வன்முறைச் சம்பவங்களின் உளவியல் காயங்கள் - sonakar.com

Post Top Ad

Friday 16 March 2018

வன்முறைச் சம்பவங்களின் உளவியல் காயங்கள்



அம்பாறை நகரிலும்;, கண்டி மாவட்டம் உள்ளிட்ட  பல பிரதேசங்களிலும் இனவாத வன்முறையாளர்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்டுள்ள இழப்புக்களை நினைத்துப்பார்க்க முடியாதுள்ளது.
இப்பிரதேசங்களில் நிம்மதியாகவும், சகோதரவாஞ்சையுடனும் வாழ்ந்த பல்லாயிரக்கணக்கான முஸ்லிம்களினது அமைதிக்கு மாத்திரமின்றி ஏனைய மக்களினதும்; அமைதி வாழ்வுக்குப் பங்கம் விளைவித்த இனவாதிகளின் வன்முறைச் சம்பவங்களினால்;; வீடு வாசலையிழந்த ஏறக்குறைய 300 முஸ்லிம் குடும்பங்களைச் சேர்ந்தோர்; உறவினர்கள் மற்றும் பொது இடங்களில் தங்கியுள்ளதாக தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

சிறுகச் சிறுகச் பணத்தைச் சேமித்து  கட்டிய வீடுகள், வாழ்வாதாரத்துக்கான வர்த்தக நிலையங்கள், ஆன்மீக வழிபாட்டுக்கான பள்ளிவாசல்கள், வாகனங்கள் என பலகோடி ரூபாய்கள் பெறுமதியான சொத்துடமைகள் முஸ்லிம்கள் மீது கொண்ட காழ்ப்புணர்ச்சியினால்  அழித்தொழிக்கப்பட்டிருக்கிறது. 

இத்தாக்குதல் சம்பவங்களினால் முஸ்லிம்களுக்கு ஏற்பட்ட சேதங்கள் குறித்த கணிப்பீடுகள் முழுமை  பெறாத நிலையில், கடந்த திங்கள் கிழமை வரை 465 சம்பவங்கள் பதிவாகியுள்ளதாகத் தெரவிக்கப்படுகின்றன.



வீடுகளும், வர்த்தக நிலையங்களும், பள்ளிவாசல்களும், வாகனங்களும் முற்றாகவும் பகுதியளவிலும் தாக்கியழிக்கப்பட்டுள்ளதாகச் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.  அம்பாறை மற்றும் கண்டி மாவட்டப் பிரதேசங்களில் மாத்திரமின்றி பூகொட, மஹியங்கனை, குளியாப்பிட்டிய, பேருவளை, மெல்சிபுற, ஆனமடுவ, பிலிமத்தலாவ, தர்ஹாநகர் போன்ற பிரதேசங்களிலும் முஸ்லிம்களுக்குச் சொந்தமான வர்த்தக நிலையங்கள், வீடுகள் தாக்கப்பட்டுள்மை பதிவாகியுள்ளன. 

வன்முறைகளினால் சொத்துடமைகளை இழந்த மக்கள், வாழ்வாதாரத்தை எவ்வாறு மீளக்கட்டியெழுப்புவது என்ற கவலையுடனும், வீடுகளை எவ்வகையில் மீளப் புனரமைப்பது என்ற துயரத்திலும், பற்றி எரிந்த வாகனத்திற்கு மாற்றீடாக புதிய வாகனத்தை எவ்வாறு கொள்வவு செய்வது, எரிந்த வர்த்தக நிலையத்தை எவ்வகையில் மீள நிர்மானிப்பது, மீண்டும் வர்த்தக நடவடிக்கைகளை எவ்வாறு தொடங்குவது போன்ற பல்வேறு துயரச் சிந்தனைகளுக்கு இம்மக்கள் ஆளாக்கப்பட்டிருப்பார்கள். இழப்புக்களின் வலி அவர்களை ஆட்கொண்டிருக்கிறது.

