தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் மீள் நிர்மாணம்: ஹிஸ்புல்லா பொறுப்பேற்பு - sonakar.com

Post Top Ad

Saturday 10 March 2018

தீக்கிரையாக்கப்பட்ட பள்ளிவாசல்கள் மீள் நிர்மாணம்: ஹிஸ்புல்லா பொறுப்பேற்பு



பேரினவாதிகளினால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்ட திகன பிரதேசத்தில் அமைந்துள்ள பள்ளிவாசல்களை தனது சொந்த நிதியிலிருந்து முழுமையாக நிர்மாணித்துத் தருவதாக புனர்வாழ்வு மற்றும் மீள்குடியேற்ற இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் தெரிவித்தார்.

நேற்று வெள்ளிக்கிழமை திகன பிரதேசத்திற்கு விஜயம் செய்த இராஜாங்க அமைச்சர், இனவாதிகளின் கடும் தாக்குதலினால் முழுமையாக தீக்கிரையாக்கப்பட்ட ரஜவெல்ல அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் பல்லேகல ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றுக்கு நேரடியாக சென்று பாதிப்புக்களை பார்வையிட்டார். பின்னர், குறித்த இரு பள்ளிவாசல்களினதும் நிர்வாகத்தினர் விரும்பும் வகையில் பள்ளிவாசல்களை முழுமையாக மீள்நிர்மாணித்துத் தருவதாக உறுதியளித்தார். 

இதேவேளை, பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணப் பொருட்களை சேகரிக்கின்ற திகன, கும்புக்கந்துர ஜும்ஆ பள்ளிவாசலுக்கு இராஜாங்க அமைச்சர் விஜயம் செய்த போது அங்கு விசேட கலந்துரையாடலொன்றும் இடம்பெற்றது. இதன்போது திகன பிரதேசத்தில் முழுமையாகவும் பகுதியளவும் சேதமாக்கப்பட்ட பள்ளிவாசல்களின் மீள்நிர்மாணப் பணிகள் தொடர்பில் ஆராயப்பட்டது.  

இதன்போது கும்புக்கந்துர ஜும்ஆ பள்ளிவாசல் நிர்வாகம் உள்ளிட்ட  பாதிக்கப்பட்ட பள்ளிவாசல்களின் நிர்வாகத்தினர் மற்றும் சமூக பிரமுகர்கள் முன்வைத்த கோரிக்கைக்கு அமைய திகன பகுதியில் பகுதியளவோ – முழுமையாகவோ சேதமாக்கப்பட்டிருக்கும் பள்ளிவாசல்களை தான் புனர்நிர்மாணம் செய்வதற்கு ஏற்பாடு செய்வதாகவும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்தார். 


பின்னர், பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு சென்ற போது முழுமையாக தீக்கிரையாக்கப்பட்டுள்ள ரஜவெல்ல அந்நூர் ஜும்ஆ பள்ளிவாசல் மற்றும் பல்லேகல ஜும்ஆ பள்ளிவாசல் ஆகியவற்றை தான் உடனடியாக நிர்மாணித்துத் தருவதாக இரு பள்ளிவாசல் நிர்வாகத்திடமும் இராஜாங்க அமைச்சர் ஹிஸ்புல்லாஹ் உறுதியளித்தார். 

இதேவேளை, பள்ளிவாசல்களை முழுமையாக ஆரம்பம் முதலே நிர்மாணிப்பதாக இருந்தாலும் சரி பகுதியளவு நிர்மாணிப்பதாக இருந்தாலும் சரி குறித்த இரு பள்ளிவாசல்களினதும் நிர்வாகம் எடுக்கும் தீர்மானத்துக்கு அமைய தான் முழுமையான நிதி ஒத்துழைப்புக்களை வழங்கத்தயார் என்றும் அதற்குப் பொறுப்பாக தனது பிரதிநிதிகள் இருவரையும் உடனடியாக நியமித்தார். 

-R.Hassan

No comments:

Post a Comment