மஜ்மா நகரில் இடப்பற்றாக்குறை; வேறு இடம் பார்க்க மகஜர்! - sonakar.com

Post Top Ad

Saturday 25 September 2021

மஜ்மா நகரில் இடப்பற்றாக்குறை; வேறு இடம் பார்க்க மகஜர்!

 


கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களின் உடல்களை அடக்கம் செய்யும் ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் நில பற்றாக்குறை ஏற்பட்டுள்ளமை தொடர்பாக கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பு இன்று வெள்ளிக்கிழமை ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜாவிடம் மகஜரினை செயலகத்தில் வைத்து கையளித்தனர்.


ஓட்டமாவடி மஜ்மா நகர் பகுதியில் நில பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதன் காரணமாக நல்லடக்க பணிகளை அரசாங்கத்தினால் தெரிவு செய்யப்பட்டுள்ள வேறு இடங்களுக்கு உடனடியாக மாற்றுமாறு கோரிக்கை விடுத்து கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்து மகஜர் ஒன்று கையளிக்கப்பட்டது.


ஓட்டமாவடி பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நிலப்பற்றாக்குறை காணப்படுகின்ற நிலையில் ஓட்டமாவடி மஜ்மா நகரில் குறித்த காணி மாத்திரமே காணப்படுகின்றது. ஆனால் குறித்த பகுதியில் மக்கள் விவசாயம் செய்கின்றனர், குடியிருப்பாளர்களும் வசிக்கின்றனர். அத்தோடு கழிவு குப்பைகளும் கொட்டப்பட வேண்டும் என்பன விடயங்களை சுட்டிக்காட்டியும், கிண்ணியா வட்டமடு பகுதில் கொரோனா தொற்றினால் மரணிக்கும் நபர்களை நல்லடக்கம் செய்ய 15 ஏக்கர் நிலம் ஒதுக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளதால் அங்கு அடக்கம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்குமாறு கோரிக்கை விடுத்து பிரதேச செயலாளரிடம் மகஜர் கையளிக்கப்பட்டது.


கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் கோரிக்கையினை மேற்கொள்ள துரித நடவடிக்கை மேற்கொள்வதாக ஓட்டமாவடி பிரதேச செயலாளர் வீ.தவராஜா தெரிவித்தார்.


கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பின் தலைவர் எம்.ரி.எம்.நிஸாரின் தலைமையிலான மகஜர் கையளிக்கும் நிகழ்வில் சட்டத்தரணி ஹபீப் றிபான், ஓட்டமாவடி பிரதேச சபை உறுப்பினர்களான எம்.ஐ.ஹாமித் சிறாஜி, ஏ.ஜீ.அசீஸுர், மஜ்மா நகர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் ஏ.எல்.சமீம் உட்பட உலமாக்கள், பள்ளிவாயல் நிர்வாகிகள், முக்கியஸ்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

கல்குடா தொகுதியிலுள்ள 69 அமைப்புகள் ஒன்றிணைந்த கூட்டமைப்பினால் ஓட்டமாவடி மஜ்மா நகரில் கொவிட்-19 பிரதேங்களை அடக்கும் செயற்பாட்டை நிறுத்தி வேறு அடையாளப்படுத்தப்பட்ட பிரதேசங்களுக்கு மாற்றுதல் தொடர்பில் வழங்கப்பட்ட மகஜரில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-


கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகப் பிரிவிற்குட்பட்டதும் கோறளைப்பற்று மேற்கு பிரதேச சபையின் பரிபாலனத்திற்கு கீழ் உள்ளதும் 210டீ காகித நகர் கிராமசேவகர் பிரிவில் அமைந்துள்ள அல்-மஜ்மாஹ் கிராமத்தில் கடந்த 05.03.2021ம் திகதியில் இருந்து கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு மரணமடைந்த பிரதேங்கள் நல்லடக்கம் செய்யப்பட்டு வருகின்றன. தற்போது இதுவரை 7 ஏக்கர் காணியில் 2975 சடலங்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளன.


இது தொடர்பில் கோறளைப்பற்று மேற்கு ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரினால் சுகாதார சேவைகள் பணிப்பாளருக்கு kpw/ps/odd/covid--19/2021ம்இலக்கமும் 10.09.2021ம் திகதியிடப்பட்டதுமான கடிதப்படி கொவிட் 19 ஜனாஸாக்களை நல்லக்கம் செய்யப்படும் காணியில் அடக்கம் செய்ய போதுமான காணிகள் இல்லை எனவும் மாற்று இடங்களை உடனடியாக தெரிவு செய்யுமாறும் குறிப்பிட்டுள்ளனர்.


குறித்த நல்லடக்கம் செய்யப்படும் காணிப் பற்றாக்குறை தொடர்பாக ஏற்பட்டுள்ள பிரச்சினைகள் மற்றும் சிக்கல்கள் குறித்து எமது பிரதேசத்தின் சமூக மட்ட அமைப்புக்கள், புத்திஜீவிகள்;, உலமாக்கள் மற்றும் பிரதேச சபை உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து பின்வரும் தீர்மானத்திற்கு வந்துள்ளனர். இது தொடர்பாக தங்களது மேலான கவனத்தை ஈர்க்கின்றோம்.


