P2P யும் கடந்து செல்லும் நாமும் - sonakar.com

Post Top Ad

Monday 15 February 2021

P2P யும் கடந்து செல்லும் நாமும்

 ஜனாதிபதி சட்டத்தரணியும் அனுபவம் பெற்ற அரசியல்வாதியுமான சுமந்திரன், இளம் அரசியல்வாதி சாணக்கியன் இன்னும் பழைய, புதிய அரசியல்வாதிகளின் தலைமையில் சிவில் சமூக ஏற்பாட்டில் மேற்கொள்ளப்பட்ட பொத்துவில் முதல் பொலிகண்டி வரையிலான (P2P) நடை பவனி திட்டமிட்டபடி நடை பெற்று முடிந்தது. தமிழர்களின் மறுக்கப்பட்ட உரிமைகளை மீள பெறும் முயற்சியின் பிரிதொரு வடிவம். இந்த நடை பவனிக்கு  வடக்கு, கிழக்கின் சோனக சமூகம் பெரியளவிலான பங்களிப்பை செய்தது அனைவரின் பார்வையையும் இழுத்த விடயமாகும்.


காலனித்துவ ஆட்சிகாலத்துக்கு முன்பான அல்லது காலனித்துவ காலத்தின் வரலாற்று விடயங்களை ஒரு பக்கம் வைத்துவிட்டு சுதந்திர காலத்தில் இருந்து அரசியல் நிகழ்வுகளை நோக்கும் போது சிறுபான்மையினர் திட்டமிட்ட வகையில் நசுக்கப்பட்டு கொண்டிருக்கிறார்கள் என்பது எவரின் பார்வையில் இருந்தும் தப்பிச் செல்ல முடியாத ஒரு விடயாமாகும். அதை செய்து வருவது சிங்கள பெளத்த பேரினவாத நிலைப்பாடு என்பதும் எமது அவதானிப்பில் இருந்து தப்ப முடியாது. ஒப்பிட்டு ரீதியில் தமிழர்களின் உரிமை மறுப்பு சோனகர்களின் உரிமை மறுப்பைவிட நீண்டதும், கனதியானதும் என்பதும் யாவரும் அறிந்த விடயமும் கூட.  ஆனால் இனி வரப்போகும் காலம் என்பது ஒட்டு மொத்த சோனக சமூகத்துக்கும் மிக ஆபத்தான் கால கட்டமென்பதை, தமிழ் சமூகம் எவ்வகையான அழிவிற்கு முகங்க கொடுத்ததோ அத்தகைய ஒரு நிலை நோக்கி நாம் சிங்கள பெளத்த பேரினவாதிகளால் இழுக்கப்படும் விதமும், நாமாகவே அந்த ஆபத்து நோக்கி நம்மை தள்ளிச் செல்லு முறைகளும்  தெளிவாக எடுத்துக் காட்டிக் கொண்டிருக்கிறன.


இந்த சந்தர்பத்தில் திசை தெரியாத பயணம் ஒன்றுக்கு சோனகர்கள் தமிழருடன் கை கோர்த்துவிட்டார்களா என்று பலரும், சோனகர் தாங்கள் எதிர் கொள்ளும் உடனடிப் பிரச்சினையை (ஜனாஸா எரிப்பு) தீர்த்துக் கொள்வதற்கே தங்களுடன் கை கோர்த்துள்ளார்கள் என்று இன்னும் பலரும் நியாமான சந்தேகங்களை ஏற்படுத்தி வருவதையும் நாம் மறந்துவிட முடியாது. இரு தரப்பினரிடமும் நியாயமான சந்தேகங்கள் உள்ளன என்பதற்காக அவைகளை எப்போதும் இறுக அணைத்துக் கொள்ள வேண்டுமென்பதல்ல. இருபக்கத்திலும் இல்லாவிட்டாலும் ஏதோ ஒரு பக்கத்திலாவது சந்தேகங்கள் புறந்தள்ளப்பட்டு, ஒற்றுமையாக இல்லாவிட்டாலும் கூட ஒருமைபாட்டுடன் பல விடயங்கள் முன்னெடுக்கப்பட்டால் மாத்திரமே சந்தேகங்கள் கலையப்பட்டு நோக்கங்கள் எட்டப்பட வாய்ப்புகள் ஏற்படும் என்பது நிச்சயமாக புரிந்து கொள்ள வேண்டிய விடயமாகும். ஆகவே P2P யின் முழு நோக்கமும் (என்னைப் பொறுத்தவரை அரசியலைப்புக்கான 13ம் திருத்தச் சட்டம் முற்றும் முழுதாக நடைமுறை படுத்தப்படுவதும் அதனூடாக பல்லினங்கள் தத்தமது இன உரிமைகளுடன் வாழ்வதும்) நிறைவேற பாதிக்கப்பட்டுள்ள இனங்களும், பாதிப்பை ஏற்படுத்தும் இனங்களுக்குள்ளேயே நசுக்கப்படும் மக்களும், ஒன்றிணையும் சூழ்நிலை ஒன்றை உருவாகுவதன் மூலம், நிறைவேற வாய்ப்புள்ளது.


