ராஜபக்ச சகோதரர்கள் கேலிக்கூத்தாடுகிறார்கள்: இம்ரான் - sonakar.com

Post Top Ad

Sunday, 10 June 2018

ராஜபக்ச சகோதரர்கள் கேலிக்கூத்தாடுகிறார்கள்: இம்ரான்


சிங்கள மக்களுக்கு மத்தியில் துவேச கருத்துகளை கக்கும் மஹிந்த சகோதரர்கள் முஸ்லிம்களின் உரிமைகளை பாதுகாப்பேன் என கூறுவது வேடிக்கையாகவுள்ளது என பாராளுமன்ற உறுப்பினர் இம்ரான் மகரூப் தெரிவித்தார் ஞாயிற்றுக்கிழமை மாலை கிண்ணியாவில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்தார். 

அங்கு தொடர்ந்தும் உரையாற்றிய அவர், இன்று ராஜபக்ஸ சகோதரர்களுக்கு முஸ்லிம்கள் மீது திடீர் பாசம் ஏற்பட்டுள்ளது. இப்தார் வைபவங்கள் பலவற்றில் கலந்துகொண்டு இவர்கள் தெரிவிக்கும் கருத்துகளை அவதானிக்கும் போது முஸ்லிம் வாக்குகளை குறி வைத்து செயற்படுவது தெளிவாகின்றது.காலி, மாத்தறை என சிங்கள மக்கள் வாழும் பகுதிகளுக்கு சென்று இனி முஸ்லிம்களுக்கு நினைத்து போல் வாழ முடியாது. நாம் ஆட்சிக்கு வந்தவுடன் அவர்களின் கொட்டத்தை அடக்குவோம் என கூறுபவர்கள் சில கிலோமீட்டர் தூரம் தள்ளி பேருவளைக்கு வந்து முஸ்லிம்களின் உரிமையை பாதுகாப்போம் என்கிறார்கள். தமிழ் ஊடகங்களில் முஸ்லிம்களுக்கு சார்பாக அறிக்கை வெளியிடும் இவர்கள் சிங்கள ஊடகங்களில் துவேசத்தை கக்குகின்றனர்.

ஆகவே சிறுபான்மை மக்கள் ஒன்றை மட்டும் நினைவில் வைத்துகொள்ள வேண்டும்.உரிமைகளை தருகிறோம் என இவர்கள் உங்கள் முன் வந்து வாக்கு கேட்டு உங்கள் வாக்குகள் மூலம் வெற்றிபெற்ற பின் உங்களின் உரிமைகளை பறித்து சொந்த நாட்டுக்குள்ளயே அகதிகளாக மாற்றுவதே இந்த ராஜபக்சகளின் நோக்கம். கடந்த உள்ளூராட்சி தேர்தல்களில் சிங்கள பகுதிகளில் இவர்கள் மேற்கொண்ட பிரச்சாரத்தை பார்த்தாலே இதை இலகுவாக உணரலாம்.

இவர்கள் உங்களிடம் வாக்கு கேட்பது உங்களுக்கு உரிமைகளை வழங்க அல்ல பறிக்கவே என்பதற்குரிய சிறந்த உதாரணம் பொதுஜன பெரமுன ஆட்சி அமைத்த எம்பிலிப்பிட்டிய, மத்துகம பிரதேச சபைகளில் இவர்கள் ஆட்சி அமைத்தவுடன் இந்த சபைக்குட்பட்ட பகுதிகளில் மாட்டிறைச்சி விற்பனைக்கு தடை விதித்துள்ளனர். உள்ளூராட்சி சபை அதிகாரத்தை கைப்பற்றியதுக்கே இந்த தடை என்றால் இவர்கள் மீண்டும் ஆட்சிக்கு வந்தால் என்ன நடக்கும் என்பதை நாம் சிந்திக்க வேண்டும்.

எமது ஆட்சியிலும் முஸ்லிம்களுக்கு எதிரான பல சம்பவங்கள் இடம்பெற்றுள்ளன. தேசிய அரசாங்கம் என்ற ரீதியில் மஹிந்தவின் ஆதரவாளர்கள் அரசுக்குள் இருந்ததே இவ்வாறான சம்பவங்களை தடுக்க முடியாததுக்கு பிரதான காரணமாகும். ஆகவே எதிர்வரும் தேர்தலில் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதியாக்கி அனைத்து இன மக்களும் சந்தோசமாக வாழும் வெள்ளை வேன் கலாச்சாரமற்ற அமைதியான இலங்கை ஒன்றை உருவாக்க உங்கள் அனைவரினதும் ஒத்துழைப்பு அவசியம் என கூறினார்.

-Sabry

No comments:

Post a Comment