வலிகளும்; உளவியல் காயங்களும்

சொத்துக்களை இழந்து நிர்க்கதி நிலைக்குத்தள்ளப்பட்டுள்ள மக்கள் இனவாதிகளின் வன்முறை ஏற்படுத்தியுள்ள வலிகளுடனும், உளவியல் காயங்களுக்கும்; உள்ளாகியிருப்பார்கள்.  சொல்லிடங்கா அச்சத்தையும், பயத்தையும், பதகளிப்பையும், உள நெருக்கீட்டையும் இவ்வன்முறைச் சம்பவங்கள் இம்;மக்கள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கக் கூடும். இம்மக்களுக்கு ஏற்பட்டுள்ள சொத்தழிவுகள் மதிப்பீடப்பட்டுவரும்; இவ்வேளையில,; மக்களின் உளரீதியான பாதிப்புக்கள் குறித்தும் கவனம் செலுத்தி அவர்களின் உள ஆரோக்கியத்துக்கான நடவடிக்கைகள் எடுக்கப்படுவது அவசியமாகும்.

இவ்வன்முறைச் சம்பவங்கள் இம்மக்களை உள ரீதியாக பலவீனமடையச் செய்திருக்கும் இச்சூழ்நிலையில், இவர்;கள் மன ரீதியாக வலிமையூட்டப்பட்டு அவர்களது எதிர்காலத்தில் நம்பிக்கை ஏற்படுத்தப்பட வேண்டி தேவை அத்தியாவசிமாகவுள்ளது. சாம்பலிருந்து எழுந்து பறக்கும் பீனிக்ஸ் பறவைகளாக பாதிக்கப்பட்ட மக்கள் உளவியல்; காயங்களிலிருந்து மீண்டெழ வேண்டும். அதற்கான தன்நம்பிக்கை அவர்களிடத்தில் கட்டியெழுப்பப்படுவது அவசியமாகும்.

வன்முறையில் ஈடுபடுவது தொடர்பில் குற்ற உணர்வு ஏதும் இல்லாத, தண்டனை கிடைத்தாலும், திரும்பவும் அதே குற்றத்தைச் செய்யக் கூடிய, பிறரின் துன்பங்களையும், வேதனைகளையும் புரிந்துகொள்ளாத, சிந்திக்காத, சுயநலத்திற்கும், அடிமைத்தனத்திற்கும், கூலிக்கும் முக்கியத்துவம் வழங்குகின்ற, பிறருடைய பாதிப்புக்களைப் பற்றிக் கவலை கொள்ளாத குணங்களைக் கொண்ட சமூக விரோத ஆளுமைக் குறைபாட்டுடைய இனவெறியர்களினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைகள் மக்களின் உள்ளங்களை  காயப்படுத்தியிருப்துடன் சொல்லொன்னா வலிகளையும் ஏற்படுத்;தியிருப்பதை அம்மக்களுடன் கருத்தக்களைப் பரிமாறிக் கொள்கின்றபோது புரிய முடிகிறது. 

இத்தாக்குதல் சம்பவங்களை ஒரு செயற்கை அனர்த்தம் எனக் கருதிக்கொண்டால், இவ்வன்முறைகள் மனதளவில் ஏற்படுத்தியிருக்கும் எதிர்விளைவுகள் ஒருவரிடமிருந்து மற்றவருக்கு வித்தியாசமானதாக இருக்கும். அதனால், இவ்வன்முறையின் பின்னரான விளைவுகளின் உள நிலை தொடர்பில் கவனம் செலுத்துவது முக்கியமாகும்.

அம்மக்களின் உள ஆற்றுப்படுத்தலுக்கான முறையான நடவடிக்கைகள் தற்போதிருந்தே உரியவர்களினால் ஆரம்பிக்கப்படுவது அம்மக்களின்; உள ஆரோக்கியத்தைப் பாதுகாக்கும். அத்துடன் முறையான, ஆற்றுப்படுத்தல்களினூடாக தன்னம்பிக்கையை ஏற்படுத்தி. எதிர்கால நடவடிக்கைகளை மனப்பலத்துடன் முன்னெடுப்பதற்கு உதவிக்கரம் நீண்ட வேண்டிய தேவையை இக்காலம் உணர்த்தி நிற்கிறது.

