இன ஐக்கியம் சீர்குலையாத் தீர்வே தேவை! - sonakar.com

Post Top Ad

Wednesday 2 May 2018

இன ஐக்கியம் சீர்குலையாத் தீர்வே தேவை!


திருகோணமலை ஸ்ரீசண்முகா இந்து மகளிர் கல்லூரியில் கற்பிக்கும் முஸ்லிம் ஆசிரியைகளுக்கு இவர்களது இஸ்லாமிய கலாசார ஆடையை அணிந்து கற்பிக்கக் கூடாதென கல்லூரி நிர்வாகம் எடுத்த தீர்மானம். அது தொடர்பாக கடந்த செவ்வாயன்று இடம்பெற்ற ஆர்ப்பாட்டம் பெரும் சலசலப்பினை உருவாக்கியுள்ளது.

இந்தப் பிரச்சினைக்கு  ஒரு சமரசமான தீர்வினைக் காணுவதற்கு எதிர்கட்சித்தலைவர் இரா. சம்பந்தனைத் தலையிடுமாறு அமைச்சர் றிஷாத் பதியுதீன் கடிதம் மூலம் கேட்டிருந்தார்.

அபாயா விவகாரத்தில் தலையிட்டு இந்தப் பிரச்சினையை சுமுகமாகத் தீர்த்து வைக்க மூத்த அரசியல்வாதியான நீங்கள் உதவ வேண்டும். இந்த சம்பவத்தைப் பயன்படுத்தி தமிழ் - முஸ்லிம் உறவைச் சீர்குலைக்க முற்படும் சக்திகள் குறித்து நாம் விழிப்பாக இருக்க வேண்டும். எனத் தனது கடிதத்தில் குறிப்பிட்டுள்ள அமைச்சர் றிஷாத், திருமலை மாவட்டத்தின் மூத்த அரசியல்வாதியாகவும் தமிழர்களின் தலைவராகவும் அனைத்து சமூகங்களாலும் பெருமளவில் மதிக்கப்படுவரான நீங்கள், இந்தப் பிரச்சினைக்கு நியாயமான சுமுகத் தீர்வைப் பெற்றுத் தரவேண்டும் என அமைச்சர் றிஷாத், சம்பந்தன் ஐயாவை விழித்து எழுதிய கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார். இதற்கு பதிலளித்துள்ள எதிர்க்கட்சித் தலைவர் இரா. சம்பந்தனின் பதில் அதிர்ச்சியை அளிப்பதாக உள்ளது.



இந்துக் கல்லூரியின் மரபுகளை மதித்து புதிய உடை கலாசாரத்தை அறிமுகம் செய்யாமல் இதுவரை காலமும் இருந்து வந்தது போன்ற ஆடைகளை அணிவதே பொருத்தமானது என்று சம்பந்தன் ஐயா பதிலில் தெரிவித்துள்ளார்.

திருமலை இந்துக் கல்லூரி அரசின் கட்டுப்பாட்டில் இயங்கும் ஒரு பாடசாலையாகும். இதனை மறந்தே சம்பந்தன் ஐயா இப்பதிலைத் தெரிவித்துள்ளார்.

இந்துக் கோயிலாகவோ, ஒரு பள்ளிவாசலாகவோ, ஒரு விஹாரையாகவோ அது இருந்தால் அவற்றுள் சட்டதிட்டங்களுக்கு மதிப்பளித்து செயற்படுவது அவசியமாகும். அரச கட்டுப்பாட்டிலுள்ள ஒரு பாடசாலை. நாட்டின் சட்டத்திற்கு மதிப்பளித்து செயற்பட வேண்டும்.

அரசாங்கப் பாடசாலைகளில் தமது கலாசாரத்துக்கேற்ற உடைகளை அணிந்து செல்வதற்கு கல்வி அமைச்சு சுற்று நிரூபம் மூலம் உறுதி செய்துள்ளது. இது தவிர உயர்நீதிமன்றமும் 2014.07.24ஆம் திகதி வழங்கிய தீர்ப்பின்படி எந்த ஒரு பிரஜையும் தமது முக அடையாளங்களை மறைக்காத வகையிலான கலாசார ஆடைகளை அணிந்து பாடசாலைக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கியுள்ளது. 

அப்போதைய பிரதம நீதியரசர் மொஹான் பீரிஸ் தலைமையில் பின்பு பிரதம நீதியரசரான கே. ஸ்ரீபவன் மற்றும் நீதியரசர் பிரிந்த ஜயவர்தன ஆகிய மூவருமே இந்தத் தீர்ப்பினை வழங்கினர்.

முஸ்லிம் மாணவிகளுக்கும் அவர்களது தாய்மார்களுக்கும் முகத்தை மறைக்காது முஸ்லிம் கலாசார உடைகளுடன் பாடசாலைக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

அரச மற்றும் உயர் நீதிமன்றத் தீர்ப்புக்கள் இருக்கும்போது மக்களின் வரியினால் இயங்கும் பாடசாலைகள் எப்படி மாற்றமான தீர்வுகளை எடுக்கலாம் என்பதே நாம் எழுப்பும் கேள்வியாகும்.

அபாயா விவகாரத்தை பெரிதாக்குவதில் சண்முகா வித்தியாலய அதிபர் நடந்து கொண்ட முறை விசாரணைக்குட்படுத்தப்பட வேண்டும். சமூகங்களுக்கிடையே நல்லிணக்கம் மிகத் தேவைப்படும் ஒரு காலகட்டத்தில் இப்பிரச்சினைக்குச் சுமுகமான தீர்வு ஒன்றைக் காண்பதற்குப் பதிலாக அபாயாவுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டு இரு சமூகங்களுக்குமிடையே மோதலை உண்டுபண்ணுவதற்கு இவரது செயற்பாடு துணைபோயுள்ளது.

வடக்கு - கிழக்கு இணைப்புக்கு முஸ்லிம்களிடம் நேசக்கரம் நீட்டியுள்ள போது இவ்வாறான ஒரு செயற்பாட்டைச் செய்திருப்பதனால் முஸ்லிம்களது ஆதரவினை நிரந்தரமாகப் பெறுவதற்கு தடையாகவே அமையும்.

நாட்டில் நல்லிணக்கத்தை ஏற்படுத்துவற்காக பௌத்த பாடசாலைகளில் பத்து சதவீத தமிழ் - முஸ்லிம் மாணவர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டால் இந்த இரு சமூகத்தின் பிள்ளைகளும் தம் சமய அடையாளங்களின்றி கல்வி கற்க வேண்டும் என்றா எதிர்க்கட்சித் தலைவர் எதிர்பார்க்கிறார் ? என்ற கேள்வியை நல்லிணக்கத்திற்காக குரலெழுப்புவோர் எழுப்புகின்றனர்.
எதிர்க்கட்சித் தலைவர் தலையிட்டு இப்பிரச்சினைக்கு சுமுகமான தீர்வு ஒன்றைக் காண்பதற்கு காலம் கடக்கவில்லை என்பது எமது அபிப்பிராயமாகும்.

உருவாகியுள்ள புதிய அரசியல் சூழ்நிலையில் தமிழ் - முஸ்லிம் சமூகத்தின் ஒற்றுமை என்றுமில்லாதளவுக்கு தேவைப்படும் ஒரு கட்டத்தில் இரு சமூகங்களும் வாழ்ந்து கொண்டிருக்கின்றன. இது போன்ற சிறு சிறு பிரச்சினைகளைப் பெரிதாக்க இடமளிக்காது தீர்த்துக் கொள்வதே அவசியமாகும்.

-நவமணி

No comments:

Post a Comment