முஸ்லிம்களுக்கு ACJUவின் 'அன்பான' வேண்டுகோள் - sonakar.com

Post Top Ad

Saturday 9 October 2021

முஸ்லிம்களுக்கு ACJUவின் 'அன்பான' வேண்டுகோள்


 


அஸ்ஸலாமு அலைக்கும் வறஹ்மத்துல்லாஹி வபறகாத்துஹு


2019ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெற்ற தாக்குதலைப் போன்று மீண்டுமொரு தாக்குதல் நடைபெற இருப்பதாக ஊடகங்களில் வெளியாகும் செய்தி கேட்டு அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா பேரதிர்ச்சியும் பெரும் கவலையும் அடைகிறது. அனைத்து விதமான கெடுதிகளிலிருந்தும் நாட்டையும் நாட்டு மக்களையும் பாதுகாத்தருளுமாறு எல்லாம் வல்ல அல்லாஹ்விடம் பிரார்த்திப்பதோடு, குறித்த செய்தி தொடர்பிலான உண்மை நிலை பற்றி நாம் அறியாத போதும் இலங்கை வாழ் முஸ்லிம்கள் அனைவரும் இவ்விடயத்தில் மிகவும் அவதானத்தோடும் முன்னெச்சரிக்கையாகவும் நடந்து கொள்ளுமாறு ஜம்இய்யா வேண்டிக் கொள்கின்றது.


இஸ்லாத்தின் பாதுகாவலர்கள் போன்று தங்களை காட்டிக் கொண்டு, மக்களை பிழையான பாதையில் இட்டுச் செல்லக்கூடிய, இஸ்லாம் மற்றும் ஏனைய மதங்களின் எதிரிகளால் உருவாக்கப்பட்டதாக கருதப்படும் அமைப்புகளே ஐ.எஸ்.ஐ.எஸ் மற்றும் ஏனைய இஸ்லாமிய பெயர்தாங்கிய பயங்கரவாத அமைப்புகளாகும். இவ்வாறான தீவிரவாத அமைப்புகள் விடயத்தில் விழிப்புடன் செயற்படுமாறு சகல முஸ்லிம்களையும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.


பின்னணியிலுள்ள சூத்திரதாரிகள் யார் என்பது ஆராயப்பட வேண்டிய இவ்வமைப்புகள், இஸ்லாத்திற்கு எதிரான தீவிரவாத அமைப்புகள் என்பதே உலக வாழ் இஸ்லாமிய அறிஞர்களின் ஏகோபித்த நிலைப்பாடாகும். கடந்த 2015.07.23 ஆம் திகதி இவ்வமைப்புகள் முற்றிலும் இஸ்லாத்துக்கு முரண்பட்டவை என்ற பிரகடனத்தை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமாவும் ஏனைய சமூக அமைப்புகளும் இணைந்து வெளியிட்டது குறிப்பிடத்தக்கதாகும். (இணைப்பு: http://acju.lk/en/published/item/1625-isis-declaration)


எனினும், கடந்த 2019.04.21ஆம் திகதி தீவிரவாதிகளால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான தாக்குதல்களால் பல அப்பாவி மக்கள் படுகொலை செய்யப்பட்டனர். இன்னும் பலர் காயங்களுக்குள்ளாகியதோடு நம் நாட்டின் நிம்மதியும் பாதுகாப்பும் கேள்விக்குள்ளாக்கப்பட்டதை நாம் அனைவரும் நன்கறிவோம்.


எமது சமூகம் இந்நாட்டுக்காக பாரிய பங்களிப்புக்களையும் தியாகங்களையும் செய்து வந்துள்ளது. நம் நாட்டின் ஒருமைப்பாட்டுக்கும், பாதுகாப்புக்கும் அளவிலா பங்களிப்பை நம் மூதாதையர்கள் வரலாறு நெடுகிலும் செய்துவந்துள்ளனர். அவ்வாறே நம் நாட்டுக்கு பிரயோசனமான வெளிநாட்டு உறவைக் கட்டியெழுப்புவதில் முன்னின்று செயற்பட்டுள்ளனர். நம் தாய்நாட்டை அந்நியவர்கள் ஆக்கிரமிக்க முயற்சித்தபோதெல்லாம் அக்காலத்தில் நம் நாட்டை ஆட்சி செய்த உள்நாட்டு அரசர்களுக்கு ஒத்துழைப்பாக இருந்து வந்துள்ளனர். சுதந்திரத்தைப் பெற்று ஜனநாயகக் குடியரசாக நம் தாய்நாடு மாறியதிலிருந்து நம் தலைவர்கள் மதங்களுக்கு மத்தியில் நல்லிணக்கத்தை கட்டியெழுப்பவும் சமூகங்களுக்கிடையில் ஒற்றுமையை உருவாக்கவும் காத்திரமான முயற்சிகளை செய்துள்ளனர்.