சோனகரின் இன்றைய உரிமைசார் பிரச்சினையான ஜனாஸா எரிப்பு சம்பந்தமாக பிரதமர் மஹிந்த ராஜபக்ச உறுதியான முடிவை சில நாட்களுக்கு முன் அறிவித்துவிட்டார். அதாவது நாட்டின் சுகாதார பாதுகாப்பு கருதி கொவிட் 19 னால் இறந்தவர்களும் (மருத்துவ துறையால் அவ்வாறு சித்தரிக்கப்படுபவர்களும்) எரிக்கபட வேண்டும் என்பதில் இனி எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை என்றும் ஒரு நாட்டின் உள்நாட்டு சூழ்நிலை அந்த நாட்டினால் தீர்மானிக்கப்பட வேண்டுமே ஒழிய மற்றவர்களின் கூற்று இரண்டாம் பட்சம் என்ற விடயமாகும். ஆனாலும் 10ம் திகதி பெப்ரவரி மாதம் புதன்கிழமை பாரளுமன்றில் எதிர்கட்சி உறுப்பினர் மரிக்காரினால் எழுப்பப்பட்ட கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கையில், ஜனாஸாக்கள் மீண்டும் நல்லடக்கம் செய்ய அனுமதிக்கப்படும் என்றார் பிரதமர், இதன் பின்புலம் பாக்கிஸ்தானிய பிரதமர் விஜயம், நடக்க இருக்கும் ஜெனிவா மாநாடு, வெளிநாட்டு அழுத்தங்கள் என்ற பல்வகை நியாயங்கள் சொல்லப்பட்டாலும்,  இந்த திடீர் கேள்விக்கு அளிக்கப்பட்ட எதிர்பார்க்கப்படாத விடை;  எப்போது அந்த அனுமதி நடைமுறைப்படுத்தப்படும் என்ற கேள்விக்கும், அப்படியானால் இதுவரை எரிக்கப்பட்டது பிழையா  என்ற கேள்விக்கும், அப்படியாக செய்யப்பட்ட பிழைக்கு நட்டஈடு வழங்கப்படுமா என்ற கேள்விக்கும் விடைகள் கிடைக்க யார் பாடுவடுவது என்ற புதிய கேள்வியும் எழுகின்றது.   


நிற்க, புத்தளத்தின் கிராமமொன்றில் சென்ற கிழமை இறந்த (தற்கொலை செய்து கொண்டதாக சொல்லப்படும்) சமீம் என்ற ஒரு இளம் சமூக சேவகனின் உடல் கொவிட்-19 சார்பு (positive)  என்ற மருத்துவ அறிக்கை கூற்றுக்கிணங்க வியாழன் 11ம் திகதி ஆனைமடுவ என்ற பக்கத்து கிராமத்தில் தகனம் செய்யப்பட்டுக் கொண்டிருக்கும் அந்த நேரம் புத்தளம் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் அதே ஆனைமடுவில் பிரதமர் மஹிந்தவுடன் ஒரு திறப்புவிழாவில் கலந்துகொள்கிறார். இதே அலி சப்ரி ரஹீம் 10ம் திகதிய பிரதமரின் அறிவிப்பின் பின், எல்லா புகழும் இறைவனுக்கே என்று மூன்று முறை கூறி தங்களது தொடர் பேச்சுவார்த்தை வெற்றியளிதுள்ளது என்று தனது முகப்புத்தக கணக்கில் பதிவிட்டது மிகவும் அருவருக்கத்தக்க விடயமாகும்.


புத்தளம் பா.ம பிரதிநிதி,  பிரதமரின் 10ம் திகதிய  அறிவிப்பு சம்பந்தமாக தீர்க்கமான முடிவு எட்டாத வரை இந்த உடலை சவக் குளிர் அறையில் (mortuary) வைப்பதற்கான எல்லா முயற்சிகளையும்  செய்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்யத் தவறியது மாத்திரமல்ல தேர்தல் காலத்தில் தனக்காக உழைத்த இந்த இளம் சமூக சேவகரின் ஆத்தம சாந்திக்காகவோ, அவர் பிரிவால் கவலையில் துவளும் குடும்பத்தாருக்கோ, பயப்பீதியில் இருக்கும் ஊர் மக்களுக்கோ எந்த வித ஆறுதல் வார்த்தைகளும் சொல்லாமல் பிரதமருடன் திறப்புவிழாவுக்கு சென்று தன் கையாலாகாத தனத்தை காட்டி நிற்பது அவரை பாராளுமன்றம் அனுப்பியோருக்கு விசனத்தை ஏற்படுத்தியுள்ளது. இவர் போலவே பிரதமரின் அறிவித்தலுக்கு பரிதாபகரமாக அறிக்கைவிட்டு மீண்டும் மீண்டும் மக்களின் வெறுப்பை பெற்றுக் கொள்கின்றனர் கூட்டாக 20க்கு கையுயர்த்திய சாணக்கியர்கள்.. 


