யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்: மாவை சேனாதிராஜா - sonakar.com

Post Top Ad

Sunday 3 June 2018

யாழ்ப்பாண முஸ்லிம் மக்கள் கௌரவமானவர்கள்: மாவை சேனாதிராஜா



யாழ் முஸ்லிம் மக்களின் விஷேட இப்தார் ஒன்றுகூடல் “சகவாழ்வே சக்தி தரும்” என்னும் மகுடத்தில்  02-06-2018 சனிக்கிழமை யாழ்ப்பாணம் டில்கோ ஹோட்டலில் ஜனாப் அப்துல் கபூர் நௌபர் அவர்களின் தலைமையில் இடம்பெற்றது; இந்நிகழ்வில் விஷேட விருந்தினராக கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவரும், பாராளுமன்ற உறுப்பினருமாகிய கௌரவ மாவை சோ.சேனாதிராஜா அவர்கள் மேற்கண்டவாறு தெரிவித்தார். அவர் அங்கு மேலும் குறிப்பிடுகையில்
நாங்கள் இளைஞர்களாக இருந்த காலத்திலே யாழ்ப்பாணத்திலே முஸ்லிம் மக்கள் மிகவும் கௌரவமான வாழ்வுமுறையைக் கொண்ட சமூகமாக வாழ்ந்தார்கள், இலங்கையின் பல பாகங்களிலும் இருக்கின்ற முஸ்லிம் மக்களுக்கு முன்மாதரியான மக்களாகவும் அவர்கள் இருந்தார்கள், இப்போது இங்கே உரை நிகழ்த்திய மௌலவி அவர்கள் குறிப்பிட்ட இஸ்லாமிய விழுமியங்களைப் பின்பற்றுகின்ற மக்களாகவே அவர்கள் இருந்தார்கள். தந்தை செல்வா அவர்கள் முஸ்லிம் மக்களை ஒரு தனித்துவமான சமூகமாகவே அடையாளம் செய்தார்கள், அதற்காகவே அவர்களுக்கும் ஒரு தனியான சுயாட்சி அலகு ஏற்படுத்தப்படவேண்டும் என்ற கருத்தை சொல்லிலும் செயலிலும் செய்துகாட்டினார்.

இப்போது தமிழ் முஸ்லிம் உறவு நலிவுற்றிருக்கின்றது, இதனைக் குழப்புவதற்கு பல சக்திகள் முயற்சிக்கின்றன. ஆனால் இதற்கு நாம் இடமளிக்கக்கூடாது; தமிழ் மக்கள் ஒரு தீர்வை எதிர்பார்த்து முன்னோக்கி நகர்கின்றார்கள், இதனை முஸ்லிம் மக்கள் புரிந்துகொண்டிருக்கின்றார்கள், இன்னும் அதிகமான புரிந்துணர்வுகள் அவசியப்படுகின்றன. உலக நாடுகளிலே முஸ்லிம் மக்கள் பலவிதமான பிரச்சினைகளை எதிர்நோக்கியிருக்கின்றார்கள், சிரியா, பர்மா போன்ற நாடுகளிலே இன்று நடப்பதை நாம் பார்க்கின்றோம், அன்று புத்தளத்தில் இனக்கலவரம் ஏற்பட்டது, அளுத்கம, கண்டி என அது தொடர்கின்றது; புத்தள முஸ்லிம்களுக்காக அன்று தந்தை செல்வா குரல் கொடுத்தார், இன்றும் முஸ்லிம் மக்களுக்காக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குரல் கொடுக்கின்றது; அது எமது தார்மீகப் பொறுப்பாகும்.
இன்று உங்களை எல்லாம் இந்த இடத்திலே சந்திப்பது மிகுந்த மனமகிழ்வைத் தருகின்றது; தமிழ் மக்களும் முஸ்லிம் மக்களும் இவ்வாறு ஒற்றுமையாக இருப்பது காலத்தின் கட்டாயமாகவும் அமைந்திருக்கின்றது என்றும் குறிப்பிட்டார், இந்நிகழ்விலே பாராளுமன்ற உறுப்பினர் கௌரவ எம்.ஏ.சுமந்திரன், வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான கௌரவ அய்யூப் அஸ்மின், கௌரவ எம்.கே.சிவாஜிலிங்கம், கௌரவ.கஜதீபன், கௌரவ பரஞ்சோதி, கௌரவ ஜெயசேகரம் மற்றும்  யாழ் மாநகர முதல்வர் கௌரவ.இமானுவேல் ஆனல்ட்,  உள்ளூராட்சி மன்றத் தவிசாளர்கள், உறுப்பினர்கள். வடக்கு மாகாண ஆளுனர் அவர்களின் செயலர் உயர்திரு இளங்கோவன், மாவட்ட செயலர் உயர்திரு என்.வேதநாயகன் உட்பட உயர் அதிகாரிகள், மற்றுமம் இந்திய உயர்ஸ்தானிக அதிகாரிகள், பொலிஸ் அதிகாரிகள், இராணுவ உயர் அதிகாரிகள், சமூக ஆர்வலர்கள், ஊடகவியலாளர்கள் எனப் பலரும் கலந்து சிறப்பித்தனர். இந்நிகழ்வில் அஷ்-ஷெய்க் பைஸல் (மதனி) அவர்களுடைய சிறப்புரையும் இடம்பெற்றது.
-எம்.எல்.லாபிர்

No comments:

Post a Comment