முஸ்லிம் பெயர்தாங்கிய வழிதவறிய சிலரால் நடாத்தப்பட்ட மிலேச்சத்தனமான இத்தாக்குதலை தொடர்ந்து, முஸ்லிம்களுக்கெதிரான அடிப்படையற்ற குற்றச்சாட்டுக்கள் சில தீய சக்திகளால் தொடர்ந்தும் முன்வைக்கப்பட்டு, முஸ்லிம்கள் பற்றிய வெறுப்பும் சந்தேகமும் மக்கள் மனதில் உருவாக்கப்பட்டு வருவதோடு, எமது மூதாதையர்கள் இந்நாட்டுக்குச் செய்த பாரிய பங்களிப்புக்கள் மறக்கடிக்கப்படும் நிலை உருவாகி வருவது கவலைக்குரிய விடயமாகும்.


சிலர் இஸ்லாத்துக்கும் முஸ்லிம்களுக்கும் எதிரான போலியான குற்றச்சாட்டுக்களை முன்வைத்து சமூக ஒற்றுமையை சீர்குழைக்கும் வகையில் தீவிரமாக செயற்படுவது வருந்தத்தக்கதாகும். இவ்வாறான செயற்பாடுகளினால் முஸ்லிம் சமூகம்; தூண்டப்படாமல், கட்டுப்பாடுடன் செயற்படுமாறு ஜம்இய்யா கேட்டுக் கொள்கின்றது.


இது விடயத்தில் ஜம்இய்யாவின் மாவட்;ட, பிரதேசக் கிளைகள், பள்ளிவாயல் நிர்வாகங்கள், சமூக அமைப்புக்கள் என அனைவரும் கவனம் செலுத்துமாறும் ஒவ்வொரு முஸ்லிமும் அவதானத்துடன் நடந்து கொள்ளுமாறும் ஏனைய சமூகங்களுடன் நல்லுறவை கட்டியெழுப்பும் முயற்சியில் ஈடுபடுமாறும் ஜம்இய்யா வினயமாக வேண்டிக் கொள்கின்றது.


அத்துடன், ஜம்இய்யாவினால் வெளியிடப்பட்டிருக்கும் 'மதத்தின் பெயரால் தீவிரவாதம் வேண்டாம்' என்ற கைநூலை ஒவ்வொருவரும் வாசித்து தெளிவு பெறுமாறும் அதனை பிறருக்கு அறிமுகப்படுத்துமாறும் ஜம்இய்யா சகல முஸ்லிம்களையும் கேட்டுக் கொள்கின்றது.


(தமிழ் இணைப்பு: https://acju.lk/published/item/1993-2020-08-21-06-32-52)

(சிங்கள இணைப்பு: https://acju.lk/si/published/item/1999-2020-09-24-11-15-13)


எங்கள் சகோதர, சகோதரிகள் தீவிரவாதிகள் மற்றும் இஸ்லாத்திற்கு முரணான சிந்தனையுடையவர்களால் கவரப்படுவதிலிருந்து பாதுகாக்குமாறு அனைத்து முஸ்லிம்களிடமும் ஜம்இய்யா கேட்டுக்கொள்கினறது.


எல்லாம் வல்ல அல்லாஹ் நம் நாட்டிலும் சர்தேசத்திலும் பாதிக்கப்பட்டுள்ள மக்களுக்கு பாதுகாப்பு, நீதி மற்றும் அமைதியை வழங்குவதுடன் நம் தாய்நாட்டில் சமாதானம், ஒற்றுமை மற்றும் அபிவிருத்தியை உண்டாக்குவானாக.


வஸ்ஸலாம்.


 அஷ்ஷைக் எம். அர்கம் நூராமித்

பொதுச் செயலாளர்

அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா

No comments:

Post a Comment