கொரோனா தொற்றால் ஏற்பட்ட மரணங்கள் தொடர்பாக நாட்டில் அப்போது ஏற்பட்ட அசாதாரண சூழ்நிலையை கருத்தில் கொண்டும் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்ய வேண்டிய மார்க்கக் கடமையை நிறைவு செய்வதற்காகவும் எமது பிரதேசத்தில் ஆரம்பம் தொடக்கம் ஜனாசாக்களை நல்லடக்கம் செய்வதற்கு தொடர்ந்தும் நாம் பூரண ஒத்துழைப்பை வழங்கி வருகின்றோம்.


மேலும் நல்லடக்க நடவடிக்கை தொடர்ந்து கொண்டிருப்பதனால் ஏனைய காணிகளையும் இதற்காக சுவீகரிப்பதற்கான வாய்ப்பு காணப்படுகின்றது.இதனால் அதனை சுற்றியுள்ள மேட்டுநிலப் பயிர்ச் செய்கை நிலங்கள் மற்றும் வயல் பிரதேசங்களில் தமது விவசாய நடவடிக்கையை மேற்கொள்ள முடியாது பல்வேறு அசௌகரியங்களுக்கு விவசாயிகள் முகம் கொடுத்து வருகின்றனர்.


எமது கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலகமானது குறுகிய நிலப்பரப்புடன் அடர்த்தியான குடிசனப்பரம்பலைக் கொண்ட பிரதேசமாகும். பயங்கரவாத நடவடிக்கையின் போது மக்கள் இடம்பெயர்ந்து சாதாரண சூழ்நிலை ஏற்பட்ட போது மீள் குடியேடியறிய  மஜ்மா நகர் காணியானது கோறளைப்பற்று மேற்கு பிரதேச செயலாளர் பிரிவில் காணப்படும் ஒரேயொரு பொதுக் காணியாகும்.


இதில் திண்மக்கழிவு, ஒட்டுமொத்தக் கல்குடா முஸ்லிம் பிரதேசத்திற்கான பொது மையவாடிக் காணி, எதிர்கால இளம் சந்ததியினருக்குரிய குடியிறுப்புக்குமான எஞ்சியுள்ள ஒரேயொரு காணியாகும். எனவே குறித்த பிரதேச செயலகத்தின் காணிப்பயன்பாட்டில் குறித்த கொரோனா மரணங்களின் நல்லடக்க நடவடிக்கையானது குறித்த மஜ்மா நகர் கிராம பொதுமக்களின் இருப்புக்கும் பாரிய சவாலை ஏற்படுத்தியுள்ளது. குறித்த பகுதியில் கொவிட் பிரதங்களை அடக்குவதற்காக தங்களால் பல வருடங்கள் பராமரித்து வந்த 14 ஏக்கர் காணியை அப்பிரதேசத்திலுள்ள 14 சகோதரர்கள் இழந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.


எமது பிரதேசத்தில் சகல மதத்தினரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்பட்டு ஒரு மத நல்லிணக்கம் ஏற்பட்;டதனை நாங்கள் பாராட்டுவதோடு அதே போல் ஏனைய பிரதேசங்களில் சகல மதத்தினரின் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படுவதனால் மத நல்லிணக்கம் ஏற்பட வழிவகுக்கும்.


கொரோனா தொற்றால் மரணிப்பவர்களை அடக்கம் செய்வதற்கு நாட்டில் பல்வேறு பொருத்தமான இடங்கள் அடையாளம் காணப்பட்ட போதும் இதுவரை வேறு எங்கும் நல்லடக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படவில்லை. அத்தோடு குறிப்பாக கிண்ணியா பிரதேசத்தில் வட்ட மடு பகுதியில் 15ஏக்கர் காணி வழங்கப்பட்டு நல்லடக்கம் செய்வதற்கான பூர்வாங்க வேலைகள் பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக நாங்கள் அறிகின்றோம். எனவே மேற்படி காணிப் பற்றாக்குறைகளைக் கவனத்திற் கொண்டு காணி தொடர்பிலான அதிகாரமுள்ள உயர் அதிகாரி என்ற வகையில் பிரதேச செயலாளராகிய நீங்கள் எமது காணியில் மேற்கொள்ளப்படும் கோவிட்-19 ஜனாஸா நல்லடக்க நடவடிக்கைகளை உடனடியாக நிறுத்தி குறித்த கிண்ணியா பிரதேசத்திற்கு மரணித்த உடல்களை நல்லடக்க நடவடிக்கைக்காக அனுப்புவதற்கு உடனடியாக பரிந்துரை செய்யுமாறு கேட்டுக் கொள்கின்றோம் என மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.


எஸ்.எம்.எம்.முர்ஷித்

No comments:

Post a Comment