தேசிய மீலாத் விழாவினை முன்னிட்டு வீடுகள் வழங்க திட்டம் - sonakar.com

Post Top Ad

Saturday 6 March 2021

தேசிய மீலாத் விழாவினை முன்னிட்டு வீடுகள் வழங்க திட்டம்

 


தேசிய மீலாத் விழாவினை முன்னிட்டு நுவரெலியாவில்  வறுமையான 100 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்துக் கொடுக்கப்படும். அத்தோடு அங்கு மேலும் பல அபிவிருத்தி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் எனவும் நுவரெலியா மாவட்ட அபிவிருத்தி  இணைப்புக்குழு தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற உறுப்பினருமான  எஸ்.பி.திஸாநாயக்க தெரிவித்தார்.


நாட்டில் 24 மாவட்டங்களில் தேசிய மீலாத் விழாக்கள் இடம்பெற்றுள்ளன. ஆனால் நுவரெலியா மாவட்டத்தில் இதுவரை தேசிய மீலாத் விழா இடம் பெறவில்லை. இதன் காரணமாக இவ் வருடத்துக்கான (2021) தேசிய மீலாத் விழாவினை  நுவரெலியா மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொள்ளுமாறு பிரதமரும் புத்தசாசன மற்றும் மத விவகார அமைச்சருமான மஹிந்த ராஜபக்ஷ விடுத்த  தீர்மானத்திற்கமைய, எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் நடாத்துவதற்கு முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களம் ஏற்பாடுகளைச் செய்து வருகின்றது.


மேற்படி நிகழ்வின் ஆரம்ப கூட்டம் நுவரெலிய மாவட்ட செயலகத்தில்  மார்ச் மாதம் 04 ஆம் திகதி நுவரெலிய மாவட்ட மேலதிக செயலாளர் சரத் ஜன்தர ஏற்பாட்டில் நுவரெலிய மாவட்ட அபிவிருத்தி இணைப்புக் குழு தலைவரும் முன்னாள் அமைச்சரும் பாராளுமன்ற  உறுப்பினருமான எஸ்.பி.திஸாநாயக்கவின்  தலைமையிலும் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் ஏ.பி.எம் அஷ்ரபின் ஒருங்கிணைப்பிலும் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் பேசிய அவர் மேலும் தெரிவிக்கையில், 


இலங்கையின் தேசிய மீலாத் விழா (2021) இவ்வருடம் நுவரெலியா மாவட்டத்தில் நடாத்த வேண்டும் என்ற ஜனாதிபதியினதும் பிரதமரினதும் வேண்டுக்கோளுக்கமைய நுவரெலியா மாவட்டத்தில் நடாத்துவதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டுள்ளோம்.

இதன்படி எதிர்வரும் ஒக்டோபர் மாதம் 19 ஆம் திகதி நுவரெலியா மாவட்டத்தில் கோலாகலமாக தேசிய மீலாத் விழா நடாத்தப்படும். 


இந்த நிகழ்வில் பிரதம அதிதிகளாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ நீதி அமைச்சர் அலி சப்ரி ஆகியோர் கலந்து கொள்ளவுள்ளனர். 


இந்த விழா சிறப்பாக நடாத்துவதற்கு போதிய இடவசதிகளைக் கொண்ட இடம் ஒன்றுதெரிவு செய்யப்பட வேண்டும். இங்கு தற்பொழுது நுவரெலியா, கொத்மலை கபுகஸ்தலாவ, தலவாக்கலை மற்றும் ஹட்டன் ஆகிய நான்கு நகரங்கள் முன் மொழியப்பட்டுள்ளன. இதில் ஒரு நகரம் தெரிவு செய்யப்பட்டு, அங்கு மீலாத் விழா நடாத்தப்படும். 


மீலாத் விழாவை முன்னிட்டு நுவரெலியா மாவட்டத்தில் ஒரு லட்சம் மரக்கன்றுகள் நடுதல்,  நுவரெலியா மாவட்டத்தில் தெரிவு செய்யப்பட்ட சரித்திரம் புகழ் பெற்ற பள்ளி ஒன்றை புனரமைத்தல், வறுமையான 100 குடும்பங்களுக்கு வீடுகள் அமைத்து கொடுத்தல், நுவரெலியா மாவட்டத்தில் ஒப்பனை இல்லாத அனைத்துப் பள்ளிகளிலும் ஒப்பனைகள் பெற்றுக் கொடுக்கப்படும்.


மேலும் 2021 ஆம் ஆண்டு நுவரெலியா மாவட்டத்தில் விழாவையொட்டி முத்திரை ஒன்றும் வெளியிடப்படும். மாவட்ட முஸ்லிம்களின் கலாசார பாரம்பரியம் தொடர்பான சரித்திர புத்தகம் ஒன்றும், 2021 தேசிய மீலாத் விழா சிறப்பு மலர் ஒன்றும் வெளியிடப்படும். முஸ்லிம் கலாசாரம் தொடர்பான கண்காட்சி ஒன்றும் நடாத்தப்படும். அதேபோல கலாசார நிகழ்வுகளும் நடாத்தப்படும் என்றும் தெரிவித்தார்.


மேற்குறிப்பிட்ட நிகழ்வுகளை நடத்துவதற்கு செயற்பாட்டு குழுக்கள், செயற்குழு, உப குழுக்கள் மற்றும் சரித்திரப் புத்தகத்தை எழுதுவதற்காக குழு என பல குழுக்கள் அமைக்கப்பட்டன.


இந்நிகழ்வில் புத்தசாசன சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சு மேதிக செயலாளர் ரேணுக்கா அமரசிங்க, நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் மஹிந்த தொடம்பே கமகே, முன்னாள் நுவரெலியா மாநகரசபை உறுப்பினர் எம்.எம். பளீல்  உட்பட நுவரெலியா மாவட்டத்திலுள்ள நுவரெலியா, வலப்பனை, கொத்மலை, அம்பகமுவ பிரதேசங்களிலுள்ள அனைத்து முஸ்லிம் ஜும்ஆப் பள்ளிவாசல் பரிபாலன சபை உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.


-எம்.எஸ்.எம்.ஸாகிர்

No comments:

Post a Comment