பாதிக்கப்பட்ட மக்களிடையே, ஒன்றுமே செய்ய முடியாத உணர்வு, கட்டுப்படுத்த முடியாத இழப்பு உணர்வு, பயம், சோகம், கவலை,  கூடிய நம்பிக்கை இழப்பு, சந்தேகம், வன்முறை நாட்களின்  சம்பவங்கள்; அடிக்கடி நினைவுக்கு வருவது, வழமையான நடத்தையில் மாற்றங்கள், குற்றப்பழி உணர்வு போன்ற மனநிலை தற்காலத்தில்; காணப்படலாம். இத்தாக்குதல் சம்பவங்களை நேரில் அனுபவித்தவர்களிடையே இத்தகைய மன நிலைகள் தொடர்ச்சியாகக் காணப்படும்போது அவை, உள நெருக்கீடு, அதீதி பயம், பதகளிப்பு, பீதி போன்ற உளப் பிரச்சினையை உருவாக்கக் கூடும். அதனால,; இம்மக்களின் அடிப்படைத் தேவைகளை நிறைவேற்றிய பின்னர் உளநிலைகள் குறித்து கவனம் செலுத்தப்படுவதன் மூலம் உளப்பிரச்சினைகள் ஏற்படுவது தடுக்கப்படலாம்.

பாதிப்புகளிலிருந்து மீளுதல்

தாக்குதல் சம்பவங்கள் இடம்பெற்ற நாள் முதல் இக்கட்டுரை எழுதும் நேரம் வரையான நாள் வரை அம்பாறையிலும், கண்டியிலும்  மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் 280 பேர் கைது செய்யப்பட்டு விசாரிக்கப்பட்டு வரும் நிலையில் கண்டி மாநகரிலும் அதை அண்டிய பிரதேசங்களிலும் அமைதி சூழல் காணப்பட்டு வருகிறது. போக்குவரத்து, கல்வி நடவடிக்கைகள் உட்பட அனைத்து அன்றாக நடவடிக்கைகளிலும் மக்கள் ஈடுபட்டு வந்தாலும் தாக்குதல்களின் பாதிப்புக்கள் ஏற்படுத்திய உளவியல் காயங்களை ஆற்றுப்படுத்த வேண்டிய தேவையுள்ளது. 

இதனடிப்படையில் பாதிக்கப்பட்ட பிரதேசங்களிலுள்ள ஒவ்வொருவரும் இப்பாதிப்புக்களிலிருந்து உள்ளத்தை அமைதி நிலைக்குக் கொண்டுவருதற்காக அடிப்படை உளவியல் செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டியவர்களாக உள்ளனர்.

உளவியல் அடிப்படையில் கையாளும் வியூகங்களில் முதலில் தாக்குதல் சம்பவங்களினால் ஏற்பட்ட பயம், இயலாமை உணர்வுகளை பற்றிச் சிந்தியுங்கள், நீங்கள் உணர்ந்தவைகளை உங்களால் ஞாபகப்படுத்த முடியுமா? இப்போது வேறுவிதமாக உணர்கின்றீர்களா? அச்சூழலில் உங்களது பயத்தை  வெற்றிகொள்ள என்ன உதவியாக இருந்தது என்பதை ஞாபகப்டுத்துங்கள். இப்போது அதை நடைமுறைப்படுத்த அல்லது பிரயோகிக்க முடியுமா? மற்றவர்களுடன் இது பற்றி பேசுவதில் ஈடுபட்டீர்களா? என்பதில் கவனம் செலுத்துங்கள்.

நெருக்கடியான சூழலில் உங்களுக்கு ஏற்பட்ட பயங்களைப் பற்றி பேசுவது மனதிலுள்ள நெருக்கடியைக் குறைப்பதற்கு மிகவும் உதவும். குடும்ப உறுப்பினர்களுடன் இது பற்றி பேசுவதில் தயக்கம் இருந்தால், பாடசாலை, தொழிபுரியும் நிறுவனங்கள் போன்ற பொது இடங்களிலுள்ள நண்பர்களுடன் பேசுங்கள். அவர்கள் அவற்றை ஆர்வத்துடன் கேட்பதன் மூலம் உங்களது உள்ளத்திலுள்ள பயம் சற்றுக் குறைவடையும்.

