தலைமுறைகள் தாண்டித் தாண்டவமாடும் இனவாதம்! - sonakar.com

Post Top Ad

Tuesday 27 February 2018

தலைமுறைகள் தாண்டித் தாண்டவமாடும் இனவாதம்!



அம்பாறை நகரம் முஸ்லிம்கள் செறிந்து வாழும் பகுதியன்று. எனினும், கிழக்கு மாகாணத்தைப் பொறுத்தவரை முஸ்லிம் சமூக அரசியலின் கோசங்களில் பெரும்பாலும் அம்பாறை எனும் வார்த்தை தவிர்க்க முடியாததாக இருக்கும்.


அம்பாறை தவிர்ந்த மாவட்டத்தின் ஏனைய பகுதிகளில் உள்ள முஸ்லிம் வாக்குப் பலத்தை பேரம் பேசும் சக்தியாக வைத்து தொடர்ச்சியாக தேர்தல் காலங்களில் கேட்டுப்பழகிய வெற்றுக் கோசங்கள் அவ்வப்போது பொய்யாக்கப்பட்டு விடும்.

இன்று அதிகாலையில் அம்பாறையில் அரங்கேறிய இனவாத தாக்குதலும் மீண்டும் அதையே எடுத்தியம்புகிறது.

சம்பவ இடத்துக்கு ஹெலிகப்டரில் கூட விரைந்து செல்ல முடியாத அளவுக்கு அக்கரைப்பற்று மற்றும் கொழும்பில் குடிகொண்டிருந்து வீரம் பேசும் அரசியல் தலைமைகள் ஒதுங்கியிருக்க, அங்கு நேரடியாகச் சென்ற பிரதியமைச்சர் ஹரீஸ் நேரடியாக இனவாதத்தின் விளைவை சந்தித்தார். அவர் கையிலிருந்த ஒலி வாங்கி பறிக்கப்பட்டது, அவருக்குப் பேச அனுமதி வழங்கப்படவில்லையெனும் போதே காவற்துறையின் கையாலாகத தனமும் பேரினவாதத்தின் பேரெழுச்சியும் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது.

இதற்கிடையில் அறிக்கை விடுவதிலும் அல்லக்கைகளை வைத்து சமூக வலைத்தளங்களில் அவற்றைப் பரப்புவதிலும் அமைச்சர்கள் மிகக் கவனமாக செயற்பட்டதைக் காணக்கூடியதாக இருந்தது.

தான் சொல்லித் தான் பொலிசாரே அங்கு சென்றதாக ஒரு அமைச்சர் அளந்து விட, இவர்கள் எல்லோரும் சொல்லியும் ஹரீசுக்கு நேர்ந்த அச்சுறுத்தலைத் தவிர்க்கவோ இரவு நடந்த அநியாயத்துக்கு நீதியைப் பெறவோ அல்லது காவற்துறையின் கையாலாகாத தனத்தைக் கண்டிக்கவோ முடியவில்லையெனும் நிலையில் இந்த வெற்றுக் கோசங்களும் போலி வீராப்புகளும் பெற்றுத் தந்தவை என்ன எனும் கேள்வி மக்கள் மனதில் எழுகிறது.

இதற்கு விடை காண்பதற்கு முன்பாக அடுத்த தேர்தலும், அந்தத் தேர்தலிலும் மீண்டும் உணர்ச்சியூட்டப்பட்ட இனவாதமுமே முஸ்லிம்களின் தெரிவாகப் போவது கண்கூடு.



எதிர்கால சிந்தனை மங்கிப் போன நாம் கடந்த கால வரலாறுகளிலிருந்து கற்றுக் கொள்ள விளைகிறோம்.

1915 முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறை சம்பவம் இடம்பெறுவதற்கு முன்பாக சுமார் 35 வருடங்கள் (1879) பேரினவாத சக்திகள் முஸ்லிம்களின் பொருளாதாரம் மற்றும் சமூகக் கட்டமைப்பைக் குறி வைத்தன. 1976 வன்முறைக்கு முன்பாக ஆகக்குறைந்தது 7-9 வருடங்கள் இனவாதம் புத்தகளம் பகுதியில் தூபமிடப்பட்டது.

90களில் விடுதலைப்புலிகள் விரைவாக முஸ்லிம்களுக்கு எதிரான வன்முறையைக் கட்டவிழ்த்து விட்டிருந்தாலும் கூட, அதற்கு முன்பாகவும் நான்கைந்து வருடங்கள் இனவாத தாக்குதல்கள் இடம்பெற்ற வண்ணமேயிருந்தன. இப்போது 2011 இறுதி முதல் ஆறாவது வருடமாக இனவாதம் துளிர்விடுவதும் தற்காலிகமாக அடங்குவதுமாக இருக்க, அடுத்து நாம் என்ன செய்ய வேண்டும் எனும் கேள்வி தொக்கு நிற்கிறது.

எது எப்படியோ, அரசியல் ரீதியான நமது தயார்படுத்தல்கள் வெறும் பதவிகளுக்கு சோரம் போகும் நிலையிலிருந்து, வெற்றுக் கோசங்களில் உணர்வூட்டும் நிலைப்பாட்டிலிருந்து மாறி, ஆக்கபூர்வமான செயற்பாட்டைத் தேடும் நிலைக்குத் தள்ளப்படுகிறது. எனினும், பதவி மோகம் மற்றும் அதையே கொண்டாடும் சமூகமாகவும் நாமிருக்க எங்கிருந்து மாற்றம் வரப்போகிறது என்பது  விடுகதையாகவே இருக்கப் போகிறது.

முஸ்லிம்கள் இலங்கை தேசமெங்கும் பரந்து வாழ்வதைப் போல இனவாதமும் வேகமாகப் ஊடறுத்துக் குடிகொண்டுள்ளது. சிறு பொறி தேடும் பேரினவாதத்துக்கு மத்தியில் வினைத்திறனுள்ள சமூகமாக நாம் மாற வேண்டும் எனின், முதலில் எமக்குள் ஒற்றுமை அவசியப்படுகிறது. 

இதற்கு முன் அம்பாறையில் இடம்பெற்ற பள்ளிவாசல் சர்ச்சையில் வாதியும் பிரதிவாதியும் முஸ்லிம்களே. ஆங்காங்கு பள்ளிகளை உடைத்து புனிதத்தைப் புதைகுழிக்குத் தள்ளிய சமூகம் எப்போது சிந்திக்க ஆரம்பிக்கப் போகிறது?


-இர்பான் இக்பால்
பிரதம ஆசிரியர், சோனகர்.கொம்


No comments:

Post a Comment