இனியாவது விட்டு ஒதுங்குவாரா மஹிந்த? - sonakar.com

Post Top Ad

Friday 14 December 2018

இனியாவது விட்டு ஒதுங்குவாரா மஹிந்த?


எவ்வழியிலாவது ஒக்டோபர் 26ம் திகதி தமக்குக் கிடைக்கப் பெற்ற பிரதமர் பதவியைத் தக்க வைத்துக்கொள்ள மஹிந்த ராஜபக்சவும் அமைச்சுப் பதவிகளை தக்க வைத்துக்கொள்ள அவரது சகாக்களும் முயன்று வருகின்ற நிலையில் அவர்களது எதிர்பார்ப்புகளைத் தகர்த்துள்ளது உச்ச நீதிமன்றம்.

தான் தொழிற்பட விதிக்கப்பட்டுள்ள இடைக்காலத் தடையை எதிர்த்து மேன்முறையீடு செய்யும் மஹிந்தவின் உரிமை பாதுகாக்கப்பட்டுள்ளதோடு அதற்கான அனுமதியும் வழங்கப்பட்டுள்ள போதிலும் சட்டவாக்க சபையான நாடாளுமன்றின் நடவடிக்கைகளை நீதிமன்றம் ஊடாக முடக்குவதற்கான முயற்சியில் மஹிந்த மீண்டும் தோல்வி கண்டுள்ளார்.


நாடாளுமன்ற நடவடிக்கைகள் சபாநாயகரின் அதிகாரத்துக்குட்பட்டவை என்பதை எதிரணி சட்டத்தரணிகள் தெளிவுபடுத்தியிருந்ததோடு நாடாளுமன்றின் சம்பிரதாயங்களில் உச்ச நீதிமன்றம் தலையிடும் வழக்கம் இல்லையென்பதையும் தெளிவுபடுத்தியிருந்தனர். இந்நிலையில், தனக்கு வழங்கப்பட்ட பதவிக்கு எதிராக ஏலவே இடைக்காலத் தடை விதித்துள்ள மேன்முறையீட்டு நீதிமன்றிடமே ஜனவரியில் மஹிந்த ராஜபக்ச திரும்பவும் வாதிடும் சூழ்நிலை உருவாகியுள்ளது.

ஜனவரி 16,17 மற்றும் 18ம் திகதிகளில் விசாரணைக்கு தேதி குறிக்கப்பட்டுள்ள அதேவேளை, நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்ட நம்பிக்கையில்லா பிரேரணையை நீதிமன்றில் கேள்விக்குட்படுத்த முடியாது போயுள்ளதன் பின்னணியில் மேலும் ஒரு மாத காலம் இப்பிரச்சினை நீடிப்பதில் பயனில்லையென்பதே சட்டவல்லுனர்களின் கருத்தாக இருக்கிறது. இதன் பின்னணியில் ஜனாதிபதி நாட்டு நலனை முற்படுத்தி தீர்மானமொன்றை மேற்கொள்ளவும் புதிய பிரதமர் மற்றும் அமைச்சரவையை நியமிக்கவும் கடமைப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment