P2P உணர்வுகளும் சாயம் வெளுத்த முஸ்லிம் கட்சி முக்கியஸ்தர்களும் - sonakar.com

Post Top Ad

Saturday, 6 February 2021

P2P உணர்வுகளும் சாயம் வெளுத்த முஸ்லிம் கட்சி முக்கியஸ்தர்களும்

 


ரஜினி நடித்த எந்திரன் திரைப்படத்தில் ரோபோக்களையும் மனிதனையும் வேறுபடுத்த தலைமை ரோபோ ஒரு முயற்சி எடுக்கும். ‘Soldiers, rotate your heads” என ஒரு கட்டளையிடும். அப்போது, எல்லா ரோபோக்களும் தலையை 360 பாகையில் சுழற்ற மனிதன் மட்டும் தலை சுற்ற முடியாமல் மாட்டிக் கொள்ளும்.


அத்தகைய ஒரு சூழலில் மாட்டிப் போய் சாயம் வெளுத்து நிற்கின்றனர் பல முஸ்லிம் கட்சிகளும் அதன் முக்கியஸ்தர்களும். முஸ்லிம்களின் ஏகபோக பிரதிநிதிகளாகத் தம்மை அடையாளப்படுத்தி “ஆதவன் பாட்டில்” வெற்றி பெற்று, 18, 19, 20 என எல்லாத் திருத்தங்களுக்கும் கை உயர்த்தி இப்போது கையறு நிலையில் சாயம் வெளுத்துப் போய் நிற்கின்றனர் முஸ்லிம் காங்கிரஸ் எம்பிக்கள்.


முஸ்லிம் காங்கிரஸின் ஓரிரு அங்கத்தவர்களும் மக்கள் காங்கிரஸின் நான்கைந்து அங்கத்தவர்களும் P2P யில் முகத்தைக் காட்டி விட்டுச் சென்றிருந்தனர். ஆனால், பாராளுமன்றப் பிரதிநிதிகள் யாரையும் மருந்துக்கும் காண முடியவில்லை. சமகி ஜன பல வேகய எம்பி இம்றான் கிண்ணியாவில் தனது ஆதரவினை வழங்கி இருந்தார். அவரும் முஸ்லிம் கட்சியின் எம்பி அல்ல. அவர் ஒரு முஸ்லிம் எம்பி, அவ்வளவுதான்.


விலை மாதர்களின் நிலையில் முழுமையாக விலை போய் இருக்கின்றனர் எம் அரசியல் விபச்சாரிகள். தமிழின அரசியலின் கால் நகத்துக்கும் பெறுமதி அற்ற பிச்சைக்காரர்கள் இவர்கள். சூடு சுரணை அற்ற நிலையில் முழு அரசியல் வியாபாரிகளாகி நிற்கின்றனர்.


ஜனாசா எரிப்பில் முஸ்லிம்கள் அடைந்த வேதனையில்தான் உணர முடிகிறது தமிழ் மக்களின் அரை நூற்றாண்டுக்கும் அதிக கால வலியை. உலகளவில் பிரபலமான ஜீ.ஜீ.பொன்னம்பலத்தின் பேரன் கஜேந்திரனுக்கும், தமிழரசுக் கட்சியின் மூத்த தலைமை ராசமாணிக்கத்தின் பேரன் சாணக்கியனுக்கும் பரம்பரை அலகின் வழியாகக் கடத்தப்பட்ட இன உணர்வின் ஆழ அகலம், நமது வாக்கில் அரசியல் பிழைப்பு நடத்தும் பிச்சைக்காரர்களுக்கு எங்கே புரியப் போகிறது.


கிராமத்து மூலையில் இடியப்பம் சுட்டு விற்கும் கிழவியிடம் உரிமைக் கோஷமிட்டு வாக்குப் பெற்று விட்டு அந்த வாக்குகளை வைத்துப் பணமாக்கும் இந்தப் பிணம் தின்னிக் கழுகுகளின் சந்ததியும் இந்த வேதனையை அனுபவிக்கும்.


தமிழ் பேசும் மக்களின் பூர்வீக நிலங்கள் உள்பட இலங்கை முழுவதும் திட்டமிட்டு நடாத்தப்படும் இன அழிப்பு நடவடிக்கைகளுக்கு எதிராகவும், ஐக்கிய நாடுகள் மனித உரிமை பேரவைக்கு வடகிழக்கு தமிழ் கட்சிகள் மற்றும் சிவில் சமூக அமைப்புகள், பல்சமய ஒன்றியங்கள் இணைந்து அனுப்பி வைக்கப்பட்ட கோரிக்கைகளை நடைமுறை படுத்த கோரியும், மலையக தோட்டத் தொழிலாளர்களின் நாளாந்த வேதனத்தை ஆயிரம் ரூபாயாக உயர்த்தக் கோரியும் முஸ்லிம் மக்களின் மத நம்பிக்கைகளை மதிக்கக் கோரியும் இந்தப் போராட்டம் முன்னெடுக்கப்படுகிறது.


தமிழ் முஸ்லிம் மக்களின் ஒற்றுமைக்குக் களம் அமைத்திருக்கும் இப்பேரணி நமது உணர்வுகளை வெளிப்படுத்தக் கிடைத்திருக்கும் நல்ல சந்தர்ப்பமாகும். இத்தகைய எந்தப் பேரணியும் முஸ்லிம் கட்சிகளால் முன்னெடுக்கப்பட்டதாக இதுவரை காணவில்லை. ஆதரவும் இல்லை.


முஸ்லிம் பிராந்தியங்களில் முஸ்லிம் மக்கள் இப்பேரணிக்கு நல்ல ஆதரவினை வழங்கி வருகின்றனர். இதிலிருந்து இத்தகைய உணர்வுப் போராட்டங்களின் மீதுள்ள தாகத்தினை முஸ்லிம் மக்கள் தெளிவாகச் சொல்லி உள்ளனர். இருப்பினும், முஸ்லிம் தலைமைகள் மக்களின் அபிலாசைகளைப் பிரதிபலித்து நடப்பதில்லை என்பது வெள்ளிடைமலை.


இதற்குரிய பாடத்தினை எதிர்வரும் தேர்தல்களில் முஸ்லிம் மக்களே வழங்க வேண்டும். அன்றேல், ஆதவன் பாட்டும் பழைய குருடி கதவைத் திறடியும் தொடர்கதை ஆகி விடும். 


- அபூ ஸைனப்

1 comment:

hanas said...

Today you expressed exactly what I was thinking

Post a Comment