சட்டவாக்க சபையும் - சர்வாதிகார போதையும்! - sonakar.com

Post Top Ad

Monday 3 December 2018

சட்டவாக்க சபையும் - சர்வாதிகார போதையும்!



65,610 km² அளவு கொண்ட இத்தீவின் அழகு பற்றி ஆயிரமாயிரம் வருடங்கள் உலகம் பேசி வந்தாலும் கடந்து சென்ற ஒரு மாத காலம் இங்கு இடம்பெறும் அதிகாரப் போராட்டம் சர்வதேசத்தின் மூலை முடுக்கெல்லாம் குட்டித்தீவின் மேல் அழுக்கைக் கொட்டி வருகிறது.

அதிகார வேட்கையின் உச்ச கட்டத்தை அடைந்துள்ள இன்றைய சூழ்நிலையில் நாட்டின் ஒட்டு மொத்த அதிகாரமும் ஒரு தனி மனிதனின் காலடியில் சுருண்டு வீழ்ந்துள்ளது.

அகங்காரத்தின் உச்சத்தில் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுக்க மாட்டாத மூன்று வயதான அரசியல்வாதிகளினாலும் அவர்களது சகாக்களாலும் பல பக்கங்கள் இழுத்துச் சிதைக்கப்படும் இலங்கைத் தீவின் அரசியல் சாசனம் தொடர்பில் உச்ச நீதிமன்றம் நடு நிலையான முடிவுக்கு வந்தால், கடந்த மூன்றரை வருடங்களில் சுயாதீன நீதித்துறையொன்றாவது மிஞ்சியதே என பெருமூச்சு விடலாம்.

ஆனாலும் சட்டத்தின் கருந்துளைகளைக் கண்டறிவதில் வல்லவர்களான எம் அரசியல் தலைமைகள் சட்டவாக்க சபையில் நடாத்திக் கொண்டிருக்கும் அதிகாரப் போட்டியை நீதிமன்றங்களுக்கிடையிலும் கொண்டு சேர்த்து, அதன் மூலம் தம்மை நியாயப்படுத்திக் கொள்ள முயற்சிக்கின்றனர்.

மேன்முறையீட்டு நீதிமன்றில் தடையுத்தரவை உச்ச நீதிமன்றில் மீற முடியும் என மஹிந்த ராஜபக்ச தரப்பு நம்புகின்ற அதேவேளை உச்ச நீதிமன்ற தீர்ப்பையும் மீளாய்வுக்குட்படுத்த அரசியல் முயலும் என எதிர்பார்க்கலாம். அதேவேளை, அனைத்து நீதிமன்றங்களிலும் திருத்தச் சட்டத்தைப் பதிவு செய்து அதனடிப்படையில் சட்டக் குழப்பத்தை விரிவாக்கியிருக்கும் ஐக்கிய தேசியக் கட்சி திருத்தச் சட்டங்களை திருந்த எழுதவில்லையோ எனும் கேள்வியையும் விட்டு வைக்கிறது.

ஒரு காலத்தில் சூரியன் அஸ்தமிக்காத இராஜ்யம் என கருதப்பட்ட பிரித்தானியாவுக்கு என  அரசியல் யாப்பு எழுத்தில் (written constitution) இல்லை. ஆனாலும் அங்கு அமுலில் இருக்கும் அரசியல் சட்டங்களை மொழிபெயர்ப்பதிலோ விளக்கப்படுத்தி சபையில் இணக்கத்தைக் காண்பதிலோ இலங்கையில் காணப்படும் சிக்கலின் சிறு பங்கு கூட இல்லை.

ஆயினும், அண்மையிலேயே எழுதப்பட்ட சட்டத்தினை மொழிபெயர்ப்பதிலும் விளக்குவதிலும் இன்று இரு தரப்பாக நின்று முட்டி மோதிக்கொள்கின்றனர் இலங்கை அரசியல்வாதிகள்.

