மங்களவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: NUA - sonakar.com

Post Top Ad

Wednesday 25 August 2021

மங்களவின் இழப்பு ஈடு செய்ய முடியாதது: NUA

 


முன்னாள் அமைச்சர் மங்கள சமரவீரவின் மரணம் இந்த நாட்டு அரசியலில் ஈடு செய்ய முடியாத ஒரு இழப்பை ஏற்படுத்தி உள்ளது. அவருடைய மரணத்துக்காக தேசிய ஐக்கிய முன்னணி தனது ஆழ்ந்த அனுதாபத்தை தெரிவித்துக் கொள்கின்றது. அன்னாரின் குடும்பத்தவர்கள் மற்றும் நண்பர்களின் துயரத்தில் நாமும் பங்கேற்கிறோம்.


இந்த நாட்டில் சிறுபான்மை மக்களுக்காக துணிச்சலாக ஒலித்த ஒரே பெரும்பான்மை குரல் மங்கள சமரவீரவின் குரல் என்றால் அது மிகையாகாது. அந்த துணிச்சல் மிக்க குரல் இப்போது முற்றாக அடங்கிப் போனமை இந்த நாட்டின் சிறுபான்மை மக்களுக்கு ஏற்பட்ட பேரிழப்பாகும்.


மங்கள சமரவீர தனது கருத்துக்களைத் தெரிவிப்பதில் மிகவும் வெளிப்படையாகவும், துணிச்சலாகவும் செயற்பட்டு வந்த ஒரு நேர்மையான அரசியல்வாதி ஆவார். இந்த நாடு பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது மற்றவர்கள் வந்தேறு குடிகள் என இனவாத சக்திகள் கொக்கரித்த போது அவற்றுக்கு பதில் அளிக்கும் வகையில் இந்த நாடு பௌத்தர்களுக்கு மட்டும் சொந்தமானது அல்ல. இது சகல இனங்களையும் சேர்ந்த எல்லா இலங்கையர்களுக்கும் சொந்தமானது. இங்கு பௌத்தர்கள் பெரும்பான்மை மட்டுமே தவிர அவர்கள் மட்டுமே இந்த நாட்டில் உரித்தாளிகள் அல்ல. இது எல்லோருக்கும் சொந்தமான நாடு இங்கு சம உரிமைகளோடு வாழும் உரிமை எல்லோருக்கும் உள்ளது என்று பகிரங்கமாகக் கூறிய ஒரே மனிதர் மங்கள சமரவீர மட்டுமே. அதற்காக அவர் தனது சமூகத்துக்குள் சம்பாதித்த எதிர்ப்புக்கள் கொஞ்சநஞ்சமல்ல. இருந்தாலும் அவற்றைக் கண்டு அவர் சளைத்து விடவோ பின்வாங்கவோ இல்லை. மாறாக தனது கருத்திலும் நிலைப்பாட்டிலும் கொள்கையிலும் அவர் உறுதியாக இருந்தார். அந்த துணிச்சலுக்காகவே அவரை நேசித்த, ஆதரித்த பெரும்பான்மையினரும் உள்ளனர்.


பல்வேறு அமைச்சுப் பதவிகளை வகித்துள்ள அவர் ஒவ்வொரு துறையிலும் தனது முத்திரையைப் பதித்து செயல்பட்டவர். இன ஐக்கியத்துக்காகவும், இனங்களுக்கு இடையில் சகவாழ்வுக்காகவும், முழுமையான சமாதானத்துக்காகவும் தனது அமைச்சுக்களின் ஊடாகப் பல்வேறு திட்டங்களை வகுத்து செயற்பட்டவர். யுத்தத்தின் பின் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு ஏற்பட்டிருந்த அபகீர்த்தியை நீக்கி மீண்டும் சர்வதேச அரங்கில் இலங்கையின் கௌரவத்தை கட்டி எழுப்ப அரும்பாடுபட்ட ஒருவர்.


இந்த யுகத்தில், இந்த நாட்டில் இன மத மொழி பேதமின்றி தூய்மையான அரசியலில் துணிச்சலாக ஈடுபட்டு சிறுபான்மை மக்கள் பாதிக்கப்பட்ட ஒவ்வொரு சந்தர்ப்பத்திலும் அவர்களுக்காக ஓங்கி ஒலித்த இரண்டு குரல்களில் ஒன்று முழுமையாக மௌனித்து எம்மிடம் இருந்து பிரிந்து விட்டது. அது மங்கள சமரவீர என்ற மாமனிதனின் குரல். மற்றது எமது கட்சித் தலைவர் அஸாத் சாலியின் குரல். அவரது குரல்வளை அதிகார பீடத்தால் இப்போது நசுக்கப்பட்டுள்ளது.  அது தற்காலிகமானது. விரைவில் அந்தக் குரல் எம்மத்தியில் மீண்டு வந்து பாதிக்கப்பட்ட மக்களுக்காக ஒலிக்கும் என்று நம்பிக்கையோடு பிரார்த்திக்கின்றோம்.


- தேசிய ஐக்கிய முன்னணி

No comments:

Post a Comment