சம்பவம் தொடர்பில் ஏனையவர்களுடன் பேசுவது, வழமையான காரியங்களில் ஈடுபடுவது, உங்களது சிந்தனையைப் பாவிக்கும் வகையில் செயல்களில் ஈடுபடுவது, குர்ஆண் ஓதுவது. மனதிற்கு இதனமான நல்ல விடயங்களை கேட்பது மற்றும் பார்ப்பது போன்ற நேர்சிந்தனைகளைத் தூண்டும் செயற்பாடுகளில் நேரங்களைக் செலவிடுவதன் மூலம் பாதிப்புக்குள்ளான நபர் தன்னுடைய உள நிலையை இதமாக்குவதற்கும், தனது மனக் கவலை மற்றும் பயத்திலிருந்து விடுபடுவதற்கும் உதவியாக அமையும்.  

இருப்பினும்,  வேலை செய்யும் இடம் மற்றும் வேலையை மாற்றுதல் போன்ற பெரிய தீர்மானங்ளை எடுப்பதைத் தவிர்க்கவும், தாக்குதல் சம்பவங்களை வாசித்தல், அவை தொடர்பான காணொளிகளைப் பார்த்தல், உங்களது நெருக்கீட்டு நிலையை அதிகரிக்கும் நபருடன் உரையாடுதல் போன்ற செயற்பாடுகள்  அச்சம், பயம், பதற்றம் போன்ற உள நிலையை அதிகரிக்கச் செய்யலாம். அதனால், இவ்விடயங்களைத் தவிர்த்துக்கொள்வது மன அமைதிக்கு உதவும். 

அத்தோடு, உங்களது மன நிலையானது  பயம், அச்சம், பதற்றம் என்பவற்றுடன் தொடர்ந்து காணப்படுமாயின,; அன்றாட செயற்பாடுகளைச் செய்ய முடியாதிருக்குமாயின், உளவளத் துணையாளர்கள் அல்லது மனநல வைத்தியரை நாடி உதவியைப் பெற்றுக்கொள்வது மனநலத்திற்கு வழிவகுக்கும். உயிர் மற்றும் பௌதீக இழப்பிலிருந்தும், உளவியல் காயங்களிலிருந்தும் இம்மக்களை மீண்டெழச் செய்வதற்காக முஸ்லிம் சகோதரத்துவத்தின் அடிப்படையில் இம்மக்களை பல்வேறு உதவிகள் சென்றடைந்த வண்ணம் உள்ளதைக் காண முடிகிறது. அரசாங்கத்தின் நஷ்டஈடுகளும் இம்மக்களுக்கு கிடைக்கவுள்ளன.

இருந்தபோதிலும், இம்மக்கள் துயர்துடைக்க புறப்பட்டுள்ளவர்களும் சங்கங்களும் தங்களால் முன்னெடுக்கப்படுகின்ற உதவிகளை விளம்பரப்படுத்துவது தவிர்க்கப்படுவது காலத்தின் அவசியமாகும்.  'சமூக வலைத்தளங்களில் தங்களைப் பற்றி தாங்களாகவே பெறுமையாக செய்தி வெளியிடும்போது கிடைக்கும் சந்தோஷம் போதைப் பொருட்களைப் பயன்படுத்தும்போது கிடைக்கும் மயக்கத்திற்கு இணையானது' என உளவியல் சுட்டிக்காட்டுகிறது.

உதவி வழங்கலும் விளம்பரப்படுத்தலைத் தவிர்த்தலும்

அம்பாறையிலும் கண்டி மாவட்டம் உள்ளிட்ட பல பிரதேசங்களில்; முஸ்லிம்களின் சொத்துடமைகளை இலக்கு வைத்து மேற்கொள்ளப்பட்ட இனவெறியாட்டத்தின் பாதிப்பு பாரியதாகும். இதனால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உணவு, உடை, இருப்பிடம் முறையாக வழங்கப்படுவது அவசியமாகும். இவை வழங்கப்படுவதன் ஊடாக அவர்களது மனதை ஓரளவு ஆற்றுப்படுத்த முடியும்.

உணவு, உடை, நிம்மதியாக உறங்குவதற்குரிய உறைவிடம்  என்பவற்றை  வழங்க வேண்டியது முதற் பணியாகவுள்ளதனால் . அதற்கான நடவடிக்கைகள்; பல்வேறு மட்டங்களில் முன்னெடுக்கப்பட்டு வருவதையும் காண முடிகிறது.

