ACJU - மஹிந்த ராஜபக்ச சந்திப்பு! - sonakar.com

Post Top Ad

Monday 12 November 2018

ACJU - மஹிந்த ராஜபக்ச சந்திப்பு!



அகில இலங்கை ஜம்மியத்துல் உலமாவுக்க விஜயம் செய்து அதன் நிர்வாகிகளை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார் மஹிந்த ராஜபக்ச.

இது பற்றி விளக்கமளித்துள்ள அ.இ.ஜ.உ, மதத்தலைவர்களை சந்திப்பதன் தொடர்ச்சியில் மஹிந்த ராஜபக்ச அங்கு விஜயம் செய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் அனுப்பி வைத்துள்ள தகவல்:


மதத்தலைவர்களை சந்திக்கும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ வருகை தந்தார்.

பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ 2018.11.12 அன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவிற்கு வருகை தந்தார். சர்வமதத் தலைவர்களை சந்தித்து வரும் தொடரில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திக்க நேரம் கோரப்பட்டதையடுத்து குறித்த சந்திப்பு இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் தலைமையகத்தில் இடம் பெற்றது.

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் கௌரவப் பொதுச் செயலாளர் அஷ்-ஷைக் எம்.எம்.ஏ. முபாறக் அவர்களின் தலைமையில் இடம் பெற்ற இந்நிகழ்வின் வரவேற்புரையை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் அஷ்-ஷைக் அர்கம் நூராமித் அவர்கள் நிகழ்த்தினார்கள். 

தனதுரையில் 1924ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்டதிலிருந்து எமது நிறுவனம் நாட்டில் மார்க்க பணிகளை செவ்வனே செய்து வருவதுடன் சமூக நலன்களிலும் அக்கறை செலுத்தி வருகின்றது. அதே நேரம் எவ்வித அரசியல் சாயங்களையும் பூசிக் கொள்ளாத ஒரு அமைப்பாகவும் ஜம்இய்யா இயங்கி வருவது இங்கு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

நாட்டின் அனைத்து தரப்பினருக்கும் அவர்கள் அனுமதி கோருகின்ற போது ஜம்இய்யாவை சந்திப்பதற்கான நேரங்களை வழங்கி வருவது ஜம்இய்யாவின் வழமைகளில் ஒன்றாகும். இந்த வகையில் உள்நாட்டு, வெளிநாட்டு பிரமுகர்கள் பலர் நம்மை சந்தித்துள்ளனர். அச்சந்திப்புக்கள் மிக சினேகபூர்வமானதாகவே அமைந்திருந்தன.

பல வருடங்களாக அரசியலில் ஈடுபட்டு வரும் நீங்கள் ஜனாதிபதியாக இருந்த காலங்களில் பல அபிவிருத்திகளை நாட்டிற்கு செய்துள்ளீர்கள். இன்றைய நாட்களில் நாட்டில் அரசியல் ரீதியான நெருக்கடி நிலை ஒன்று நிலவி வருகின்றது. இந்த நிலை தொடர்ந்தால் நாட்டின் பொருளாதாரம், சமாதானம், ஐக்கியம், ஜனநாயகம் ஆகியவற்றிற்கு பாரிய பாதிப்பு ஏற்படும் அதே நேரம் வெளிநாடுகளில் எமது நாட்டைப் பற்றிய தப்பான எண்ணங்கள் தோன்றவும் காரணமாக அமையும் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்தும் நாட்டில் ஏற்பட்டிருக்கின்ற இந்நிலையை அரசியல் தலைவர்கள் ஒன்றிணைந்து பேச்சு வார்த்தைகள் மூலம் தீர்த்துக் கொள்ள முடியுமெனவும் இதனால் நாட்டு மக்களுக்கு ஏற்படுகின்ற அசௌகரியங்களை தவிர்க்க முடிவதோடு நாட்டில் ஜனநாயகத்தையும், சட்டத்தையும் நிலைநிறுத்த முடியுமெனவும் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா நம்புகிறது என அவர் குறிப்பிட்டார்.

நாட்டின் முப்பது வருட யுத்தத்தை முடிவிற்கு கொண்டு வந்து நாட்டில் சமாதானத்தையும், ஐக்கியத்தையும் ஜனநாயகத்தையும் நிலைநாட்டிய தலைவர் என்ற வகையில் நீங்கள் இந்நாட்டில் தொடர்ந்தும் ஜனநாயகமும், சமாதானமும் ஓங்கி நிற்க முயற்சிப்பீர்கள் எனவும் நாட்டு மக்களிடையே இனவாதம் ஒழிந்து அனைவரும் இலங்கையர் என்ற ஒரே குடையில்  தொடர்ந்தும் பயணிப்பதினூடாக எமது தாய் நாட்டை கட்டியெழுப்புவதில் பங்காளியாக மாறுவீர்கள் எனவும் எதிர்பார்க்கின்றோம் எனக் குறிப்பிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தனதுரையில் பின்வருமாறு குறிப்பிட்டார். சர்வமதத் தலைவர்களை சந்தித்து வரும் இத்தொடரில் இன்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவை சந்திப்பதற்கு அனுமதி வழங்கியதற்காக முதலில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றேன். அத்துடன் நாட்டின் முன்னேற்றத்திற்கு சகல தரப்பினரும், சகல இனங்களும் ஒன்றுபட்டு செயற்பட வேண்டும் என்றும் தான் ஆட்சியில் இருந்த போது இன, மதஇ பேதமின்றி தனது செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும், இனவாத செயற்பாடுகள் நாட்டில் தலை தூக்காமல் இருக்க தன்னாலான செயற்பாடுகளை முன்னெடுத்;தாகவும் தெரிவித்தார்.

அதனைத் தொடர்ந்து அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவின் உதவிச்செயலாளர் அஷ்-ஷைக் முர்ஷித் அவர்கள் நன்றியுரையை நிகழ்த்தினார்கள். அவர் தனதுரையில் நாம் நாட்டில் ஏற்பட்டுள்ள இந்த நெருக்கடி நீங்கி நாட்டின் ஜனநாயகமும், சட்டமும் மேலோங்கி நிற்க பிரார்த்திக்கின்றோம் எனக் கூறி நன்றியுரையை  நிறைவு செய்தார்.

ஊடகப்பிரிவு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா


No comments:

Post a Comment