கிரம சிங்க அவர்கள்  கடந்த ஆண்டு  கூறியிருந்ததை நான் இந்த இடத்தில் நினைவு கூர்கின்றேன்.

உச்ச வட்டி வீதத்தில் கடனைப்பெற்று வீதிகளையும் பாலங்களையும் விமானம் இறங்காத விமான நிலையங்களையும் கப்பல் வராத துறைமுகங்களையும் கூட இருப்பவர்களின் ஒப்பந்த இலாபத்துக்காக அமைத்து மக்களை நீண்டகால பெருங்கடன் சுமைக்குள் தள்ளியவர்கள் இன்று இந்த வரவு செலவுத்திட்டம் மக்களுக்கு பெரிய சுமை என்று நீலிக்கண்ணீர் வடிப்பது ஆசியாவின் ஆச்சர்யம் தான்.

14 இலட்சம் அரச ஊழியர்களின் சம்பள உயர்வும் ஓய்வூதிய கொடுப்பனவு அதிகரிப்பும் அரசு மீது அவர்களுக்கு நன்மதிப்பையும் விசுவாசத்தையும் அதிகரித்திருக்கிறது. 2020இல் அரச ஊழியர்களின் சம்பளம் 107 வீதத்தால் அதிகரிக்கும் நிலையை நிதியமைச்சர் ஏற்படுத்தியுள்ளார்.

வறுமை ஒழிப்பு, வாழ்வாதாரத்தை மேம்படுத்தல், அனைத்து மக்களுக்கும் அடிப்படைக் கல்வியை வழங்கல், சுகாதார வசதிகளை மேம்படுத்தல் ஆகியவற்றை இம்முறை வரவு செலவுத்திட்டம் பிரதான நோக்காக கொண்டிருப்பதனால் தான் வழமையான பாணியில் இம்முறை எந்த எதிர்த்தரப்பு கூச்சல் குறுக்கீடுகளை காண முடியவில்லை.

பாடசாலைகளின் உட்கட்டமைப்பு வசதிகளின் மேம்பாட்டுக்காக 32 ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியமைக்காகவும், மாணவர்களுக்கான வட்டியில்லா கடன் உதவிக்காகவும், கிராமிய பாடசாலைகளில் மாணவ மணிகளுக்கு ஒரு கோப்பை பால் இலவசமாக வழங்கும் திட்டத்துக்காகவும், மற்றும் கல்வித்துறைக்கான ஏனைய ஒதுக்கீடுகளுக்காகவும்   கல்வி அமைச்சின் கண்காணிப்பு உறுப்பினர் என்றவகையில் எனது விஷேட நன்றியை தெரிவிக்க விரும்புகின்றேன்.


ஹார்வர்ட் , ஒக்ஸ்போர்ட் , கேம்ப்ரிட்ஜ், எம்ஐடி போன்ற பல்கலைக்கழகங்களுக்கு முதன் முறையாக சிறப்புத் தேர்ச்சி பெறும் 14 மாணவர்கள் உயர்கல்விக்காக அரச புலமைப்பரிசிலின் கீழ் அனுப்பப் பட இருக்கும் திட்டம் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தது. 

அந்த எண்ணிக்கை எதிர்காலத்தில் இன்னும் அதிகரிக்கப்பட வேண்டும். அதுபோல் ஏனைய நாடுகளிலும் உள்ள உலகின் முன்னணி பல்கலைக் கழகங்களுக்கும் இத்திட்டம் விரிவாக்கப்பட வேண்டும். இங்கு ஒரு சந்தேகம் எழுப்பப்படுகிறது.

இவ்வாறு உயர்கல்வி பெறுபவர்கள் நாட்டுக்கு திரும்பி வந்து 10 வருடங்கள் சேவை செய்வார்களா? இது உறுதிப்படுத்தப்பட வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

வடக்கு கிழக்கில் அபிவிருத்திக்காக 5500 மில்லியன் ரூபாய்கள் ஒதுக்கப்பட்டமைக்கு எமது மக்கள் சார்பாக விஷேட நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

அதுபோல் தேயிலைத் தோட்ட தொழிலாளர்களின் சம்பளப் பிரச்சினையை நியாயமான வகையில் தீர்த்து வைக்க தேவையான சகல நடவடிக்கைகளும் எடுக்கப்பட வேண்டும் என்பதையும் இந்த இடத்தில் சுட்டிக்காட்ட விரும்புகின்றேன் என தெரிவித்தார்.

-Sabry

No comments:

Post a comment