அம்பாறையிலும், கண்டி மாவட்டத்தின் பல பிரதேசங்களிலும் இனவாதிகளினால் மேற்கொள்ளப்பட்ட வன்முறைத் தாக்குதல்களினால் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு உதவிக்கரம் நீட்டுவதற்காக முஸ்லிம் பிரதேசமெங்கும் நிவாரணங்கள் பணமாகவும் பொருளாகவும் சேகரிக்கப்பட்டு வருகின்றன. இஸ்லாமிய சகோதரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு முஸ்லிமும் பாதிக்கப்பட்டுள்ள முஸ்லிம் சகோதரர்களுக்கு தங்களால் முடிந்த  உதவிகளைப் புரிவதற்குக் கடமைப்பட்டிருக்கிறார்கள்.
ஆனால், பிரதேச ரீதியாக சேகரிக்கப்படும் நிதி மற்றும் பொருட்கள் தொடர்பில் தற்போது ஊடகங்களினூடாக விளம்பரப்படுத்தப்பட்டு வருவதைக் காண முடிகிறது. எங்களது ஊரில் 5 இலட்சம் என்றும் 10 இலட்சம் என்றும் ஊர்களால் திரட்டப்பட்ட நிதி  தொடர்பில் ஊடகங்கள் வாயிலாக பெருமைப்படுத்தப்பட்டுக் கொண்டிருக்கின்றன. சமயோசனையற்ற இத்தகைய விளம்பரப்படுத்தல்கள் குறித்து மீள்வாசிப்புக்குட்படுத்துவது ஒவ்வொரு விளம்பரத்தாரர்களினதும் சமூகப் பொறுப்பாகும்.

ஏனெனில், கடந்த காலங்களில்  சில விடயங்கள் தொடர்பில், தனிநபர், அரசியல் மற்றும் அமைப்பு ரீதியான விளம்பரப்படுத்தலுக்காக மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள்; இந்நாட்டிலுள்ள முஸ்லிம்கள் பொருளாதார ரீதியாக பெரும்பான்மை சமூகத்தை விட வளர்ச்சியடைந்திருக்கிறார்கள் என்ற காழ்ப்புணர்ச்சியை இனவாதிகள் மத்தியில் ஏற்படுத்தியிருக்கிறது. 

சமூகத்தின் மத்தியில், ஒரு வேளை சோற்றுக்கு கஷ்டப்படுகின்ற மக்களும், திருமண வயது வந்தும் அவற்றை நிறைவு செய்து கொள்ள  இயலாதவர்களும், குடும்பத்தை வழிநடத்த முடியாது ஏங்கித் தவிக்கும் கணவனை இழந்த விதவைகளும், வாழ்வதற்கு வசதியற்று யாசகம் செய்து வாழ்வோரும், உறங்குவதற்கு முறையாகக் கட்டப்பட்ட இல்லங்களின்றி குடிசைகளில் வாழ்வோரும் என பொருளாதா ரீதியாக அடிமட்டத்தில் முஸ்லிம் சமூகத்தில் பலர் வாழ்ந்துகொண்டிருக்கையில், பிரதேச மற்றும் கொள்கைப் பெருமைக்காக பள்ளிவாசல்களைக் கட்டிவிட்டு அவற்றின் திறப்பு விழாக்களை விளம்பரப்படுத்தியமையும், பெருமைக்காகவும், சமூக அந்தஸ்த்துக்காகவும் திருமணங்களை ஐந்து நட்சத்திர ஹோட்டல்களில் மிக ஆடம்பரமாக நடாத்தியது மாத்திரமின்றி அத்திருமணங்களுக்கு பெரும்பான்மையின அரசியல்வாதிகளையும், ஏனையவர்களையும் அழைத்து தங்களது பணப்பலத்தைக் காட்டியமையும் இனவாதிகள் நம் சமூகத்தின் மீது காழ்ப்புணர்ச்சி கொள்வதற்கும் எமது பொருளாதாரத்தை குறிவைப்பதற்கும் காரணமாக இருந்திருப்பதை கடும்போக்காளர்களின் கருத்தாடல்கள் வெளிப்படுத்துகின்றன.