இத்தனைக்கும் அடிப்படை அதிகார போதை என்பதை விட சர்வாதிகார போதையென்றால் தகும்.

சர்வாதிகாரத்தின் பால் மஹிந்த ராஜபக்சவும் அவரது தோழர்களும் கொண்டிருக்கும் நாட்டம் மிகத் தெளிவானது.அந்த நாட்டத்தினாலேயே நாட்டின் சட்ட திட்டங்களை விட தனி மனிதன் ஆம் - இல்லையில் அவரைச் சூழ்ந்துள்ளவர்கள் அதிக நாட்டம் கொண்டுள்ளார்கள். கூட்டாட்சியின் ஆரம்பத்தில் கூட பழம் தின்று கொட்டை போட்ட மஹிந்த தரப்பினருக்கு எதிர்க்கட்சித் தலைவர் பதவியைப் பெறுவதற்கு யாரிடம் கடிதம் கொடுக்க வேண்டும் என தெரியாமல் போனது வேடிக்கையான விடயமன்று.

அக்கடிதத்தை சபாநாயகரிடம் ஒப்படைக்காமல் ஜனாதிபதியின் செயலாளரிடம் ஒப்படைத்து எதிர்க்கட்சித் தலைவர் பதவியை எதிர்ப்பின்றி ஆர். சம்பந்தனிடம் ஒப்படைத்ததும் இவர்களே. காரணம், அவர்கள் சர்வாதிகாரியின் கீழ் பணியாற்றிப் பழக்கப்பட்டவர்களேயன்றி ஜனநாயக வழிமுறைகளை அறிந்தவர்கள் இல்லை.

என் சிறிய வயதில் பல தெரு ஓரங்களில் முண்டங்களையும் தலைகளும் தனித்தனியாகப் பார்த்து, அச்சத்துடன் ஊறிப்போன ஜே.வி.பி எனும் மூன்றெழுத்து அமைப்பு இன்று ஜனநாயகத்தை உள்வாங்கிப் பெற்றுள்ள வளர்ச்சியும் வியூகமும் காலாகாலமாகத் தம்மை ஜனநாயக வாதிகள் எனக் கூறிக்கொள்பவர்களிடம் இல்லவே இல்லை.

சிறுபான்மை கட்சிகள் இந்த ஒரு சந்தர்ப்பத்தில் விரும்பி..விரும்பாமல் ஜனநாயக்கத்தைக் காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் தம்மை இணைத்துக் கொண்டன. அதனால் ஒரு மாதத்துக்கும் அதிகமான நாட்கள் தற்போது அமைச்சுப் பதவிகள் இன்றியே முஸ்லிம் கட்சிகளின் தலைவர்களும் இருக்கிறார்கள். இதைப்பார்த்து மக்கள் அழவில்லையென்பதால் அவர்களும் இனி அமைச்சுப் பதவிகளுக்குப் பின் சென்று சமூகத்தை அடகு வைக்க மாட்டார்கள் என்பதற்கு எந்த உத்தரவாதமும் இல்லை.

ஆக மொத்தத்தில் தாம் சேர்ந்த ஒவ்வொரு வட்டத்திலும் சர்வ வல்லமை பொருந்தியவராக இருக்க வேண்டும் எனும் போதையே ஒட்டு மொத்த அரசியல் சமூகத்தை வாட்டி வதைக்கிறது. இது சட்டவாக்க சபையின் தரித்திர வரலாறு. இன்னும் வாய்ப்பளிக்கப்படாத ஜே.வி.பியினால் இத் தலைவிதியை மாற்ற முடியுமா என்பது எதிர்காலம் கற்றுத்தரக் கூடிய பாடம்.

அது வரை தவிக்கும் தலைமுறைகள் தவறான பாடத்தையே கற்றுக்கொள்கின்றன என்பதே ஆதங்கம்!

AplKvyK

-Irfan Iqbal
Chief Editor, Sonakar.com

No comments:

Post a Comment