இந்த சந்தர்ப்பத்தில் மீண்டும் குறிப்பாக  விரல் நீட்டப்பட வேண்டியவர் புத்தளம் ப.ம உறுப்பினர் அலி சப்ரி ரஹீமே, காரணம் கடந்த 30 மார்ச் முதல் உடல் எரிக்கப்பட ஆரம்பித்து  இன்றும் தொடர்கின்ற நிலையில் இவரே  புத்தளம் மேடைகளில் பின்வருமாறும் கூறினார்; " மொட்டுக் கட்சியுடன் இணைய இந்த கூட்டணியிலே பலர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். ஆனால் பணத்துக்கோ, பதவிக்கோ.அல்லது அபிவிருத்தி என்ற மாயாஜாலத்துக்கோ தான் அடிமையில்லை , எமது சமய உரிமையே முக்கியம்; அதையே தான் முன் நிறுத்துவேன்".  அப்படியானல் இன்று எவ்வாறு இவை எல்லாம் முக்கியமாகின, சமய உரிமை பொருட்டில்லாமல் போனது? .


இந்தக் கட்டாய நிர்ப்பந்த எரிப்பை நடை முறைப்படுத்திய அரசாங்கத்திற்கு ஒரு தப்பும் வழி (escape route) இடையில் தேவைப்பட்டது. சிங்கள பெளத்த கடும்போக்குவாதிகளை சாந்தப்படுத்தி, முஸ்லீம்களின் பாராளுமன்ற உறுப்பினர்களின் 20ம் திருத்த கையுயர்தலுக்கு நன்றிக் கடனாக இந்த சின்ன விடயத்தை செய்து கொடுத்துவிட்டால் போதுமானது என்பதுடன் இனி தேவைப்படும் போது  சோனகர்களின் இப்படியான சமயம்சார் உரிமை (அரசாங்கத்தைப் பொறுத்தவரை அரசியலுக்காக பயன்படுத்த போதுமான எந்தப் பெறுமதியும் இல்லாத அற்ப விடயம்)களை நெளித்து, வளைத்து தமக்கு ஏற்றால் போல செய்து கொள்ளலாம் என்ற சிங்கள பெளத்த பேரினவாதத்தின் சிந்தனை போக்கு. இந்த வலையில் சரியாக கால்வைத்து மாட்டிக் கொண்டோர்தான் மொத்த முஸ்லீம்களையும் வழி நடத்தும் "முஸ்லீம் அஸ்கிரிய பீடம்" மாக எல்லா அரசாங்களுக்கும் (படம்) காட்டும் அகில இலங்கை உலமா சபை (ACJU)


அவ்வப் போது நல்லிணக்கம் என்கிற பெயரில் தவறான செயற்பாடுகளைச் செய்வதும், சொல்வதும் பின் திருத்திக் கொள்வதும் ஆனாலும் தொடர்ந்தும் அரசியல் பரப்பில் தூர நோக்கற்ற வகையில் பிம்பங்களை உருவாக்குவதிலிருந்து இன்னும் இந்த அமைப்பு விடுபடவில்லை. அரசியல்வாதிகளின் கள்ள மௌனமும் திருட்டு நாடகங்களும் சமூகத்தைப் பகடைக்காய்களாக்கும் செயற்பாடுகளும் தொடர்கின்றன.


இந்த வங்குரோத்து நிலை நமக்கு மூன்று சங்கதிகளை மிக தெளிவாக சொல்கிறது. அதாவது அரசியலை அரசியல்வாதிகள் மாத்திரம் செய்ய வேண்டும், அதிலும் குறிப்பாக உரிமை என்றால் என்னவென்று அறிந்து வைத்துள்ள தமிழ் அரசியல்வாதிகளுடனும், முற்போக்கு கொள்கைக் கொண்ட சிங்களவர்களுடனும், அத்தகைய கொள்கைக் கொண்ட கட்சிகளுடன் சேர்ந்து பயணிக்க வேண்டும் என்ற முதல் அம்சம். இதுவரை தேர்தல் காலங்களில் மாத்திரம் (தமக்கே விளங்காத) உரிமை கோஷத்துடன் வரும் முஸ்லீம் கட்சிகளை நிராகரித்தல் என்பது இரண்டாம் அம்சமாக அமைய, மூன்றாவதாக நம் சமூகம் செய்ய வேண்டியது இந்த உலமா சபையை கலைத்து விட்டு துறைசார்ந்தோர் சபையாக இதை மாற்றுவதற்கான அழுத்தம் பிரயோகித்தல். இந்த சந்தர்ப்பத்தையாவது சரியாக பயன் படுத்தாமல் விட்டால் நமக்காக குரல் கொடுக்க இனியாரும் வரப்போவதுமில்லை.   

- Mohamed SR Nisthar.

Co - Editor, Sonakar.com


No comments:

Post a Comment