ஆதலால், நாம் செய்யும் சில விடங்கள் குறித்து மீள்வாசிப்புச் செய்ய வேண்டி காலத்திற்குள் தள்ளப்பட்டிருக்கிறோம். இச்சந்தர்ப்பத்தில் தனிப்பட்ட ரீதியாகவோ அல்லது பிரதேச ரீதியாகவோ பாதிக்கப்பட்ட மக்களுக்காகச் செய்யும் உதவிகளை எந்தவொரு நோக்கத்திற்காக வேண்டியும் அவற்றை ஊடகங்கள் வாயிலாக விளம்பரப்படுத்தாமல் இருப்பதானது பொதுத்தளத்தில் விபரித்துக் கூற முடியாத தாக்கங்களிலிருந்து சமூகத்தைப் பாதுகாக்கும்; என்பதைச் சுட்டிக்காட்ட வேண்டியுள்ளது.

இந்நாட்டில் வாழுகின்ற முஸ்லிம்கள் மீது இனவாதிகள் தாக்குதல்களை மேற்கொள்வதற்கு இரு காரணங்கள் கூறப்படுகிறது. முதலாவது காரணம் முஸ்லிம்களின் பொருளாhர விருத்தி மற்றையது முஸ்லிம்களின் சனத்தொகைப் பெருக்கம். இவ்விரு காரணங்களின் அடிப்படையிலேயேதான் முஸ்லிம்கள் தாக்கப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள். இதனை நிரூபிக்கும் பல காணொலிகளை தற்போது இத்தாக்குல்களின் சூத்திரதாரியாகக் கருதப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நபர்களினால்; சமூக ஊடங்களில் பதிவேற்றப்பட்டுள்ள பதிவுகளை நோக்குகின்றபோது தெளிவாகப் புரிந்துகொள்ள முடியும்.

ஆதலால், ஊர் பெருமைக்காகவும், சுயநல தனிநபர், அரசியல் விளம்பரங்களுக்காகவும் இவ்வாரான சந்தர்ப்பங்களில் புரியம்படும் உதவிகளை விளம்பரப்படுத்துவதைத் தவிர்த்துக் கொள்வதும். இவ்விளம்பரப்படுதல் செய்திகளை ஊடகவியலாளர்கள் செய்தி ஊடகங்களுக்கு அனுப்புவதை தவிர்ப்பதும் முஸ்லிம் சமூகம் மெம்மேலும் இனவாதத்தின் காழ்ப்புணர்ச்சிக்கு தீனியாக்கப்படாமல் பாதுகாக்கப்படுவதற்கு வழிவகுக்குமென வலியுறுத்திக் கூறுவது காலத்தின் கடப்பாடாகவுள்ளது. 

'அல்லாஹ்வின் பாதையில் எவர் தங்கள் செல்வத்தைச் செலவிட்ட பின்னர் அதைத் தொடர்ந்து சொல்லிக் காண்பிக்காமலும் அல்லது (வேறு விதமாக) நோவினை செய்யாமலும் இருக்கிறார்களோ அவர்களுக்கு அதற்குரிய நற்கூலி அவர்களுடைய இறைவனிடத்தில் உண்டு, இன்னும் அவர்களுக்கு எத்தகைய பயமுமில்லை, அவர்கள் துக்கமும் அடையமாட்டார்கள்'(2:262) என அல்குர்ஆன் வலியுறுத்துகிறது என்பதை ஒவ்வொரு முஸ்லிமினதும் புரிதலுக்கு உட்படுவதும் அவசியமாகவுள்ளது.



இவ்வாறு பாதிக்கப்பட்டுள்ள மக்களின் உடடினத் தேவைகளை நிறைவு செய்வதற்கு மேற்கொள்ளப்படும் நவடிக்கைகள் போன்று வன்முறைகளினால் ஏற்பட்டுள்ள உளவியல் காயங்களை ஆற்றுவதற்;கான உளவள ஆலோசனை நடவடிக்கைகள் தகைமையுள்ள உளவள ஆலோசர்களினால் முறையான திட்டமிடலின் அடிப்படையில் வழங்குவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுவது  இன்றியமையாதத செயற்பாடாக அமையும். 

-எம்.எம்.ஏ.ஸமட்



No comments:

Post a Comment